இந்தியா Vs சீனா கல்வான் மோதலின் ஓராண்டுக்குப் பிந்தைய எல்லை நிலை என்ன?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், ஜுகல் ஆர் புரோஹித்
- பதவி, பிபிசி செய்தியாளர்
2017ஆம் ஆண்டு கோடைகாலத்திற்குப் பிறகு, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் அருகே டோக்லாமில் இந்திய சீன படைகள் ஒருவரை ஒருவர் எதிர்கொண்ட அதே நேரம், பிரதமர் நரேந்திர மோதிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் இடையில் ஒரு 'அதிகாரபூர்வமற்ற' சந்திப்பு நிகழ்ந்தது.
இரு நாடுகளின் தலைவர்கள் பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு சிறிய பிரச்னைகளை தீர்ப்பதற்கும் பயன்படுத்தும் ராஜதந்திர வழிமுறை இது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அப்படியே தொடர்ந்த நேரத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்ததை உலகம் கண்டது. இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் தொடங்கியதும் அப்போதுதான். சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில், அமைதியான உறவுகள் முறியக்கூடிய ஒரு நிலையை இரு நாடுகளின் படைகளும் எட்டின.
இரு நாடுகளும் படைகளை திரட்டியதும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன் மோதல்களுக்கும் கடந்த நான்கு தசாப்தங்களில் இதற்கு முன் நடந்ததில்லை.
மே 10, 2020
விவகாரம் மோசமடையத் தொடங்கியதற்கான அறிகுறிகள் வந்த முதல்நாள் இது. சர்ச்சை அதே விஷயம் பற்றியது. இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளாத, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கோடுதான் அந்தப்பிரச்னை.
"அணு ஆயுத அண்டை நாடுகளான இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.... கிழக்கு லடாக்கில் நடந்துள்ள மோதல்கள் குறித்த விவரங்கள் மெதுவாக வெளிவருகின்றன. இது மிகப்பெரிய பிரச்னை. இது விரிவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்" என்று மே 10ஆம் தேதி 'தி ட்ரிப்யூன்' நாளிதழ் செய்தி வெளியிட்டது.
"வடக்கு சிக்கிமில் சனிக்கிழமையன்று ஒரு பதற்றமான சூழ்நிலையில் நூற்றுக்கணக்கான இந்திய மற்றும் சீன வீரர்கள் மோதினர். எல்லையில் இந்த மோதலின் போது, இரு தரப்பினருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டதில் பல வீரர்கள் காயமடைந்தனர். "என்று அதே நாளில், 'இந்துஸ்தான் டைம்ஸ்' ஆங்கில செய்தித்தாள் தெரிவித்தது.
இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது பல முறை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
இந்தியா-சீனா மோதலின் செய்தியை அவர் ஒரளவிற்கு உறுதிப்படுத்தியதாகத் தோன்றியது. ஆனால் சில சமயங்களில் அவர் பாங்காங் சோ ஏரியில் ஏற்பட்ட மோதலை நிராகரித்தது போலவும் காணப்பட்டது.
'ஊடகங்களில் வதந்திகளைப் பரப்புவதையும், செய்திகளை பெரிதுபடுத்துவதையும் தவிருங்கள்' என பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
மே 14, 2020
இந்திய ராணுவ தலைவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நர்வானே ஒரு அறிக்கை வெளியிட்டார்.
"... இரண்டு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு இல்லாததோடுகூடவே, எந்தவொரு சர்வதேச அல்லது உள்ளூர் நடவடிக்கைகளுடனும் அதற்கு தொடர்பு இல்லை. நமது வடக்கு எல்லையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன என்பதை நான் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும்,"என்று அந்த அறிக்கை கூறியது.
மே 21, 2020
இருப்பினும், சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இந்திய நடவடிக்கைகளை 'அத்துமீறல் மற்றும் ஊடுருவல்' என்று குறிப்பிட்டது.
மறுபுறம், டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "சீன தரப்பின் நடவடிக்கைகள் இந்திய தரப்பினரின் சாதாரண ரோந்துக்கு தடை ஏற்படுத்தியுள்ளன," என்று கூறினார்.
ஜூன் 6, 2020
லடாக்கில் இந்தியா மற்றும் சீனாவின் தூதாண்மை அதிகாரிகள் மற்றும் ராணுவத் தளபதிகளின் கூட்டம் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பல சந்திப்புகளில் இது முதலாவது.
அந்த நேரத்தில் நிலைமை எவ்வாறு கையாளப்படுகிறது என்பது பற்றிய தகவல்கள், இந்திய தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கைகள் மூலமாகக் கிடைத்தன.
"இரு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 70 வது ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன என்பதை இரு தரப்பினரும் கவனத்தில் கொண்டுள்ளனர். பிரச்சனைக்கு விரைவான தீர்வு காண்பதால், உறவை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் என்பதில் இரு தரப்பிற்கும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது," என்று இந்திய தரப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியது.
"இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் தொடர்புடைய பிரச்சனைகளை சரியான முறையில் தீர்க்கும் விருப்பத்துடன் தயாராக உள்ளனர்" என்று அந்த நேரத்தில் சீன தரப்பு தெரிவித்தது.
சீனாவுடனான எல்லையின் ஒரு பகுதியைக் கவனிக்கும் ராணுவத்தின் வடக்கு கமாண்டிற்கு தலைமை வகித்த மற்றும் தற்போது ஓய்வுபெற்ற லெப்டிணன்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், "இதுவும் கடந்த காலத்தைப் போலவே அமைதியாக தீர்க்கப்படும் என்ற உணர்வு இருந்தது. விஷயங்களை பெரிதுபடுத்தாமல் இருப்பதற்கான ஆரம்ப முயற்சிகள் தொடங்க ஒருவேளை அதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.

பட மூலாதாரம், SOPA IMAGES
ஜூன் 16, 2020
அன்றைய தினம் பல வதந்திகள் வெளிவந்தன. எல்லையின் ஒரு சர்ச்சைக்குரிய பகுதியில் எங்கோ மோதல் ஏற்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் வெவ்வேறு இடங்களில் வன்மோதல்கள் நடந்ததாக சொல்லப்பட்டது. ஒவ்வொருவரிடமும் செய்திக்கான ஒரு ஆதாரமும், செய்தியும் இருப்பது போலத் தோன்றியது.
"பதற்றத்தை குறைக்கும் முயற்சியின்போது, கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு வன்முறை மோதல் ஏற்பட்டது. அதில் இரு தரப்பினரும் இழப்புக்களை சந்தித்துள்ளனர். இந்திய தரப்பில், ஒரு அதிகாரியும், இரண்டு வீரர்களும் உயிரிழந்துள்ளனர்," என்று பகல் ஒருமணியளவில் இந்திய ராணுவம் தெளிவுபடுத்தியது.
இரவு 10 மணிக்குப்பிறகு ராணுவம் தனது அறிக்கையில் திருத்தம் செய்தது.
கல்வான் பள்ளத்தாக்கை சீன தரப்பிடமிருந்து விடுவித்து விட்ட அறிவிப்புடன் கூடவே, மோதல் நடந்த இடத்தில் பணியில் இருந்த, பலத்த காயமடைந்த 17 வீரர்கள் உயிரிழந்துவிட்டதாகவும், இந்த மோதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அடுத்த நாள், அதாவது ஜூன் 17 அன்று, சீன வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவம் குறித்த தனது அறிக்கையில், "ஜூன் 15 ஆம் தேதி இந்திய வீரர்கள் தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து சீன வீரர்களைத் தாக்கி. அவர்களைத் தூண்டினர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது மற்றும் வீரர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்."என்று தெரிவித்தது.
சீனாவின் அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிந்தது என்னவென்றால், இந்தியாவைப் போல அல்லாமல் தனது இறந்த வீரர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை அது தரவில்லை.

பட மூலாதாரம், ANI
"சீன ராணுவத்தின் 45க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கல்வானின் நிலைமையை சீராக்க மேஜர் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்திய வீரர்கள் யாருமே காணாமல் போகவில்லை," என்று 'ராணுவ வட்டாரங்களை' மேற்கோள் காட்டி, இந்தியாவின் அதிகாரபூர்வ ஒலிபரப்பு நிறுவனமான 'பிரசார் பாரதி' ஒரு ட்வீட்டில் தெரிவித்தது.
"சீன தரப்பினரின் சமிக்ஞைகளை நாம் புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. ராணுவ மட்டத்தில் மட்டுமல்ல, அரசியல் தலைமையாலும் அதை கணிக்க முடியவில்லை. கல்வான் சம்பவம் நடந்தவுடன், இது இயல்புநிலை இல்லை அல்ல என்பது புரிந்து விட்டது. இதற்குப் பிறகு ராணுவம் எவ்வளவு விரைவாக செயல்பட்டது என்பதையும் நாம் பாராட்ட வேண்டும்," என்று ஜெனரல் ஹூடா தெரிவித்தார்.
கல்வானில் நிலைமை மோசமடைந்தது எப்படி?
"செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட பல படங்கள் மூலம், சீனா அங்கு என்ன செய்து கொண்டிருந்தது என்பதை நாங்கள் கண்டோம். சீனா கல்வான் பள்ளத்தாக்கிற்குள் ஊடுருவத் தொடங்கியது. கல்வான் பள்ளத்தாக்கு முதல் ரோந்து நிலை 14 வரை, தளங்கள் அல்லது குறைந்தபட்சம் தற்காலிக வசதிகளை சீனா அமைக்கத் தொடங்கியது என்பதை இந்தப் படங்கள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.…," என்று புவிசார் அரசியல் விவகாரங்களில் நிபுணர் சிம் டாக், பிபிசியிடம் தெரிவித்தார்.
"சீன வீரர்கள் அங்கு தாக்குதலுக்கு தயார் நிலையில் இருப்பதை ஒரு நாள் நாங்கள் கண்டோம். அதன் பிறகு வன்முறை மோதல்கள் நடந்ததாக செய்திகள் வந்தன. அதன்பிறகு பிபி 14 இல் இருந்து சீனா பின்வாங்கிவிட்டதை பார்த்தோம்.. ஆனால் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீனா பின்வாங்கியபிறகு அக்சாய் சின்னின் மற்ற பகுதிகளில் புதிய நிலைகளை விரிவாக்குவதை நாங்கள் கவனித்தோம்.," என்றும் சிம் டாக் மேலும் தெரிவித்தார்.
ஜூன் 19, 2020
சீனாவுக்கு எதிரான இந்தியாவின் பதிலடி நடவடிக்கை பற்றி அனைத்து கட்சி கூட்டத்தில் விவரித்த பிரதமர் நரேந்திர மோதி, "நமது எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை. யாரும் உள்ளே வரவில்லை. யாரும் நமது நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை" என்று கூறினார்.
2020 ஏப்ரல் முதல் இந்திய துருப்புக்கள் அசல் கட்டுப்பாட்டு கோட்டில் (எல்ஏசி) கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், தாங்கள் அதற்கு எதிர்ப்புத்தெரிவித்ததாகவும், ஏற்றக்குறைய அதே நேரத்தில் சீனத் தரப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
"இந்திய வீரர்கள் எல்லையைத் தாண்டி செல்லவில்லை என்று பிரதமர் மோதி கூறியிருந்தாலும்கூட, இந்த மோதல் இந்தியாவை மேற்கத்திய நாடுகள் பக்கம் மேலும் சாய்த்துள்ளது. இது சீனாவின் நோக்கம் அல்ல. உண்மையில், மோதலுக்குப் பின்னர் உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கையை சீன அரசு உடனடியாக வெளியிடவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் சீன அரசு இந்த செய்தியை பெரிதாக்க விரும்பவில்லை," என்று சுயாதீன ஆய்வாளரும், சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் பணியாற்றிய முன்னாள் அதிகாரியுமான சுன் ஷி , பிபிசியின் சீன சேவையிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஜூலை 3, 2020
இந்திய வீரர்களைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோதி லடாக் சென்றார்.
அந்த மோதலை மனிதநேயத்திற்கும் விரிவாக்கத்திற்கும் இடையிலான சண்டை என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் சீனாவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
ஆகஸ்ட் 31, 2020
சீனாவின் செயல்பாடுகள் குறித்து அறிந்திருப்பதாகவும், தனது நிலையை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் இந்தியா கூறியது. கல்வானில் நடந்தது 'விரிவாக்கம் செய்வதற்கான நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட நடவடிக்கை' என்று இந்திய தரப்பு பின்னர் ஒப்புக்கொண்டது.
"இந்திய துருப்புக்கள் மீண்டும் சட்டவிரோதமாக பாங்காங் சோ ஏரியின் தென் கரையிலும், ரெய்கின் மலைக்கு அருகிலும் அசல் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்தன. இந்த பகுதி இந்தியா-சீனா எல்லையின் மேற்குப்பகுதியில் உள்ளது" என்று அடுத்த நாள், சீன அரசு தெரிவித்தது.
செப்டம்பர் 5, 2020
இதன் பின்னர், அனைவரின் கண்களும் மாஸ்கோ பக்கம் திரும்பின. அங்கு ஐந்து நாட்களுக்குள் இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது.
நிலைமை தீவிரமாகி வருவதாகத் தோன்றியது. அடுத்து வந்த நாட்களில் இரு தரப்பினரும், தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளை சுமத்தத்தொடங்கினர்.
அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில், "அங்கே நிலைமை மிகவும் நாசூக்காக உள்ளது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.
இருப்பினும், வேறு எந்த நாட்டிலிருந்தும் நேரடி குறுக்கீட்டுக்கான வாய்ப்பு ஏற்படவில்லை. இரு தரப்பினருக்கும் இடையிலான ஒரேசீரான பேச்சுவார்த்தைகளால் நம்பிக்கை ஏற்பட்டது.
செப்டம்பர் 22, 2020

பட மூலாதாரம், ANI
இரு நாடுகளின் படைகளும் முதல் கூட்டு அறிக்கையை வெளியிட்டன. அதில் அதிக துருப்புக்களை நிறுத்துவதில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஜனவரி 15, 2021
"நாம் நமது திறன்களை மறுசீரமைக்க வேண்டும் மற்றும் விரிவுபடுத்த வேண்டும் என்பது தெளிவாக தெரிந்துள்ளது,"என்று ராணுவ தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் ஜெனரல் நர்வானே குறிப்பிட்டார்.
லடாக்கில் நடந்தது தவிர, மத்திய பகுதியிலும், கிழக்கு பகுதியிலும் சீனாவுடன் மோதல் நிலைமை ஏற்படக்கூடிய இடங்கள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
பிப்ரவரி 10, 2021
சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு, இரு நாடுகளின் படைகளும் லடாக்கிலுள்ள பாங்காங் ஏரி பகுதியில் இருந்து தங்கள் துருப்புக்களை விலக்கத் தொடங்கின.
2020 மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்தியாவுடனான மோதல்களில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை அறிவிக்காத சீனாவின் தரப்பில், 45 வீரர்கள் பலியாகியிருப்பதாக, ரஷ்யாவின் 'அரசு செய்தி முகமையான ' டாஸ்' அறிவித்தது.
கல்வான் சம்பவத்தில் இறந்த தனது வீரர்கள் குறித்து அதுவரை சீனா பகிரங்கமாக எதுவும் கூறவில்லை, ஆனால் இந்த அறிக்கைக்குப்பிறகு அது தனது மெளனத்தை கலைக்க வேண்டியிருந்தது. நான்கு வீரர்களை இழந்ததாக சீனா ஒப்புக்கொண்டது.

பட மூலாதாரம், ANI
ஏப்ரல் 29, 2021
இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளதாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் அறிவித்தது.
இந்தியா பல சீன செயலிகளை தடைசெய்ததோடு, சீனப் பொருட்களும் முதலீடும் நாட்டிற்குள் நுழைவதை கடினமாக்கிய பின்னர் இந்த அறிக்கை வந்தது என்பது கவனிக்கத்தக்கது.
ஆனால் இதனால் கிடைத்தது என்ன?
"அமெரிக்கா 2019 ஆம் ஆண்டில் நமது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்தது. ஆனால் பல பிரச்சனைகள் இருந்தபோதிலும், 2020-21 ஆம் ஆண்டில் சீனா நமது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. இது ஒரு முரண்பாடாக உள்ளது," என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திட்டத்துறையின் உதவி பேராசிரியர் ஸ்வஸ்தி ராவ் தெரிவிக்கிறார்.
ஆனால் இதற்கு காரணங்கள் இருந்தன என்று ஸ்வஸ்தி ராவ் கூறுகிறார். "ஒருவர் மற்றவரின் சந்தையாகவும், அண்டை நாடுகளாகவும் இருக்கும் இரண்டு பெரிய பொருளாதாரங்களை பிரிக்க முடியாது. நமது வீரர்கள் உயிரிழந்ததால் சீனசெயலிகளுக்கு நாம் அந்த நேரத்தில் தடை விதித்தோம். ஆனால் இப்போது சீனாவைப் புறக்கணிப்பதைப் பற்றி நாம் பேசுவதில்லை," என்று அவர் மேலும் கூறினார்.
மே 14, 2021
. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையில் தத்தளித்த இந்தியா,அவசரகால பொருட்களுக்காக சீனாவின் பக்கம் திரும்பியதை பார்க்கமுடிந்தது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 26,000 க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,000 க்கும் மேற்பட்ட நோயாளி கண்காணிப்பு கருவிகள், மற்றும் சுமார் 3,800 டன் மருந்துப் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ததாக சீன அரசு கூறியது.
70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 30 டன் மூலப்பொருட்களுக்கும் சீனா இந்தியாவில் இருந்து ஆர்டர்களைப் பெற்றது. அவை வழங்கப்பட உள்ளன.
முன்னதாக, ஏப்ரல் 30 ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகம், சீனத் தரப்புடன் வர்த்தக பேச்சுவார்த்தையை ஒப்புக்கொண்டது.
"இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே சீனாவிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை வாங்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. கொரோனா தொற்றுநோய் போன்ற கடுமையான சவால்களை எதிர்கொள்ள தீவிர சர்வதேச ஒத்துழைப்பு தேவை" என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியது.
ஜூன் 3, 2021
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலர் அரிந்தம் பாக்சி, "துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான செயல்முறை இன்னும் முடிக்கப்படவில்லை" என்றார்.

பட மூலாதாரம், ANI
தற்போதைய நிலைமை நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்குமா?
"அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் லட்சக்கணக்கான துருப்புக்களை நிறுத்திவைப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. இப்போது கோடை காலம் வந்துவிட்டது. இருதரப்பிலிருந்தும், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கும். உள்கட்டமைப்பு மேம்பாடு நடைபெறும். எல்லையில் நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறை இப்போது முடிந்துவிட்டது. இருபுறமும் சந்தேகத்தின் சூழ்நிலை உள்ளது. உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமை முன்பை விட பதற்றமாக மாறக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன். உள்ளூர் நிகழ்வுகளையும் நம்மால் நிராகரிக்க முடியாது," என்று ஜெனரல் ஹூடா கூறுகிறார்,
"2020 மே மாதத்திற்கு முன்னர் அவர்கள் இருக்காத பகுதிகளில் கூட இப்போது சீனாவின் பெரிய எண்ணிக்கையிலான துருப்புக்கள் இருப்பதை பார்க்கமுடிகிறது. சீனா அங்கு என்ன செய்ய திட்டமிட்டுள்ளது? மறுபுறம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மெதுவான வேகத்தில் இந்தியாவில் வளர்ச்சி நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. "என்று புவிசார் அரசியல் விவகாரங்களில் நிபுணரான சிம் டாக் கூறுகிறார்.
இந்த காலகட்டத்தில் அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்துவதோடு கூடவே , ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உறுப்பினராக உள்ள 'குவாட்' அமைப்புடன் இந்தியாவின் உறவு நெருக்கடைந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவை எதிர்ப்பதற்காக மற்ற சக்திகளுடன் தொடர்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது என்று சொல்வது சரியாக இருக்குமா?
"மேற்கத்திய கூட்டணிகளுடன் இந்தியாவின் உறவு அதிகரித்துள்ளது என்று பல ஆய்வாளர்கள் கூறுவார்கள். ஆனால் நான் அப்படி கருதவில்லை. இந்தியா தனது மாற்று வழிகளை திறந்து வைத்திருக்க முயற்சி செய்கிறது. இதன் பொருள் என்னவென்றால் எந்தவொரு பிரச்னை ஏற்பட்டாலும் அதனிடம் அதிகமான வெளியார் கூட்டணிகள் இருக்கும். சீனாவுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இந்தியாவுக்கு இதுஒரு சாதகமான நிலையைக் கொடுக்கும்.
கடந்த ஆண்டு இந்தியா இதை நன்றாக பயன்படுத்தியது," என்று தைவானின் தைபேயில் உள்ள தேசிய செங்சி பல்கலைக்கழகத்தின் தூதாண்மைத் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் பிங் க்வே சென் பிபிசியின் சீன சேவையிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- கொரோனா மரணம் என குறிப்பிட்டு சான்றிதழ் தர மருத்துவமனைகள் தயங்குவது ஏன்?
- கொரோனா டெல்டா வகை திரிபு: தலைசுற்றுல், தொடர் சளி உள்ளதா?
- ஓபிஎஸ் சமரசம் ஆனது ஏன்? அதிமுக கூட்டத்தில் கடைசி நேர அதிரடி
- ஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – நெதன்யாகுவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- ராமர் கோயில் நிலம்: வாங்கியவுடன் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை
- விஷால், ஆர்.பி. செளத்ரி: வீதிக்கு வந்த பணப்பிரச்னை - என்ன நடந்தது?
- பாதி நேரம் ஐடி வேலை, மீதி நேரம் சமூக சேவை: வேலூர் இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை
- யார் இந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்? இணையத்தில் தேடப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












