அதானி குழுமத்தின் பங்குதாரர்களுக்கு ஒரே நாளில் பெரும் இழப்பு - ஏன்?

பட மூலாதாரம், Mint
- எழுதியவர், விஷால் ஷுக்லா
- பதவி, பிபிசி நிருபர்
அதானி குழுமத்தின் முதலீட்டாளர்களுக்கு திங்கட்கிழமை காலை பேரதிர்ச்சி காத்திருந்தது. முதலில், அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய மூன்று வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் (வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு) முடக்கப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்தது.
இதன் பின்னர், நிறுவனத்தின் பங்குகளின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதானி குழுமத்தின் அனைத்து, அதாவது 6 நிறுவனங்களின் பங்குகளும் 5 முதல் 25 சதவீதம் வரை சரிந்தன. அதே நேரத்தில், அதானியின் மொத்த சொத்துக்கள் சுமார் 55,692 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தன.
நிதி முடக்கப்பட்ட அந்த மூன்று முதலீட்டு நிறுவனங்களும் மொரீஷியஸ் நாட்டைச் சார்ந்தவை - அல்புலா முதலீட்டு நிதி, க்ரெஸ்டா நிதி மற்றும் ஏபிஎம்எஸ் முதலீட்டு நிதி. இந்த மூன்று நிதி நிறுவனங்களும் அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களில் 43,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளன.
இந்நிலையில், அதானி குழுமம் இந்த அறிக்கைகளை மறுத்து, இது தொடர்பாக என்.எஸ்.டி.எல். -க்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதானி குழுமத்தின் பங்குகளை அதிக அளவில் வாங்குபவர்களில் மூன்று வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் பெரும் அளவில் ஈடுபட்டு வருகின்றன என்று என்.எஸ்.டி.எல் துணைத் தலைவர் ராகேஷ் மேத்தா கூறினார். ஆனால், அதற்குள் இழப்பு ஏற்பட்டுவிட்டது. நாளின் முடிவில், பங்குகளின் நிலையும் மேம்பட்டது. ஆனால் ஏற்பட்ட இழப்பை இது ஈடு செய்யமுடியாது. எஃப்.டி.ஐ என்றால் என்ன? அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைவதற்கான காரணம் என்ன? மொரீஷியஸ் சார்ந்த நிறுவனங்கள் ஏன் இந்த விஷயத்தில் சந்தேகத்துக்குள்ளாகின்றன? என விவரிக்கிறது இந்த கட்டுரை.
ஃபாரின் போர்ட்ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட் என்றால் என்ன?
இந்தியாவின் தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஒரு நிறுவனத்தில் வெளிநாட்டிலிருந்து ஒரு தனி நபரோ ஒரு நிறுவனமோ முதலீடு செய்தால் அது, ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் போர்ட்ஃபோலியோ என்று அழைக்கப்படும் என்று எஸ்கார்ட்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் ஆசிப் இக்பால் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு, முதலீட்டாளர் முதலில் செபி மூலம் பதிவு செய்ய வேண்டும். இந்த வகை முதலீட்டின் ஒரே விதி என்னவென்றால், முதலீட்டாளர் நிறுவனத்தின் மொத்த மதிப்பில் 10 சதவீதத்திற்கு மேல் முதலீடு செய்ய முடியாது. அவர் 10% க்கும் அதிகமாக முதலீடு செய்தால், அது அந்நிய நேரடி முதலீட்டின் கீழ் வரும்.
இந்த வீழ்ச்சியால் இழப்பு யாருக்கு?
பங்கு விலையின் இந்த வீழ்ச்சியால், ஏற்கெனவே குறிப்பிட்டது போல, அதானியின் மொத்த சொத்துக்களில் ரூ .55,692 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தில், அதானி எண்டர்பிரைசின் பங்கு விலை ரூ. 1,601.45 லிருந்து ரூ. 1,201 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி போர்ட்ஸ் பங்குகள் 18.75% சரிந்தன. அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 5% சரிந்தன. அதானி டோட்டல் காஸ் 5% சரிந்தது. அதானி டிரான்ஸ்மிஷன் 5%, அதானி பவர் 4.99% சரிந்தது.
இந்த வீழ்ச்சியால் யார் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்விக்கு வேல்யூ ரிஸர்ச் ஆன்லைன்-ன் தலைமை நிர்வாக அதிகாரி திரேந்திர குமார், "இதன் காரணமாக வர்த்தகர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதானிக்கு அவரின் சொந்தப் பங்குகள் உள்ளன. எனவே அவர்கள் பெரும் இழப்பைச் சந்தித்ததாகச் சொல்ல முடியாது "இது குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு ஒரு இழப்பு மற்றும் மக்களுக்கான எச்சரிக்கை மணி" என்று கூறுகிறார்.
இதே பதிலைக் கூறும் ஆசிஃப் இன்னொரு விஷயத்தையும் சேர்த்துக் கொள்கிறார், "அதானியின் சொத்துக்கள் அதிகம் பாதிப்பை அடைந்திருக்க முடியாது. குறுகிய கால முதலீட்டாளர்கள் அல்லது அபாயம் அறிந்து சவாலுக்குப் பங்கு வர்த்தகம் செய்பவர்கள் தான் அதிக இழப்பை சந்திக்கிறார்கள்." என்று தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
உதாரணமாக, ஒரு நபர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு பங்கை 100 ரூபாய்க்கு வாங்கியிருந்தால், திங்கட்கிழமைக்கு முன்பு அந்த பங்கின் விலை 800 ரூபாயாக இருந்தால், திங்களன்று பங்கின் விலை 600 ரூபாயாக குறைந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் அவருக்கு லாபமே. ஆனால், ஒருவர் கடந்த திங்கட்கிழமை 750 ரூபாய்க்கு ஒரு பங்கை வாங்கியிருந்தால், இன்று அந்த பங்கு 500 ரூபாயாக இருந்தால், அவருக்கு நிச்சயமாக அது ஒரு இழப்பு தான்.
ஒரே செய்தி இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியது எப்படி?
இதற்குப் பதிலளித்த திரேந்திரா, "அதானியின் பங்குகளின் விலை கடந்த ஒரு வருடத்தில் மிக வேகமாக அதிகரித்துள்ளது, ஆனால் இந்த நிறுவனங்களின் பொது பங்குதாரர்கள், அதாவது மக்கள் வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை இன்னும் மிகக் குறைவாகவே உள்ளன. இந்த நிறுவனங்கள் சிறியவையாக இருந்த போது, சிறிதளவு வாங்கினாலே விலை உயர்வு அதிகம் இருக்கும். ஆனால் இன்று மூலதனம் அதிகமிருந்தாலும், மக்களின் நம்பிக்கை குறைவாக உள்ளது, ஏனெனில் பங்குகளின் மொத்த மதிப்பு அதிகமாக இருந்தாலும், பங்குகளின் ஆயுள் குறைவாக இருக்கிறது." என்கிறார்.
பங்குச் சந்தையில் இரண்டு வகையான முதலீட்டாளர்கள் இருப்பதாக திரேந்திர விளக்குகிறார். முதலாவதாக, நன்கு ஆராய்ந்து, பின்னர் நிறைய பணம் முதலீடு செய்பவர்கள். இரண்டாவதாக, பங்கு விலையின் வேகத்தைப் பார்த்துப் பணத்தை முதலீடு செய்பவர்கள். குறுகிய காலத்தில் வேகமான உயர்வுக்குப் பிறகு, சரிவு தொடங்கியபோது, முதலீட்டாளர்களிடையே ஒரு அவநம்பிக்கை ஏற்பட்டது. சந்தையில் நிலைக்க, மக்களின் நம்பிக்கை அவசியம் என்று விவரிக்கிறார்.
மக்களின் இந்த நம்பிக்கைக் குறைவுக்கான காரணத்தைக் கேட்டபோது, "இதற்குக் காரணம் நிறுவனத்தின் கடன் அல்லது செலவு மிக அதிகமாக இருப்பது தான். இதுபோன்ற சூழ்நிலையில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இழப்புகள் அதிகம் ஏற்படும். அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கும் இது தான் நடந்தது. நிறுவனம் கடன் பெறுவதால், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை குறைகிறது. அதன் விளைவுகளை முதலீட்டாளர்கள் தான் சந்திக்க வேண்டியிருக்கும்." என்கிறார் தீரேந்திரா.
மொரிஷியஸ் நிறுவனங்கள் சந்தேகத்துக்குரியனவா?

பட மூலாதாரம், Getty Images
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஆசிஃப், "என்எஸ்டிஎல் இந்த விவகாரத்தில் உச்ச அமைப்பு. மொரிஷியஸ் நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்படவில்லை என்று அது கூறியுள்ளது. அதை நம்பித் தான் ஆகவேண்டும்.
ஆனால் எழுப்பப்பட்டுள்ள பிரச்னை பதற்றம் நிறைந்தது. மொரீஷியஸிடமிருந்து பணம் செலுத்துவதில் சிக்கல் இருக்கக்கூடாது அல்லது ஷெல் நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைக் கொண்டுவரக்கூடாது. இதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இது விசாரணைக்குரிய விஷயம், விசாரிக்க வேண்டுமா இல்லையா என்பதை அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்." என்று கூறுகிறார்.
மேலும் அவர், "இதில் சந்தேகத்துக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு நிறுவனம், தனது 95 சதவீத மூலதனத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்துள்ளது எப்படி என்பது தான். நீங்கள் ஒரு முதலீட்டாளராக நினைத்துப் பாருங்கள், நீங்கள் இப்படிச் செய்வீர்களா அல்லது உங்கள் பணத்தை பல இடங்களிலும் பரவலாக முதலீடு செய்வீர்களா? முடிவு அதிகாரம் கொண்ட அமைப்பின் கையில் தான் இருக்கிறது." என்றும் கூறுகிறார்.
அதே சமயம், "செபி விதிகளின்படி பணம் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது. முன்பு பணத்தின் ஆதாரம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை, ஆனால் இப்போது அதை அறிவிப்பது அவசியம். லாபம் யாருடைய பைக்குச் செல்கிறது என்ற அந்தக் கடைசி மனிதர் வரை அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதிகார அமைப்புக்குப் பங்குதாரர்களைப் பற்றிய விவரம் தெரிந்திருக்க வேண்டும். இப்போது மொரீஷியஸ் போன்ற வரிச் சலுகைகள் நிறைந்த மையங்கள் இருக்க வேண்டுமா இல்லையா என்பது அடுத்த விஷயம். தன் மொத்த முதலீட்டையும் ஒரே இடத்தில் செய்வது சட்ட விரோதம் இல்லை என்றாலும் அது ஒரு புத்திசாலித்தனமான செய்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது." என்கிறார் சுதிர்.
பெனிஃபிஷியல் ஓனர்ஷிப் குறித்துப் போதுமான தகவல்களை வழங்காததால் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என்று எகனாமிக் டைம்ஸ் கூறியுள்ளது. பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவலை வழங்குவது கட்டாயமாகும்.
இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், அதானி குழுமத்தின் முதன்மை நிர்வாக தலைவர், ஜுக்ஷிந்தர் சிங், இந்த நிறுவனங்கள் 2010 முதல் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கின்றன என்றும் மற்ற நிறுவனங்களின் பங்குகளையும் இவை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












