பருவநிலை மாற்றம்: COP26 மாநாடு என்பது என்ன? கிளாஸ்கோவில் இது ஏன் நடக்கிறது?

பட மூலாதாரம், Empics
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த மிகவும் முக்கியமானதாக கருதப்படும் உச்சி மாநாடு ஒன்றை பிரிட்டன் நடத்தவுள்ளது.
கிளாஸ்கோவில் நடக்க உள்ள இந்த உச்சி மாநாடு அக்டோபர் 31-ஆம் தேதி முதல் நவம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் மூலம் நம் அனைவரின் தினசரி வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படலாம்.
COP26 மாநாடு என்பது என்ன? இது ஏன் நடக்கிறது?
புதைபடிம எரிபொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் வெளியாகும் புகையால் உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக உண்டாகும் தீவிர நிகழ்வுகளான வெப்ப அலைகள், வெள்ளம், காட்டுத்தீ ஆகியவை அதிகரித்து வருகின்றன.
இதுவரை வெப்பம் பதிவு செய்யப்பட்ட காலங்களிலேயே கடந்த தசாப்த தான் மிகவும் அதிக வெப்பம் வாய்ந்ததாக உள்ளது.
அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் இவற்றைக் கட்டுப்படுத்த கூட்டு நடவடிக்கை தேவை என்று ஒப்புக் கொண்டுள்ளன.
கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் எரிபொருள் வாயிலான தங்கள் உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு தங்களிடம் கொண்டுள்ள திட்டம் என்ன என்பதை, இதில் பங்கேற்கும் 200 நாடுகளும் தெரிவிக்க வேண்டும்.
தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்த வெப்பநிலையை விட 2 டிகிரி செல்சியசுக்கும் மிகாமல் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டும் என்று 2015ஆம் ஆண்டு உலக நாடுகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

2 டிகிரிக்கும் மிகக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவில் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தின் இலக்கு.
பருவநிலை மாற்றம் காரணமாக உண்டாகும் பேரழிவுகளை தவிர்ப்பதற்காக உலக நாடுகள் கையெழுத்திட்டு இந்த ஒப்பந்தம்தான் "பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், 2050ஆம் ஆண்டில் தங்களது நிகர எரிபொருள் உமிழ்வுகளை பூஜ்ஜியம் எனும் அளவில் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் பெருமளவில் தங்கள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டி இருக்கும். (வெளியேற்றப்பட்ட கார்பன், உறிஞ்சப்பட்ட கார்பன் ஆகியவற்றின் இடையே உள்ள வேறுபாடு நிகர உமிழ்வு எனப்படும்.)
COP26 மாநாட்டில் என்ன முடிவு செய்யப்படும்?

பட மூலாதாரம், Getty Images
COP26 மாநாடு தொடங்குவதற்கு முன்பே தங்களது கார்பன் வெளியேற்றம் அளவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதற்கான திட்டங்களை பெரும்பாலான நாடுகள் வகுத்துவிடும்.
இதன் மூலம் இனிமேல் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த ஒரு தெளிவு இப்பொழுதே கிடைக்கும்.
இந்த மாநாடு நடக்கும் இரண்டு வார காலத்தில் பெரும்பாலான எண்ணிக்கையில் புதிய அறிவிப்புகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.
இவை பெரும்பாலும் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான அறிவிப்புகளாகவே இருக்கும்.
அவற்றில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை அமல்படுத்த தேவையான விதிகள் என்ன என்பதும் உள்ளடங்கும்.
உதாரணமாக கீழ்கண்ட அறிவிப்புகள் அவற்றில் இருக்கலாம்.
- மின்சாரத்தை பயன்படுத்தும் கார்களுக்கு பெருமளவில் மாறுதல்
- நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவை வேகமாக குறைத்தல்
- குறைவான அளவிலேயே மரங்களை வெட்டுதல்
- கடலோரப் பகுதிகளில் இரு ஏற்படும் இயற்கை அபாயங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்கள் காரணமாக உண்டாகும் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தல்
உலக நாடுகளின் தலைவர்கள், பேச்சுவார்த்தையாளர்கள், ஊடகவியலாளர்கள் என சுமார் 25 ஆயிரம் பேர் இந்த மாநாடு உச்சி மாநாட்டின்போது க்ளாஸ்கோவில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

COP26 மாநாட்டின்போது அரசின் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் பருவநிலை பிரசாரகர்களும் தொழில் துறையைச் சார்ந்தவர்களும் பல நிகழ்வுகளை நடத்துவதோடு தங்கள் தொடர்புகளையும் விரிவுபடுத்திக் கொள்வர். இந்த மாநாட்டின்போது போராட்டங்களும் நடக்கும். உதாரணமாக எக்ஸ்டின்ஷன் ரெபெல்லியன் எனும் அமைப்பு, புதைபடிம எரிபொருட்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்த மாநாட்டின் இறுதியில் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தப் பிரகடனத்தில் COP26 மாநாட்டில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் கையெழுத்திட வேண்டியிருக்கும்.
அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு தாங்கள் எடுக்க உள்ள நடவடிக்கைகளுக்கு ஒப்புக் கொண்டு நாடுகள் கையெழுத்திடும்.
COP26 மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா?
பணம் மற்றும் பருவநிலை நீதி குறித்து பெரும்பாலான விவாதங்கள் இந்த மாநாட்டில் நடக்கலாம்.
வளரும் நாடுகளில் தனிநபர் மாசுபடுதல் விகிதம் குறைவாக இருக்கும். கடந்த காலங்களில் உண்டான பெரும்பாலான மாசுக்கு இந்த நாடுகள் காரணமாக இல்லை.
எனினும் பருவநிலை மாற்றம் காரணமாக மிகவும் மோசமான பாதிப்புகளை இந்த நாடுகள் எதிர்கொண்டுள்ளன.
பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் விளைவுகளை சமாளிக்கவும், கார்பன் அளவை கட்டுப்படுத்தவும் இந்த நாடுகளுக்கு பணம் தேவை.
இதனால் நிலக்கரிக்கு பதிலாக சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தல், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த நாடுகளுக்கு பணம் தேவை.
இது மட்டுமல்லாமல் பருவநிலை மாற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட வளரும் நாடுகளுக்கு இழப்பீடு தருவதற்கான விவாதமும் இதில் நடக்கும்.
2020ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு உதவ 100 பில்லியன் அமெரிக்க டாலர் (தற்போதைய இந்திய மதிப்பில் சுமார் 7,50,000 கோடி ரூபாய்) வழங்குவதாக பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டிருந்தன. ஐக்கிய நாடுகள் மன்றம் மேற்கொண்ட மதிப்பீடு ஒன்றின்படி இந்த இலக்கு எட்டப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.
இதன் காரணமாக பணக்கார நாடுகள் இன்னும் மேலதிகமாக பணம் தர வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.
COP26 மாநாட்டில் சீனா என்ன ஒப்புக்கொள்கிறது என்பது மிகவும் முக்கியம். தற்போதைய நிலவரப்படி உலகிலேயே அதிகமான மாசுபாட்டை வெளிப்படுத்தும் நாடாக சீனா உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இது மட்டுமல்லாமல் உலகெங்கிலும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களிலும் சீனா முதலீடு செய்து வருகிறது.
சீனா மற்றும் புதைபடிம எரிபொருள்களை அதிகமாக தயாரிக்கும் நாடுகள் அவற்றின் மீது தங்களுக்கு இருக்கும் சார்பை குறைத்துக் கொள்வதற்கு எந்த அளவு ஆர்வம் காட்டும் என்றும் கவனிக்கப்பட்டு வருகிறது.
COP26 மாநாடு எவ்வாறு உங்களை பாதிக்கும்?
COP26 மாநாட்டில் நாடுகள் ஒப்புக் கொள்ளும் விஷயங்கள் அன்றாட வாழ்வுடன் தொடர்புடையவையாக இருக்கும்.
உதாரணமாக நீங்கள் பெட்ரோல் கார் ஓட்டுகிறீர்களா மின்சார கார் போடுகிறீர்களா, உங்கள் வீட்டு பாய்லருக்கு கிடைக்கும் எரிபொருள் எதிலிருந்து கிடைக்கிறது அல்லது ஆண்டுக்கு நீங்கள் எத்தனை முறை விமானத்தில் பறக்கிறீர்கள் என்பன உள்ளிட்டவை இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் தாக்கத்துக்கு உள்ளாக்கலாம்.
நீங்கள் அடிக்கடி கேட்க வாய்ப்புள்ள பதங்கள்
COP: COP என்பது கான்ஃப்ரன்ஸ் ஆஃப் த பார்ட்டீஸ் (Conference of the Parties) என்பதன் சுருக்கம்.
COP1 மாநாடு 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது நடக்கும் மாநாடு 26வது மாநாடு என்பதால் COP26 என்று அழைக்கப்படுகிறது.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்: புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் முதல் ஒப்பந்தமாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் உள்ளது.
ஐபிசிசி: பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளிடையேயான குழு ஐபிசிசி என்று அழைக்கப்படுகிறது. தற்போது பருவநிலை மாற்றம் தொடர்பான அறிவியல் ஆய்வுகளை இந்த குழுதான் மேற்கொண்டு வருகிறது.
1.5 டிகிரி செல்சியஸ்: பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை தவிர்க்க வேண்டுமென்றால் தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பு இருந்த சராசரி வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கு புவி வெப்பமயமாதல் அதிகரிக்கக் கூடாது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
COP26 மாநாடு வெற்றி பெறுமா?

பட மூலாதாரம், Getty Images
மாநாட்டை நடத்தும் நாடு என்ற முறையில் 2050ஆம் ஆண்டில் நிகர கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியம் ஆக்கவும் 2030க்குள் ஒட்டுமொத்த கார்பன் வெளியேற்றத்தை பெருமளவு குறைக்கவும் அனைத்து நாடுகளும் ஒப்புக் கொள்வதற்கான வலிமையான கூட்டறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று பிரிட்டன் விரும்பும்
நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டை குறைத்து இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பது இந்த மாநாட்டின் நோக்கமாக இருக்கும்.
அதிகரித்து வரும் வெப்பநிலையைச் சமாளிப்பதற்கு மிகக் கணிசமான அளவில் நிதி உதவியை அடுத்த ஐந்துஆண்டுகளுக்கு வளரும் நாடுகள் எதிர்பார்க்கும்.
1.5 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டுமானால் மேற்கண்ட நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்பட வேண்டும். அதை விட குறைவான நடவடிக்கைகள் எதுவும் புவியைக் காப்பதற்குப்போதாது.
ஆனால் ஏற்கனவே மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது என்றும், COP26 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் என்ன முடிவை எடுத்தாலும் தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பு இருந்த சராசரி வெப்பநிலையை விட வரும் காலத்தில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிப்பதை தடுக்க முடியாது என்றும் சில அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












