எல்ஜிபிடி: தன்பாலினத்தவர் பாதுகாப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் தரும் வழிகாட்டுதல்கள்

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

பட மூலாதாரம், ARUN SANKAR

தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு பரவலாக செய்யப்படும் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு, மத்திய அரசு தடை விதிக்கவேண்டும் என்றும் தன் பாலின ஈர்ப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை 12 வாரங்களுக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தன் பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கோரிய வழக்கில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் வரை, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க சில வழிகாட்டுதல்களை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக தன் பாலின ஈர்ப்பாளர்களின் வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், வழக்கு தொடர்ந்த இரு மனுதாரர்கள், அவர்களின் பெற்றோர்கள் ஆகியோருக்கு எல்ஜிபிடி பற்றிய விழிப்புணர்வு தரும் ஆலோசனை வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் தானும் தனியாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய விழிப்புணர்வு வகுப்பை எடுத்துக்கொண்டதால் மட்டுமே சரியான வழிகாட்டுதல்களை வழங்க முடிந்தது என்று கூறினார்.

மதுரையைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்கள், தங்களது காதல் பற்றி பெற்றோர் தெரிந்து கொண்ட பின்னர், இருவரும் பிரிய அழுத்தம் அதிகரித்ததாகவும், பெற்றோரிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இருவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிட்டார். மேலும், இவர்களைப் போல நாடு முழுவதும் உள்ள, தன் பாலின ஈர்ப்பாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறி சில வழிகாட்டுதல்களை அறிவித்தார். அவரது இந்த உத்தரவு தற்போது இந்திய அளவில் பேசுபொருளாக மாறியள்ளது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

பட மூலாதாரம், MANJUNATH KIRAN

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்ட வழிகாட்டுதல்கள்

தன் பாலின ஈர்ப்பாளர்களான காதலர்களை பிரிக்க, 'மகளை காணவில்லை' என்றோ 'மகள் கடத்தப்பட்டாள்' என்றோ பெற்றோர் அளிக்கும் புகார்களை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும். பெற்றோர் கொடுக்கும் புகாரை மட்டும் வைத்து, தன் பாலின ஈர்ப்பாளர்களை விசாரணைக்கு அழைத்து துன்புறுத்தகூடாது.

இருவரும் பெரியவர் வயதை எட்டி ஒருமித்த கருத்துடன் இசைந்து வாழ்வது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது எத்தகைய புகாரையும் காவல்துறையினர் பதிவு செய்யக்கூடாது.

தன் பாலின ஈர்பாளர்களை மாற்றுவதற்காக செய்யப்படும் பாலின மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். அவ்வாறான அறுவை சிகிச்சை செய்வதாக கூறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மத்திய சமூக நீதி அமைச்சகம் தன் பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தன்னார்வ அமைப்புகளின் பட்டியல் ஒன்றை வெளியிட வேண்டும். அந்த அமைப்புகளின் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் உள்பட விவரங்களை வெளியிட வேண்டும். அந்த தகவல்களை அவ்வப்போது மேம்படுத்த வேண்டும். அந்த அமைப்புகளை தொடர்பு கொண்டவர்களின் விவரங்களை தன்னார்வலர்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அவர்களுக்கு என்ன விதத்தில் உதவி கிடைத்தது உள்ளிட்ட விவரங்களை ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை அமைச்சகத்திடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே இயங்கி வரும் குறுகிய கால பாதுகாப்பு இல்லங்கள், திருநங்கை பாதுகாப்பு இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் செய்ய வேண்டும். அத்தகைய பாதுகாப்பு இல்லங்கள் இருப்பதை 12 வாரங்களுக்குள் உறுதிசெய்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

காவல்துறையினர், சிறைதுறையினர், நீதித்துறை, கல்வி நிறுவனங்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தன்பாலின ஈர்ப்பாளர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்.

சமூகத்தில் தன் பாலின ஈர்பாளர்கள் ஒரு அங்கமாக கருதப்பட வேண்டும். அவர்கள் மீதான பாகுபாடு ஒழிக்கப்படவேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :