`சசிகலாவைப் பற்றி கே.பி.முனுசாமிக்கு என்ன கவலை?' - அ.தி.மு.கவுக்குள் எழும் ஆதரவு, எதிர்ப்பு குரல்கள்

வி கே சசிகலா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. அதேநேரம், அ.தி.மு.கவுக்குள் சசிகலா ஆதரவுக் குரல்களும் வெளிப்படையாகக் கேட்கத் தொடங்கியுள்ளன. என்ன செய்யப் போகின்றனர் பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக வி.கே.சசிகலா அறிவித்தார். இதன்பிறகு தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் இருந்தபடியே அரசியல் நிகழ்வுகளை கவனித்து வந்தார். ஒருகட்டத்தில் ஆன்மிக சுற்றுப் பயணங்களை மேற்கொண்டார். இதற்காக அவர் சென்ற இடங்களுக்குச் சென்று அ.ம.மு.க வேட்பாளர்களும் ஆசிபெற்றனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாகவும் அ.தி.மு.க அமர்ந்தது.

அதேநேரம், கடந்த சில வாரங்களாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோர், கொரோனா தொற்று விவகாரத்தில் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டு வந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா பேசும் 3 ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், ` கவலைப்படாதீங்க. கட்சி வீணாவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கொரோனா தொற்று குறைந்த பிறகு எல்லோரையும் சந்திக்கிறேன்' என சசிகலா கூறியுள்ளார்.

இதனை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 31 ஆம் தேதி வேப்பனஹள்ளியில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.

எடப்பாடி பழனிசாமி, தமிழக எதிர்கட்சித் தலைவர்

பட மூலாதாரம், Getty Images

அப்போது பேசிய அவர், "அ.தி.மு.கவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அவர் அ.தி.மு.கவிலும் இல்லை. தற்போது சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் அ.தி.மு.கவில் சசிகலாவை முன்னிறுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இந்தக் குழப்பத்துக்கு அ.தி.மு.க தொண்டர்கள் செவிசாய்க்க மாட்டார்கள். சசிகலாவிடம் எந்தவொரு அ.தி.மு.க தொண்டரும் பேசவில்லை. அவர் பேசும் தொண்டர் அ.ம.மு.கவை சேர்ந்தவர்" என விளக்கம் அளித்தார்.

சசிகலாவுக்கு உரிமை உள்ளது!

கே.பி.முனுசாமியின் செய்தியாளர் சந்திப்பு குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``சசிகலாவை கட்சிக்குள் சேர்ப்பது தொடர்பாக முன்பொருமுறை தனியார் ஊடகத்துக்கு ஓ.பி.எஸ் பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய அவர், ` இரட்டைத் தலைமையின்கீழ் கட்சி நடக்கிறது. இதனை ஏற்றுக் கொள்வதாக சசிகலா கூறினால் அதனை பரிசீலிப்பதில் தவறு இல்லை' என்றார். சசிகலா கட்சிக்குள் வரலாம் என ஒருவர் கூறுகிறார். மற்றொருவர் வேண்டாம் என்கிறார். இதனை பேசி முடிவெடுக்க வேண்டிய இடத்தில் தலைமையில் உள்ளவர்கள் இருக்கின்றனர்.

ஆடியோவில் பேசியது சசிகலாதான். அவர் அவ்வாறு பேசுவதற்கு தனிப்பட்ட முறையில் எல்லா உரிமைகளும் உள்ளன. `கொரோனா முடிந்ததும் வருகிறேன்' என சசிகலா கூறியுள்ளார். இதுதொடர்பாக, லெட்டர் பேடில் எந்தவித அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இதற்கிடையில் கே.பி.முனுசாமிக்கு என்ன அச்சம் எனத் தெரியவில்லை. தொண்டர்கள் சசிகலாவுடன் பேசுவது குறித்தோ, சசிகலா தொண்டர்களுடன் பேசுவது குறித்தோ இவர் ஏன் பேட்டி கொடுக்கிறார்? `கட்சியிலேயே இல்லாத சசிகலா' எனக் குறிப்பிடுகின்ற முனுசாமி, இல்லாத ஒருவரைப் பற்றி இவர் ஏன் பேச வேண்டும்? அதற்கான நிர்பந்தம் என்னவென்று தெரியவில்லை" என்கிறார்.

முடிவு செய்ய வேண்டியது முனுசாமியா?

வி கே சசிகலா

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து பேசுகையில், `` சசிகலா சிறையில் இருந்த காலத்தில் அவரை அடிக்கடி சந்தித்து வந்தேன். அப்போது அவருக்கு வரும் அனைத்துக் கடிதங்களுக்கும் தவறாமல் பதில் அனுப்புவார். அந்தக் கடிதத்தில், `நீங்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம், நான் நல்லபடியாக வந்துவிடுவேன்' என்பார். அந்தக் கடிதத்தைப் பெற்ற பலரும், `சின்னம்மாவின் கடிதம் வந்தது' என என்னிடம் கூறியுள்ளனர். அதே பாணியில்தான் அவர் தற்போது பேசியுள்ளார்.

சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க வேண்டுமா.. வேண்டாமா என்பதில் இருவேறு கருத்துகள் நிலவுவதை தொண்டர்கள் அறிவார்கள். இதுதொடர்பாக, முன்னாள் முதல்வர்கள் ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும்தான் முடிவு செய்ய வேண்டும். இதனை நானோ, முனுசாமியோ முடிவு செய்ய முடியாது.

இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. ராஜ்யசபா எம்.பியாக இருந்த கே.பி.முனுசாமி, அந்தப் பதவியை விட்டுவிட்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இதனால் ஒரு ராஜ்ய சபா இடம் பறிபோய்விட்டது என்ற மன வருத்தத்தில் நாங்கள் அனைவரும் இருக்கிறோம். அந்த ஒரு ராஜ்யசபா இடம் தி.மு.க பக்கம் போகிறதே என நினைத்து அவர் கவலைப்பட வேண்டும். அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவர், சசிகலா விவகாரம் தொடர்பாக ஏன் செய்தியாளர்களை சந்திக்கிறார் எனத் தெரியவில்லை" என்கிறார்.

`சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பினர் விரும்புவதாகக் கூறப்படுகிறதே?' என்றோம். `` இப்படியொரு பேச்சு நிலவினாலும், எந்தவொரு முடிவையும் தலைமைக் கழகத்தைக் கூட்டித்தான் ஓ.பி.எஸ் முடிவெடுப்பார். `அவர் வந்தால் பரிசீலிக்கலாம்' என முன்பே பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். இதற்கிடையில் கே.பி.முனுசாமி பேசியதை ஏற்க முடியாது" என்கிறார்.

கே.பி.முனுசாமி பேசியது சரிதான்!

பெங்களூரு புகழேந்தியின் விளக்கம் குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கே.பி.முனுசாமி, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அவருக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது? அவர் சொல்வதுதான் கட்சியின் கருத்து. மற்றவர்கள் சொல்வதெல்லாம் அவர்களின் சொந்தக் கருத்து. இதில் முடிவு செய்ய வேண்டியது எதுவுமே இல்லை. `சசிகலாவுக்கும் இந்தக் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' எனக் கூறிவிட்டனர். அவர் கட்சியிலும் இல்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசிய மகேஸ்வரி, `` அ.தி.மு.கவுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சீராய்வு மனுவையும் போட்டார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்பிறகு, பொதுக்குழுவில் தன்னை நீக்கியது செல்லாது என சசிகலாவும் தினகரனும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தினகரன் வாபஸ் பெற்றுக் கொண்டார். சசிகலா மட்டும் வாபஸ் பெறவில்லை. அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக சசிகலா அறிக்கை வெளியிட்டார். ஆனால், இந்த நிமிடம் வரையில், `அ.தி.மு.கவை நான் கையில் எடுப்பேன்' என அவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

தலைமையின் முடிவில் மாற்றம் இல்லை!

இபிஎஸ், ஓபிஎஸ்

பட மூலாதாரம், Getty Images

அதேநேரம், அ.தி.மு.கவுக்குள் சட்டரீதியான உரிமை எதுவும் சசிகலாவுக்கு இல்லை. தற்போது கட்சிக்குள் சிலர் திட்டமிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தும் செயலாகத்தான் இதைப் பார்க்கிறேன். கட்சித் தலைமைக்குள் பிளவை ஏற்படுத்தி உள்ளே வர முயற்சி செய்யலாம். அவருக்கு உள்ளே வருவதற்கு அனுமதி உள்ளதாக ஒரு வழக்கறிஞராக நான் பார்க்கவில்லை. அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை எனப் பலமுறை இ.பி.எஸ், ஓ.பி.எஸ், ஜெயக்குமார், கே.சி.வீரமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள் பேசி வந்துள்ளனர். இவர்கள் எல்லாம் வழிகாட்டும் குழுவில் உள்ளவர்கள்.

தற்போது இரட்டைத் தலைமையின்கீழ் கட்சி நடந்து வருகிறது. தலைமையில் உள்ள இருவருக்குள்ளும் மாறுபட்ட கருத்துகள் இருப்பது சகஜம்தான். இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு சரிசெய்து கொள்கின்றனர். கட்சியின் நன்மைக்காகத்தான் இருவரும் ஒருமித்த முடிவை எடுக்கின்றனர்.

கட்சிக்குள் குழப்பம் வருவதற்கும் அவர்கள் விடப்போவதில்லை. கட்சிக்குள் சசிகலா உறுப்பினராகவும் இல்லை. சட்டரீதியாக எந்த முகாந்திரமும் அவருக்கு இல்லை. அதேநேரம், தலைமை பேசி முடிவெடுத்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், இந்த நிமிடம் வரையில் கட்சித் தலைமை தனது முடிவை மாற்றிக் கொண்டதாகத் தகவல் இல்லை. ஏற்கெனவே முடிவெடுத்ததைத்தான் முனுசாமி கூறியுள்ளார்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :