அலெக்சாண்டர்: 32 வயதில் மிகப்பெரிய பேரரசை நிறுவிய பழங்கால கிரேக்க மன்னரின் வரலாறு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், உசேன் அஸ்கரி
- பதவி, பிபிசி உருது
வரலாற்றில் ஓர் அசாதாரண மனிதராக அவர் நினைவுகூரப்படுவார் என்று பார்வையாளர்கள் நினைக்கும் விதமாக சிறுவயதிலிருந்தே அவரிடம் பல திறமைகள் இருந்தன.
12 வயதிலேயே, அவர் ஒரு கட்டுக்கடங்காத காட்டுக் குதிரையை அடக்கினார். அது ப்யூசிபெலஸ் என்ற பெயருடைய பெரிய காட்டுக் குதிரை. பின்னர் அந்த குதிரை சிறுவனின் தோழனாக கிட்டத்தட்ட அவனது வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்தது.
இந்த சிறுவன் வளர்ந்ததும் 'மகா அலெக்சாண்டர்' என்று அழைக்கப்பட்டார். மேலும் மிகவும் பிரபலமான பண்டைய கால ஆளுமைகளில் ஒருவராகவும் ஆனார்.
சிகந்தர் என்று அறியப்படும் அலெக்சாண்டர் கிமு 356 இல் மாசிடோனியாவில் பிறந்தார். மாசிடோனியா, வடக்கு கிரேக்கத்திலிருந்து பால்கன் வரை பரவிய ஒரு பகுதி. அவரது தந்தை தனது சொந்த பாதுகாப்பு காவலர்களில் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அரியணைக்கான போராட்டம் தொடங்கியது.
இந்த போராட்டத்தில் அலெக்சாண்டர் தனது எதிரிகளை எல்லாம் ஒழித்து தமது 20 வது வயதில் மன்னரானார். இதன் பின்னர், அலெக்சாண்டர் 12 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் தனது வீரர்களுடன் 12 ஆயிரம் மைல்கள் படை நடத்திச் சென்று அதனை வெற்றிப் பயணமாகவும் மாற்றினார்.
மத்திய ஆசியா வரை கிரேக்க கலாசாரம்
அலெக்சாண்டர் பாரசீக பேரரசின் மூன்றாம் டேரியசை தோற்கடித்து, கிரேக்க கலாசாரத்தை மத்திய ஆசியா வரை பரப்பினார்.

அலெக்சாண்டர் பேரரசு, மேற்கில் கிரேக்கத்திலிருந்து, கிழக்கில் இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரான், இராக் மற்றும் எகிப்து வரை விரிவடைந்தது. அலெக்சாண்டர் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க,திறமையான ராணுவத் தளபதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
அலெக்சாண்டருக்கு முன்பு மாசிடோனியா ஒரு புவியியல் பரப்பின் பெயராக மட்டுமே இருந்தது. இப்பகுதி உறுதியாக இணைக்கப்பட்ட ஓர் ஆட்சிப்பரப்பு அல்ல. இருப்பினும், அலெக்சாண்டரின் தந்தை இரண்டாம் ஃபிலிப், இப்பகுதிக்கு ஒரு ஐக்கிய அரசின் வடிவத்தை கொடுத்தார்.
அலெக்சாண்டரின் தாய் ஒலிம்பியாஸ், அவரது தந்தை இரண்டாம் ஃபிலிப்பின் மூன்றாவது அல்லது நான்காவது மனைவியாக இருந்தார். மேலும் அவர் குடும்பத்தில் முதல் ஆண்மகனை பெற்றெடுத்ததால் முக்கியமானவராக விளங்கினார். அதாவது, அலெக்சாண்டரின் வடிவத்தில் அவர் அரசுக்கு வாரிசை வழங்கியிருந்தார்.
அரிஸ்டாட்டில் மூலம் கல்வி

பட மூலாதாரம், Getty Images
அலெக்சாண்டருக்கு அந்த காலகட்டத்தின் மிகச்சிறந்த கல்வி வழங்கப்பட்டது என்று இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழக செவ்வியல் இலக்கிய விரிவுரையாளர் ரேச்சல் மியர்ஸ் கூறுகிறார். அலெக்சாண்டருக்கு 13 வயதாக இருந்தபோது சிறந்த தத்துவஞானியான அரிஸ்டாட்டில் அவரது ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார்.
"அலெக்சாண்டர் அரிஸ்டாட்டிலிடமிருந்து கிரேக்க கலாசார அடிப்படையிலான கல்வியைப் பெற்றார். அதனால்தான் அவருக்கு தத்துவம் கற்பிக்கப்பட்டது. மேலும் அனைத்து படித்த கிரேக்கர்களைப் போலவே, ஹோமரின் இலியட், ஒடிசி போன்ற காப்பியங்களில் தேர்ச்சி பெற்றார்," என்று ரேச்சல் மியர்ஸ் குறிப்பிட்டார்.
"இலியட், அலெக்சாண்டருக்கு மிகவும் பிடித்தமானது. போரின் போது, அவர் தனது தலையணைக்கு கீழே, இந்த காப்பியத்தின் சில பகுதிகளை வைத்துக்கொண்டு தூங்கினார்."
இலியட் என்பது ட்ராய் நகரத்தின் கதையையும் கிரேக்கர்களுக்கிடையேயான போரின் கடைசி ஆண்டையும் சொல்லும் ஒரு காப்பியம். அலெக்சாண்டருக்கும் இந்த கதையின் நாயகன் எக்லெசுக்கும் இடையே ஒரு வலுவான மனத்தொடர்பு உருவானது.
கூடவே, கிரேக்கர்களின் புனித கதாபாத்திரமான ஹெர்குலிஸ் அவரை பெரிதும் ஈர்த்தது. இந்த கதாபாத்திரம் போரின் போது அவரது மனதில் எப்போதுமே இருந்தது.
ஒப்பில்லாத ஆட்சியாளர்

பட மூலாதாரம், Getty Images
அரிஸ்டாட்டிலின் மாணாக்கனாக இருந்த தாக்கம் அலெக்சாண்டரின் மீது வாழ்நாள் முழுவதும் இருந்தது. "கிரேக்க பிரபுத்துவத்திலிருந்து ஒரு துணிச்சலான சிறுவனை ஒரு ஒப்பில்லாத ஆட்சியாளராக மாற்ற அரிஸ்டாட்டில் ஒரு நல் வாய்ப்பைப் பெற்றார். ஆனால் இது முழுமையாக நிறைவேறவில்லை. அரிஸ்டாட்டில் போதித்த கல்வி, அலெக்சாண்டர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவர் கிரேக்க நாடுகளை கையாண்ட விதம் கட்டுகிறது. ஒரு சம்பவம் இந்தக் கல்வியை விளக்குகிறது," என்று ரேச்சல் மியர்ஸ் குறிப்பிடுகிறார்.
"அவர் புகழ்பெற்ற தத்துவஞானி டியோஜெனெசை சந்திக்க கிரேக்க நகரமான கொரிந்துக்குச் சென்றார். அவர் ஆற்றிய பணிக்காக அவரை வாழ்த்த. அலெக்சாண்டர் வந்தபோது, டியோஜெனெஸ் இருக்கையில் அமர்ந்திருந்தார்."
"உங்களுக்கு நான் என்ன செய்யட்டும் என்று அலெக்சாண்டர் டியோஜெனசிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த டியோஜெனெஸ்," நீ கொஞ்சம் நகர்ந்து நில். நீ என் முன்னே நிற்பதால் சூரிய ஒளி என் மீது விழவில்லை," என்றார்.
இந்த பதிலை அலெக்சாண்டர் சகித்துக்கொண்டது அரிஸ்டாட்டில் போதித்த கல்வியின் விளைவாகும்.
அலெக்சாண்டரின் பலவீனங்கள்

பட மூலாதாரம், AFP
"அலெக்சாண்டரின் தந்தை இரண்டாம் ஃபிலிப்புக்கு பல மனைவிகள் இருந்தனர் என்பது நமக்குத் தெரியும். அவர்களில் ஒருவர் பேரழகி கிளியோபாட்ரா. அவர் அலெக்சாண்டருக்கும் அவரது தாய்க்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தினார், "என்று அலெக்சாண்டர் ஆட்சிக்கு வந்ததை விவரித்த பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் செவ்வியல் இலக்கியப் பேராசிரியர் டயானா ஸ்பென்சர் கூறுகிறார்.
"தாய், மகன் இருவரும் தாங்கள் முழுமையான மாசிடோனிய ரத்தம் அல்ல என்று உணரத் தொடங்கினர். இந்த உண்மை அவர்களின் கெளரவத்தை குலைப்பதாகவும், அரசியல் ரீதியாக தீங்கு விளைவிப்பதாகவும் இருந்தது. சிம்மாசனத்திற்கான போராட்டத்தில் இது அலெக்சாண்டரின் பலவீனமாக இருந்தது.
இரண்டாம் ஃபிலிப்பின் புதிய மனைவியான கிளியோபாட்ரா புதிய ராணியாக மாறியிருக்கலாம். மேலும் ஃபிலிப்புக்குப் பின் அரசுரிமைக்கு வருவதற்கான போட்டியில் ஈடுபட்டவர்களுக்கு இது உதவியாக இருந்திருக்கலாம் . இதன் மூலம் அலெக்சாண்டர் மன்னராக மாறுவதற்கு கிளியோபாட்ரா ஒரு தடையாக இருந்திருக்கக்கூடும்," என்று டயானா ஸ்பென்சர் தெரிவிக்கிறார்.
அரசியல் உண்மைநிலை
முற்றிலும் மாசிடோனிய நாட்டைச் சேர்ந்த ஒரு புதிய ஆண் வாரிசு தோன்றினால், அலெக்சாண்டருக்கு சிக்கல் ஏற்படக்கூடும் என்பது ஒரு அரசியல் உண்மை. பல வரலாற்றாசிரியர்களும் இந்த நிலையின் உளவியல் பின்னணியை முன்வைத்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
"அலெக்சாண்டர் ஆறு மாதங்கள் நாடு கடந்து வாழ்ந்தார். மேலும் அவரது தாயும் சில மாதங்கள் அரசவையிலிருந்து விலகியே இருந்தார். சிறிது காலம் கழிந்தவுடன் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான மனக்கசப்பு நீங்கி, அலெக்சாண்டர் நாடு திரும்பினார். ஆனால் உறவில் ஏற்பட்ட விரிசல்,அலெக்சாண்டர் வாரிசாக உருவெடுக்கும் வழியில் ஒரு தடையாக மாறியது," என்று டயானா ஸ்பென்சர் விளக்குகிறார்.
"இந்த சூழ்நிலையில், ஒரு சம்பவம் நிகழ்ந்தது, அது அலெக்சாண்டரை அரியணையில் அமர்த்தியது. ஒரு தூய மாசிடோனிய ரத்தம் அவரது வாரிசுரிமைக்கு சவால் விடக்கூடிய சூழ்நிலை உருவாவதை அவர் தடுத்தார்,"
பாரசீக சாம்ராஜ்யம்
அலெக்சாண்டரின் மாற்றாந்தாயான கிளியோபாட்ராவின் மகளின் திருமணத்தில் மன்னர் இரண்டாம் ஃபிலிப் ஒரு பாதுகாவலரால் கொல்லப்பட்டார் என்று டயானா ஸ்பென்சர் கூறுகிறார். தப்பிக்க முயன்றபோது அந்தக் காவலரும் கொல்லப்பட்டார். எனவே இந்த கொலைக்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Alamy
ஆனால் இந்த கொலையில் அலெக்சாண்டருக்கும் அவரது தாய்க்கும் தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த கொலையுடன் அலெக்சாண்டர் நிற்கவில்லை. அவர் தனக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய அனைவரையும் ஒவ்வொருவராகக் கொன்றார்.
தன் மாற்றாந்தாய் மகன்களில் ஒருவரான ஃபிலிப் எரிடாய்ஸைத் தவிர்த்து தன்னுடைய எல்லா சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் தான் மன்னராவதற்கு இடையில் நிற்கக்கூடிய அனைவரையும் அலெக்சாண்டர் கொன்றார். அவர்களில் சிலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
இறுதியில் அலெக்சாண்டர் அரியணையில் அமர்ந்தார். இப்போது அவரது பார்வை பாரசீக சாம்ராஜ்யத்தின் மீது விழுந்தது. பாரசீக பேரரசு மத்திய தரைக்கடலுடன் இணைந்த பகுதிகளை 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தது. இந்தப் பேரரசு வரலாற்றின் உண்மையான வல்லரசுகளில் ஒன்றாகும்.
போர்த் தந்திரத்தில் தேர்ச்சி
பாரசீகப் பேரரசின் எல்லை இந்தியாவிலிருந்து எகிப்து மற்றும் வடக்கு கிரேக்கத்தின் எல்லை வரை நீடித்திருந்தது. ஆனால் இந்த மாபெரும் பேரரசின் முடிவு அலெக்சாண்டர் மூலம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், AFP
பாரசீகப் பேரரசை விட சிறிய ஆனால் திறமையான ராணுவத்தின் கைகளில் மூன்றாம் டேரியஸ் மன்னர் தோற்கடிக்கப்பட்டது, வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.
இந்தப்போரின் விளைவாக ஒரு பண்டைய வல்லரசின் சரிவு ஏற்பட்டது. அதே நேரம் ஒரு புதிய, பரந்த பேரரசு மூலம் கிரேக்க கலாசாரம், நாகரிகம் பரவியது.
அலெக்சாண்டரின் வெற்றியின் பெருமை அவரது தந்தையையும் சாரும் என்று வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள். அவர் ஒரு பெரிய திறமையான ராணுவத்தை உருவாக்கியிருந்தார். அதன் தலைமை மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் விசுவாசமான தளபதிகளின் கைகளில் இருந்தது.
ஒரு தந்திரமான, திறமையான எதிரியை அவருடைய பிரதேசத்திலேயே தோற்கடித்தது, அலெக்சாண்டரின் புத்திசாலித்தனம், போர்த் தந்திரத்தில் அவர் பெற்ற தேர்ச்சி ஆகியவற்றின் சான்று என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
அலெக்சாண்டரின் ராணுவம்
மாசிடோனியர்கள் எப்போதும் ஒரு ராணுவ சக்தியாக இருந்ததில்லை. கிரேக்கத்தில், ஏதென்ஸ், ஸ்பார்டா மற்றும் தீப்ஸ் அரசுகள் வரலாற்று ரீதியாக அதிகார மையங்களாக இருந்தன. இந்த அரசுகளின் தலைவர்கள் மாசிடோனிய மக்களை காட்டுமிராண்டிகள் என்று அழைப்பார்கள்.
அலெக்சாண்டரின் தந்தை இரண்டாம் ஃபிலிப், மாசிடோனிய ராணுவத்தை மிகவும் பலம் பொருந்தியதாக மாற்றினார். இதன் புகழ் தொலைதூர நாடுகள் வரை பரவியது. ஃபிலிப் மாசிடோனியாவின் முழு சமூகத்தையும் ஒரு தொழில்முறை ராணுவத்துடன் மறுசீரமைத்தார்.
உயர் திறன் பெற்ற காலாட்படை, குதிரைப்படை, ஈட்டி மற்றும் வில்லாளர்கள் இந்த ராணுவத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். ஃபிலிப்பின் மரணத்திற்குப் பிறகு, அலெக்சாண்டர் இந்த ராணுவத்தை வாரிசுரிமையாகப் பெற்றார். அலெக்சாண்டர் எப்போதுமே ஒரு புத்திசாலியாக இருந்தார்.
கிரேக்கத்தை அச்சுறுத்தி பலத்தால் ஆள முடியாது என்பதை அவர் அறிந்தார். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பாரசீகப் பேரரசு கிரேக்கத்தின் மீது படையெடுத்த சம்பவத்தை அவர் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தினார். மேலும் பாரசீகம் மீதான தனது தாக்குதலை தேசபக்தியுடன் தொடர்புபடுத்தி நியாயப்படுத்தினார்.

பட மூலாதாரம், AFP
பாரசீக பேரரசின் படைப்பிரிவு
மாசிடோனியர்கள் கிரேக்க நாட்டின் சார்பாக பாரசீகத்தை தாக்குகிறார்கள் என்று கூறும் ஒரு பிரசாரத்தை அலெக்சாண்டர் துவக்கினார். ஆனால் உண்மையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பாரசீகப் பேரரசுக்கும் கிரேக்கத்திற்கும் இடையியே நடந்த போரில் மாசிடோனியா ஈடுபடவே இல்லை என்பதுதான் உண்மை.
கிமு 334 இல், அலெக்சாண்டரின் ராணுவம் பாரசீகப் பேரரசில் நுழைந்தது. 50 ஆயிரம் பேர் கொண்ட அலெக்சாண்டரின் ராணுவம், அந்த நேரத்தில் உலகின் மிகப்பெரிய, மிகவும் பயிற்சி பெற்ற ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மூன்றாம் டேரியஸ் மன்னரின் கீழ் ராணுவத்தில் வீரர்களின் எண்ணிக்கை 25 லட்சமாக இருந்தது என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இது அவரது பேரரசு முழுவதும் பரவியிருந்தது. இந்த ராணுவத்தின் இதயம் என்று அழைக்கப்பட்ட படையணி 'அமர் சேனா' என்று அழைக்கப்பட்டது. இது 10,000 வீரர்களைக் கொண்ட ஒரு உயரடுக்கு படைப்பிரிவாக இருந்தது.
இந்த உயரடுக்கு படைப்பிரிவின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க அனுமதிக்கப்படவில்லை. போரின் போது, இந்த அணியின் ஒரு வீரர் கொல்லப்பட்டால், இன்னொருவர் அவரது இடத்திற்கு வந்துவிடுவார். ஆகவே மொத்த எண்ணிக்கை அப்படியே இருக்கும்.
பாரசீகத்தின்மீதானஅலெக்சாண்டரின் வெற்றி
ஆனால் இந்த மிகப்பெரிய ராணுவ ஆற்றல் இருந்தபோதிலும் கூட, அலெக்சாண்டரின் திறமயான, புத்திசாலித்தனமான செயல்தந்திரத்தால் பாரசீக பேரரசு தோற்கடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், FINE ART IMAGES/HERITAGE IMAGES/GETTY IMAGES
பாரசீகத்தின் வீழ்ச்சி ஏற்கனவே தொடங்கிவிட்டதே அதன் தோல்விக்கு ஒரு காரணம் என்றும் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் அடுத்தடுத்து தோல்வியை தழுவியபின்னர் அதன் விரிவாக்கம் நிறுத்தப்பட்டது என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
கிமு 324 இல், அலெக்சாண்டர் பாரசீகத்தின் சூசா நகரை அடைந்தார். பாரசீக மற்றும் மாசிடோனிய மக்களை ஒன்றிணைத்து, தனக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கும் ஒரு இனத்தை உருவாக்க அவர் விரும்பினார்.
அலெக்சாண்டர் தனது பல தளபதிகள் மற்றும் அதிகாரிகளை பாரசீக இளவரசிகளை திருமணம் செய்துகொள்ள உத்தரவிட்டார். இதற்கென ஒரே இடத்தில் பல திருமணங்கள் நடக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அலெக்சாண்டர் தனக்கென மேலும் இரண்டு மனைவிகளைத் தேர்ந்தெடுத்தார்.
அலெக்சாண்டர் ஆட்சிக்கு வந்தது, வெற்றி பெற்றது, பின்னர் வீழ்ச்சியடைந்தது , இவை எல்லாமே மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்தன.
ரோமானிய வரலாற்றாசிரியர்கள்
பல ரோமானிய வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அலெக்சாண்டர் சில சமயங்களில் குடிபோதையில் இருந்ததாக டயானா ஸ்பென்சர் கூறுகிறார். ஒருமுறை இரவு உணவின் போது அவர் தனது நெருங்கிய நண்பரை போதையில் கொலை செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
குடிபோதை காரணமாக கோபமாகவும் விசித்திரமாகவும் அவர் நடந்து கொண்ட பல சம்பவங்களைப் பற்றி ரோமானிய வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளனர். இருப்பினும், அவற்றின் உண்மைத் தன்மை குறித்தும் கேள்விகள் உள்ளன.
"அலெக்சாண்டர் கொலை செய்த நண்பர் கிளெடியஸ், அலெக்சாண்டர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமானவர். அவர் அடிக்கடி அலெக்சாண்டருக்கு நேர்மையுடன் அறிவுரை வழங்குவார். ஒவ்வொரு போரிலும் அவரது வலதுகை போல செயல்பட்டார். அலெக்சாண்டர் அன்று நிறைய குடித்துவிட்டார். "உங்கள் ஆளுமை மாறுகிறது. உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் பாரசீக மக்களைப் போல மாறிவருகிறீர்கள். நீங்கள் இனி எங்களில் ஒருவரல்ல என்பது போலத்தெரிகிறது," என்று கிளெடியஸ் கூறினார். அதை சொல்வதற்கு கிளெடியஸ் தவறான நேரத்தை தேர்ந்தெடுத்தார். அந்த நேரத்தில் அலெக்சாண்டர் தனது இடத்திலிருந்து எழுந்து, கிளெடியஸின் மார்பில் ஒரு ஈட்டியை எறிந்தார். "
மர்மமான நோய்
அலெக்சாண்டரின் வெற்றிகள், அவரது ஆளுமை மீதான கவர்ச்சி போன்றவை காரணமாக பண்டைய கிரேக்கர்கள் அவரை ஒரு சாதாரண மனிதராக அல்லாமல் ஒரு கடவுளாகக் கருதினர். தான் கடவுள் என்று அலெக்சாண்டரும் நம்பத்தொடங்கினார்.
பாரசீகத்தை கைப்பற்றிய பின்னர், அவரது ராணுவம் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவை அடைந்தது. இதற்குப் பிறகு அலெக்சாண்டர் மாசிடோனியாவுக்குத் திரும்பத் தொடங்கினார். ஆனால் அவர் தாயகம் திரும்பும் வாய்ப்பு அவருக்கு இருக்கவில்லை.
கிமு 323 இல், தனது 32 வது வயதில், பாபிலோன் (இன்றைய இராக்) பகுதியை அவர் அடைந்தபோது, ஒரு மர்மமான நோய் அவரது திடீர் மரணத்திற்கு காரணமாக அமைந்தது.
சில வரலாற்றாசிரியர்கள் அவரது மரணத்திற்கு காரணம் அவரது காயங்களில் ஏற்பட்ட தொற்று என்று கூறும் அதே நேரம் மலேரியா காரணமாக அவர் இறந்ததாக வேறு சிலர் நம்புகின்றனர்.

இந்தியா செல்வதற்கான தேவை
பாரசீகத்தை கைப்பற்றிய பின்னர் இந்தியா வர வேண்டிய அவசியம் அலெக்சாண்டருக்கு ஏன் ஏற்பட்டது? இதற்கு பல காரணங்கள் இருந்தன என்று கிரேக்க கலாச்சார பேராசிரியரான பால் கார்டிலேஸ் கூறுகிறார். தனது தந்தை இரண்டாம் பிலிப் எட்டமுடியாத அளவுக்கு தனது ராஜ்யத்தின் எல்லைகள் விரிவடைந்துவிட்டன என்பதைக் காட்ட அலெக்சாண்டர் விரும்பினார்.
"பேரரசுகளுக்கு எல்லைகள் அவசியம். தங்கள் எல்லைகளுக்கு அப்பால் என்ன உள்ளது என்பது குறித்து பேரரசுகள் தொடர்ந்து கவலை கொண்டுள்ளன. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ரோமானிய பேரரசு. சீசர்-ஏ-ரூம் (சீசர்) பிரிட்டன் மீது போர்தொடுத்தபோது, அலெக்சாண்டர் தனது எல்லைகளை விரிவுபடுத்திய பின்னர், நிரந்தர எல்லைகளை நிறுவுவதில் ஈடுபட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இது ஒரு தற்காப்பு விளக்கமாக ஆனது. அதே நேரம் ஹெர்குலிஸ் மற்றும் டியோனீசஸ் போன்ற தெய்வீக கதாபாத்திரங்கள் அங்கு சென்றன என்ற எண்ணம் அலெக்சாண்டருக்கு இருந்தது, எனவே நானும் செல்வேன் என்று அவர் முடிவெடுத்தார், "என்று ரோமானிய விளக்கம் தெரிவிக்கிறது.
தான் முயற்சிக்கும் இடம்வரை செல்ல முடியும் என்று அவரது தொடர்ச்சியான வெற்றிகள் அவருக்கு நம்பிக்கையை கொடுத்தன. "தனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில் அலெக்சாண்டர் யதார்த்த நிலையிலிருந்து விலகிவிட்டாரா என்பதுதான் முக்கிய கேள்வி," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தில் செவ்வியல்துறை விரிவுரையாளரான ரேச்சல் மியர்ஸ் கூறுகிறார்.
"அவர் இந்தியாவை வென்றபோது உள்ளூர் மக்களிடமிருந்து எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. கூடவே தனது ராணுவத்தினரிடமிருந்தும் அவர் எதிர்ப்பை எதிர்கொண்டார். மத்திய ஆசியாவில், அவர் மூன்று ஆண்டுகள் இருந்தார். அவரது வீரர்கள் இதனால் கோபமடைந்தனர். இந்தியாவில் நடந்த போரின்போது அலெக்சாண்டர் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவின. அப்போது மத்திய ஆசியாவில் அவரது ராணுவத்தில் ஒரு வகையான கிளர்ச்சி வெடித்தது. அவர்கள் பின்வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அலெக்சாண்டருக்கு காயம் மட்டுமே ஏற்பட்டிருந்தது. "
அலெக்சாண்டர் தனது இடைவிடாத ராணுவ நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு திரும்புவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருந்தன. அவரது ராணுவத்திற்குள் இருந்த எதிர்ப்பு; பொருட்கள் மற்றும் தளவாடங்கள் பெறுவதில் சிக்கல்; பிராந்தியத்தில் உள்ள சிரமங்கள் மற்றும் வானிலை ஆகியவை மூன்று முக்கிய காரணங்களாக இருந்தன என்று ரிச்சல் மேயர்ஸ் கூறுகிறார்.
சில வரலாற்றாசிரியர்கள் அலெக்சாண்டரின் அடுத்த இலக்கு அரபு பகுதியாக இருந்திருக்கக்கூடும் என்று நம்புகிறார்கள். ஆனால் நேரமும் சூழ்நிலையும் அதை அனுமதிக்கவில்லை.
பிற செய்திகள்:
- ஜெகமே தந்திரம் - சினிமா விமர்சனம்
- இலங்கை மாகாண சபை தேர்தலுக்கு ஆதரவாக கருத்து கூறிய இந்திய ஹைகமிஷன்: தமிழ் தேசிய கூட்டமைப்பு
- நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தமிழ்நாடு பாஜகவினர் கடுமையாக விமர்சிப்பது ஏன்?
- தி.மு.க.வின் 'ஆபரேஷன் கொங்கு மண்டலம்' - 11 பேருக்கு சிக்கலா?
- அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் இரண்டுக்கும் தயாராக வேண்டும்: வட கொரியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












