மெசபடோமிய நாகரிகத்தின் பழங்கால நகரான பாபிலோன் வரலாறு உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

பட மூலாதாரம், ASSAAD AL-NIYAZI / getty images
(உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிடுகிறது பிபிசி தமிழ். அதன் ஐந்தாம் கட்டுரை இது.)
மெசபடோமிய நாகரிகத்தின் பழங்கால நகரமான பாபிலோன் குறித்து நிச்சயம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
மெசபடோமியாவின் தெற்கு பகுதியில் அமைந்திருந்த பாபிலோனிய பேரரசின் தலைநகராக இந்த நகரம் இருந்தது.
தற்கால இராக்கின் பாக்தாத் நகரில் இருந்து தெற்கே பயணித்தால் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் பாபிலோன் அமைந்திருந்தது.
பாபிலோனின் தொங்கும் தோட்டம் பற்றி நீங்கள் நிறைய கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால் பாபிலோன் நகரம் பற்றியும் பாபிலோனிய பேரரசின் வரலாறு குறித்தும் உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?
மிகப்பெரிய பேரரசின் மையமாக பாபிலோன் உருவெடுத்தது எப்படி?
பாபிலோனின் தொடக்க கால வரலாறு குறித்து அதிகம் அறியப்படவில்லை. ஆனால் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோன் நகரம் ஒரு நிர்வாக மையமாக இருந்ததாக பழங்கால ஆவணங்கள் காட்டுகின்றன.
கிமு 1894-ல் பாபிலோன் நகரம் சுமு ஆபும் என்பவரால் கைப்பற்றப்பட்டது. தற்கால சிரியாவில் உள்ள பகுதி ஒன்றின் தலைவராக இருந்த இவர் இங்கு ஓர் அரசை நிறுவினார். இவர் முதல் பாபிலோனியப் பேரரசின் முதலாவது மன்னரானார்.
ஆனால் முதல் பாபிலோனியப் பேரரசின் ஆறாவது மன்னர் ஹம்முராபி 1792இல் பதவியேற்ற பின்னர் பாபிலோன் வரலாறு முக்கியத்துவம் பெற்றதாக மாறியது.
ஹம்முராபி என்பவர் யார் அவர் என்ன செய்தார்?

மன்னர் ஹம்முராபி கிமு 1792 முதல் கிமு 1750 வரை பாபிலோனிய பேரரசை ஆட்சி செய்தார். யூப்ரடீஸ் நதிக்கரையில் அமைந்திருந்த பல நகர்ப்புறங்களான உர், உருக், இசின், லார்சா ஆகிய பகுதிகளை பாபிலோன் உடன் இணைத்தார்.
இதன் பின்பு பாபிலோனியா பரப்பளவில் மிகப்பெரிய பேரரசாக உருவானது. இந்தப் பேரரசை ஆட்சி செய்த ஹம்முராபி கடவுளாக பார்க்கப்பட்டார்.
இவர் 282 சட்டங்களை உள்ளடக்கிய ஹம்முராபி சட்டவிதிகளை (Code of Hammurabi) கிமு 1754ஆம் ஆண்டு உருவாக்கினார்.
நன்கு டன் எடையுள்ள 'பேசால்ட்' வகைப் பாறையில் பொறிக்கப்பட்ட இந்த சட்டவிதிகள் தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள லூவ்ர அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ள சட்ட விதிகளை மீறுவோரின் நாக்கு, கைகள், மார்புகள், காது அல்லது கண் ஆகியவற்றை வெட்டி எடுப்பதும் தண்டனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவர் மீதான குற்றம் நிரூபணம் செய்யப்படும் வரை அவர் நிரபராதியாகவே கருதப்பட வேண்டும் எனும் கருத்துக்கு இந்த விதிகள் ஒரு பழங்கால எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
பாபிலோனிய சமூகத்தில் மூன்று வர்க்கங்களாக மனிதர்கள் இருந்தனர். சொத்து உடையவர்கள், சுதந்திர மனிதர்கள் மற்றும் அடிமைகள் என்பவையே அந்த பிரிவுகள்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் எந்த வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்பதை பொருத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை மாறும்.

பட மூலாதாரம், sergey Mayorov / 500px / getty images
உதாரணமாக ஒருவர் ஒரு பணம் படைத்த சொத்துடைய மனிதரை கொலை செய்தால் அவருடைய கைகள் வெட்டப்படும். ஆனால் அடிமை வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்தால் அவருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.
ஹம்முராபி ஆட்சி காலத்திற்கு பிறகு பாபிலோன் என்ன ஆனது?
மன்னர் ஹம்முராபி இறந்த பின்பு பாபிலோனிய பேரரசின் வலிமை குறைந்தது. இதனால் கிமு 1595ல் முதலாம் ஹிட்டைட் முர்சிலி என்பவரால் பாபிலோனியா கைப்பற்றப்பட்டது.
இதன்பின்பு வடகிழக்கு பாபிலோனியாவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் இருந்து வந்த காசிட்டு இன (Kassite) மன்னர்களால் சுமார் 500 ஆண்டுகாலம் பாபிலோனிய பேரரசு ஆட்சி செய்யப்பட்டது.
இவர்களது ஆட்சி காலத்தில்தான் இன்றைய மத்திய கிழக்கு நாடுகளின் பழங்காலப் பகுதிகளில் பாபிலோனிய மொழி பரவலாகப் புழங்கப்பட்டது.
பாபிலோனிய பேரரசு செல்வம் மிகுந்ததாக எப்பொழுது இருந்தது?
கிமு 1200 முதல் கிமு 600 வரையிலான காலகட்டத்தில், மெசபடோமியாவில் இருந்த அசீரியா மற்றும் இலம் ஆகிய பேரரசுகளுக்கு இடையே நடந்த போரால் பாபிலோனியா பேரரசு பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் கிமு 605இல் இரண்டாம் நெபுகாத்நேசர் எனும் புதிய மன்னர் ஒருவர் உருவெடுத்தார்.
தொடர்ச்சியான வெற்றிகளுக்கு பிறகு இரண்டாம் நெபுகாத்நேசர் இன்னும் மிகப்பெரிய பாபிலோனிய பேரரசை நிறுவினார்.
இது பாரசீக வளைகுடாவில் இருந்து எகிப்தின் எல்லைவரை இருந்தது. பாபிலோன் நகரத்துக்கான நுழைவாயிலாக கருதப்படும் இஸ்தார் நுழைவாயில் உள்பட பல கட்டடங்கள் இவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டன.

பட மூலாதாரம், Reuters
பாபிலோனிய கட்டுமானமாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பேபல் கோபுரம் (Tower of Babel) ஒரு கற்பனை என்று பலரும் கூறுகிறார்கள்.
பாபிலோனின் தொங்கும் தோட்டம்
பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக பாபிலோனின் தொங்கும் தோட்டம் கூறப்படுகிறது. தமது மனைவி அமியிட்டீஸ் என்பவருக்காக இரண்டாம் நெபுகாத்நேசர் இந்தத் தொங்கும் தோட்டத்தை கட்டியதாக கூறப்படுகிறது.
தாம் பிறந்த இடத்தின் பசுமை நிறைந்த மலைகளை அவர் பிரிந்ததால் மிகவும் வாடினார் என்பதால் மன்னர் தொங்கும் தோட்டத்தை கட்டியதாக கூறப்படுகிறது.
மரங்களும் செடிகளும் கொடிகளும் நிறைந்த இந்த பாபிலோனின் தொங்கும் தோட்டம் எந்த இடத்தில் இருந்தது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தத் தோட்டம் என்ற ஒன்று இருந்ததே ஒரு கற்பனை என்று கூறுவோரும் உள்ளனர்.
எது எப்படியோ அந்த தோட்டதுக்கான தேடல் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
பாபிலோன் நகரத்திற்கு பிற்காலத்தில் என்னானது?

பட மூலாதாரம், Reuters
கிமு 539இல் பாரசீகர்கள் பாபிலோனா கைப்பற்றினர், அதன் பின்பு அது கலை மற்றும் கல்விக்கான ஒரு மையமாக உருவானது.
பேரரசர் அலெக்சாண்டர் கிமு 331ஆம் ஆண்டு பாரசீக பேரரசை வீழ்த்தியபோது கூட பாபிலோன் நகரை சேதப்படுத்த கூடாது என்று உத்தரவிட்டார்.
அலெக்சாண்டரின் மரணத்துக்கு பிறகு போர் உள்ளிட்ட காரணங்களால் பாபிலோனில் குடியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர்.
பழங்கால உலகில் பேரும் புகழும் பெற்று விளங்கிய பாபிலோன் நகரம் மெல்ல மெல்ல சிதிலமடைந்து அழியத் தொடங்கியது.
இராக்கை ஆட்சி செய்த சதாம் உசேன் பாபிலோன் நகரத்தை 1980-களில் மறுகட்டுமானம் செய்தார். இதன்பின் பழங்கால பாபிலோன் நகரத்தின் எச்சங்கள் இப்பொழுது மிக மிக குறைவாகவே வெளியில் தெரிகின்றன.
பிற செய்திகள்:
- 'அமித் ஷா வருகிறார்; கதவுகளை மூடி வையுங்கள்' - கடிதம் எழுதிய குஜராத் காவல்துறை
- இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, சலுகைகள் ரத்து - உ.பி. அரசு திட்டம்
- கேரளாவை அடுத்து தமிழ்நாட்டிலும் ஜிகா வைரஸ் எச்சரிக்கை: அறிகுறிகள், பாதிப்பு என்ன?
- Sulli Deals: முஸ்லிம் பெண்களை விற்க உருவாக்கப்பட்ட செயலியால் அதிர்ச்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












