ஓபிஎஸ் சமரசம் ஆனது ஏன்? அதிமுக கூட்டத்தில் கடைசி நேர அதிரடி

பட மூலாதாரம், Aiadmk official
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடைசி வரையில் துணைத் தலைவர் பதவிக்கு மறுப்பு தெரிவித்து வந்த ஓ.பி.எஸ் சமரசம் ஆனது ஏன்? என்ன நடந்தது அ.தி.மு.க தலைமைக் கழகத்தில்?
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்களின் கூட்டம் 14 ஆம் தேதி மதியம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, துணை கொறடாவாக அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவியும் பொருளாளராக கடம்பூர் ராஜுவும் செயலாளராக கே.பி.அன்பழகனும் துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியனும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
அதேநேரம், `சசிகலாவுடன் செல்போனில் பேசிய நிர்வாகிகளை நீக்க வேண்டும்' என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆனந்தன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. வி.கே.சின்னசாமி உள்பட 15 நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. அத்துடன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி செய்தித் தொடர்பாளர் பெங்களூரு வா.புகழேந்தியும் நீக்கப்பட்டதாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
என்ன நடந்தது அ.தி.மு.க தலைமைக் கழகத்தில்?
`` தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 21 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அப்போது சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகியோர் பற்றிய விவரங்களை சட்டசபை செயலரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் காரணமாகவே எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓ.பி.எஸ் வர வேண்டும் என்பதுதான் பலரின் விருப்பமாக இருந்துள்ளது. நேற்று இரவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஓ.பி.எஸ்ஸிடம் பேசியுள்ளனர். தொடர்ச்சியான சமரச பேச்சுகளின் காரணமாக துணைத் தலைவர் பதவிக்கு ஓ.பி.எஸ் சம்மதம் தெரிவித்தார்" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பிபிசி தமிழிடம் மேலும் சில தகவல்களைத் தெரிவித்தனர். `` 12.30 மணிக்கு மீட்டிங் தொடங்குவதாக இருந்தது. அதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னரே ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் வந்துவிட்டனர். அதற்கு முன்னதாக காலையில் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள், எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிவிட்டு கூட்டத்துக்கு வந்தனர். இதன்பின்னர், தலைமைக் கழகத்தின் தரைத்தளத்தில் உள்ள அறையில் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா, மனோஜ் பாண்டியன் ஆகியோர் விவாதித்துள்ளனர்.
கொறடாவாக தேர்வான எஸ்.பி.வேலுமணி!
அப்போது, ` கே.பி.அன்பழகனை கொறடாவாக நியமிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். இதனை விரும்பாத கொங்கு எம்.எல்.ஏக்கள் சிலர், `வேலுமணியை கொறடாவாக நியமிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். `எதிர்கட்சித் தலைவர் பதவியும் கொறடா பதவியும் ஒரே சமூகத்துக்குப் போக வேண்டுமா?' என்ற நோக்கில் கே.பி.அன்பழகனை சிலர் முன்னிறுத்தியுள்ளனர். தொடர்ந்து பேசிய கொங்கு எம்.எல்.ஏக்கள், `கொங்கு மண்டலத்தில் இருந்துதான் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கிடைத்துள்ளனர். அதனால் கொறடாவாக வேலுமணிதான் வர வேண்டும்' எனவும் வலியுறுத்தியுள்ளனர். ஒருகட்டத்தில், `தலைமை என்ன முடிவெடுத்தாலும் சரி' என ஒருமித்த குரலில் கூறிவிட்டனர்.

கடந்த முறை போல எந்தவித சர்ச்சைகளும் அரங்கேறவில்லை. பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பக்கம் இருப்பதால், பொறுப்புகளை சமூகவாரியாக பிரித்து அறிவித்துவிட்டனர். கூடவே, `சசிகலாவை ஆதரித்துப் பேசுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். அதையும் ஏற்றுக் கொண்டு சசிகலாவுடன் பேசிய 15 பேரையும் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்த செய்தித் தொடர்பாளர் புகழேந்தியையும் நீக்கிவிட்டனர். இதில் ஆச்சர்யமான விஷயம், ஓ.பி.எஸ் ஆதரவாளராகப் பார்க்கப்பட்ட புகழேந்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கும் அறிக்கையில் பன்னீர்செல்வமே கையொப்பம் போட்டதுதான்" என்கின்றனர்.
ஓ.பி.எஸ்ஸை சமாதானப்படுத்துவது ஏன்?
மேலும், `` ஓ.பி.எஸ்ஸை பொறுத்தவரையில் தனக்கு எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவி வேண்டாம் என்றுதான் கடைசி வரையில் கூறி வந்தார். ஆனால், அவருக்குப் பதவி கொடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். ஒருகட்டத்தில், `துணைத் தலைவர் பதவியை ஏற்காவிட்டால் சட்டசபையில் புரோட்டாகால்படி பின்வரிசையில் அமர வைத்துவிடுவார்களோ?' எனவும் ஓ.பி.எஸ் தரப்பினர் பேசி வந்தனர். முடிவில், முன்னாள் அமைச்சர்கள் சிலரின் பேச்சுவார்த்தையை அடுத்து துணைத் தலைவர் பதவியை ஓ.பி.எஸ் ஏற்றுக் கொண்டார். அதேநேரம், கொறடாவை பொறுத்தவரையில் தன்னுடைய ஆதரவாளர் ஒருவர்தான் வர வேண்டும் என்பதிலும் இ.பி.எஸ் உறுதியாக இருந்தார். அதன் காரணமாகவே வேலுமணியை கொறடாவாக அறிவித்தனர்" என்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கட்சியில் நம்பர் ஒன் இடத்தில் ஓ.பி.எஸ் இருக்கிறார். அதுவே போதும் என அவர் இருந்திருக்கலாம். இந்தப் பதவி இல்லாவிட்டாலும் நஷ்டம் என்று எதுவும் இல்லை. இதனை அவர் ஏற்காமல் தனது பிம்பத்தை இன்னும் பெரிதாக்கியிருக்கலாம். சசிகலாவுடன் அவர் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து அவரை சமரசம் செய்து கொண்டே இருக்கிறார்கள். சட்டசபையில் துணைத் தலைவர் பதவிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை" என்கிறார்.
கே.பி.முனுசாமிக்கும் வைத்திக்கும் எங்கே பதவி?
தொடர்ந்து பேசுகையில், `` அ.ம.மு.கவினருடன்தான் சசிகலா பேசி வருகிறார் என எடப்பாடி கூறினார். அப்படியானால், இப்போது நீக்கப்பட்டவர்கள் எல்லாம் அ.ம.மு.கவினரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். அதேநேரம், சசிகலாவால் கட்சியைக் கைப்பற்ற முடியாது. பெரிய தலைவர் வரிசையில் அவர் இல்லை. சசிகலா சார்ந்த சமூகத்தின் பிரதிநிதியாக ஓ.பி.எஸ்ஸை யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அதேநேரம், ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் என அ.தி.மு.கவினர் கூறுவதையும் ஏற்க முடியாது. கட்சி என்பதே குடும்பங்களால்தான் ஆனது. அதில் என்ன தவறு இருக்க முடியும். சசிகலாவின் ஆடியோவில், `கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என்றுதானே கூறுகிறார். தி.மு.கவோடு பேசுவதுதான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலாக இருக்கும்.
எல்லாரும் இணைந்திருந்தால் கட்சி நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் தி.மு.க வெர்சஸ் பா.ஜ.க என்பதாகத்தான் அரசியல் நகரும். இதற்காக பா.ஜ.க மீது நாம் குறை சொல்ல முடியாது. தற்போது கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும் எம்.பியாக இல்லை. இவர்கள் இருவரையும் எம்.எல்.ஏவாக அமர வைத்துவிட்டார்கள். அப்படியானால், துணைத் தலைவர், கொறடா பதவிகள் இவர்களில் ஒருவருக்குத்தான் வந்திருக்க வேண்டும். ஓ.பி.எஸ்ஸுக்குத் துணைத் தலைவர் பதவி கொடுப்பதால் கட்சிக்கு எந்தவித லாபமும் இல்லை" என்கிறார்.
நீக்கப்பட்டவர்கள் அ.ம.மு.கவினரா?
இதையடுத்து, அ.தி.மு.கவில் இருந்து புகழேந்தி உள்பட 16 பேர் நீக்கப்பட்டது குறித்து, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கட்சி ஒரு நிலைப்பாட்டில் இருக்கும்போது, அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாலும் அதனை கட்சித் தலைமைதான் கூற வேண்டும். தலைமைக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். கருத்துகளைச் சொல்வதற்கான தளமாக கட்சிரீதியாக நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளன. அப்போது தங்களுடைய கருத்துகளைச் சொல்லலாம். ஆனால், பொதுவெளியில் பேசக் கூடாது. இதன்மூலம் கட்சியை வலுவிலக்கச் செய்வதற்கு எதிரிகளுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திவிடும். இதன் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
``சசிகலாவிடம் பேசியவர்கள் எல்லாம் அ.ம.மு.கவை சேர்ந்தவர்கள் என எடப்பாடி கூறினார். தற்போது நீக்கப்பட்டவர்கள் எல்லாம் அ.ம.மு.கவினர்தானா?" என்று கேட்டோம். `` இதுவரையில் 40 பேர் வரையில் அவருடன் பேசியதாகச் சொல்கிறார்கள். கட்சிக்குள் எதையோ எதிர்பார்த்துக் கிடைக்காதவர்களை எல்லாம் தேர்வு செய்து அவர் பேசியுள்ளார். இவர்களில் சிலர் சசிகலா தரப்புடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்தவர்கள்தான். டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும், சசிகலாவை சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை என இ.பி.எஸ் தெரிவித்துவிட்டார். தேர்தல் பிரசாரத்திலும் பல இடங்களில் இதுபற்றிப் பேசிவிட்டார். இதே கருத்தை துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் கூறிவிட்டார். அப்படியிருக்கும்போது, தேவையில்லாமல் அவரவர்க்கு தோன்றியதை பேசுவது சரியல்ல. இதற்கான தெளிவான நிலைப்பாட்டை தலைமை அறிவித்துவிட்டது" என்கிறார்.
மேலும், ``அம்மாவும், சசிகலாவின் குடும்பத்தாரை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டார். சசிகலா குடும்பத்தினருக்கு வேறு எந்தப் பதவிகளும் வழங்கவில்லை. எதிர்காலத்தில் எந்தப் பதவியும் வேண்டாம் என எழுதிக் கொடுத்துவிட்டுத்தானே சசிகலா மீண்டும் உள்ளே வந்தார். அம்மா இறந்த குழப்பத்தில் அனைவரும் இருந்ததால் அன்றைக்கு அவர் (சசிகலா) தற்காலிகமாக உள்ளே வந்தார். பின்னர், அந்தக் குடும்பத்தில் இருந்து யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஓ.பி.எஸ் தர்மயுத்தம் இருந்தார். இந்தக் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது. அம்மாவின் வழியில் கட்சியை ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் வழிநடத்துகிறார்கள். எங்களுக்குள் எந்தவிதக் குழப்பங்களும் இல்லை" என்கிறார்.
பிற செய்திகள்:
- சசிகலா ஆதரவு முதல் அன்புமணி எதிர்ப்பு வரை - அ.தி.மு.கவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்ட பின்னணி
- ஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – நெதன்யாகுவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- ராமர் கோயில் நிலம்: வாங்கியவுடன் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை
- விஷால், ஆர்.பி. செளத்ரி: வீதிக்கு வந்த பணப்பிரச்னை - என்ன நடந்தது?
- பாதி நேரம் ஐடி வேலை, மீதி நேரம் சமூக சேவை: வேலூர் இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை
- யார் இந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்? இணையத்தில் தேடப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












