சீனா தான் உருவாக்கும் விண்வெளி நிலையப் பணிகளுக்காக 3 விண்வெளி வீரர்களை அனுப்பியது

ஷென்சு 12

பட மூலாதாரம், Getty Images

சீனா தன் புதிய விண்வெளி நிலையத்தை அமைக்க மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

நி ஹாய்ஷெங், லு பூமிங், டாங் ஹாங்போ ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் மூன்று மாதம் பூமியிலிருந்து 380 கிலோமீட்டர் தூரத்தில் டியான்ஹே என்ற விண்கலத்தில் தங்குவர்.

சீனாவின் விண்வெளி வீரர்கள் நீண்டகாலம் விண்வெளியில் தங்கவிருப்பது ஐந்து ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

ஷென்சூ12 என்ற விண்கலம் நேற்று (ஜூன் 16, வியாழக்கிழமை) உள்ளூர் நேரப்படி 9.22 மணிக்கு, கோபி பாலைவனத்திலுள்ள ஜியூகுவான் செயற்கை கோள் ஏவுதளத்திலிருந்து மார்க் 2 எஃப் ராக்கெட் மூலம் சீனாவால் ஏவப்பட்டது.

விண்வெளி தொடர்பான சீனாவின் அடுத்தடுத்த பணிகளில் மற்றொரு முயற்சி தான் இந்த வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய திட்டம்.

கடந்த ஆறு மாதங்களில் நிலாவிலிருந்து பாறை மற்றும் மண்ணின் மாதிரியை பூமிக்கு கொண்டுவந்தது, செவ்வாய் கோளில் 6 சக்கர ரோபோட்டை நிறுத்தியது என கடினமான செயல்களை நிகழ்த்தி காட்டியுள்ளது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் என்ன செய்வார்கள்?

டாங் ஹாங்போ (இடது), நி ஹாய்ஷெங் (மத்தி), லு பூமிங் (வலது),

பட மூலாதாரம், Reuters

22.5 டன் எடை கொண்ட டியான்ஹே விண்கலனை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தான் கமாண்டர் நி ஹாய்ஷெங் மற்றும் அவரது அணியினரின் பிரதான வேலை.

"நான் நிறைய எதிர்பார்க்கிறேன்" என ராக்கெட் ஏவப்படுவதற்கு முன் நி கூறினார்.

"நாங்கள் விண்வெளியில் எங்களின் புதிய வீட்டை அமைத்து, பல தொழில்நுட்பங்களை சோதித்துப் பார்க்க வேண்டும். எனவே இந்த திட்டம் கடினமானது, சவால் நிறைந்தது. நாங்கள் மூவரும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதன் மூலம், செய்ய வேண்டிய பணிகளை துல்லியமாகச் செய்யவிருப்பதால், அச்சவால்களை நாங்கள் கடந்துவிட முடியும். இட்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவோம் என்கிற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது" என கூறினார்.

16.6 மீட்டர் நீளமும், 4.2 மீட்டர் அகலமும் கொண்ட டியான்ஹே விண்கலம் கடந்த ஏப்ரல் மாதம் ஏவப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இந்த டியான்ஹே விண்கலம் தான் சீனா அமைக்க இருக்கும் 70 டன் எடை கொண்ட விண்வெளி மையத்தின் முதல் முக்கிய அங்கமாகும். சீனா திட்டமிட்டிருக்கும் விண்வெளி மையத்தில், விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கான இடம், அறிவியல் ஆய்வகங்கள், பேரண்டத்தைக் காண தொலைநோக்கி போன்றவைகள் எல்லாம் இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மற்ற பாகங்கள் எல்லாம் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும்.

இந்த மூன்று விண்வெளி வீரர்களைக் குறித்து நமக்கு என்ன தெரியும்?

விண்வெளி

பட மூலாதாரம், Getty Images

கடந்த புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு வரை ஷென்சூ 12 திட்டத்தில் பங்கெடுக்கும் நி ஹாய்ஷெங், லு பூமிங், டாங் ஹாங்போ ஆகிய மூன்று விண்வெளி வீரர்களைக் குறித்த விவரங்களை சீனா ரகசியமாகவே வைத்திருந்தது.

56 வயதான நி ஹாய்ஷெங் தான் சீனாவின் மூத்த விண்வெளி வீரர் என கூறப்படுகிறது. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு 15 நாள் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். பிறகு டியான்காங் - 1 என்கிற மாதிரி விண்வெளி மையத்துக்கும் பயணம் மேற்கொண்டார்.

நி தலைமையிலான அணியில் இருக்கும் லு பூமிங் (54 வயது), டாங் ஹாங்போ (45 வயது) ஆகிய இருவரும் விமானப் படை பின்புலம் கொண்டவர்கள்.

லு பூமிங் கடந்த 2008ஆம் ஆண்டு ஷென்சூ 7 திட்டத்தில் பங்கெடுத்தவர். அது தான் சீனா முதல்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

டாங் ஹாங்போ-க்கு விண்வெளி பயணத்தில் எந்த முன் அனுபவமும் இல்லை.

இந்த மூவருக்குத் தேவையான உணவு, எரிபொருள், திட்டத்துக்குத் தேவையான சாதனங்கள் போன்றவைகள் ஓரு சரக்கு கொண்டு செல்லும் கலத்தின் மூலம் கடந்த மாதமே அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது.

சீனாவின் விண்வெளி இலக்குகள் என்ன?

சீனா

பட மூலாதாரம், Getty Images

சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது விண்வெளி லட்சியங்களை குறித்து எதையும் மிக ரகசியமாக வைத்திருக்கவில்லை.

சீனா தன் விண்வெளி முயற்சிகளில் கணிசமாக பணத்தை செலவழித்தது, கடந்த 2019ஆம் ஆண்டில் நிலவின் தொலைதூரத்திற்கு இயந்திர ரோவரை அனுப்பிய முதல் நாடு என்கிற பெருமையை பெற்றது.

சர்வதேச விண்வெளி மையத்தில் சீனா ஒரு கூட்டாளி நாடு அல்ல. எனவே விண்வெளி மையத்தை அமைப்பதில் தனித்து செயல்பட வேண்டி இருந்தது.

"நாங்கள் ஒத்துழைப்புகளை வரவேற்கிறோம்" என ஷென்சூ 12 அறிமுகம் தொடர்பாக கடந்த புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திபில், சீனாவின் மனித விண்வெளிப் பயண முகமையின் உதவி இயக்குநர் ஜி க்விமிங் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் "சீனாவின் விண்வெளி நிலைய பணிகள் நிறைவடைந்த பின், சீன மற்றும் வெளிநாட்டு விண்வெளி வீரர்கள் ஒன்றாக செயல்படுவதை நாங்கள் காண்போம்" எனவும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :