நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தமிழ்நாடு பாஜகவினர் கடுமையாக விமர்சிப்பது ஏன்?

பிரதமர் மோதி - மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், TNDIPR

    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பிரதமருடனான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சந்திப்பு குறித்து தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள், டுவிட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு தி.மு.கவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

முதல்வரின் டெல்லி பயணத்தை பா.ஜ.க விவாதப் பொருளாக மாற்றுவது ஏன்?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் தி.மு.க அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக, பிரதமரை சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோதியை 17 ஆம் தேதி மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பில், நீட் தேர்வு ரத்து, ஏழு பேர் விடுதலை, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது, கச்சத் தீவை மீட்பது, திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது, சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

தலை நிமிர்ந்ததா.. சரணாகதியா?

மேலும், இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், `தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகப் பிரதமர் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் இருந்தது' என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு முதல்வரின் டெல்லி பயணம் தொடர்பாக, #DelhiWelcomesStalin என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டானது.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட தமிழ்நாடு பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், `ஆன்மிகவாதிகளை சந்தித்தால் மனமாற்றம் - தெளிவு கிடைக்கும். மோதியை சந்தித்து வெளியே வந்த மு.க.ஸ்டாலினிடம் மனமாற்றம். அண்ணா. ஈ.வெ.ரா கொடுக்காத தெளிவை அண்ணன் மோடி கொடுத்துள்ளார்' என்றார். கூடவே, #stalin_total_surrender என்ற ஹேஷ்டேகையும் பதிவிட்டார்.

இதனை எதிர்த்து தி.மு.க நிர்வாகி ஒருவர், `தலை நிமிர்ந்தது தமிழ்நாடு' எனப் பதிவிட்டு பிரதமர் மோதி- ஸ்டாலின் சந்திப்புப் படங்களைப் பகிர்ந்திருந்தார். இதற்குப் பதில் அளித்த எஸ்.ஆர்.சேகர், `சரணாகதி அடைந்தது யார்? (தமிழ்நாட்டை) தலைநிமிர செய்தது யார் எனறு ஓட்டு போட்ட மக்களுக்கு தெரியும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், TWITTER

இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் பயன்படுத்திய காரின் டயருக்கு அடியில் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டுள்ளது. இதுதான் பகுத்தறிவா எனச் சிலர் கேள்வியெழுப்பியிருந்தனர். `இந்தப் புகைப்படம் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி வருகையின்போது எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை எடுத்தது நான்தான்' என டெல்லி ஊடகவியலாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

விமர்சித்தது ஏன்?

"சம்பிரதாயமான சந்திப்பை `சரணாகதி' என விமர்சிப்பது சரியா?" என தமிழ்நாடு பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

``நாங்கள் இதனை பிரச்சனைக்குரிய ஒன்றாக மாற்றவில்லை. மத்திய அரசு எதைச் செய்தாலும் நெகட்டிவான ஒன்றாக மாற்றும் குணம் தி.மு.கவிடம் உள்ளது. அதனால், சம்பிரதாயமான இந்த சந்திப்பை, சரணாகதி எனப் பதிவிட்டால் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை அறிவதற்காகவே டுவிட்டரில் பதிவிட்டேன். டெல்லி சந்திப்பு தொடர்பாக தி.மு.கவினர் வெளியிட்ட பதிவுகளில், `தாமதமாகத்தானே டெல்லி செல்கிறார், இது சம்பிரதாயம்தானே' என்றெல்லாம் பேசி வருகின்றனர். பிரதமர் செய்யும் நல்ல விஷயங்களையெல்லாம் தி.மு.கவினர் புண்படுத்தும்போது எங்களின் மனநிலை எப்படியிருக்கும்? அதனால்தான் அவ்வாறு பதிவிட வேண்டிய சூழல் வந்தது" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு வேடமும் ஆளும்கட்சியாக மாறிய பிறகு ஒரு வேடமும் போடுவதை தி.மு.கவினர் வழக்கமாக வைத்துள்ளனர். அதையே பிரதமர் சந்திப்பிலும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பில் 25 கோரிக்கைகளை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதில் எதாவது புதிய விஷயங்கள் இருக்கிறதா? முல்லைப் பெரியாறு, கச்சத் தீவு உள்ளிட்ட விவகாரங்கள் நீண்டகாலமாக இருப்பவை. `செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழ்நாடே அரசே எடுத்து நடத்த வேண்டும்' என மே மாதம் 10 ஆம் தேதியே நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். அதில் தற்போது தி.மு.க ஆர்வமாக இருக்கிறது" என்று கூறினார் சேகர்.

பிரதமர் உணர்த்திய விஷயம்!

பிரதமர் மோதி - மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், MK STALIN / TWITTER

`தமிழ்நாடு வளர வேண்டும்' என்பதில் பா.ஜ.க அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதிகள் செலவு செய்யப்படாமல் வெறும் அரசியல் மட்டும் நடப்பதாகவும் பிரதமர் நினைக்கிறார். அதனால்தான், `நேரடியாக எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்' என ஸ்டாலினிடம் கூறியுள்ளார். இதில் முக்கியமான விஷயங்களும் அடங்கியுள்ளன. தி.மு.க எப்போது பார்த்தாலும், `போராட்டம் நடத்துவோம், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம், மனு கொடுப்போம்' என பின்பக்கமாகவே பேசி வருகின்றனர். இதனை மறுக்கும் வகையில், `உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்' எனப் பிரதமர் கூறியிருக்கிறார். மற்றபடி, சரணாகதி என நாங்கள் குறிப்பிட்டது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்" என்கிறார்.

``முதலமைச்சரின் டெல்லி பயணத்தை பா.ஜ.கவினர் விமர்சிப்பது ஏன்?" என தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

`` பா.ஜ.கவை பொறுத்தவரையில் அவர்கள் எந்தக் காலத்திலும் உண்மையை பேசுவதில்லை. எப்போதும் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்வது அவர்களின் வழக்கம். பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தது குறித்து அவர்கள் பேசி வருவதையும் அவ்வாறுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் தயவில் நான்கு இடங்களில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். இதன் காரணமாக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நோக்கில் டுவிட்டரில் பதிவிடுகின்றனர்" என்கிறார்.

கொதிக்கும் தி.மு.க!

தொடர்ந்து பேசுகையில், `` பிரதமரை சம்பிரதாய அடிப்படையில் முதலமைச்சர் சந்தித்துப் பேசியுள்ளார். அதிலும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலான கோரிக்கைகளைப் பற்றித்தான் பிரதமரிடம் பேசியிருக்கிறார். முந்தைய காலகட்டங்களில் பிரதமர் முன்னிலையில் அடிபணிந்து எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார். அந்த உடல்மொழியை தமிழ்நாடே கவனித்தது. தற்போதைய அரசு மத்திய, மாநில அரசின் உறவுகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. `இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது' என முதல்வர் கூறுகிறார் என்றால், `நிறைவான சந்திப்பு' என்றுதான் பொருள். இதில் சரணடைய என்ன இருக்கிறது?

மற்றவர்களைப் போல, `எங்களை வந்து ஆட்சி செய்யுங்கள்' என ஆட்சியையா விட்டுக் கொடுத்தோம்? புதுச்சேரியில் ரங்கசாமி விட்டுக் கொடுத்ததைப் போலவா செயல்படுகிறோம். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீட் தேர்வு ரத்து, ஏழு பேர் விடுதலை போன்ற விவகாரங்களை விட்டுக் கொடுக்காமல் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழ்நாடு பா.ஜ.கவுக்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் பார்க்கிறோம். `கொரோனாவை ஒழிக்க விளக்கேற்றினால் போதும்' என்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். இவர்களுக்கு இதைத் தாண்டி எந்தக் காலத்திலும் உண்மையான அரசியல் பிடிபடப்போவதில்லை" என்கிறார்.

`பிரதமர் - முதலமைச்சர் சந்திப்பை பா.ஜ.கவினர் விமர்சிப்பது சரியா?' என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` முதலமைச்சராக தேர்வு செய்யப்படுகிறவர், பிரதமரை சந்திப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். `கொரோனா காலம் என்பதால் உடனே சந்திக்க முடியவில்லை' எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் அடிப்படையான பிரச்னைகளில் 90 சதவிகிதத்தை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதில் எந்தவித சமரசத்தையும் நான் பார்க்கவில்லை. இதைவைத்து அதிகபட்சமான விளம்பரத்தை பா.ஜ.க தேடுகிறது. இது அவர்களின் வழக்கமாகவே இருக்கிறது. இதனை ட்ரோல் செய்வதன் மூலம் அதற்கான பதிலை தி.மு.கவிடம் இருந்து வரவழைக்கப் பார்க்கின்றனர்" என்கிறார்.

ஸ்டாலின் காட்டிய உறுதி!

ஸ்டாலின் காட்டிய உறுதி!

பட மூலாதாரம், TNDIPR

தொடர்ந்து பேசியவர், `` இந்துக்களுக்கு எதிரானவர்களாக தி.மு.கவை முன்னிறுத்தி பா.ஜ.க பிரசாரம் செய்தது. இதற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலையை உருவாக்குவது எனத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர். `மோதியிடம் ஸ்டாலின் சரண்டர் ஆகிவிட்டார்' எனக் கூறினால், அதற்கான எதிர்விளைவை எதிர்பார்ப்பது அவர்களின் நோக்கமாக உள்ளது. இதுபோன்ற மோதல் அரசியல் என்பது சரியான ஒன்றல்ல. இதனை டுவிட்டரில் ட்ரெண்டாக்குவது, இதுதொடர்பாக யார் மேலாவது நடவடிக்கை எடுக்கப்பட்டால், உடனே கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது எனக் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதன்மூலம் பா.ஜ.கவின் செல்வாக்கு அதிகரிக்கப் போவதில்லை.

தற்போதுதான் தி.மு.கவின் ஆட்சிக்காலம் தொடங்கியுள்ளது. இந்த ஆட்சியை விமர்சிப்பதற்கு இன்னும் காலம் உள்ளது. இதற்கு முந்தைய காலகட்டங்களில் மாறுபட்ட நிலைப்பாட்டின் காரணமாக தி.மு.க ஆட்சியை இழந்துள்ளது. இந்தமுறை பழைய நிலைப்பாட்டின்படி அவர்கள் செயல்படுவதற்கு வாய்ப்பில்லை. 1999-2004 காலகட்டத்தில் நடந்த பா.ஜ.க ஆட்சி , அதன்பிறகு காங்கிரஸ் ஆட்சி எனத் தொடர்ந்து சுமூகமான அணுகுமுறையை தி.மு.க கடைப்பிடித்தது. அதேநேரம், பா.ஜ.க எதிர்ப்பு நிலையை தொடர்ந்து கொண்டு செல்வதுதான் தி.மு.கவுக்கு செல்வாக்கை ஏற்படுத்துவதாக இருக்கும். டெல்லி பயணத்தில் சோனியா, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்ததன் மூலம் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதையும் தெரியப்படுத்தியுள்ளார்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :