தமிழ்நாடு அரசியல்: அதிமுகவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் பேரவை அமைத்தவர்கள் கண்டிப்பு - எடுபடுமா எச்சரிக்கை?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
`அ.தி.மு.கவில் தனிமனித துதிபாடல்களுக்கு இடமில்லை' எனத் தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கடிதம் எழுதியுள்ளனர். `தங்களின் ஆசைக்கும் தேவைக்கும் கட்சியை பயன்படுத்துவதற்கும் இடமில்லை' எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 75 இடங்களில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க 65 இடங்களில் வென்றது. இதையடுத்து, `அ.தி.மு.கவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார்?' என்ற கேள்வி எழுந்தது. இந்தப் பதவிக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இருவரிடையேயும் போட்டி நிலவியது. சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையான ஆதரவு இ.பி.எஸ் பக்கம் இருந்ததால், அவரே எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிருப்தியில் இருந்தனர்.
மோதலை வெளிப்படுத்திய அறிக்கை
இதன்பின்னர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கை மூலம் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். இந்த அறிக்கையை அவர் தனிப்பட்ட முறையில் வெளியிட்டிருந்தார். இதனை ரசிக்காத எடப்பாடி பழனிசாமி,எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
தொடர்ந்து அரபிக் கடலில் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தியும் பிரதமருக்கு இரண்டாவது கடிதத்தை எடப்பாடி எழுதினார். தான் எதிர்க் கட்சித் தலைவர் என்பதைச் சுட்டிக் காட்டவே பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியாக பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கருப்பு பூஞ்சை பரவல் குறித்து ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் எழுதிய கடிதத்தில் தன்னை `முன்னாள் முதலமைச்சர்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த அறிக்கைப் போர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இருவரின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் தனித்தனியாகக் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். சிலர், எடப்பாடியை மட்டும் புரமோட் செய்யும் பணிகளில் ஆர்வம் காட்டினர். இதனைக் கவனித்த ஓ.பி.எஸ் தரப்பினரும் தங்கள் தலைமையை உற்சாகப்படுத்தும் கருத்துகளை வெளியிட்டனர்.
இது பொதுவெளியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதில் `எடப்பாடி பேரவை' என்றெல்லாம் சிலர் இயங்கத் தொடங்கினர். இதனால் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 23ஆம் தேதி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
எச்சரிக்கை கொடுத்தது ஏன்?
அந்த அறிக்கையில், "அ.தி.மு.கவின் சட்டதிட்டங்களுக்கு மாறாகவும் இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம். அ.தி.மு.கவில் தனிமனித துதிபாடல்களுக்கோ தங்கள் ஆசைக்கும் தேவைக்கும் கட்சியை பயன்படுத்தும் செயல்களுக்கோ சிறிதும் இடமில்லை. "
"எங்களது பெயர்களை பயன்படுத்திக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் ரசித்ததில்லை. மாறாக, அச்செயல்களால் நாங்கள் வருத்தப்படுகிறோம், வேதனைப்படுகிறோம் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அ.தி.மு.கவுக்காக உழைக்க விரும்புவோர் மக்கள் தொண்டில் கவனம் செலுத்துங்கள். அரசியலில் ஆர்வம் கொண்டு மேலேழுந்து வர விரும்புவோர், உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள,"' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், "கட்சித் தலைவர்களின் பெயர்களில் பேரவைகள் அமைப்பது, கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னோடிகளை அவமதிக்கும் வகையில் சிலரது பெயர்களையும் படங்களையும் சிதைத்து அநாகரிமான தகவல்களையும் உண்மைக்கு மாறான செய்திகளை சமூக ஊடகங்களிலும் வலைதளங்களில் வெளியிடுவது அடிப்படை காரணம் எதுவுமின்றி அறியாமையாலும் புரியாமையாலும் கட்சியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். கட்சித் தலைமையின் கட்டளையை மீறி, இனிவரும் காலங்களில் மேற்கண்ட செயல்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்," எனவும் எச்சரித்துள்ளனர்.
பொதுநலனுக்காக அறிக்கையா?
இருவரின் அறிக்கைகளும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இப்படியொரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டதன் நோக்கம் என்ன?'என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இருவரும் தனித்தனியாக வெளியிட்ட அறிக்கைகளைத் தவறான ஒன்றாக நான் பார்க்கவில்லை. பொதுநலன் காரணமாகவே அந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டன" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` எம்.ஜி.ஆர் காலத்தில் ஜெயலலிதா பெயரில் பேரவை என்ற ஒன்றை சிலர் தொடங்கினர். இதை வளரவிடுவது சரியல்ல என்ற காரணத்தினால், அவ்வாறு பேரவையை தொடங்கியவர்களை கட்சியை விட்டு எம்.ஜி.ஆர் நீக்கினார். அந்த வரிசையில் இன்று ஓ.பி.எஸ் பெயரிலும் இ.பி.எஸ் பெயரிலும் சிலர் பேரவைகளைத் தொடங்கியுள்ளனர். அதைத்தான் அறிக்கைகளில் குறிப்பிட்டு ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் நிர்வாகிகளை எச்சரித்துள்ளனர்."
"தனிப்பட்ட முறையில் பேரவை, பாசறையைத் தொடங்குவதெல்லாம் கட்சிக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது. கட்சியின் அதிகாரபூர்வ அணிகளைத் தாண்டி புதிதாக பேரவைகளைத் தொடங்குவது கட்சியின் சட்டதிட்டங்களுக்கு எதிரானது. இதன் காரணமாக, கட்சி விரோத நடவடிக்கைளில் ஈடுபடக் கூடாது என இருவரும் எச்சரித்துள்ளனர். அ.தி.மு.க என்றுமே கட்டுப்பாட்டில் உள்ள இயக்கம். அதன் வெளிப்பாடாகவே இந்த அறிக்கையைப் பார்க்கிறேன்" என்கிறார்.
தொண்டர்களின் மனநிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
`ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கையால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா?' என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
`` தேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சிகளில் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கையானதுதான். அதுவும் அ.தி.மு.க போன்ற இரட்டைத் தலைமை உள்ள கட்சியில் நிச்சயம் இது அதிகமாகவே இருக்கும். யார் எதிர்க்கட்சித் தலைவராவது என்பதில் எடபபாடி- ஓ.பி.எஸ் இடையில் வெளிப்படையான மோதல் வெடித்தது. இதனால், இப்போதும் கட்சிக்குள் யார் எந்தப் பக்கம் என்ற விவாதம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. `இவர் ஆளை அவர் கவிழ்த்துவிட்டார்'; `அவர் ஆளை இவர் கவிழ்த்துவிட்டார்' என்ற விவாதங்களும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில்தான் இந்த வாய்ப்பூட்டு போடும் அறிக்கையை அ.தி.மு.க தலைமை வெளியிட்டுள்ளது. கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளை ஒப்புக் கொள்வதாகவே இந்த அறிக்கைகளை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். இரண்டு பேரின் கூட்டுத் தலைமையில் இருக்கும் பிரச்னைகளை மேல்மட்டத்தில் சரிசெய்தாலே, கீழ்மட்டத்தில் எல்லாம் சரியாகிவிடும். அதை நோக்கிய பயணமே அக்கட்சிக்கு நல்லது. இந்த அறிக்கையை வலிமையான தலைவர்கள் விடுக்கும்போதுதான் செல்லுபடியாகும். இதை எந்த அளவுக்கு அ.தி.மு.க தொண்டர்கள் சீரியஸாக பொருட்படுத்துவார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்" என்கிறார்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?
- இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்?
- மியூகோர்மைகோசிஸ்: இந்தியாவில் கொரோனா தொடங்கியது முதல் 8,800 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
- கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து தப்ப நடுவானில் திருமணம் செய்த மதுரை தம்பதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












