ரோமாபுரி பேரரசுக்கு சவால் விட்ட பால்மைரா ராணி ஜெனோபியாவின் வரலாறு - அழிவை கொடுத்த பேராசை கதை

பட மூலாதாரம், Alamy
(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 17ஆம் கட்டுரை இது)
ஜெனோபியா, ரோமானிய காலனிய பகுதியான பால்மைராவின் ராணியாக இருந்தவர். இந்த பால்மைராதான் தற்கால சிரியா. அந்த பகுதியை பொது ஆண்டுக்கு பிந்தைய 267 அல்லது 268 முதல் 272 வரை ஜெனோபியா ஆண்டு வந்தார். ரோமின் கிழக்கு மாகாணங்கள் சிலவற்றை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு ரோமாபுரி பேரரசுக்கு சில காலம் சவால் விடுத்தார் அவர். கடைசியாக அவரை 270-275 வரை ரோமாபுரியை ஆட்சி செய்த பேரரசர் அவ்ரெலியான் படையால் அடக்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதுநாள்வரை சென்ற இடம் எல்லாம் தங்கள் வசமாக்கி வந்த ரோமாபுரிக்கு எதிராக ஒரு பெண், அதுவும் ராணுவ பாரம்பரியம் இல்லாத ஒருவர், ரோமாபுரி ஆளுகை பகுதிகளை தன்வசமாக்கினார். இந்த துணிச்சலை அங்கீகரிக்கும் வகையில் பல குறிப்புகளில் ஜெனோபியா பற்றி வரலாற்றாய்வாளர்கள் காலங்காலமாக எழுதி வந்துள்ளனர்.
ஜெனோபியாவின் கணவர் ஓடேனாதஸ், ரோமாபுரி ஆளுகையின் சிற்றரசராக பால்மைராவை ஆண்டு வந்தார். 267இல் அந்த பகுதியை அவர் பாரசீக ஆட்சியாளர்களிடம் இருந்து மீட்டெடுத்தார். ஓடேனாதஸின் முதல் மனைவி வழி பிறந்த மூத்த மகன் ஹெரோட்ஸ், 267 அல்லது 268இல் கொல்லப்பட்டார்.
அந்த காலத்தில் நேரடியாக பெண் ஆட்சியை வழிநடத்தும் வழக்கம் அந்த பகுதியில் கிடையாது. அதனால், தமது இளம் மகன் மற்றும் இளவரசன் வாஹ்பல்லாதஸின் பிரதிநியாகவும் பால்மைராவின் ராணியாகவும் தன்னை அறிவித்துக் கொண்டார் ஜெனோபியா. பிறகு தமது கணவர் வைத்திருந்த மாமன்னர் பட்டத்தை தமது இளம் மகனுக்கு ஜெனோபியா சூட்டினார்.
ஆனால், ராணியாக அறிவித்துக் கொண்ட பிறகு தமது கணவர் வழியில் ரோமாபுரி பேரரசுக்கு சிற்றரசாக செயல்பட ஜெனோபியா விரும்பவில்லை. 269இல் எகிப்தை கைப்பற்றிய அவரது படை, ஆசியாவின் ஒரு சில பகுதிகளையும் தன்வசமாக்கிக் கொண்டு ரோமாபுரி ஆளுகையில் இருந்து அவற்றை விடுவித்து விட்டதாக அறிவித்தார்.
ரோமாபுரிக்கு அடிபணிய மறுத்த ஆளுமை

பட மூலாதாரம், Getty Images
ஆனால், அந்த காலத்தில் எங்கும் பரந்து விரிந்திருந்த ரோமாபுரி படைகளுக்கு ஜெனோபியாவின் படைகளை அடக்குவது பெரிய கஷ்டமாக இருக்கவில்லை. அனிடோச் என்ற தற்போதைய துருக்கியின் அன்டாக்யாவுக்கும் எமேசா என்ற தற்போதைய சிரியாவின் ஹிம்ஸ் பகுதிக்கும் இடையே ஜெனோபியா படையினர் அணிவகுத்து வந்தபோது, அவர்களை ரோமாபுரி பேரரசர் அவ்ரெலியானின் படைகள் வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து ஜெனோபியா மற்றும் அவரது மகனும் தப்பிச் சென்ற போது, யூஃப்ரேட்டீஸ் நதியை கடக்கும் முன்பே அவர்களை ரோமாபுரி படைகள் பிடித்ததாகவும் அதன் பிறகு ஜெனோபியா படை வசம் இருந்த அனைத்து பகுதிகளையும் ரோமாபுரி பேரரசு தன்வசமாக்கிக் கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது.

- வரலாற்றுத் தொடர் 16: ஹிட்லருக்காக 'ஆரிய' கர்ப்பிணிகள் பிரசவித்த பல ஆயிரம் குழந்தைகள்
- வரலாற்றுத் தொடர் 15: சாஃபோ: லெஸ்பியன் உறவுக்காக கவிதையில் உருகிய பழங்கால கிரேக்க பெண் கவிஞர்
- வரலாற்றுத் தொடர் 14: 3ம் நூற்றாண்டில் சீனர்களை விரட்டியடித்த வியட்நாமிய லேடி ட்ரியூ
- வரலாற்றுத் தொடர் 13: ரோமானிய, பிரிட்டன் துருப்புகளை அலற விட்ட ராணி பூடிக்கா

சிறைப்பிடிக்கப்பட்ட பிறகு ரோமுக்கு அழைத்துச்செல்லப்படும் வழியில் பட்டினி இருந்து ஜெனோபியா உயிரை மாய்த்துக்கொண்டதாக ஒரு சிலரும், அவரை ரோமாபுரி படையினர் தலையை துண்டித்து கொலை செய்ததாகவும் மாறுபட்ட கதைகள் புனையப்பட்டுள்ளன. இவ்வளவுதான் ஜெனோபியாவின் வாழ்க்கை வரலாறு என்றாலும், அவர் தமது கணவர் இருந்த பிறகு ஆதிக்க ரோமாபுரி பேரரசுக்கு அடிபணியாமல் படையினரை திரட்டி பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி போல மக்களையும் படையினரையும் திரட்டி பல பகுதிகளை கைப்பற்றினார்.
தமது கட்டுப்பாட்டில் பால்மைரா இருந்த அந்த சில ஆண்டுகளில் அவர் எவ்வாறெல்லாம் ரோமாபுரி படைக்கு போக்கு காட்டி அவர்களின் பகுதிகளை கைப்பற்றினார் என்பதை விவரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

பட மூலாதாரம், European Space Imaging, Digital Globe, Google
பால்மைரா, பாலைவனங்கள் சூழ்ந்த பிரதேசம். அதன் ஆட்சியாளர்கள் ரோமானிய பேரரசுக்கு ஒத்துழைப்பு வழங்கியதால் பல நன்மைகளை அனுபவித்தது. தற்போதைய சிரியாவின் டமாஸ்கஸில் இருந்து வடகிழக்கே 130 மைல்கள் தூரத்தில் இருந்தது பால்மைரா.
முதலாம் நூற்றாண்டில் இந்த பகுதி ரோமாபுரி ஆளுகைக்கு வந்ததும் பொருளாதார ரீதியாக அதிக பலன்களை பெற்றது. அப்போது மத்திய தரைக்கடல் பிரதேசங்களை ஆண்ட ரோமானிய பேரரசுக்கும் ஆசியாவின் பல பிரதேசங்களை ஆண்ட பல்வேறு சாம்ராஜ்ஜியங்களுக்கும் இணைப்பு போல பால்மைரா விளங்கியது. இதனால், இந்த இடம் கேந்திர ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முக்கியமான பகுதியாக விளங்கியது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பால்மைரா

பட மூலாதாரம், RUBINA RAJA, PALMYRA PORTRAIT PROJECT
ஆசியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ரோமுக்கு செல்லும் பல சாம்ராஜ்ஜிய அரசர்கள் சில வாரங்கள் தங்கிச் செல்லும் உறைவிடமாக பால்மைரா ஆனது. இதனால் அந்த பாலைவன பிரதேசம், செல்வச்செழிப்புடன் விளங்கியது. அந்த கால வரலாற்றாய்வாளர்கள் இந்த பகுதியை பாலைவன பவளம் என்று அழைத்தனர்.
பாலைவன பிரதேசம் என்றாலும், பிரமிப்பூட்டும் கட்டடங்கள், வெற்றி வளைவுகள் என அவை பார்வையாளர்களுக்கு ஆச்சரிமூட்டின. இத்தகைய வசதி, வாய்ப்புகள் உள்ள தமது பகுதி ஏன் ரோமாபுரிக்கு கீழ் கப்பம் கட்டும் சிற்றரசாக இருக்க வேண்டும் என்ற சந்தனை தமது கணவர் இறப்புக்கு பிறகு ஜெனோபியாவுக்கு ஏற்பட்டதாக வரலாற்றாய்வாளர் அகஸ்டஸ் கூறுகிறார். அவர் பதிவு செய்த விவரங்கள் நம்பமுடியாத தகவலாக இருந்தாலும், தமது வாழ்காலத்துக்கு பிந்தைய நூற்றாண்டிலும் அவர் வாழ்ந்த வாழ்க்கையை வரலாற்றாய்வாளர்கள் பலர் ஆராய அந்த தகவல்கள் தூண்டுதலாக இருந்துள்ளன.

- வரலாற்றுத்தொடர் 12: பாலியல் தொழில், தகாத உறவு - சீன கடல் கொள்ளை ராணி
- வரலாற்றுத்தொடர் 11: பேரரசர் அலெக்சாண்டர் 32 வயதில் உயிருடன் புதைக்கப்பட்டாரா?
- வரலாற்றுத் தொடர் 10: இன்கா நாகரிகம்: நம்பிக்கை துரோகத்தை அனுபவித்தவர்களின் வரலாறு
- வரலாற்றுத் தொடர் 09: எதிரிகளின் ரத்தம் குடித்த சிதியர்கள் - யார் இந்த திகில் உலக ராஜாக்கள்?

அதனால்தான் பல கிழக்கத்திய வரலாற்றாய்வாளர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் கூட ஜெனோபியாவின் சந்ததி பற்றி ஆய்வு செய்துள்ளனர். அவர்களில் சிலர், எகிப்தின் தலாமி வம்ச ஆளுகையின் நெருக்கத்தில் இருந்து ஜெனோபியா விலகியிருக்க விரும்பினார் என்று கூறியுள்ளனர்.
ஒன்பதாம் நூற்றாண்டின் பாரசீக வரலாற்றாய்வாளரான அல்-தாப்ரி, ஜெனோபியா கிரேக்கத்தவராக இல்லாமல் அரபு வழியை கொண்டவராக இருக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். நவீன கால வரலாற்றாய்வாளர்கள் தலாமி வம்சத்தை சேர்ந்தவராக ஜெனோபியா இருந்திருக்க வாய்ப்பில்லை என்று வாதிட்டுள்ளனர். பால்மைரா பகுதியில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் அவர் பிறந்து சமூகத்தை பற்றி ஞானத்தை கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அவர் கல்வியறிவு தொடர்பாக வெகு குறைந்த பதிவுகளையை வரலாற்று நூல்களில் காண முடிகிறது.
18ஆம் நூற்றாண்டு வரலாற்றாய்வாளரான எட்வார்ட் கிப்பான், ரோமாபுரி பேரரசரின் அழிவும் வீழ்ச்சியும் என்ற தமது ஆறு தொகுப்புகள் கொண்ட நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.
"பேரரசுகளின் பலத்தை விவரிக்கும்போது, வரலாறில் தழைத்து நின்ற பெண்கள் பற்றிய கதைகளையே நவீன ஐரோப்பா வழங்கியிருக்கிறது. அத்தகைய பெண்களில் தமது இன ரீதியிலான ஆளுமைத்தன்மையுடன் ஒருவர் அந்தகாலத்தில் வெகுவாகப் புகழப்பட்டிருந்தார் என்றால் அது ஜெனோபியாவாகவே இருந்திருக்கும். அவர் எடுத்த அசாத்தியமான முடிவுகள் மற்றும் சூழ்நிலைகளை புரிந்து செயல்படும் ஆற்றல் பற்றிய பல வரலாற்றாய்வு நூல்களில் காண முடிகிறது. லத்தீன் மொழியில் புலமை பெற்றிருக்காவிட்டாலும், கிரேக்கம்,சிரிய, எகிப்திய மொழிகளில் சரளமாக பேசும் ஆற்றலை ஜெனோபியா பெற்றிருந்தார் என்கிறார் எட்வார்ட் கிப்பன்.
பாலைவனத்தை ஆதிக்கம் செலுத்திய சிற்றரசர்

பட மூலாதாரம், Getty Images
இவரது கணவர் ஓடேனாத்தஸ், 263இல் பால்மைராவை பாரசீகர்களிடம் இருந்து மீட்டார். ரோமாபுரிக்கு இணக்கமாக இருந்த அவர், பாரசீகர்களை அவர்களின் பிராந்தியங்களை நோக்கி விரட்டியடித்ததாக வரலாற்று நூல்களில் காண முடிகிறது.ரோமாபுரியின் பிரதிநிதியாக அல்லது சிற்றரசாக இருந்தாலும், தனக்கென கிழக்குப்பகுதியில் ஓர் ஆளுகையை நிர்மாணிக்க வேண்டும் என்பது ஓடேனாத்தஸின் எண்ணமாக இருந்தது. அதை அப்போதைய ரோமாபுரியின் புதிய பேரரரசான வலேரியாவின் மகன் கல்லினியஸால் தட்டிக்கழிக்க முடியவில்லை.
காரணம், அந்த உரிமை கோரலுக்கு முன்பே ஓடேனாத்தஸுக்கு அவரது மக்கள் மாமன்னர் பட்டத்தை வழங்கியிருந்தனர். முந்தைய ரோமாபுரி பேரரசும் அவருக்கு கிழக்கு ஆளுநர் என்ற பட்டதை வழங்கியிருந்தது. அந்த வகையில் ரோமாபுரியின் புதிய தலைநகராக பால்மைரா கருதப்பட்டாலும், அது அதிகாரபூர்வமாக அப்படி கருதப்படவில்லை.
செல்வமும், செல்வாக்கும் மிக்க ஓடேனாத்தஸின் வளர்ச்சி வெகு சில ஆண்டுகளே தொடர்ந்தன. 267இல் ரோமாபுரி பேரரசுக்காக தற்போதைய மத்திய துருக்கியில் உள்ள கப்படோசியா என்ற பகுதியில் கோத்ஸ் என்ற நாடோடி குழுவை விரட்டியடித்த பிறகு தமது அரண்மனைக்கு திரும்பிய ஓடேனாத்தஸை அவரது உறவினர் ஒருவரே கொன்று விட்டதாக வரலாற்றாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

- வரலாற்றுத்தொடர் 08: 'மாயன் நாள்காட்டி': உலகம் அழியும் என்று கணித்தது உண்மையா?
- வரலாற்றுத்தொடர் 07: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த ஆஸ்டெக் பேரரசைதெரியுமா?
- வரலாற்றுத்தொடர் 06: ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னரின் குடும்பம் சுட்டுக் கொல்லப்பட்ட ரத்த வரலாறு
- வரலாற்றுத்தொடர் 05: பழங்கால மெசபடோமிய நகரான பாபிலோன் வரலாறு உங்களுக்கு தெரியுமா?

இந்த நேரத்தில்தான் ஜெனோபியா, தமது மகனுக்கு பதிலாக அரியணை ஏறி முதலில் பாரசீகர்களின் பகுதிகளை வென்றெடுத்து பிறகு படிப்படியாக ரோமாபுரி எதிர்ப்பாளராக மாறுகிறார். அதுநாள்வரை கணவருக்கு அடங்கி வாழ்ந்த மனைவியாக இருந்த அவர், ரோமாபுரி ஆளுகையின் பலம், பலவீனம் அனைத்தையும் அறிந்திருந்தார். ரோமாபுரி ஆளுகைகளை ஜெனோபியா கைப்பற்றியபோது, அவரை தடுக்க முடியாதவர்களாக பேரரசு கல்லினியஸும், அவரது தளபதிகளும் இருந்தனர். அவருக்கு அடுத்து வந்த கிளாடியஸ் கோதிகஸ் பேரரசும் ஜெனோபியாவின் ஆளுகையை அங்கீகரிப்பதை தவிர வேறு வழியில்லாதவராக இருந்தார். அதற்கு காரணம், ஜெனோபியா கட்டுப்பாட்டில் இருந்த பரந்து விரிந்த பாலைவன பிரதேசம்.
அவரை பகைத்துக் கொண்டால் ரோமாபுரிக்கு வர வாய்ப்பாக உள்ள பால்மைராவில் தமது படையினருக்கு தடங்கல் உருவாகும். அவர்களால் பாலைவன பிரதேசத்தில் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலை உருவாகும். இப்படியாக ரோமுக்கு இணையான ஏகாதிபத்தியத்தை ஜெனோபியா பெருக்கிக் கொண்டே வந்தார். இந்த செல்வாக்கு, ரோமாபுரி பேரரசுக்கும் ஜெனோபியா ஆளுகைக்கும் இடையிலான விரிசலை பெரிதாக்கிக் கொண்டே வந்தது. நவீன சிரியாவின் அனைத்து பகுதிகள், அதன் அருகே உள்ள நவீன துருக்கியான அனடோலியா பகுதிகளை எல்லாம் தமது ஆளுகையின் இணைத்துக் கொண்டதாக ஜெனோபியா அறிவித்துக் கொண்டு முன்னேறினார்.
ஆசையால் விளைந்த விபரீதம்

பட மூலாதாரம், Getty Images
ஆனால், ஆளுகையை விரிவுபடுத்தும் ஆசைய அடக்க முடியாதவராய், தமது படைகளை 269இல் எகிப்துக்கு அனுப்பிய அவர் அலெக்சாண்ட்ரியாவை கைப்பறினார். 270இல் எகிப்தில் இருந்து ரோமுக்கு விநியோகிக்கப்பட்டு வந்த தானியங்களுக்கு தடை ஏற்படுத்தினார் ஜெனோபியா.
இந்த காலகட்டத்தில் ரோமாபுரியின் புதிய பேரரசான லூசியஸ் டோமிஷியஸ் அவ்ரெலியான் 270இல் பதவிக்கு வந்த உடனேயே தமது முன்னரங்க படை பலத்தை பெருக்கினார். இவரது தலைமையிலான் படைகள்தான் வடக்கு இத்தாலியில் கோத்ஸ் நாடோடிகள் குழுவை வீழ்த்தியது. பிரித்தானியா, ஹிஸ்பானியா, கால் ஆகிய பகுதிகளில் ரோமாபுரிய ஆளுகையை நிலைநாட்டியது.
கணவரின் மறைவுக்கு பிறகு மகனுக்கு சூட்ட வேண்டிய பட்டதை தனக்குத் தானேசூட்டிக் கொண்ட ஜெனோபியாவின் செயல்பாடு ரோமாபுரி புதிய பேரரசான அவ்ரெலியானின் கவனத்தை ஈர்த்தது.
ஜெனோபியா விடுத்து வந்த சவால்களை அவர் அவமானமாகக் கருதினார். அவர் ஜெனோபியா சரண் அடைய வேண்டும் என்ற எச்சரிக்கை தகவலை அனுப்பி வைத்தார்.
ஆனால், அதற்கு ஜெனோபியா அனுப்பிய பதிலில், "என்னை சரண் அடையக் கோரும் நீங்கள், கிளியோபாட்ராவின் முடிவை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். உயிரோடு மண்டியிட்டு இருப்பதை விட மரணத்தை தழுவுவதே சாளச்சிறந்தது என்ற அவரது முடிவுதான் என்னுடையதாகவும் இருக்கும்," என்று கூறியிருந்தார்.
ஒரு பெண்ணிடம் இருந்து இப்படியொரு எதிர்வினை வரும் என்பதை எதிர்பார்க்காத அவ்ரெலியான், ஜெனோபியா எங்கிருந்தாலும் அவரை பிடித்துக் கொல்ல உத்தரவிட்டார். அந்த நேரத்தில்தான் ரோமாபுரி படைகளிடம் தோற்று தமது மகனுடன் யூஃப்ரேட்டீஸ் நதியை கடக்க முயன்ற ஜெனோபியாவை ரோமாபுரி படையினர் பிடித்ததாக வரலாற்றாய்வாளர் அகஸ்டஸ் விவரிக்கிறார்.
இறப்புக்கு பிறகும் உயிர் கொடுக்கும் ஆய்வுகள்
ஜெனோபியாவின் பிறப்பு தகவல்களை எப்படி துல்லியமாக குறிப்பிட முடியவில்லையோ அப்படித்தான் அவரது இறப்புத் தகவல்களையும் ஆய்வாளர்களால் உறுதியாக இப்படித்தான் நடந்தது என்று குறிப்பிட இயலவில்லை.

- வரலாற்றுத்தொடர் 04: இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?
- வரலாற்றுத்தொடர் 03: பேரரசர் நெப்போலியன் வாழ்வு, மரணம் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
- வரலாற்றுத்தொடர் 02: 15,000 ஜப்பானியர்களை 1,500 இந்தியர்கள் வென்ற கதை
- வரலாற்றுத்தொடர் 01: சீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய மன்னரின் கல்லறை ரகசியம்

பொது ஆண்டுக்கு முந்தைய காலத்தில், ஒரு பாலைவன பிரதேசத்தில் பிறந்து, அதன் ஆட்சியாளரை மணம் முடித்து, பேரரசுக்கு அடிபணியாமல் சுயமாக ஓர் ஆளுகையை நிறுவியது நம்ப முடியாத ஒரு சாதனையாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது.
கணவருடன் ரோமாபுரியில் சில காலம் வாழ வேண்டும் என்பது ஜெனோபியாவின் ஆரம்ப கால கனவாக இருந்துள்ளது. ஆனால், வாழ்வதற்கு பதிலாக சிறைப்பிடிக்கப்பட்டு வந்த அவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக சிலரும், வேறு சிலர் ரோமில் ஒரு செனேட்டரை மணந்து கொண்டு மீதமுள்ள காலத்தை கழித்தார் என்றும் கதைகளை புனைந்துள்ளனர். ஆனால், அகஸ்டஸ் எழுதிய வரலாற்று நூலில், ஜெனோபியா நினைத்தது போலவே ரோமுக்குள் நுழைந்தார். ஆனால், தோல்வியுற்றுப்போனார்," என்று கூறியுள்ளார்.
வரலாற்றில் அவர் மறைந்த நிகழ்வு எப்படியாக இருந்தாலும், இறந்த பிறகும் பல நூற்றாண்டுகளைக் கடந்து நவீன காலத்திலும் கூட அந்த கிளர்ச்சி ராணியின் அசாத்திய துணிச்சல், பல கதைகள் மற்றும் திரைப்படங்கள் வடிவில் உயிர்ப்புடன் உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












