விஷால் Vs ஆர்.பி. செளத்ரி: வீதிக்கு வந்த கொடுக்கல், வாங்கல் பிரச்னை - என்ன நடந்தது?

பட மூலாதாரம், TWITTER
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி மீது நடிகர் விஷால் காவல் துறையில் புகார் தெரிவித்திருப்பது மீண்டும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக என்ன நடந்தது என தெரிந்து கொள்ள நடிகர் விஷால் தரப்பிடம் பேச அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம்.
"படங்களுக்காக பொதுவாக ஃபைனான்ஷியர்களிடம் கடன் வாங்குவது வழக்கமான ஒன்றுதான். அப்படிதான் 'இரும்புத்திரை' படத்திற்காக ஆர்.பி. செளத்ரி அவர்களிடம் வாங்கினோம். அதற்கு உத்தரவாதமாக, காசோலை மற்றும் இன்னும் சில ஆவணங்களையும் கொடுத்திருந்தோம். பிறகு கடனையும் திருப்பிக் கொடுத்து விட்டோம். ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து நாங்கள் கொடுத்த ஆவணங்களை முறைப்படி திரும்ப கொடுக்கவில்லை.
திருப்பி கேட்டபோது, 'அது எங்கே உள்ளது என தெரியவில்லை' என பதில் கூறினார்கள். மார்ச், ஏப்ரல் என இரண்டு மாதங்களுக்கும் மேல் எங்கள் தரப்பில் மீண்டும் கேட்டு பார்த்தோம். ஆவணங்கள் எல்லாம் தவற விட்டதால், ஏதும் பிரச்னை எதிர்காலத்தில் வந்தால் நாங்களே பொறுப்பேற்கிறோம் என எழுதி கொடுப்பதாக சொன்னார்கள். எழுதியும் கொடுத்தார்கள்.
ஆனால், அதில் எங்களுக்கு திருப்தி இல்லை. ஏனெனில், இதற்கு முன்பே 'ஆம்பள' பட சமயத்தின் போது இதுபோன்ற பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொண்டோம். இதேபோல, ஆவணங்கள் தவற விட்டபோது எழுதி கொடுத்திருந்தார்கள். பிறகு அதை நாங்கள் வாங்க மறந்து விட்டோம். இதில் மீண்டும் எங்கள் மீதே வழக்கு பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பினார்கள். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது.
இந்த மாதிரி பிரச்னைகளை நாங்கள் மீண்டும் சந்திக்க கூடாது என்பதால்தான் புகார் கொடுத்துள்ளோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை எனில் இதுபோன்று புகார் கொடுப்போம் என முன்பே அவர்களிடம் சொல்லியிருந்தோம். அதன் பிறகுதான் அவர்கள் பாண்டு பத்திரமே எழுதி கொடுத்தார்கள். விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்," என்றார்.

பட மூலாதாரம், Facebook-Super Good Flims
இது தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியிடம் பேசினோம்.
"நடிகர் விஷால் எங்களிடம் கடன் வாங்கியது உண்மைதான். அவருக்கு நாங்கள் ஃபைனான்ஸ் செய்ததும் உண்மைதான். பத்திரம் திருப்பி கொடுக்க முடியவில்லை என்பதும் உண்மைதான். 'இரும்புத்திரை' படத்திற்காக நானும் திருப்பூர் சுப்ரமணியமும் சேர்ந்து ஃபைனான்ஸ் செய்திருந்தோம். அதற்கான ஆவணங்களை திருப்பூர் சுப்ரமணியத்திடம் கொடுத்திருந்தேன். அவருடைய உதவியாளர் சிவக்குமார் ஒரு இயக்குநர். அவரிடம் திருப்பூர் சுப்ரமணியம் கொடுத்திருந்தார். அவர் திருமணமாகாதவர். வடபழனியில் தனியாக வசித்து வந்தார். 'ஆவணங்களை எல்லாம் சென்னை வரும்போது வாங்கிக் கொள்கிறேன்' என சுப்ரமணியம் அவரிடம் சொல்லியிருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக சிவக்குமார் மாரடைப்பால் இறந்து விட்டார். அவர் இறந்ததே இரண்டு நாட்கள் கழித்துதான் எங்களுக்கே தெரிய வந்தது.
இதெல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தது. அவர் ஆவணங்களை எல்லாம் எங்கே வைத்திருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. நாங்களும் பல விதங்களில் முயற்சி செய்தோம். பிறகு தான், விஷால் தரப்பிடம் பணம் வாங்கி விட்டோம், எந்த பிரச்னையும் இல்லை' என எழுதி கொடுத்தோம்.
ஆனாலும் அதில் அவர்களுக்கு திருப்தி இல்லாமல் இது போன்று புகார் கொடுத்திருக்கிறார்கள். திருப்தி இல்லை என்றால், இதுபோன்று பத்திரம் எழுதி கொடுத்தோம் என அது தொடர்பாக செய்தித்தாளில் அறிவிப்பு வெளியிட்டு இருக்காலாமே. இது எல்லாம் ஒரு விஷயமே இல்லை.
இந்த பத்திரங்களை வைத்து நாங்கள் எதாவது செய்து விடுவோமோ என விஷால் பயப்படுகிறார். ஆனால், இந்த பத்திரங்கள் எங்களிடம் இல்லை என்பதுதான் உண்மை.
40 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறேன். இது போன்று என் மீது இதுவரை பிரச்னை வந்தது இல்லை. விஷாலுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறேன். ஆனாலும், அவர் இப்படி செய்திருப்பது வருத்தமாக உள்ளது. அவர் இப்போது மனஅழுத்தத்திலோ, குழப்பத்திலோ இருக்கிறாரா என தெரியவில்லை. நான் இப்போது வெளியூரில் உள்ளேன். சென்னை திரும்பியதும் விரைவில் இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி எங்கள் தரப்பை விளக்குவோம்" என முடித்து கொண்டார்.

பட மூலாதாரம், J BISMI
இந்த பிரச்னை குறித்து பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மியிடம் பேசினோம்,
"முதலில் இது இரண்டு பேருக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, ஊடகத்தில் பேசப்பட வேண்டிய விஷயமே இல்லை. ஆனால், இது பொதுவெளியில் வந்ததால் பேச வேண்டி இருக்கிறது. விஷால் ரொம்ப நாட்களாகவே செளத்ரியிடம் ஃபைனான்ஸ் வாங்கி பல படங்களை தயாரித்து வந்தவர்தான். அதேபோல, இந்த படத்திற்கும் கடன் வாங்கி திருப்பி கொடுத்திருக்கிறார்.
ஆனால், அதற்காக கொடுத்த ஆவணங்களை செளத்ரி திருப்பி கொடுக்கவில்லை. கேட்டபோது, திருப்பூர் சுப்ரமணியத்திடம் இருந்து வாங்கி கொடுப்பதாக சொல்லியிருந்திருக்கிறார். ஏனெனில் இரண்டு பேரும் சேர்ந்துதான் கொடுத்திருக்கிறார்கள். பிறகு அதில் நடந்தது என்ன என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதில் விஷால் அவர் மீது புகார் கொடுக்க உதயநிதி உதவியதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் கோவையில் செளத்ரியின் மகன் சுரேஷ் மீது நில மோசடி புகார் கொடுத்து அது கடந்த ஆட்சியில் எடுத்து கொள்ளப்படாமல், தற்போது இந்த பிரச்னைக்கு பிறகு புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால், இதில் அரசியல் விளையாட்டுகளும் இருக்கின்றன என்ற பேச்சு எழாமல் இல்லை.
விஷாலின் ஒரு படத்திற்கான சேட்டிலைட் உரிமம் தொகை அங்கு உள்ளது. இந்த புகார் கொடுப்பதன் மூலம் செளத்ரிக்கு இந்த விஷயத்தில் விஷால் `செக்' வைப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள். ஏனெனில், 'பணம் தர வேண்டாம். புகாரை மீண்டும் வாங்கிக்கொள்' என்று சொல்வதற்கான வாய்ப்பும் இருக்கிறதல்லவா?"
மிஷ்கின், இப்போது செளத்ரி பிரச்னையால் ஜீவாவுடனான நட்பு என அடுத்தடுத்து நட்பு வட்டாரத்தை விஷால் இழக்கிறாரா?
"முதலில் சினிமாவில் உண்மையான நட்பு என்பதே கிடையாது. அதனால், அவர்களுக்குள்ளே இந்த விஷயம் எப்படி பார்க்கப்படுகிறது என்பது குறித்து சொல்ல முடியாது. இந்த கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் யார் மீது சரி, தவறு என்ற கணிப்புக்கும் வர முடியாது. ஆனால், இதில் பலருக்கும் எழும் முக்கியமான கேள்வி, ஒருவருக்கு கடன் கொடுத்திருக்கிறார் என்றால் சம்பந்தப்பட்டவர்தானே ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்? அதை ஏன் மூன்றாம் நபரிடம் கொடுத்து மறைக்க வைக்க வேண்டும், அப்போது இது கருப்பு பணமா? என்பதுதான் அது. இதற்கு என்ன தீர்வு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்கிறார் பிஸ்மி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












