தமிழ்நாடு அரசியல்: சசிகலா ஆதரவு முதல் அன்புமணி எதிர்ப்பு வரை - அ.தி.மு.கவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்ட பின்னணி

பட மூலாதாரம், Aiadmk official
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
`ஓ.பன்னீர்செல்வம் கையொப்பம் போட்டதால்தான் இன்று அன்புமணி ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார்' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேட்டியளித்த நிலையில், தற்போது அ.தி.மு.கவில் இருந்தே அவர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது?
2 அறிக்கைகள்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.கவின் சட்டமன்றத் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு செய்யப்பட்டதாக அறிக்கை ஒன்று வெளியானது.
அதேநேரம், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான வா.புகழேந்தி, `'கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும்விதத்தில் செயல்பட்டதாலும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்படுகிறார்'' என மற்றுமொரு அறிக்கையும் வெளியானது.
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராகப் பார்க்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி நீக்கப்பட்ட சம்பவம், அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பிரதான காரணமாக, 2 விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. சசிகலாவை எதிர்த்து அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டியளித்தபோது, அதற்கு எதிராக புகழேந்தி பேட்டியளித்தார்.
சசிகலா ஆதரவு
இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய புகழேந்தி, `ஆடியோவில் பேசியது சசிகலாதான். அவர் அவ்வாறு பேசுவதற்கு தனிப்பட்ட முறையில் எல்லா உரிமைகளும் உள்ளன. `கொரோனா முடிந்ததும் வருகிறேன்' என சசிகலா கூறியுள்ளார். இதுதொடர்பாக, லெட்டர் பேடில் எந்தவித அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இதற்கிடையில் கே.பி.முனுசாமிக்கு என்ன அச்சம் எனத் தெரியவில்லை. தொண்டர்கள் சசிகலாவுடன் பேசுவது குறித்தோ, சசிகலா தொண்டர்களுடன் பேசுவது குறித்தோ இவர் ஏன் பேட்டி கொடுக்கிறார்?' எனக் கேள்வியெழுப்பினார்.

பட மூலாதாரம், Getty Images
அதேநேரம், புகழேந்தியின் பேட்டி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரி, `கே.பி.முனுசாமி, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அவருக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது? அவர் சொல்வதுதான் கட்சியின் கருத்து. மற்றவர்கள் சொல்வதெல்லாம் அவர்களின் சொந்தக் கருத்து. இதில் முடிவு செய்ய வேண்டியது எதுவுமே இல்லை' என்றார்.
இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த புகழேந்தி, ''பா.ம.கவால் எங்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை. அ.தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த வேலையும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் கையொப்பம் போட்டதால்தான் இன்று அன்புமணி ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார். அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததால்தான் தேர்தலில் தோல்வியை தழுவிவிட்டதாக சொல்வதை ஏற்க முடியாது. பா.ம.கவின் கோட்டை எனக் கூறப்பட்ட தொகுதிகளில் எல்லாம் அ.தி.மு.க தோற்றுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்றவர்களை விமர்சனம் செய்வது பா.ம.கவின் வாடிக்கை" என்றார். இந்தப் பேட்டியை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அன்புமணிக்கு எதிர்ப்பு
இதுதொடர்பாக இன்று காலை பிபிசி தமிழிடம் பேசிய பெங்களூரு புகழேந்தி, `` அன்புமணி பேசும்போது, `ஓ.பி.எஸ்ஸை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. தென்மாவட்டங்களில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன' எனப் பேசியுள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.கவுக்கு 23 இடங்களை ஒதுக்கும் ஒப்பந்தத்தில் ஓ.பி.எஸ் கையொப்பம் போட்டுள்ளார். அவர் அவ்வாறு கையொப்பம் போடவில்லையென்றால் இந்தக் கூட்டணி அமைந்திருக்காது. அதுமட்டுமல்லாமல், அம்மா காலத்தில் வெற்றி பெற்ற 35 சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டதால்தான் அன்புமணியால் ராஜ்யசபா எம்.பி ஆக முடிந்தது. அவருக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். அப்போது இவர்களுக்கு ஓ.பி.எஸ் நல்லபடியாக தெரிந்தார். இப்போது தவறாகத் தெரிகிறாரா?" என்கிறார்.

பட மூலாதாரம், Twitter
தொடர்ந்து பேசுகையில், `` இவ்வளவு நாள்களாக இதைப் பற்றிப் பேசாமல் இருந்தேன். `தேர்தலில் ஏன் தோற்றோம்?' என அவர்களுடைய கட்சிக்குள் ஆய்வு செய்வதுதான் சரியாக இருக்கும். இன்னொரு கட்சியைப் பற்றிப் பேசுவது எந்தவகையிலும் பண்பாடானது அல்ல. இன்று நேற்றல்ல, ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் இவ்வாறு பேசுவது அவர்களின் வாடிக்கை. சில காலம் பேசாமல் இருந்தார்கள். இப்போது மீண்டும் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என்ற தலைமையின்கீழ் அ.தி.மு.க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஓ.பி.எஸ் அறிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். இப்போது இரண்டு தலைவர்களையும் அவமானப்படுத்தும் நோக்கில், `நாங்கள் இல்லாவிட்டால் 20 இடங்களில்கூட அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்காது' என அன்புமணி பேசியுள்ளார்.
9 தொகுதிகளில் பா.ம.க இருக்கிறதா?
கூட்டணி இல்லாமல் 2016 சட்டமன்றத் தேர்தலில் அம்மா தலைமையின்கீழ் வெற்றி பெற்றோம். அப்போது வெற்றி பெற்ற இடங்களில் 51 தொகுதிகளை 2021 தேர்தலிலும் தக்கவைத்துள்ளோம். இந்த 51 தொகுதிகள் தவிர வெற்றி பெற்ற மற்ற 15 தொகுதிகளில் 9 இடங்களில் நாங்கள் புதிதாக வெற்றி பெற்றுள்ளோம். அதாவது, அ.தி.மு.க வெற்றி பெற்ற ஒரத்தநாடு, ஆலங்குளம், கன்னியாகுமரி, கடையநல்லூர், நத்தம், கூடலூர், மடத்துக்குளம், பரமத்தி வேலூர், சிங்காநல்லூர் ஆகிய 9 தொகுதிகளில் பா.ம.கவுக்கு எந்த வேலையும் கிடையாது. அங்கு அவர்களுக்குக் கட்சியே கிடையாது. அப்படியிருக்கும்போது 20 தொகுதிகள் என எந்த அடிப்படையில் அன்புமணி பேசுகிறார்?" என்கிறார்.
மேலும், `` நாங்கள் வெற்றி பெற்ற போளூர், வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி, திண்டிவனம், மதுராந்தகம், புவனகிரி ஆகியவற்றில் பாமகவுக்கு செல்வாக்கு உள்ளதை நாங்கள் மறுக்கவில்லை. இந்த 6 தொகுதிகளில் அ.தி.மு.கவின் வெற்றிக்கு நாங்கள்தான் காரணம் என்று சொன்னால்கூட பரவாயில்லை. ஆனால், `47 சதவிகித வாக்குகள் பா.ம.கவால்தான் கிடைத்தது' என்றால் யாருமே இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்படியொரு தவறான பிரசாரம் செய்வது எந்தவகையில் நியாயம்? கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளை எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற வைத்தார். அவருக்கு அன்புமணியின் இந்த வார்த்தைகள் எவ்வளவு வேதனையைத் தரும்? அ.தி.மு.கவை திட்டமிட்டு அசிங்கப்படுத்த முற்படுவதை ஏற்க முடியாது" என்கிறார்.
`புகழேந்தி பேசக் கூடாது`

பட மூலாதாரம், Twitter
புகழேந்தியின் விமர்சனத்துக்கு பிபிசி தமிழிடம் விளக்கம் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சியின் பிரசாரக் குழுவின் மாநிலத் தலைவர் எதிரொலி மணியன், `` அ.தி.மு.க வேட்பாளர்களில் பலரின் வெற்றிக்கு பா.ம.க காரணமாக இருந்தது. உதாரணமாக, அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன் தனது வெற்றி குறித்துப் பேசும்போது, `பா.ம.க இல்லாவிட்டால் என்னால் வெற்றி பெற்றிருக்க முடியாது' என்கிறார். அதேபோல், அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், `தன்னுடைய வெற்றிக்கு பா.ம.கதான் காரணம்' என்கிறார். மேலும், கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றி பெற்ற பூவை ஜெகன்மூர்த்தியும், `பா.ம.க மட்டுமே என்னுடைய வெற்றிக்குக் காரணம்' என்கிறார். இதேபோல், `பிற தொகுதிகளில் பா.ம.க வேட்பாளர்களின் வெற்றிக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் உழைத்தார்களா? என்பது பற்றியெல்லாம் நான் பேச முடியாது. தலைமையில் உள்ளவர்கள் களநிலவரத்தை ஆய்வு செய்வார்கள்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` களநிலவரத்தை அவர்களும் ஆய்வு செய்து கொள்ளட்டும். `பா.ம.க இல்லாவிட்டால் வெற்றி பெற்றிருக்க முடியாது' எனக் கூறியவர்கள் எல்லாம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இரண்டு தரப்பும் ஒருங்கிணைந்து வேலை பார்த்த இடங்களில் எல்லாம் வெற்றி பெற்றிருக்கிறோம். 1996 தேர்தலில் இரண்டே இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. ஆனால், 2021 தேர்தலில் எடப்பாடியின் 4 வருட ஆட்சிக்குப் பலனாக 66 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. எனவே, அன்புமணி பேசிய வார்த்தைகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லட்டும். புகழேந்தி பேசக் கூடாது" என்றார்.
இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே புகழேந்தி நீக்கப்பட்டுள்ளார். `கே.பி.முனுசாமி மற்றும் அன்புமணிக்கு எதிராக புகழேந்தி பேசிய வார்த்தைகளே அவரது பதவியைப் பறித்துவிட்டது' என்கின்றனர் அ.தி.மு.கவினர்.
பிற செய்திகள்:
- ஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – நெதன்யாகுவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- ராமர் கோயில் நிலம்: வாங்கியவுடன் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை
- விஷால், ஆர்.பி. செளத்ரி: வீதிக்கு வந்த பணப்பிரச்னை - என்ன நடந்தது?
- பாதி நேரம் ஐடி வேலை, மீதி நேரம் சமூக சேவை: வேலூர் இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை
- யார் இந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்? இணையத்தில் தேடப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












