பொருளாதாரத்தை மீட்கும் திறன் இந்த அரசிடம் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி

சிதம்பரம்

பட மூலாதாரம், Getty Images

பொருளாதாரம் அதீத சரிவை கண்டு கொண்டிருக்கிறது ஆனால் இந்த அரசு அதை சரி செய்யும் திறன் பெற்றதாக இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, பிணையில் வெளிவந்த ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய பிரதமர் இந்திய பொருளாதாரம் குறித்து இயல்புக்கு மாறாக அமைதி காத்து வருகிறார். அவர் இம்மாதிரியான நெருக்கடி சூழ்நிலையில் தனது அமைச்சர்களிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருக்கிறார். அதன் விளைவு பொருளாதார வல்லுநர்கள் சொல்லுவதுபோல அரசாங்கம் பொருளாதாரத்தின் திறமையற்ற நிர்வாகியாக உள்ளது.

கிராமப் புறங்களில் ஊதியம் குறைந்துள்ளது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினக்கூலி தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 15 நாட்களுக்கு மேல் வேலை கிடைப்பதில்லை.

மொத்த விலை அனைத்தும் அதிகரித்துள்ளது. வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நமது நிதியமைச்சர் என்னவோ வெங்காயம் சாப்பிடுவதில்லை. மக்களிடம் குறைந்த பணமே இருப்பதால் அவர்கள் பொருட்களை வாங்குவதற்கு யோசிக்கிறார்கள்.

பொருட்களுக்கான தேவையிருக்கும் பட்சத்தில்தான் அதன் உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் தற்போதைய நிலை அவ்வாறு இல்லை.

"வறுமையில் இருந்து மீட்ட ஐ.மு.கூ. வறுமையில் தள்ளிய பாஜக அரசு"

ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004ஆம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டிற்குள் வறுமையிலிருந்து 140 மில்லியன் மக்களை வெளியே கொண்டு வந்தது. ஆனால் இந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016ஆம் ஆண்டிலிருந்து மில்லியன் கணக்கானவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளிவிட்டது.

இந்த பொருளாதார சரிவை சீர் செய்யலாம் ஆனால் இந்த அரசு அதை செய்வதற்கான திறமையற்றதாக உள்ளது. காங்கிரஸ் மற்றும் வேறு கட்சிகள் இந்த பொருளாதார சரிவிலிருந்து மீட்கும் திறன் பெற்றவை. ஆனால், யாரும் கேட்கத் தயாராக இல்லை. நல்ல நாட்களுக்காக காத்திருக்க வேண்டும்.

`காஷ்மீர் குறித்த கவலை`

காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

நேற்று இரவு எட்டு மணிக்கு நான் வெளியில் வந்து சுதந்திர காற்றை சுவாசித்தவுடன், நான் முதலில் காஷ்மீரில் உள்ள 75 லட்சம் மக்களைதான் நினைத்துக் கொண்டேன். அவர்களுக்கு 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் தேதி முதல் அடிப்படை சுதந்திரங்கள் மறுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அங்குள்ள அரசியல் தலைவர்கள் குறித்து நான் கவலை கொள்கிறேன். அவர்கள் எந்த குற்றமும் செய்யாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சுதந்திரத்தை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் நாம் சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் என்று தெரிவித்தார்.

"5 சதவீதம் என்றால் அது உண்மையில் 3.5 சதவீதம்தான்"

இந்த வருடத்தின் கடைசியில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை தொட்டால் அது நமது அதிர்ஷ்டம்.

அதே சமயம் அரவிந்த் சுப்ரமணியன் சொன்னதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்குரிய கணக்கீட்டு முறையால் இந்த ஆட்சியில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி என்றால், அதை உண்மையில் 1.5% அளவில் குறைத்துதான் நாம் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சிதம்பரம் கூறினார்.

இந்த பொருளாதார மந்த நிலையை அரசு (வர்த்தக) சுழற்சியால் ஏற்படுவது என்றே இந்த அரசு கூறுகிறது. ஆனால் இது கட்டமைப்பு சிக்கல்களால் ஏற்பட்ட மந்த நிலை. சுழற்சி சிக்கலுக்கும், கட்டமைப்பு சிக்கலுக்கும் இவர்களுக்கு வேறுபாடு தெரியவில்லை.

அதற்கான காரணங்கள் தெளிவாக தெரிகிறது. ஆனால் இந்த அரசு அதனை ஒப்புக் கொள்ள மறுக்கிறது என்கிறார் சிதம்பரம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: