ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில இளைஞர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில இளைஞர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

ஸ்ரீபெரும்புதூரில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட வடமாநில இளைஞர் ஒருவர், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பென்னலூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா (54). இவர் நேற்று காலை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது அவரது கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இரண்டு இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். இதனை எதிர்பார்க்காத இந்திரா, கத்திக் கூச்சல் எழுப்பியுள்ளார். அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள், அந்த இளைஞர்களை விரட்டிச் சென்றுள்ளனர். அவர்களை நோக்கி கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கொள்ளையர்களை போலீஸார் தேடியபோது, அவர்கள் பென்னலூர் ஏரிப் பகுதிக்குச் சென்று பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் தலைமையிலான சுமார் 200 போலீஸார், ஏரி பகுதியில் முகாமிட்டு தேடி வந்தனர்.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட போலீஸ் குழுக்கள் தேடியும் அவர்கள் பிடிபடவில்லை. இதையடுத்து, காட்டுப் பகுதியில் பதுங்கிய கொள்ளையர்களைப் பிடிக்க ட்ரோன் உதவியை போலீஸார் நாடினர்.

ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில இளைஞர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

நேற்று இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நீடித்தது. இந்நிலையில், இன்று மதியம் ஏரி பகுதியில் பதுங்கியிருந்த இளைஞர் ஒருவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

அப்போது போலீஸாரை நோக்கி அந்த இளைஞர் சுட முயற்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நபரை நோக்கி போலீஸார் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் இறந்த நபரின் உடல், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.

போலீஸாரின் தாக்குதலில் இறந்த நபர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் முர்கஷா எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே ஏரிப்பகுதிக்குள் பதுங்கியிருந்த மற்றொரு நபரான நதீம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் முதலில் நதீம் என்பவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கொடுத்த தகவலின்பேரின் முர்கஷாவை தேடிச் சென்றபோது என்கவுன்டர் சம்பவம் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொள்ளைக் கும்பலிடம் இருந்து 5 கத்திகள், துப்பாக்கி, தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :