LGBTQ: பாலின மாற்று சிகிச்சை என்றால் என்ன? ஓரின சேர்க்கைக்கு இது தீர்வாகுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜான்வி மூலே
- பதவி, பிபிசி மராத்தி
"ஒரு நபர் இடது கை பழக்கமுள்ளவர் என்றால், அவருக்கு ஏதுவாக இல்லாதபோதும், வலது கையைப் பயன்படுத்தும்படி அவரை வற்புறுத்துவீர்களா? அவரால் கட்டாயப்படுத்தப்படுவதை ஏற்றுக் கொண்டு வலது கையை பயன்படுத்த முடியுமா? அதே தர்க்கம் தான் ஓரின ஈர்ப்பாளர்களுக்கும் பொருந்தும்."
மும்பையில் வசிக்கும் ஓரின ஈர்ப்பாளரான சுமித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலின மாற்று சிகிச்சை (Conversion therapy) குறித்து பேசுகிறார். அவர் ஓரின ஈர்ப்பு பிரச்சனையை தீர்க்க பாலின மாற்று சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
"மாற்று பாலின சிகிச்சை" என்ற சொல், ஒரு நபரின் பாலியல் விருப்ப நிலையை (Sexual Orientation) மாற்றும் அல்லது ஒரு நபரின் பாலின அடையாளத்தை (Gender Identity) அடக்கும் எந்தவொரு சிகிச்சையையும் அல்லது உளவியல் சிகிச்சையையும் குறிக்கிறது. பேயோட்டுதல், வன்முறை, பட்டினி, நிலையான மூளைச் சலவை போன்ற பல ஆபத்தான விஷயங்களும் இதில் அடங்கி இருக்கலாம்.
ஓரினஈர்ப்பு பற்றிய தவறான கருத்துக்கள் மக்களை இந்த சிகிச்சைகளை நோக்கிச் செல்ல வைக்கின்றன. ஆனால் இப்போது சென்னை உயர் நீதிமன்றம் இந்த சிகிச்சையை தடை செய்துள்ளது. நாடு முழுவதும் எல்ஜிபிடி ஆர்வலர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை சுமித் பாராட்டுகிறார். "சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியமானது, ஆனால் நாங்கள் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது. இது ஒரு நல்ல தொடக்கம்." என்கிறார் சுமித்.
"இன்றும் யாராவது ஒருவர் (ஆண்/பெண்) தங்களின் பாலின விருப்பத்தை, ஓரின ஈர்ப்பாளர் என்கிற அடையாளத்தை வெளிப்படையாக அறிவித்தால், பலர் அதை அசாதாரணமான ஒன்றாகவே பார்க்கிறார்கள். சம்பந்தப்பட்ட நபர்களிடமே, தங்களுக்கு சில உளவியல் மாறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதற்கு சிகிச்சையளிக்கலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர். பெற்றோர்களும் தவறான புரிதலோடு இருக்கின்றனர். நீதிமன்றத்தின் முடிவு இந்த வாதங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் என நம்புகிறேன்." என்கிறார் சுமித்.
அடையாளத்தை ஏற்றுக் கொள்வதில் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images
சுமித் கல்லூரியில் படிக்கும் போது அவரது இயல்பான விருப்பத்தை உணர்ந்தார். தன் பாலின அடையாளத்தை ஏற்றுக்கொள்ள அவருக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது.
"நான் என் உணர்வுகளை மறுத்துக் கொண்டிருந்தேன். இது என் வாழ்வில் ஒரு கட்டத்தில் ஏற்படும் உணர்வு தான் என நினைத்தேன். அது கடந்து போய்விடும் எனக் கருதினேன். நம் சமுதாயத்தில், ஆண்கள் சில நேரங்களில், ஆண் என்கிற பெருமிதத்தின் கீழ் இருக்கிறார்கள், எனவே தங்கள் உண்மையான அடையாளத்தை எளிதில் ஏற்க மாட்டார்கள்."
ஒரு நாள் சுமித் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தன் பெற்றோரிடம் தன் பாலின அடையாளத்தைக் குறித்து வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் அவரது குடும்பம் அவருடைய ஓரினஈர்ப்பு அடையாளத்தை மாற்ற முயன்றனர்.
"அது மிகவும் வேதனையளிப்பதாக இருந்தது. நானே என் உணர்வுகளை மறுத்துக் கொண்டிருந்தேன். நான் சில பெண்களுடன் டேட்டிங் செய்ய முயற்சித்தேன். இது எனது பெற்றோரை மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்கியது. எனக்கு நிறைய பெண் நண்பர்கள் இருக்கும்போது நான் எப்படி ஓர் ஓரினஈர்ப்பாளன் ஆக முடியும் என அவர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள்."
உணர்ச்சி சிக்கலை சரி செய்ய சுமித் சில 'சிகிச்சைகளை' எடுத்துக் கொள்ள முயன்றார். ஆனால், அந்த அனுபவங்கள் அவரது சிக்கலை அதிகரித்தன.
"சிலர் தங்களது மாற்று பாலின சிகிச்சையின் ஒரு பாகமாக (மின்சார) அதிர்ச்சி சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதிர்ஷ்டவசமாக நான் இதுபோன்ற அபாயகரமான விஷயங்களை எதிர்கொள்ளவில்லை. எனது ஓரினஈர்ப்பை ஒரு அசாதாரணமான விஷயமாகவே பலர் உணர்ந்தனர். சில ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைத்தனர். எனது பாலின நோக்குநிலை இயற்கையானதல்ல என அவர்கள் என்னிடம் கூறுவார்கள்.

பட மூலாதாரம், Getty Images
"இது குறித்து நான் யாரிடமாவது பேசினால், அவர்களுக்கு என் மீதான கருத்து மாறும். இப்படி ஒரு விஷயத்தை அவர்கள் என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என அவர்கள் கூறுவார்கள்."
இதெல்லாம் சுமித்துக்கு தாங்க முடியாததாக மாறியது. "நான் எரிச்சலடைந்தேன், கோபமடைந்தேன். மற்றவர்களுடன் என்னால் தொடர்புபடுத்திக் கொள்ள முடியவில்லை. நான் தற்கொலை பற்றியும் சிந்திக்கத் தொடங்கினேன்,"என அவர் கூறுகிறார்.
சுமித்துக்கு கொஞ்சம் மனநல பிரச்சினைகள் இருப்பதாக அவரது பெற்றோர்கள் நினைத்தனர்.
"அவர்கள் மனநல கோளாறுக்கும் பாலியல் நோக்குநிலைக்கும் இடையில் குழப்பிக் கொண்டனர். நான் மன அழுத்தப் பிரச்சனையில் இருக்கிறேனா, அது என்னை ஓரின ஈர்ப்பை நோக்கி இட்டுச் செல்கிறதா என அவர்கள் என்னிடம் கேட்பார்கள். என் அடையாளத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாதது தான் எனக்கு மனச்சோர்வைக் கொடுத்தன"
"அதிர்ஷ்டவசமாக, என் பெற்றோர் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் திருமணம் மேலும் சிக்கல்களுக்கு வழிவகுத்திருக்கும் என்பதை நான் அவர்களுக்குப் புரிய வைத்தேன். சிலர் திருமணம் செய்து கொண்டு பிரச்சனைகளை எதிர்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன். குறைந்தபட்சம் எனக்கு அவ்வளவு சுதந்திரமாவது வழங்கப்பட்டது. பெற்றோர்கள் எனது நிலையை உணர்ந்து எனக்கு அனுதாபம் காட்ட முடியாவிட்டாலும், அவர்கள் அதை மெல்ல புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்."
அதிர்ஷ்டவசமாக, நான் ஒரு நல்ல ஆலோசகரை சந்தித்தேன். எனது பாலின விருப்ப அடையாளத்தில் தவறில்லை என்பதை உணர்ந்தேன்.
"நான் குழப்பத்தில் இருந்த போது, புனேவின் சமபதிக் அறக்கட்டளையின் மருத்துவர் என்னை சரியாக வழிநடத்தினார். நீங்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்கு உங்களை கட்டாயப்படுத்துகிறீர்கள், நீங்கள் ஒரு ஓரின ஈர்ப்பாளரா அல்லது இருபாலின ஈர்ப்பாளரா என ஏன் யோசிக்கிறீர்களா? நேரம் செல்ல செல்ல நீங்களே உங்களின் உண்மையான அடையாளத்தை உணர்ந்து கொள்வீர்கள் என அவர் என்னிடம் கூறினார்.
எனவே, மெல்ல சுமித் தனது அடையாளத்தை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினார். இப்போது, 34 வயதில், சுமித் மும்பையைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்றில் குழு தலைவராக பணிபுரிகிறார். அவர் தன்னம்பிக்கையுடன் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது.
மாற்று சிகிச்சையில் பாதிக்கப்பட்டவர்கள்

பட மூலாதாரம், Getty Images
"உளவியலின் படி, பாலியல் மாற்று சிகிச்சை என்பது ஒரு வகையான நடத்தையை மாற்றும் சிகிச்சையே. ஒரு நபருக்கு ஏதேனும் மனநலக் கோளாறு இருந்தால், சம்பந்தப்பட்ட நபரின் நடத்தையில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வர இந்த சிகிச்சையைப் பயன்படுத்துவார்கள்." என்கிறார் உளவியலாளர் ஹேமங்கி மப்ரால்கர்.
ஓரினஈர்ப்பு என்பது முதலில் ஒரு கோளாறு அல்ல, எனவே இதுபோன்ற சிகிச்சைகள் சம்பந்தப்பட்ட நபருக்கு மிக தீவிரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என தெளிவுபடுத்துகிறார் அவர்.
கடந்த ஆண்டு, கேரளாவைச் சேர்ந்த இருபால் ஈர்ப்பாளரான பெண் அஞ்சனா ஹரிஷ் தற்கொலை செய்து கொண்டார். அது பாலின மாற்று சிகிச்சையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவாதங்களைத் கிளப்பியது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அஞ்சனா பேஸ்புக்கில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார், அதில் ஆபத்தான பாலின மாற்று சிகிச்சைகளை தான் மேற்கொள்ள வேண்டி இருந்ததைக் குறித்து பேசி இருந்தார்.
சில கிறிஸ்தவ அமைப்புகளின் கட்டடத்தில் ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், பல மருந்துகள் கட்டாயப்படுத்தி அவருக்கு கொடுக்கப்பட்டதால், அவர் ஒரு இயந்திரத்தைப் போல செயல்படுவதாகவும் கூறினார்.
"எனது சொந்த குடும்பத்தினரே எனக்கு இதை செய்தார்கள், அதுதான் என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது. என்னைப் பாதுகாக்க வேண்டியவர்களே என்னை சித்திரவதை செய்தனர்." என அவர் கூறியிருந்தார்.
அஞ்சனாவின் குடும்ப உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தனர், ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு பாலின மாற்று சிகிச்சை கேரளாவிலும், ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அண்மையில் நடிகை நிஷிகந்தா வாட் பாலின மாற்று சிகிச்சை குறித்து சர்ச்சையான கருத்துக்களைக் கூறினார். இதுவே இன்று மகாராஷ்டிரா போன்ற பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலத்திலேயே இந்த சிகிச்சை தொடர்பாக எத்தனை தவறான புரிதலோடு இருக்கிறார்கள் என்பதை காட்டுவதாக இருக்கிறது.
இவ்விவகாரத்தில் மற்ற நாடுகளின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
மற்ற நாடுகளிலும் இதே நிலையைக் காண முடிகிறது. யூத மதம், கிறித்துவம், இஸ்லாமியம் ஆகியவற்றில் கூட ஆண் பெண் பாலின உறவுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு பாலியல் உறவும் அவர்களின் மத மரபுகளால் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, இன்றும், ஐரோப்பா அமெரிக்காவில் கூட, ஓரினஈர்ப்பாளர்களை எதிர்க்கும் மற்றும் மாற்று சிகிச்சையை ஆதரிக்கும் பலர் உள்ளனர்.
ஜெர்மனி, கனடா, மெக்ஸிகோ, மால்டா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் சில மாகாணங்கள் இத்தகைய பாலியல் மாற்ற சிகிச்சைகளை சட்டப்பூர்வமாக தடை செய்துள்ளனர்.
இந்தியாவில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓரினச்சேர்க்கை ஒரு குற்றமாக கருதப்பட்டது. ஓரினச்சேர்க்கை ஒரு குற்றம் அல்ல என உச்ச நீதிமன்றம் (6 செப்டம்பர் 2018) அறிவித்த பின்னர் இந்நிலை மாறியது.
தற்போது சென்னை உயர் நீதிமன்றம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
மதுரையைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்கள், தங்களது காதல் பற்றி பெற்றோர் தெரிந்து கொண்ட பின்னர், இருவரையும் பிரிக்க அழுத்தம் அதிகரித்ததாகவும், பெற்றோரிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இருவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிட்டார். மேலும், இவர்களைப் போல நாடு முழுவதும் உள்ள, தன் பாலின ஈர்ப்பாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என கூறி சில வழிகாட்டுதல்களை அறிவித்தார்.
தன் பாலின ஈர்ப்பாளர்களான காதலர்களை பிரிக்க, 'மகளை காணவில்லை' என்றோ 'மகள் கடத்தப்பட்டாள்' என்றோ பெற்றோர் அளிக்கும் புகார்களை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும். பெற்றோர் கொடுக்கும் புகாரை மட்டும் வைத்து, தன் பாலின ஈர்ப்பாளர்களை விசாரணைக்கு அழைத்து துன்புறுத்தகூடாது.
இருவரும் பெரியவர்களுக்கான வயதை எட்டி ஒருமித்த கருத்துடன் இசைந்து வாழ்வது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது எத்தகைய புகாரையும் காவல்துறையினர் பதிவு செய்யக்கூடாது.
தன் பாலின ஈர்பாளர்களை மாற்றுவதற்காக செய்யப்படும் பாலின மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். அவ்வாறான அறுவை சிகிச்சை செய்வதாக கூறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சமூகத்தில் தன் பாலின ஈர்பாளர்கள் ஒரு அங்கமாக கருதப்பட வேண்டும். அவர்கள் மீதான பாகுபாடு ஒழிக்கப்படவேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார். அவரது இந்த உத்தரவு தற்போது இந்திய அளவில் பேசுபொருளாக மாறியள்ளது.
பிற செய்திகள்:
- அமேசான் காடுகளை சேதப்படுத்தாமல் 5,000 ஆண்டுகள் வாழ்ந்த மனிதர்கள்
- கொரோனா மூன்றாவது அலை எப்படியிருக்கும், யாரைப் பாதிக்கும், செய்யவேண்டியது என்ன?
- கொரோனா தடுப்பூசி: ஜி7 நாடுகளை எச்சரிக்கும் யூனிசெஃப் - புதிய ஆபத்து
- இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் ஏற்படுவதற்கு நீரிழிவு காரணமா?
- கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












