ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை எம்.ஜி.ஆர் இருந்தபோதும், மறைந்தபின்னும் எப்படி இருந்தது?

ஜெயலலிதா

பட மூலாதாரம், AFP

தமிழகத்தின் முதல்வராக நான்குமுறை பதவி வகித்த ஜெயலலிதா ஜெயராம் எனப்படும் செல்வி ஜெ. ஜெயலலிதா, தனக்கு முந்தைய நான்கு முதலமைச்சர்களைப் போலவே அரசியலுக்கு வருவதற்கு முன்பாக சினிமாத் துறையில் இருந்தவர்.

தமிழ், கன்னடம், தெலுங்கு என 1961 முதல் 1980வரை 140 படங்களில் நடித்துள்ள ஜெயலலிதா, அவருடைய அரசியல் குருவும், அ.தி.மு.கவின் நிறுவனருமான எம்.ஜிஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார். இந்த நெருக்கமே அவரை இயல்பாக அ.தி.மு.கவுக்கு அழைத்து வந்தது.

அ.தி.மு.கவின் நிறுவனர் எம்.ஜி.ஆரால் 1982ல் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஜெயலலிதா, அடுத்த ஆண்டிலேயே கட்சியின் கொள்கை பரப்புச் செயலராக்கப்பட்டார்.

1984ல் உடல்நலம் குன்றுவதற்கு முன்பாக, ஜெயலலிதாவை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார் எம்.ஜி.ஆர். கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கே இது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

1984ல் எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், ஜெயலலிதாவின் பிரசாரத்தை ஏற்கவில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் அவரைச் சந்திக்கவும் ஜெயலலிதாவுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

எம்.ஜி.ஆர். மரணம் -பிளவுபட்ட அஇஅதிமுக

எம்.ஜி.ஆருடன் பிரசார வாகனத்தில்
படக்குறிப்பு, எம்.ஜி.ஆருடன் பிரசார வாகனத்தில்

ஆனால், சிறிது காலத்திலேயே முதலமைச்சருடனான கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு அவரை அ.தி.மு.கவிலிருந்து நீக்குவதற்கு நடந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு ராயபுரத்தில் நடந்த மிகப் பெரிய பொதுக் கூட்டத்தில் பேசச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

முதலமைச்சரிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ஜெயலலிதாவின் ஆங்கிலப் புலமையை கவனத்தில் கொண்டு, அவரை 1984-ஆம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார் எம்.ஜி.ஆர்.

1987 டிசம்பரில் எம்.ஜி.ஆர். மரணமடைந்ததும் ஜெயலலிதா தலைமையிலும் மறைந்த எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என். ஜானகியின் தலைமையிலுமாக அ.இ.அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டது.

ஆர்.எம். வீரப்பன் போன்ற மூத்த தலைவர்கள் தன் பக்கம் இருந்த நிலையில், 1988 ஜனவரி 7ஆம் தேதி புதிய முதல்வராக பதவியேற்றார் வி.என். ஜானகி. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், அவருக்கு 97 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மத்திய அரசு ஜானகி தலைமையிலான மாநில அரசைக் கலைத்து தேர்தலை அறிவித்தது.

இரட்டை இலை சின்னத்தை மீட்ட ஜெயலலிதா

சிவாஜி கணேசன் -கருணாநிதி - எம்ஜிஆர் - ஜெயலலிதா
படக்குறிப்பு, சிவாஜி கணேசன் -கருணாநிதி - எம்ஜிஆர் - ஜெயலலிதா

1989ல் நடந்த இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. இரு பிரிவுகளாக பிரிந்து போட்டியிட்டது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுவிட்ட நிலையில், ஜெயலலிதாவின் பிரிவு சேவல் சின்னத்திலும் ஜானகியின் பிரிவு இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்ற, ஜெயலலிதா பிரிவு 27 இடங்களில் வெற்றிபெற்றது. ஜானகி அணி வெறும் இரண்டு இடங்களையே கைப்பற்றியது. ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட ஜானகி தோற்றுவிட, போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றிபெற்றார்.

அந்தத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்துவிட்டாலும், அ.தி.மு.கவை ஒன்றாக்கி இரட்டை இலைச் சின்னத்தை மீட்டார் ஜெயலலிதா. தமிழகத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பதவியேற்றார்.

ஆனால், 1989 மார்ச் 25ஆம் தேதி முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது ஏற்பட்ட மோதலில், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். அந்த அவையில் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் முதலமைச்சராகத்தான் மீண்டும் அந்த அவைக்குள் நுழைவேன் என்றும் கூறினார்.

இரண்டு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டுவிட, அடுத்து நடந்த 1991ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அந்த சபதத்தை நிறைவேற்றினார் ஜெயலலிதா.

மிகப்பெரிய தோல்விகளை எதிர்கொண்ட ஜெயலலிதா

எம்ஜிஆருடன் ஜெயலலிதா
படக்குறிப்பு, எம்ஜிஆருடன் ஜெயலலிதா

தமிழக அரசியல் வரலாற்றில் வெற்றிகளை மட்டுமல்லாது மிகப்பெரிய தோல்விகளையும் எதிர்கொண்டவர் ஜெயலலிதா.

1991-96ல் நடந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி மிகப் பெரிய ஊழல் புகார்களை எதிர்கொண்டது. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவுக்கு எதிராகத் திரண்டன. இதனால், 1996ல் நடந்த தேர்தலில் வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்றது. பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோற்றுப்போனார்.

2001 சட்டமன்றத் தேர்தலின் போது நான்கு தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததால், அந்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறவே அவரை ஆட்சியமைக்க அழைத்தார் அப்போதைய ஆளுநரான ஃபாத்திமா பீவி.

ஆனால், வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்ட, ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். பிறகு வழக்குகளில் வென்று, 2002ல் மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. 2001 - 2006ல் அவருடைய ஆட்சிக்காலம் மிகுந்த பரபரப்பானதாக இருந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டது, பல ஆண்டுகாலமாக தமிழக - கர்நாடக வனப்பகுதியில் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட வீரப்பன் கொல்லப்பட்டது, காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலைநீக்கம் செய்யப்பட்டது ஆகிய சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

மோடி - ஜெயலலிதா
படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோடியுடன்

ஆனால், 2004 நாடாளுமன்றத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அ.தி.மு.க. தோல்வியையே சந்தித்தது. ஆனால், 2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முந்தைய ஆளும்கட்சியான தி.மு.கவை எதிர்க்கட்சியாகக்கூட வரவிடாமல் பெரும் வெற்றிபெற்றார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு வந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரு இடங்களைத் தவிர எல்லா இடங்களையும் கைப்பற்றியது அ.தி.மு.க. .

துரத்திய சொத்துக்குவிப்பு வழக்கு

ஆனால், 2014 செப்டம்பர் 27ல் சொத்துக்குவிப்பு வழக்கில் வந்த தீர்ப்பு ஜெயலலிதாவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. அவருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் நான்காண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வர் பதவியையும் இழந்தார். கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அவர், 2015ல் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.

2016ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை மிகக் குறிப்பிடத்தக்க ஒரு தேர்தல். பல தேர்தல் கருத்துக் கணிப்புகள் தி.மு.கவுக்கு சாதகமாக இருந்தாலும், மீண்டும் அ.தி.மு.கவே வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் சாதனையைச் செய்தார் ஜெயலலிதா.

ஆனால், நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே உடல்நலம் குன்றியது. செப்டம்பர் 22ஆம் தேதி இரவில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.

ஜெயலலிதா

பட மூலாதாரம், AFP

"புரட்சித் தலைவி, அம்மா" என்ற சொற்களால் மட்டுமே அ.தி.மு.க. தொண்டர்களால் அழைக்கப்பட்டுவரும் ஜெ. ஜெயலலிதா ,1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அன்றைய மைசூர் மாகாணத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலுக்கோட்டேவில் பிறந்தவர்.

தமிழ் ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயராமன் - வேதவல்லி தம்பதியின் மகள். பிறந்தபோது குடும்ப வழக்கப்படி பாட்டியின் பெயரான கோமளவள்ளி என்ற பெயர் சூட்டப்பட்டது.

ஒரு வயதாகும்போது பள்ளிக்கூடம் போன்றவற்றில் அழைப்பதற்காக ஜெயலலிதா என்ற பெயர் சூட்டப்பட்டது.

தன்னந்தனியாக போராட வேண்டிய நிலை

ஒரு நடிகையாகவும் அரசியல் தலைவராகவும் மிகவும் வெற்றிகரமான மனிதராக ஜெயலலிதா காட்சியளித்தாலும் அதற்குப் பின்னால் வலிமிகுந்த வாழ்க்கை இருந்தது.

அவர் சினிமாவில் நுழைந்த சிறிது காலத்திலேயே அவரது தாயார் இறந்துவிட, சினிமாத் துறையில் தன்னந்தனியாக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெயலலிதா. இந்தப் போராட்டம் அவரை மேலும் மேலும் உறுதியானவராக்கியது.

எம்.ஜி.ஆர் இருக்கும்போதே அ.தி.மு.கவிலிருந்து அவரை நீக்க நடந்த முயற்சிகள், எம்.ஜிஆரின் இறுதி ஊர்வலத்தின்போது கவச வாகனத்திலிருந்து அவர் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டது, சட்டப்பேரவையில் அவர் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பவங்கள் அவரது மன உறுதியை வலுப்படுத்தியதாகச் சொல்லலாம்.

ஜெயலலிதா
படக்குறிப்பு, சோதனைகளைக் கடந்து

இருந்தபோதும், கட்சி அவரது கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு, அசைக்க முடியாத ஒரு தலைவராக உருவெடுத்தார் ஜெயலலிதா. கட்சியில் இருந்த அவரைவிட மூத்த தலைவர்கள்கூட அவரது காலில் விழத் தயங்கவில்லை.

பத்திரிகையாளர்களோடு ஒருபோதும் அவர் நெருக்கமாக இருந்ததில்லை. தனிப்பட்ட பேட்டி அளித்த சம்பவங்கள் மிகக் குறைவு. பத்திரிகையாளர்கள் மீதும் செய்தியாளர்கள் மீதும் அவரால் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம்.

80களின் இறுதியில் ஜெயலலிதாவுடன் நெருக்கமான சசிகலா நடராஜன் மட்டுமே இப்போதுவரை ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர். சில முறை போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், சில நாட்களிலேயே அவர் சேர்த்துக்கொள்ளப்படுவது வழக்கம்.

ஆடம்பர திருமணம் தந்த அதிர்ச்சி

90களில், சசிகலாவின் உறவினரான வி.என். சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்ததும் அவருக்கு மிகப் படாடோபமாக திருமணம் செய்துவைத்ததும் அகில இந்திய அளவில் விமர்சனங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

ஜெயலலிதா தன் அமைச்சரவையில் செய்யும் மாற்றங்களும் கட்சியில் செய்யப்படும் மாற்றங்களுக்கும் சசிகலா நடராஜனே காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுவதுண்டு.

சிவாஜி கணேசன் , ஜெயலலிதா வளர்ப்பு மகன் என்ற வி.என்.சுதாகரன்

பட மூலாதாரம், Jean-Noel DE SOYE via getty images

சசிகலா மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அ.தி.மு.கவில் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்திலிருந்து கடைசிவரை நீடித்துவந்தது.

ஜெயலலிதா மரணத்திற்குப் பின்

ஜெயலலிதா மரணம் அடைந்த பின்பு அவருடைய நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

ஜெயலலிதா மரணம் அடைந்த சில மணி நேரங்களிலேயே தமிழக முதல்வராக பதவியேற்ற ஓ. பன்னீர்செல்வம் பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டு சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் வெளியான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.

ஜெயலலிதா மரணம் அடைந்து மூன்று மாதங்கள் முடிவடைவதற்குள் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது.

இதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் குற்றம் செய்தது உறுதியானது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த போது ஜெயலலிதா மரணம் அடைந்திருந்ததால் அவர் மட்டும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். (விடுதலை அல்ல.)

எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது
படக்குறிப்பு, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது

சசிகலா சிறைக்கு சென்ற பின்பு அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்த அவர் நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது.

இதனிடையே 'ஜெயலலிதாவின் ஆன்மா என்னுடன் பேசியது' என்று கூறிய ஓ. பன்னீர்செல்வம் 'தர்மயுத்தம் ' நடத்தி பின்பு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் சமரசம் செய்து கொண்டார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறிய பன்னீர்செல்வம் அதிமுகவில் மீண்டும் இணைந்தபின் அதைக் குறித்து பேசுவதைத் தவிர்த்து வருகிறார்.

இன்னும் தாம்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று சசிகலா கூறினாலும் அவரது நெருங்கிய உறவினரான டி.டி.வி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனி அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

இபிஎஸ்-ஓபிஎஸ் என்று தரப்புதான் அதிகாரப்பூர்வ அதிமுக என்று இயங்கி வந்தாலும், கீழ்மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளும் தொண்டர்களும் சசிகலாவே அதிமுகவை வழி நடத்த தகுதி பெற்றவராக கருதுவதாகவும் ஒரு பார்வை உள்ளது.

அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரிடையே இருப்பதாக கூறப்படும் இணக்கமின்மைதான்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: