ஜெகமே தந்திரம் - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், NETFLIX
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், அஸ்வந்த் அசோக்குமார், ஜோஜு ஜார்ஜ், வடிவுக்கரசி; இசை: சந்தோஷ் நாராயணன்; ஒளிப்பதிவு: ஷ்ரேயாஸ் கிருஷ்ணா; இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்.
"பேட்ட" படத்திற்குப் பிறகு தனுஷுடன் கார்த்திக் சுப்புராஜ் இணைகிறார் என்று அறிவிக்கப்பட்டபோது எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியது. அந்த எதிர்பார்ப்பை 'ஜெகமே தந்திரம்' ஈடுசெய்கிறதா?
மதுரையைச் சேர்ந்த ரவுடியான சுருளி, லண்டனுக்குச் சென்று சக்திவாய்ந்த பிரிட்டிஷ் மாஃபியா தலைவன் பீட்டர் என்பவருக்காக கூலிப்படையாக மாறுகிறார். பீட்டருக்காக இலங்கைத் தமிழரான சிவதாஸ் என்பவரைக் கொலைசெய்கிறார். ஆனால், அதற்குப் பிறகுதான் செய்த தவறு எவ்வளவு பெரியது என்பது தெரிகிறது. உண்மையில் சிவதாஸ் யார்? பீட்டர் யார்? பீட்டரை சுருளி பழிவாங்கினாரா என்பது மீதிக் கதை.

பட மூலாதாரம், NETFLIX
தனுஷ் இருக்கும் நம்பிக்கையோ, என்னவோ பலவீனமான கதை, அதைவிட பலவீனமான திரைக்கதையுடன் களத்தில் இறங்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படம் ஆரம்பத்திலிருந்தே ஏமாற்றமளிக்கும் விதத்தில்தான் இருக்கிறது. மதுரையில் ஒரு பரோட்டாக் கடையில் தனுஷ் போடும் சண்டையைப் பார்க்கும் ஒரு வெள்ளைக்காரர், "ஆகா, சரியான ஆள்தான். லண்டனுக்கு வண்டியில ஏத்து" என்று லண்டனுக்கு அழைத்துச் செல்வதாக படம் ஆரம்பிக்கிறது.
அதாவது, லண்டனில் இருந்தபடி பல்வேறு நாடுகளில் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு தங்கக் கட்டிகளாக வாங்கிக் குவிக்கும் ஒருவரைப் போட்டுத்தள்ள, இங்கிலாந்திலேயே ஆள் இல்லாததால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பக்கத்தில் பரோட்டாக் கடை வைத்திருக்கும் சுருளியைக் கூட்டிப் போகிறார்களாம்.
லண்டனில் போய் இறங்கிய சுருளிக்கு, அங்கே பேசும் ஆங்கிலமே புரியவில்லை. ஆனால், ஒரே வாரத்தில் லண்டனில் நடக்கும் ஆயுதக் கடத்தல் எப்படி நடக்கிறது, பணம் எப்படிக் கை மாறுகிறது, அதில் முக்கியப் புள்ளிகள் யார் என்ற விவரமெல்லாம் கைக்கு வந்துவிடுகிறது. அந்தத் தருணத்தில், மதுரை பரோட்டாக் கடைக்காரரைப் பார்த்து சர்வதேச மாஃபியாவான பீட்டர் வெட்கித் தலைகுனிகிறார்.
ஆனால், இதெல்லாம் ஒரு ஆரம்பம்தான். படம் நெடுகவே இப்படித்தான் செல்கிறது. ஹீரோயிசத்தையும் பொழுதுபோக்கையும் அடிப்படையாக வைத்து வெளியாகும் படங்களுக்கு பெரிதாக லாஜிக் பார்க்கத் தேவையில்லைதான். ஆனால், அதற்காக இப்படியா?
லண்டன் மாநகரில் அத்தனை கொலைகள், குண்டு வெடிப்புகள், துப்பாக்கிச் சூடுகள் நடக்கின்றன. லண்டன் நகரக் காவல்துறையினர் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், தனுஷைச் சுட்டதும் கவனமாக அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றிவிடுகிறார்கள்.
இதையெல்லாம்விட மோசமாக இருப்பது, படத்தின் க்ளைமேக்ஸ். வில்லனைப் பழிவாங்குவதற்காக அவரை லாரியில் ஏற்றி லண்டனிலிருந்து ஆப்கானிஸ்தான் எல்லையில் விட்டுவிடுகிறார்கள். இதுதான் அவருக்குத் தண்டனையாம். தண்டனை என்னவோ நமக்குத்தான் என்று படுகிறது.

பட மூலாதாரம், NETFLIX
இலங்கைத் தமிழர்களின் துயரத்தையும் பேச முயன்றிருக்கிறார் இயக்குனா். ஆனால், இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்ற பொத்தாம்பொதுவான உரையாடல்களுக்கு வலுசேர்க்கும் வகையில் கதை இருக்கிறது. சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் விவசாயிகள் பிரச்சனைகளைப் பேசுகிறோம் என்ற பெயரில், கொடுமைப்படுத்திவந்தனர். இப்போது இலங்கைத் தமிழர் பிரச்சனை.
தனுஷ் அடிப்படையிலேயே மிகச் சிறந்த நடிகர். எவ்விதமான பாத்திரங்களையும் தனித்தன்மையுடன் நடிக்கக்கூடியவர். ஆனால், இந்தப் படத்தின் துவக்கத்தில் ரஜினிகாந்தைப் போல நடிக்க முயன்றிருக்கிறார் தனுஷ். சுத்தமாக அது பொருந்தவில்லை. சமீபத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த படங்களோடு ஒப்பிட்டால், சற்று பின்னோக்கிச் சென்றிருக்கிறார் மனிதர்.

பட மூலாதாரம், NETFLIX
படத்தில் தனுஷின் லண்டன் நண்பராக வருபவர் பல தருணங்களில் நகைச்சுவை செய்ய முயற்சிக்கிறார். ஆனால், அது நடக்கவில்லை. படத்தின் மற்ற நடிகர்கள் அவரவர் பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, இசை போன்ற அம்சங்களில் குறைசொல்ல ஏதுமில்லை. படத்தின் வசனங்கள் சில எழுத்தாளர்களை நினைவூட்டுகின்றன.
கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு பாணி உண்டு. காப்பியத் திரைப்படங்களுக்கே உரிய சீரியசான பாவனையோடு, பொழுதுபோக்குச் சித்திரங்களைத் தருவார். இந்தப் படத்தில் திரைக்கதை, பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற எல்லாமே கைவிட்டிருக்கின்றன.
பிற செய்திகள்:
- இலங்கை மாகாண சபை தேர்தலுக்கு ஆதரவாக கருத்து கூறிய இந்திய ஹைகமிஷன்: தமிழ் தேசிய கூட்டமைப்பு
- நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தமிழ்நாடு பாஜகவினர் கடுமையாக விமர்சிப்பது ஏன்?
- தி.மு.க.வின் 'ஆபரேஷன் கொங்கு மண்டலம்' - 11 பேருக்கு சிக்கலா?
- அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் இரண்டுக்கும் தயாராக வேண்டும்: வட கொரியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












