மோதி - ஸ்டாலின் சந்திப்பு: தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றம்? டெல்லியில் முதல்வர் பேட்டி

பட மூலாதாரம், TNDIPR
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முன்வைக்கப்படும் எந்தவொரு கோரிக்கைகளையும் நிறைவேற்ற மாநில அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் நரேந்திர மோதி உறுதியளித்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக வியாழக்கிழமை காலையில் டெல்லி வந்த மு.க. ஸ்டாலின் லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமர் மோதியின் இல்லத்தில் அவரை மாலை 5 மணியளவில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 25 நிமிடங்கள் நடைபெற்றது. அப்போது தமிழக நலத்திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவை பிரதமரிடம் ஸ்டாலின் அளித்தார்.
பின்னர் தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லம் திரும்பிய மு.க. ஸ்டாலின், பிரதமருடனான தமது சந்திப்பு தொடர்பான விவரங்களை பட்டியலிட்டார்.
பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியாகவும் மனநிறைவைத்தரக்கூடியதாக இருந்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை தருவேன் என்று அவர் கூறினார். எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னுடன் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என வெளிப்படையாகவே தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளாக முக்கிய அம்சங்கள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினேன் என்று ஸ்டாலின் கூறினார்.
25 அம்ச கோரிக்கைகள் என்ன?

பட மூலாதாரம், TNDIPR
தடைபடாமல் தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும், செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் இருக்கக் கூடிய தடுப்பூசி நிறுவனங்களை உடனடியாக செயல்பட வைக்க வேண்டும், தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும், ஜிஎஸ்டி நிலுவையை முழுமையாக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும், நீட் உள்ளிட்ட அனைத்து வகை நுழைவுத்தேர்வையும் ரத்து செய்ய வேண்டும், திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எடுத்து வைத்துள்ளோம்.
காவிரியில் இருந்து பெற தடையாக அமையக்கூடிய கர்நாடக மேக்கேதாட்டு நீர் மின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், கோதாவரி காவிரி இணைப்பு மற்றும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும், இலங்கை கடற்படையினரால் இன்னல்களுக்கு ஆளாகக் கூடிய தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், புதிய மின்சார சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும், மருத்துவ கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தரப்பட வேண்டும், தமிழ்நாட்டில் ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும், புதிய கல்விக்கொள்கையை திரும்பப் பெற வேண்டும், நாடு முழுவதும் இலவச மற்றும் கட்டாய கல்வியை விரிவுபடுத்த வேண்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஈழத்தில் இருந்து அகதியாக வந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை சீரமைக்க வேண்டும், உலக பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும், இடஒதுக்கீடு சமூக நீதி போல மாநிலங்களுக்கு உரிமைகளை தந்தாக வேண்டும், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தமிழ்நாட்டில் பல்வேறு நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலைய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வகைசெய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்துளோம் என்று ஸ்டாலின் கூறினார்.

பட மூலாதாரம், TNDIPR
உரிமைக்கு குரல் கொடுப்போம்
இந்த கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசுவதாக பிரமர் உறுதியளித்திருக்கிறார். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதுதான் எங்களுடைய தலைவர் கருணாநிதியின் நிலை. அதை பின்பற்றியே நாங்கள் மத்திய அரசுடன் உறவைப் பேணுவோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்காலத்துக்குப் பிறகும் சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களின் விடுதலை தொடர்பாக மாநில ஆளுநர் குடியரசு தலைவர் முடிவெடுக்க வேண்டும் என கூறி கடிதம் அனுப்பியிருக்கிறார். எனவே, அதை நினைவூட்டி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் போக்கை பொறுத்து எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை தொடருவோம் என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
தமிழ்நாட்டுக்கு போதுமான தடுப்பூசி மருந்து இதுவரை வழங்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், அதை வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அவ்வப்போது பிரதமருடனும் அமைச்சருடனும் தொலைபேசியில் பேசி வருகிறோம். அவர்களுக்கு உள்ள கஷ்டங்களை சொல்கிறார்கள். அவ்வப்போது அவர்களும் தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வருகிறார்கள். செங்கல்பட்டு மற்றும் நீலகிரியில் உள்ள தடுப்பூசி நிறுவனத்தை செயல்படுத்தும் தேவை குறித்தும் பிரதமருடன் பேசியிருக்கிறோம்.
திமுக தேர்தல் செயல்திட்டத்தில் மகளிருக்கு ரூ. 1,000 உதவித்தொகை, முதியோருக்கு ரூ. 1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரவில்லையா என கேட்டதற்கு, "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே ஆகியிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அறிவித்த உறுதிமொழிகளை படிப்படியாக நிறைவேற்றும் நாங்கள் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம்," என ஸ்டாலின் கூறினார்.
எதிர்கட்சி வரிசையில் திமுக இருந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று தேர்தலுக்கு முன்பு கூறியிருந்தீர்களே என்று கேட்டதற்கு, படிப்படியாக அவற்றை குறைப்பது தான் இப்போதைய நோக்கம், அந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும், ஓட்டு போடாதவர்கள், இவர்களுக்கு ஏன் ஓட்டுப்போடவில்லை என வருத்தப்பட வேண்டும். அப்படிப்பட்ட வகையில்தான் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும் என்றும் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
டெல்லி பயணத்தின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் ஸ்டாலின் சந்தித்துப் பேசவிருக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் தனி விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளார்.
பிற செய்திகள்:
- தனக்கென ஒரு தனி விண்வெளி நிலையம்: அதற்கென மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பிய சீனா
- ரோனால்டோவால் கோகோ கோலா சந்தை மதிப்பு சரிவு: நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துமா?
- அதிருப்தியாளர்களை அணிதிரட்டும் சசிகலா: எடப்பாடியை வீழ்த்துமா புதிய வியூகம்?
- அதானி குழுமத்தின் பங்குதாரர்களுக்கு ஒரே நாளில் பெரும் இழப்பு - ஏன்?
- இந்தியா Vs நியூஸிலாந்து: கோலி அணிக்கு இங்கிலாந்தில் காத்திருக்கும் சவால்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












