இந்தியா - சீனா மோதல்: சீன வீரர்களின் உயிரிழப்பை மிகைப்படுத்திய `பிளாக்கர்' சிறையில் அடைப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்தியா, சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த ஆண்டு நடந்த மோதலில் சீன வீரர்கள் அதிக அளவில் இறந்ததாக எழுதிய வலைதள எழுத்தாளர் (ப்ளாக்கர்) சியி ஜிமிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லடாக் எல்லையை அடுத்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த தாக்குதல்கள் பற்றி ஆன்லைன் பதிவுகளில் எழுதிய சியி ஜிமிங், சீன தரப்பில் அதிக உயிர் சேதம் ஏற்பட்டதாக கூறியிருந்தார். ஆனால், அந்த கருத்துகளை மிகைப்படுத்தி எழுதப்பட்டவை என்று கூறிய நீதிமன்றம், தாயக வீரர்களையும் அவர்களின் உயிர்த்தியாகத்தையும் சிறுமைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக சியி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்தது.
சீனாவில் 2020ஆம் ஆண்டு, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தாய்நாட்டுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அல்லது போராடுபவர்கள் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படலாம். அத்தகைய குற்றச்சாட்டுகளில் ஒன்றுதான் சியி மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி மூன்று ஆண்டுகள் வரை கைதானவரை சிறையில் வைத்திருக்க முடியும்.
நடக்காத ஒன்றை மிகைப்படுத்தி தாய்நாட்டை சிறுமைப்படுத்தியதற்காக பகிரங்கமாக குயி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைடுத்து அரசு தொலைக்காட்சியான சிசிடிவி ஒளிப்பதிவுக்குழு முன்பு தோன்றிய சியி ஜிமிங், "எனது நடத்தை மனசாட்சிக்கு விரோதமாக இருந்தது. எனது செயலுக்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன்," என்று கூறி மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக சீன அரசு ஊடகமான தி குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா, சீனா இடையிலான லடாக் எல்லை பதற்றம் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் மிகத்தீவிரமாக இருந்தது. அப்போது எல்லையில் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையிலான கைகலப்பு, பிறகு மோதலாக வெடித்தது. அதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சீன தரப்பில் எத்தனை பேர் இறந்தனர் என்பது தெளிவாகவில்லை.
பல மாத தாமதத்துக்குப் பிறகு, சீனா தனது தரப்பில் நான்கு வீரர்களை பறிகொடுத்ததாக கூறியது.
இந்தியா, சீனா இடையே 45 ஆண்டுகளாக நிலவிய அமைதிச்சூழலில் முதல் முறையாக ஏற்பட்ட மோசமான தாக்குதல் சம்பவமாக அந்த நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.
சியி ஜிமிங் யார்?
சமூக ஊடக தளத்தில் 25 லட்சம் பேரை பின்தொடருவோராகக் கொண்டிருப்பவர் 38 வயதாகும் சியி ஜிமிங். வேபா (WEIBO) தள பக்கத்தில் இவர் எழுதி வருபவர். இந்த நிலையில், இந்தியா, சீனா இடையிலான மோதல் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் சியி ஜிமிங்.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், பிறகு சட்டவிரோதமான தமது செயல்பாடுக்கு மன்னிப்பு கேட்டார். சீன வீரர்களின் உயிர் தியாகத்தை சிறுமைப்படுத்தும் வகையில் தாம் எழுதியதாகவும் அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, சியிவைத்திருந்த கணக்கை வேபா நிறுவனம் ஓராண்டுக்கு முடக்கி நடவடிக்கை எடுத்தது.
இந்தியா, சீனா இடையே பல தசாப்தங்களாக எல்லை நிர்ணயம் தொடர்பாக பிரச்னை நீடித்து வருகிறது. 3,440 கி.மீ தூரமுள்ள எல்லையில் யாருக்கு எந்த இடம் சொந்தம் என்பது வரையறுக்கப்படாத நிலையில், அது அசல் கட்டுப்பாட்டுக்கோடு என்று அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், AFP
நதிகள், ஏரிகள், பனிமலைகள் என முன்னரங்கில் உள்ள பகுதிகளில் இரு தரப்பிலும் வீரர்கள் தங்களுக்குள் வரையறுத்துக் கொண்ட இடத்துக்கு பதிலாக வேறு இடங்களில் கண்காணிப்பை மேற்கொண்டால் அது வாக்குவாதமாக மாறி பல நேரங்களில் பிரச்னைக்கு வழிவகுக்கிறது. எனினும், இரு தரப்பிலும் எல்லை பிரச்னை தொடர்பான கண்காணிப்புப் பணியின்போது ஒருவர் மீது ஒருவர் ஆயுத பிரயோகம் அல்லது வெடிகுண்டுகளையோ பயன்படுத்தக் கூடாது என்ற உடன்பாட்டை இரு தரப்பும் மிதத்து வருகின்றன.
இருப்பினும், 2020ஆம் ஆண்டு நடந்த மோதலின்போது, இரு தரப்பும் ஒருவரையொருவர் கற்களாலும் கனமான இரும்புத்தடிகளாலும் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் இரு நாட்டு ராணுவத்தினரும் இந்திய எல்லையான சிக்கிம் பகுதியில் மோதிக் கொண்டதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட மோதல்கள் நடக்கும் போதெல்லாம் இரு நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தணிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அத்தகைய ஒரு முயற்சியின் விளைவாகவே லடாக்கை அடுத்த எல்லை பகுதியில் இரு தரப்பிலும் மோதல்கள் தணிந்துள்ளன.
பிற செய்திகள்:
- சசிகலாவை சந்திக்காத தினகரன்; திடீர் ஆடியோ ஏன்?- அ.தி.மு.கவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
- ஒன்பது உயிர் கொண்ட ஒரு கண் தலைவன் – யார் இந்த 'ஹமாஸ்' டெய்ஃப்?
- மோதி Vs மமதா: மேற்கு வங்க தலைமைச் செயலரை பதவி விலகச் செய்து தலைமை ஆலோசகராக்கிய முதல்வர்
- 3 குழந்தைகள் வரை பெற்றெடுக்க சீன அரசு அனுமதி - கோபத்தில் மக்கள்
- இஸ்ரேலில் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வருகிறதா? புதிய கூட்டணிக்கு எச்சரிக்கை
- கொரோனா வைரஸால் பாதித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வருமா?
- நடிகை மீனா பேட்டி: ''ரஜினியுடன் அந்த விஷயத்தில் பயங்கர போட்டி உண்டு"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












