சசிகலாவை சந்திக்காத தினகரன்; திடீர் ஆடியோ ஏன்?- அ.தி.மு.கவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அ.தி.மு.கவில் மீண்டும் வி.கே.சசிகலா தொடர்பான பேச்சுக்கள் அணிவகுக்கத் தொடங்கிவிட்டன. `அ.தி.மு.கவை திசைதிருப்பி தொண்டர்களை குழப்ப முயற்சிக்கும் சசிகலாவின் எண்ணம் ஈடேறாது' என்கிறார் கே.பி.முனுசாமி. சசிகலாவின் திட்டம்தான் என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அறிக்கைகளை மட்டும் அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டு வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் 5 சதவிகித வாக்குகளைப் பெற்ற அ.ம.மு.க, சட்டமன்றத் தேர்தலில் 2.4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. அக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர். தென்மண்டலங்களில் 12 தொகுதிகள் வரையில் அ.தி.மு.கவின் வெற்றியில் அ.ம.மு.கவால் பாதிப்பை ஏற்படுத்த முடிந்தது. தேர்தலில் 65 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றதைக் கவனித்த சசிகலா, `இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்' என உறவினர்களிடம் கூறியதாகத் தகவல் வெளியானது.
முடிவுக்கு வராத மோதல்
இதன்பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்திலும், `நீங்கள் எடுத்த முடிவுகளால்தான் தோல்வி ஏற்பட்டது' என ஓ.பி.எஸ் தரப்பினர் எடப்பாடி தரப்பை விமர்சித்தனர். இதன்பின்னர், 51 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிக்கை வெளியானது. தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை வீட்டுக்கே சென்று எடப்பாடி சந்தித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான மோதல் முடிவுக்கு வந்துவிட்டாலும், முன்னாள் முதலமைச்சர் என்ற பெயரில் ஓ.பி.எஸ் வெளியிடும் தனி அறிக்கைகள், அ.தி.மு.கவில் அடுத்தகட்ட பூகம்பத்துக்கு வழியமைத்துள்ளதாகவே அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தான் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதைக் காட்டும் வகையில் எடப்பாடியும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். ஆம்புலன்ஸ் கட்டண நிர்ணயம், முன்களப் பணியாளர்களுக்கான தடுப்பூசி உள்பட பல விவகாரங்களில் ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட, ஆக்சிஜன் தட்டுப்பாடு, கருப்புப் பூஞ்சை தாக்குல் ஆகியவை தொடர்பாக இ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டார்.
தொண்டர்கள் சசிகலாவிடம் பேசவில்லை
இந்நிலையில், அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா பேசிய ஆடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் என்ற அ.தி.மு.க தொண்டரிடம் பேசிய சசிகலா, ` கவலைப்படாதீங்க. கட்சி வீணாவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கொரோனா தொற்று குறைந்த பிறகு எல்லோரையும் சந்திக்கிறேன்' எனக் கூறியுள்ளார். அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகாவில் உள்ள செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளரான வினோத் என்பவரிடமும் சசிகலா நலம் விசாரித்துள்ளார். இந்த ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், கே.பி.முனுசாமி மூலம் செய்தியாளர்களிடம் சில விளக்கங்களைத் தெரிவித்தனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏவும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, ` அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் சசிகலாவின் பேச்சுக்கு செவிசாய்க்க மாட்டார்கள். அ.தி.மு.கவை திசைதிருப்பி தொண்டர்களை குழப்புவதற்கு சசிகலா முயற்சி செய்து வருகிறார். அவரது எண்ணம் ஈடேறப் போவதில்லை. தொண்டர்கள் யாரும் சசிகலாவிடம் பேசவில்லை. மாறாக, அவர்தான் தொண்டர்களிடம் பேசி வருகிறார். சசிகலா பேசுகின்ற நபர்கள் அ.ம.மு.கவைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றால் சசிகலா குடும்பம் அ.தி.மு.கவில் இருந்து விலகியிருக்க வேண்டும்' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
வெளியானது 3 ஆடியோக்கள்.. ஆனால்?
இதையடுத்து, `சசிகலாவின் மனநிலை என்ன?' என மன்னார்குடியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் சிலரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தொண்டர்களிடம் சசிகலா பேசிய மூன்று ஆடியோக்கள் மட்டுமே வெளியானது. சொல்லப் போனால் ஏராளமானோரிடம் அவர் போனில் பேசியுள்ளார். அவர்கள் எல்லாம் கர்நாடகாவில் இருந்து சசிகலா வந்தபோது வரவேற்கச் சென்றவர்கள். அந்தநேரத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்தவர்கள், முக்கிய நிர்வாகிகள் என அனைவரின் செல்போன் எண்களையும் சசிகலா வாங்கி வைத்துள்ளார். அவர்கள் ஒவ்வொருவரையும் தற்போது தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இப்போது பேசுவதன் பின்னணியில் வேறு சில காரணங்களும் உள்ளன" என்கின்றனர்.
தொடர்ந்து பேசியவர்கள், `` தற்போது அ.தி.மு.கவில் உள்கட்சி மோதல் தீவிரமாக நடந்து வருகிறது. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் தங்களின் பலத்தைக் காட்டும் வகையில் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பி.எஸ் சார்பாக முக்கிய பிரதிநிதி ஒருவரும் சசிகலாவை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தநேரத்தில் அ.தி.மு.கவுக்குள் தான் வருவது சரியாக இருக்கும் என சசிகலா நினைக்கிறார். இதற்காக போயஸ் கார்டனில் தயாராகியுள்ள வீட்டில் அவர் இன்னமும் குடியேறவில்லை. தியாகராய நகரில் உள்ள வீட்டில் இருந்தபடியே அரசியல் நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். அங்கு அவரைச் சந்திக்க வரும் உறவினர்களிடம், தனது திட்டம் குறித்து அவர் பேசுவதில்லை. ஒரு சிலரைத் தவிர அனைத்து விவரங்களையும் மிக ரகசியமாகவே வைத்துள்ளார்" என்கின்றனர்.
சசிகலாவை சந்திக்காத தினகரன்

பட மூலாதாரம், Getty Images
`தேர்தலுக்குப் பிறகு தினகரன் ஏன் மௌனமாக இருக்கிறார்?' என்றோம். `` சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க போட்டியிட வேண்டாம் என்ற மனநிலையில்தான் சசிகலா இருந்தார். ஆனால், `50 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறுவோம்' என தினகரன் கூறியதால், சசிகலாவும் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தேர்தல் முடிவுகளில் தினகரன் பின்தங்கியதை சசிகலா ரசிக்கவில்லை. இதன் காரணமாக, தற்போது வரையில் சசிகலாவை தினகரனும் சந்திக்கவில்லை. புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்தபடியே தினகரன் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். சசிகலாவை பொறுத்தவரையில், `அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும்' என்பதுதான் எண்ணமாக உள்ளது. தற்போது வரையில் அவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என யாரையும் விமர்சித்துப் பேசியதில்லை. தன்னுடைய வருகையை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என உறுதியாக நம்புகிறார்" என்கின்றனர்.
சசிகலாவின் ஆடியோ உரையாடலை கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளது குறித்து அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கடந்த சில நாள்களாக கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் மைக் முன்னால் பேசாததால் சரியாக தூக்கம் வந்திருக்காது என நினைக்கிறேன். சின்னம்மாவிடம் பேசும் அ.தி.மு.க தொண்டர், `அ.தி.மு.க கொடி பறக்க வேண்டிய இடத்தில் தி.மு.க கொடி பறக்கிறது, எடப்பாடி செய்ததை எங்களால் தாங்க முடியவில்லை' என்றுதான் கூறுகிறார். அவர், `அ.ம.மு.க கொடி பறக்க வேண்டும்' எனப் பேசவில்லையே. அப்படியானால் சின்னம்மாவிடம் பேசியது அ.தி.மு.க தொண்டர்தானே. இதற்குப் பதில் அளித்த சின்னம்மாவும், `நான் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை' என்றார். கொரோனா முடிந்த பிறகு தொண்டர்களை அவர் நேரில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்போது செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசுவார் என நினைக்கிறேன்" என்கிறார்.
இது தொண்டர்கள் கட்சி
தொடர்ந்து பேசுகையில், `` கே.பி.முனுசாமியை பொறுத்தவரையில் எம்.பி பதவி வந்தாலும் வாங்கிக் கொள்வார். எம்.எல்.ஏ பதவி வந்தாலும் வாங்கிக் கொள்வார். அந்தளவுக்கு பதவி மோகத்தில் இருக்கிறார். அவர்களுக்கெல்லாம் தொண்டர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அவர் எம்.பியாக இருந்ததால் எம்.எல்.ஏ சீட்டை வேறு யாராவது ஏழைத் தொண்டனுக்குக் கொடுத்திருக்கலாம். ஆளும்கட்சியாக அவர்கள் வர முடியாத அளவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள். இன்னமும் சுயநலத்தோடு பேசுகிறவர்களுக்குப் பதில் கொடுக்க வேண்டாம் என நினைக்கிறேன்" என்கிறார்.
`பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அ.தி.மு.க தலைமையும் சசிகலா வருகைக்குத் தடை போட்டுவிட்டது. இந்நிலையில் அவரால் மீண்டும் அ.தி.மு.கவுக்குள் நுழைய முடியுமா?' என்றோம். `` அ.தி.மு.கவை பொறுத்தவரையில் தொண்டர்கள்தான் கட்சி. அ.தி.மு.கவின் வரலாறு என்பதே ஒற்றைத் தலைமைதான். தற்போதுள்ள இரட்டைத் தலைமை என்பது இவர்களாகவே உருவாக்கியது. தொண்டர்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்தான் தலைவர். இதற்கான பதிலை காலம் சொல்லும்.

பட மூலாதாரம், Getty Images
சாதிரீதியாக பிரிந்ததா அ.தி.மு.க?
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்றும் உள்ளது. அ.தி.மு.க பழையபடி செயல்பட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். தற்போதுள்ளவர்கள் லெட்டர் பேடில் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். கொங்கு மண்டலம், தென்மண்டலம் என அ.தி.மு.க தனியாகப் பிரிந்து நிற்கிறது. ஆர்.கே.நகரிலும் அம்மா போட்டியிட்டார், ஸ்ரீரங்கத்திலும் போட்டியிட்டார். காரணம், அ.தி.மு.கவுக்கு சாதி, மதங்கள் கிடையாது. முதல்வராக சின்னம்மா முன்னிறுத்தியது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவரை அல்ல, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடியைத்தான் அவர் முதல்வராக முன்னிறுத்தினார்.
`அ.தி.மு.கவில் சாதாரண மனிதன்கூட சி.எம் ஆகலாம்' என எடப்பாடி கூறுகிறார். அப்படியானால், சாதாரண தொண்டனை சி.எம் வேட்பாளராக அறிவித்திருக்க வேண்டியதுதானே. எதிர்க்கட்சித் தலைவராக வேறு ஒருவரை முன்னிறுத்தியிருக்கலாமே. எந்தப் பதவியாக இருந்தாலும் தனக்கே வர வேண்டும் என அவர் விரும்புகிறார். அ.தி.மு.க தொண்டர்களை வாழவைக்கின்ற முடிவில் எடப்பாடியும் இல்லை, கே.பி.முனுசாமியும் இல்லை" என்கிறார்.
சரியாத வாக்குவங்கி
`சசிகலாவின் ஆடியோ பேச்சு, அ.தி.மு.கவுக்குள் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துமா?' என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தேர்தல் சமயத்தில் அறிவித்த சசிகலா, மீண்டும் உள்ளே வர விரும்புகிறார் என்பதையே தொண்டருடன் பேசும் ஆடியோ வெளியாகியிருப்பது காட்டுகிறது. அ.தி.மு.க தோல்வி அடைந்திருந்தாலும் பெரிய அளவில் வாக்குவங்கி சரியாமல் இருக்கும் நிலையில் அக்கட்சியை எடப்பாடி-ஓ.பி.எஸ் பிடியில் இருந்து சசிகலா மீட்டுக்கொள்ள முடியுமா என்று கேட்டால் தற்போதைய நிலையில் கடினம்தான்.
ஆனால் திரைமறைவில் பேரங்களும் சமரசங்களும் நடப்பது இயல்புதான். அரசியல் என்பதால் சசிகலா தரப்பின் சாணக்கியத்தனங்கள் பலித்தால் இதுவும் நடக்கக்கூடியதுதான். சசிகலாவைக் கட்சிக்குள் கொண்டுவந்து மீண்டும் அவரது இரும்புப் பிடிக்குள் நிர்வாகிகள் செல்ல வேண்டியது இருக்கும். அது தேவையா என்றே தலைவர்கள் யோசிப்பார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கி வருவதற்கான வாய்ப்புகளும் குறைவு" என்கிறார்.
எதிர்பார்க்க வைக்கும் ஜூன் 23
பூண்டி துளசி வாண்டையாரின் பேரனுக்கும் டி.டி.வி.தினகரனின் மகளுக்கும் திருவண்ணாமலையில் வரும் ஜூன் 13 ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளது. இதன்பிறகு பூண்டியில் ஜூன் 23 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர். இந்தத் திருமணத்தில் பங்கேற்க ஓ.பிஎஸ் உள்பட டெல்லியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் காலத்தில் இந்த வரவேற்பு நிகழ்வை எப்படி நடத்தப் போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. திருமணத்துக்கு 2 வாரங்களே உள்ள நிலையில் சசிகலாவின் ஆடியோ பேச்சை மிக முக்கியமானதாக அ.தி.மு.க நிர்வாகிகள் பார்க்கின்றனர். இரண்டுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் அ.தி.மு.க முகாமில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. ஆடியோ பேச்சு அடுத்தகட்டத்தை நோக்கி நகருமா என்பது வரக் கூடிய நாள்களில் தெரிந்துவிடும்.
பிற செய்திகள்:
- ஒன்பது உயிர் கொண்ட ஒரு கண் தலைவன் – யார் இந்த 'ஹமாஸ்' டெய்ஃப்?
- மோதி Vs மமதா: மேற்கு வங்க தலைமைச் செயலரை பதவி விலகச் செய்து தலைமை ஆலோசகராக்கிய முதல்வர்
- 3 குழந்தைகள் வரை பெற்றெடுக்க சீன அரசு அனுமதி - கோபத்தில் மக்கள்
- இஸ்ரேலில் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வருகிறதா? புதிய கூட்டணிக்கு எச்சரிக்கை
- கொரோனா வைரஸால் பாதித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வருமா?
- நடிகை மீனா பேட்டி: ''ரஜினியுடன் அந்த விஷயத்தில் பயங்கர போட்டி உண்டு"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












