ஓ.பி.எஸ்ஸுக்கு அரசு விழாக்களில் தனி மரியாதையா? - என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அரசு நிகழ்ச்சிகளில் ஓ.பி.எஸ் முன்னிலைப்படுத்தப்படுவது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. `அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் காட்ட வேண்டாம்' என எம்.எல்.ஏக்களுக்கு இ.பி.எஸ் தரப்பு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையேயான மோதல் நீருபூத்த நெருப்பாகவே இருந்து வருவதாக அக்கட்சி நிர்வாகிகள் பேசிவருகின்றனர். தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எதிர்பார்த்து ஓ.பி.எஸ் காய்களை நகர்த்தியபோது, தனக்கிருந்த பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி அந்தப் பதவிக்கு வந்தார். இதனால் அதிருப்தியுடன் இருந்த ஓ.பி.எஸ்ஸை வீட்டுக்கே சென்று இ.பி.எஸ் சந்தித்தார். இதன்பிறகு, கொங்கு மண்டலத்தில் உள்ள சில மாவட்டங்களில் எடப்பாடியின் பெயரில் பேரவைகள் முளைத்தன. இதுதவிர, ஃபேஸ்புக் பக்கங்களிலும் இருவரின் ஆதரவாளர்களும் தங்கள் தலைமையின் பெருமைகளை எழுதி வந்தனர்.
எச்சரிக்கை அறிக்கை பலன் தந்ததா?
இது ஒருபுறம் இருந்தாலும், `தனியார் ஆம்புலன்ஸ் கட்டண நிர்ணயம்' உள்பட சில விவகாரங்களில் ஓ.பி.எஸ் தனியாக அறிக்கை வெளியிட்டு வந்தார். இதற்குப் போட்டியாக `எதிர்க்கட்சித் தலைவர்' என்ற பெயரில் `ஆக்சிஜன் பற்றாக்குறை', `மீனவர்கள் மீட்பு' உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி வந்தார். இது அ.தி.மு.கவினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுதவிர, சில மாவட்ட நிர்வாகிகள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்பட்டதால், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
தனிமனித துதிபாடல்களுக்கு இடமில்லை
அந்த அறிக்கையில், ` கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறாகவும் இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம். அ.தி.மு.கவில் தனிமனித துதிபாடல்களுக்கோ தங்கள் ஆசைக்கும் தேவைக்கும் கட்சியை பயன்படுத்தும் செயல்களுக்கோ சிறிதும் இடமில்லை.

பட மூலாதாரம், Getty Images
எங்களது பெயர்களை பயன்படுத்திக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் ரசித்ததில்லை. மாறாக, அச்செயல்களால் நாங்கள் வருத்தப்படுகிறோம், வேதனைப்படுகிறோம் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அ.தி.மு.கவுக்காக உழைக்க விரும்புவோர் மக்கள் தொண்டில் கவனம் செலுத்துங்கள். அரசியலில் ஆர்வம் கொண்டு மேலேழுந்து வர விரும்புவோர், உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து, `கட்சித் தலைவர்களின் பெயர்களில் பேரவைகள் அமைப்பது, கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னோடிகளை அவமதிக்கும் வகையில் சிலரது பெயர்களையும் படங்களையும் சிதைத்து அநாகரிமான தகவல்களையும் உண்மைக்கு மாறான செய்திகளையும் சமூக ஊடகங்களிலும் வலைத்தளங்களில் வெளியிடுவது அடிப்படை காரணம் எதுவுமின்றி அறியாமையாலும் புரியாமையாலும் கட்சியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களை செய்வது ஆகியவற்றில் யாரும் ஈடுபட வேண்டாம். இனிவரும் காலங்களில் மேற்கண்ட செயல்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என எச்சரித்திருந்தனர்.
அரசு விழாக்களில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்!

பட மூலாதாரம், Getty Images
`அ.தி.மு.க தலைமையின் இந்த உத்தரவுகளை தொண்டர்கள் கடைப்பிடிக்கிறார்களா?' என்பதைக் கண்காணிப்பது ஒருபுறம் இருந்தாலும், தி.மு.க தொடர்பான விழாக்களில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் முன்னிலைப்படுத்தப்படுவது எடப்பாடி தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், கடந்த ஆட்சியில் அரசு சார்பாக நடக்கும் விழாக்களுக்கு தி.மு.கவின் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில்லை. இதுதொடர்பாக, நேரடியாக சில எம்.எல்.ஏக்கள் புகார்களை எழுப்பினர். ஆனால், புதிய அரசில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்குப் பாரபட்சமில்லாமல் அழைப்பு அனுப்பப்படுகிறது.
உதாரணமாக, கோவை மாவட்டத்தில் கடந்த 13 ஆம் தேதி கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்டத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அர.சக்ரபாணி, க.ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஜெயராம், அமுல் கந்தசாமி, வி.பி.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் வருவதற்கு தாமதம் ஆனாலும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் முன்கூட்டியே வருகை தந்தது, தி.மு.கவினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ஓ.பி.எஸ்ஸுக்கு தனி மரியாதையா?
இதேபோல், சில பகுதிகளில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், தி.மு.க அரசு கூட்டும் கூட்டங்களில் பங்கேற்பதை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நிர்வாகிகளிடம் பேசிய இ.பி.எஸ், `கட்சி சார்பாக ஒருவர் போனால் போதாதா.. எல்லோரும் போய் நிற்க வேண்டுமா?' எனக் கோபப்பட்டதாக அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஓ.பி.எஸ்ஸுக்கு தி.மு.க அமைச்சர்கள் தரும் மரியாதைகளும் கொங்கு தரப்புக்குக் கூடுதல் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த 27 ஆம் தேதி கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் மகாராஜன், சரவணக்குமார், கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போடி தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியதும் ஐ.பெரியசாமி அருகில் அமர்ந்த ஓ.பி.எஸ், `கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்' என்றார். தேனி மாவட்டத்தின் ஒரே அ.தி.மு.க எம்.எல்.ஏவான ஓ.பி.எஸ், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இ.பி.எஸ் கோபம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images
`` முன்னாள் முதல்வராகவும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராகவும் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். அரசு நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் அவர் பங்கேற்பதை எடப்பாடி தரப்பு ரசிக்கவில்லை. அரசு விழாக்களில் அமைச்சருக்கு இணையான மரியாதையும் ஓ.பி.எஸ்ஸுக்கு கொடுக்கப்படுகிறது. `இவர் ஏன் கூட்டங்களில் பங்கேற்கிறார்?' என எடப்பாடி தரப்பு அவதூறு பரப்புகிறது. தென்மாவட்டங்களில் உள்ள ஒரு சில எம்.எல்.ஏக்களிடம், `நீங்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்' என எடப்பாடி தரப்பினர் கூறியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரான பிறகும், `அரசு வீடுதான் வேண்டும்' என சென்டிமெண்டாக இ.பி.எஸ் கேட்கிறார். ஆனால், கொரோனா தொடர்பான அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஓ.பி.எஸ் சென்றால் மட்டும் குற்றமாகப் பார்க்கிறார்கள். தி.மு.க தரப்பில் ஓ.பி.எஸ்ஸுக்கு கொடுக்கப்படும் வரவேற்புதான், இ.பி.எஸ் தரப்பின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது" என்கின்றனர் ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்கள்.
தொடர்ந்து பேசுகையில், `` சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி இருக்கிறார். அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் இருக்கிறார். சட்டசபைக்குத்தான் இ.பி.எஸ் எதிர்க்கட்சித் தலைவர். ஆனால், தி.மு.கவுக்கு எதிரான கட்சியாக உள்ள அ.தி.மு.கவின் தலைவராக ஓ.பி.எஸ் இருக்கிறார். எம்.எல்.ஏக்களில் பெரும்பான்மையானோர் தன்னிடம் தான் உள்ளனர் என்ற எண்ணத்தில் இ.பி.எஸ் செயல்படுகிறார். கொங்கு மண்டலத்தில் `எடப்பாடியார் பேரவை' என்றெல்லாம் சிலர் செயல்பட்டனர். இதனை அவர் பெரிதாகக் கண்டிக்கவில்லை. இந்தப் பிரச்னை விஸ்வரூபமெடுத்ததும் நிர்வாகிகளை எச்சரித்து இருவரும் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.
பண்ணை வீட்டில் ஓ.பி.எஸ் ஆலோசனை!
அதேநேரம், தென்மாவட்டங்களில் கட்சி சார்பாக எந்த சுவரொட்டியை ஒட்டினாலும் அதில் எடப்பாடியின் படத்தையும் ஓ.பி.எஸ் போடச் சொல்வார். அதுபோல் கொங்கு மண்டல நிர்வாகிகள் நடந்து கொள்வதில்லை. கடந்த சில நாள்களாக பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓ.பி.எஸ்ஸை சந்திக்க வரும் நிர்வாகிகள் சிலர், `எம்.பி தேர்தலிலும் இதேபோல் அவர்தான் வேட்பாளர்களை நியமித்தார், அதனால்தான் தோல்வி வந்தது' எனக் கூறியுள்ளனர். இதற்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ், `கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எல்லாவற்றையும் சரிசெய்யும் வேலைகள் நடக்கும். ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தை உணர்த்தும். கொரோனா பேரிடர் தணிந்ததும் தலைமைக் கழகத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அமர்ந்து பேசுவோம்' எனக் கூறியுள்ளார். கடந்த சில நாள்களாக, இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மோதல் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது" என்றார்.
எந்தத் தவறும் இல்லை!
`அரசு நிகழ்ச்சிகளில் ஓ.பி.எஸ் முன்னிலைப்படுத்தப்படுவது கொங்கு தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதே?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` முன்னாள் முதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளரான இ.பி.எஸ்ஸும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை. கோவிட் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் ஓ.பி.எஸ் பங்கேற்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?" என்கிறார்.
மேலும், `` ஒரு புதிய அரசு அமைந்த பிறகு, `அதைப் பற்றி சிறிது காலம் பேசப் போவதில்லை' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறுவது வாடிக்கை. அதனை உணர்ந்து கொண்டு ஓ.பி.எஸ் செயல்படுவதாகப் பார்க்கிறேன். தற்போது கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்குத் தேவையான மருந்து இல்லாத சூழல் உள்ளது. இதனை அரசுக்கு சுட்டிக் காட்டிய இ.பி.எஸ், `கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கு அரசு தனிக்கவனம் எடுக்க வேண்டும்' என்றார். இது எதிர்க்கட்சியின் முக்கியப் பணி. இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில் ஆளும்கட்சியோடு எதிர்க்கட்சி இணைந்து செயல்படுவது சரியானது. இதனை அரசியலாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார்.
`ஆனால், அரசு நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பங்கேற்பது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறதே?' என்றோம். ``அப்படியெல்லாம் எதுவும் இல்லை" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












