"திருமணங்கள் நடக்கின்றன; இந்திய பொருளாதாரம் நன்றாக உள்ளது" - பாஜக அமைச்சர்

திருமணங்கள்

பட மூலாதாரம், SAM PANTHAKY via getty images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "மக்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்: இந்திய பொருளாதாரம் நன்றாக உள்ளது" - மத்திய இணை அமைச்சர்

திருமணங்கள் நடப்பது இந்தியப் பொருளாதாரம் நன்றாக உள்ளதைக் காட்டுகிறது என்று ரயில்வே துறைக்கான மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"விமான நிலையங்கள் நிரம்பி வழிகின்றன. ரயில்கள் அனைத்தும் பயணிகளால் நிரம்பி செல்கின்றன. மக்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். இவையெல்லாம் நாட்டின் பொருளாதாரம் நன்றாக உள்ளது என்பதையே காட்டுகிறது என்று மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கூறியுள்ளார்.

சிலர் பிரதமர் நரேந்திர மோதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

" 3 வருடங்களுக்கு ஒருமுறை பொருளாதார வளர்ச்சியில் ஒரு தேக்கநிலை ஏற்படும். இது ஒரு சுழற்சி முறை. அதன்பின்னர் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்லும்" என்று அவர் மேலும் கூறியுள்ளதாக அந்த செய்தி விவரிக்கிறது.

Presentational grey line

தினமணி: "பதவி உயா்வில் இடஒதுக்கீடு சட்டவிரோதம்"

உயா்நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

அரசு ஊழியா்களுக்கு இடஒதுக்கீட்டு அடிப்படையில் பதவி உயா்வு வழங்குவது சட்டவிரோதமானது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"சென்னை உயா்நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்களான செந்தில்குமாா், ராஜா ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு பணிகளுக்கான நியமனங்களில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படுகிறது. இதே போன்று பதவி உயா்வின் போதும் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது. இதனை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி தமிழக அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தனியாக ஒரு சட்டத்தை இயற்றி இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயா்வு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு சட்ட அங்கீகாரம் எதுவும் பெறப்படவில்லை. மக்கள் நலன் காக்கும் அரசு, அதன் ஊழியா்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் அரசு பகுத்தறிவுடன் கூடிய சமநிலையைப் பின்பற்ற வேண்டும். மனுதாரா்கள் விவகாரத்தில் அரசு நோ்மையுடன் செயல்படுவதாக தெரியவில்லை. எனவே மனுதாரா்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் 12 வாரங்களுக்குள் உரிய பதவி உயா்வை வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயா்வு வழங்குவது சட்ட விரோதமானது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது" என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக தினமணியின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - கேரள அரசின் நிலையில் மாற்றம்

சபரிமலை

பட மூலாதாரம், Getty Images

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுக்களை ஏழு பேர் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வரும் இளம் பெண்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்கள் நீதிமன்றத் தீர்ப்பின் நகலைக் கொண்டுவர வேண்டும் என்று தேவசம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2018இல் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின் அங்கு சென்ற பெண்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :