கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு தோல்வி ஏன்? - புள்ளிவிவரங்கள் சொல்லும் ஆச்சர்யம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு அதிர்ச்சி கொடுத்ததில் கொங்கு மண்டலத்துக்கு முக்கிய பங்கு உண்டு. `அ.தி.மு.கவை நோக்கி வாக்குகள் சென்றதில் தி.மு.க நிர்வாகிகளுக்கும் பெரும் பங்கு உள்ளது' என்கின்றனர் மேற்கு மண்டல தி.மு.க நிர்வாகிகள் சிலர். என்ன நடந்தது?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 125 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மையோடு தி.மு.க ஆட்சியமைத்துவிட்டது. இந்தமுறை கொங்கு மண்டலத்துக்கு என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனிக்கவனம் எடுத்தார். இதையொட்டி வேட்பாளர் தேர்விலும் சில மாற்றங்களை ஏற்படுத்தினார். குறிப்பாக, கோவை மாவட்டத்தில் பொங்கலூர் பழனிசாமி, சி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை. தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சிவசேனாபதியை முன்னிறுத்தினார். ஆனாலும், 41,630 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்றார்.
தலைமைக்கு சொல்லப்பட்ட தகவல்
கடந்த 2016 தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் வென்ற தி.மு.க, இந்தமுறை அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதனைத் தவிர்த்து திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் சில தொகுதிகளையே கைப்பற்றியுள்ளது. மேற்கு மண்டலத்தில் உள்ள 68 தொகுதிகளில் தி.மு.க வசம் வந்தது 24 தொகுதிகள் மட்டுமே. `` 2016 தேர்தல் தோல்விக்குப் பிறகு அறிவாலயத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க வேட்பாளர்கள் பலரும் கட்சி நிர்வாகிகளின் உள்ளடி வேலைகளைப் பற்றியே பெரிதும் புகார் வாசித்தனர். அதற்கேற்ப, நிர்வாகிகளை மாற்றியமைத்தும் ஒன்றியங்களைப் பிரித்தும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனாலும் களநிலவரம் அப்படியே தொடர்கிறது" என்கிறார் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், `` கொங்கு மண்டலத்தில் கட்சியை சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தலைமையைத் தொடர்பு கொண்ட தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் சிலர், `சொந்த சமுதாய வாக்குகள் அ.தி.மு.கவுக்கு கை கொடுத்துள்ளது. சமுதாய மக்களும் மொத்தமாக அவர்களுக்கே வாக்களித்துவிட்டனர்' என்ற காரணத்தைத் தெரிவித்துள்ளனர். இதனை தி.மு.க தலைமை ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல.

பட மூலாதாரம், Getty Images
தி.மு.கவுக்கு கை கொடுத்த தொகுதிகள்
அ.தி.மு.கவுக்கு ஆதரவாக ஒரு சமூகம் இருக்கும்போது, அதற்கு எதிரான சமூகம் வேறு ஒரு கட்சிக்குத்தான் வாக்களிக்கும் என்பதுதான் உண்மை. ஆனால், கொங்கு மண்டலங்களில் பூத் வாரியாக பதிவான வாக்குகளின் பட்டியலை வைத்துப் பார்த்தால் சில தகவல்கள் தெரிய வருகின்றன. இங்கு கொங்கு வேளாளர் சமூகத்துக்கு அடுத்தபடியாக உள்ள முதலியார், நாயுடு, செட்டியார், வேட்டுவ கவுண்டர், பிள்ளை, நாடார் ஆகிய சமூகங்கள் மிக முக்கியமானவை. இவர்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளில் அ.தி.மு.க பக்கம் அதிகப்படியான வாக்குகள் விழுந்துள்ளன. மாற்று சமூகங்கள் அதிகப்படியாக வசிக்கும் பகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அப்படிக் கிடைத்த இடங்கள்தான், ஈரோடு கிழக்கு, மேற்கு ஆகிய தொகுதிகள்" என்கிறார்.
மேலும், `` காங்கேயம் தொகுதிக்குட்பட்ட சென்னிமலை நகரத்துக்குள் முதலியார் சமூகத்தினர் அதிகம் வசிக்கிறார்கள். அங்கு வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததால் வெற்றி பெற்றார். இதையடுத்து, தாராபுரம் தொகுதியில் நகரத்துக்குள் வாக்கு எண்ணிக்கை சுற்று ஆரம்பித்த பிறகுதான் தி.மு.கவின் கை ஓங்கியது. திருப்பூர் தெற்குத் தொகுதியில் வெளியூரில் இருந்து வந்தவர்கள் ஒன்றரை லட்சம் பேர் உள்ளதால் அங்கு தி.மு.கவால் வெல்ல முடிந்தது. சேலம் வடக்குத் தொகுதியில் இஸ்லாமிய மக்களும் மாற்று சமூக மக்களும் அதிகம் வசிப்பதால் அங்கு தி.மு.க வெற்றி பெற்றது.
அக்கரை கொடிவேரி ஆச்சர்யம்
இதன்மூலம், மாற்று சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தி.மு.கவுக்கு வாக்களித்தார்கள் என்பதைவிட, தீர்மானிக்கக் கூடிய தொகுதிகளில் இவர்கள் இருந்ததால் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆனால், மாற்று சமுதாயம் குறைவாக உள்ள இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். உதாரணமாக, கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள அக்கரை கொடிவேரி என்ற ஊராட்சியை எடுத்துக் கொள்வோம். அங்கு 2,850 வாக்குகள் உள்ளன. இதில், வேளாளர், முதலியார், பொம்ம நாயக்கர் என மூன்று சமூகங்களும் கலந்துள்ளன. 2019 எம்.பி தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு இந்த ஊராட்சியில் 2,300 வாக்குகளுக்கு மேல் கிடைத்தன. அதுவும் ஓட்டுக்கு ஒரு பைசாகூட கொடுக்காத இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் வாக்களித்தனர்.
ஆனால், இந்தமுறை அங்கு இரண்டு மடங்கு வாக்குகளை கே.ஏ.செங்கோட்டையன் பெற்றுள்ளார். தி.மு.க வேட்பாளர் மணிமாறனுக்கு இங்குள்ள சொந்த சமூக மக்களே ஆதரவு கொடுக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம். அருந்ததியர் சமூகமும் அ.தி.மு.க பக்கம் சாய்ந்துவிட்டது. இதைவிட கொடுமை, சுப்புலட்சுமி ஜெகதீசனின் தோல்விதான். அங்கு பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சரஸ்வதி, 271 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இப்படியொரு தோல்வியை சுப்புலட்சுமி எதிர்பார்க்கவில்லை. இதற்குக் காரணம் உள்ளூர் கோஷ்டி மோதல்கள்தான்.

பட மூலாதாரம், Getty Images
புகார் வாசித்த சுப்புலட்சுமி
அங்கு மொடக்குறிச்சி, கொடுமுடி என இரண்டு ஒன்றியங்கள் இருந்தன. இதில் மிகப்பெரிய ஒன்றியமாக மொடக்குறிச்சி உள்ளது. இங்கிருந்த 2 நிர்வாகிகளும் சுப்புலட்சுமியிடம் முகம் கொடுத்துப் பேசியதில்லை. இவர்கள் இரண்டு பேரையும் நீக்குவதற்கு தி.மு.க தலைமையிடம் சுப்புலட்சுமி கடுமையாகப் போராடியதால், இந்த இரண்டு ஒன்றியங்களையும் ஐந்து ஒன்றியங்களாக மாற்றினர். ஆனால், அந்த ஐந்து பேரும் சுப்புலட்சுமிக்கு எதிரானவர்கள் என்பதுதான் கொடுமை. கடந்த 20 ஆண்டுகளாக தொகுதிக்குள் நடந்த எந்த நடவடிக்கையிலும் சுப்புலட்சுமியும் பங்கேற்றதில்லை. இந்தமுறை சீட் வாங்கியது குறித்துப் பேசும்போதும், `தளபதி நிற்கச் சொன்னார். நிற்கிறேன்' என்றார். ஒன்றிய நிர்வாகிகளோடு 15 ஆண்டுகாலமாக இருந்த பகையும் சுப்புலட்சுமியின் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது. இதுகுறித்து தலைமையிடம் அவர் புகார் தெரிவித்திருக்கிறார்" என்கிறார்.
3 முக்கிய லாபிகள்
`` மேற்கு மாவட்டங்களில் தி.மு.கவின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, கொங்கு மண்டல அ.தி.மு.கவை எதிர்த்து தி.மு.க நிர்வாகிகள் பலரும் அரசியல் செய்யாமல் அமைதியாக இருந்ததுதான். கடந்த ஐந்தாண்டுகளில் அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான புகார்களை மக்கள் மத்தியில் இவர்கள் கொண்டு போய்ச் சேர்த்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர்" என்கிறார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஒருவர்.
`` தி.மு.கவில் மண்டலவாரியாக 3 முக்கிய நபர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது பிடியில் எம்.எல்.ஏக்களை வைத்துள்ளனர். அதில், திருவண்ணாமலை பிரமுகரின் கைகளில் அதிகப்படியான எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு சீட் பெற்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். `மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 40 எம்.எல்.ஏக்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம்' என ஐபேக் தெரிவித்தும், சீனியர்கள் சிலர் தலைமையிடம் பேசியுள்ளனர். அப்போது, `இவர்கள் எல்லாம் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்கள்' எனக் கூறி சமசரம் செய்துள்ளனர். இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் கார்த்தி, சி.ஆர்.ராமச்சந்திரன், தென்றல் செல்வராஜ் ஆகியோர் அ.தி.மு.கவுக்கு எதிராக ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனால் பல்வேறு வழக்குகளையும் எதிர்கொண்டனர். அதேநேரம், சொந்த சமூக பாசத்தில் இருந்த தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.கவின் அமைச்சர்களுக்கு எதிராக ஓர் அறிக்கைகூட வெளியிட்டதில்லை. இது திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கும் பொருந்தும். நாமக்கல் மாவட்டத்தில் 3 தொகுதிகளை வெற்றி பெற்றுவிட்டதாக தி.மு.கவினர் உற்சாகப்படுகிறார்கள்.
நாமக்கல்லில் எடுபடாத தங்கமணி
நாமக்கல் தொகுதியில் அனைத்து சமூக மக்களும் கலவையாக உள்ளனர். சேந்தமங்கலம் எஸ்.டி தொகுதியாகவும் ராசிபுரம் எஸ்.சி தொகுதியாகவும் உள்ளது. இங்கு பலவகையான வேளாள சமூகங்கள் உள்ளன. திருச்சியை ஒட்டி வருகிற பகுதிகளாகவும் இவை உள்ளது. ஆனால், பெயரளவுக்கு அது கொங்கு மண்டலமாக உள்ளது. கரூர், அரவக்குறிச்சி மட்டும்தான் வேளாள சமூக மக்கள் நிரம்பிய பகுதியாக உள்ளது. குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளை இந்த வரையறைக்குள் அடக்க முடியாது. இங்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் தங்கமணியின் தாக்கம் எடுபடவில்லை. அதனால்தான் அங்கு 3 தொகுதிகளை தி.மு.கவால் வெல்ல முடிந்தது.

பட மூலாதாரம், Getty Images
திருச்செங்கோடு தொகுதியில் வாக்கு சுற்றுகளின்போது கொ.ம.தே.க ஈஸ்வரனுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. பிற சமூக வாக்குகள்தான் ஈஸ்வரனைக் காப்பாற்றியது. எனவே, இனி வரும் நாள்களில் கொங்கு மண்டலத்துக்கு எனத் தனியாக திட்டம் வகுத்தும் உள்ளூர் கோஷ்டி மோதல்களுக்கு முடிவு கட்டினால் மட்டுமே 2026 தேர்தலில் தி.மு.கவுக்கு சாதகமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது" என்கிறார் விரிவாக.
17 வழக்குகள்
`அ.தி.மு.கவை சார்ந்து தி.மு.க நிர்வாகிகள் சிலர் இயங்கியதுதான் கொங்கு மண்டல தோல்விக்குக் காரணமா?' என தி.மு.கவின் கலை, இலக்கிய, பகுத்தறிவுப் பேரவையின் மாநில செயலாளர் பொள்ளாச்சி உமாபதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க அரசுக்கு எதிராக ஏராளமான போராட்டங்களை எங்களின் மாவட்ட செயலாளர்கள் முன்னெடுத்தனர். அமைச்சர்களுக்கு எதிராகப் போராட்டமே நடத்தவில்லை என்பது சரியானதல்ல. கோவை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூயஸ் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அமைச்சர்களின் ஒவ்வொரு ஊழல்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்திய வகையில் எங்கள் மீது 17 வழக்குகள் போடப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கச் சென்ற அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதும் வழக்கு பாய்ந்தது" என்கிறார்.
கட்சி நிர்வாகிகளும் காரணம்
தொடர்ந்து பேசுகையில், `` கொங்கு மண்டலத்தில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டுமே மக்கள் வாக்களித்தனர் என்பதை ஏற்க முடியாது. அப்படியிருந்தால் கோவை வடக்கில் வ.ம.சண்முகசுந்தரத்துக்கும் கவுண்டம்பாளையத்தில் பையா கவுண்டருக்கும் தொண்டாமுத்தூரில் போட்டியிட்ட கார்த்திகேய சிவசேனாதிபதிக்கும் பொள்ளாச்சியில் டாக்டர் வரதராஜனுக்கும் மக்கள் வாக்களித்திருக்க வேண்டும். அது ஒரு பெரிய காரணமல்ல. பொள்ளாச்சியில் கடைசிவரையில் போட்டி பலமாக இருந்தது. அங்கு 150 பூத்துகள் வரையில் தேர்வு செய்து அ.தி.மு.க வேட்பாளர் செலவு செய்ததும் ஒரு காரணம்.
கொங்கு மண்டலத்தில் தங்களுக்கு சீட் வேண்டும் என சிலர் எதிர்பார்த்தார்கள். அவ்வாறு கிடைக்காவிட்டாலும் தலைமை அறிவித்த வேட்பாளருக்காக கடுமையாக உழைத்திருக்க வேண்டும். அதில் பத்தில் ஒரு பங்கு தேர்தல் வேலையை செய்தார்களா என்பது மிக முக்கியமானது. கொரோனாவையும் சில நிர்வாகிகள் காரணம் காட்டினார்கள். இதனால் அவர்களைச் சார்ந்தவர்களும் தேர்தல் வேலைகளில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இந்தத் தேர்தல் என்பது எங்களுக்கு வாழ்வா.. சாவா பிரச்னையாக இருந்தது. இதில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. வரும் நாள்களில் கொங்கு மண்டலத்தில் கட்சித் தலைமை தீவிர கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கிறோம்" என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
தி.மு.க செய்ய வேண்டியது என்ன?
`கொங்கு மண்டலம் தி.மு.கவை கைவிட்டது ஏன்?' என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தி.மு.கவுக்கு கொங்கு மண்டல மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஏனெனில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கே அந்த மண்டலம் வாக்களித்துள்ளது. இந்தத் தேர்தலிலும் தி.மு.கவுக்கு பெருமளவு மக்கள் வாக்களித்தனர். ஆயினும் வெல்லும் எண்ணிக்கையில் வாக்களிக்கவில்லை என்ற கோணத்தில்தான் இதனை அணுகவேண்டும். அப்பகுதியில் வாழும் இரண்டு குறிப்பிட்ட சாதியினரிடம் தி.மு.கவை விட அ.தி.மு.கவே செல்வாக்கு பெற்று காணப்படுவதாக சொல்லப்படுகிறது.
இது சில சதவிகிதங்கள் மட்டுமே. இதை சரிசெய்யும் வழிகளை தி.மு.க யோசிக்கவேண்டும். அந்த பிராந்தியத்தின் தொழில், சமூக மேம்பாட்டுக்குத் தேவையான பங்களிப்புத் திட்டங்கள் மூலம் அவர்களை அணுகவேண்டும். வலிமையான உள்ளூர் முகங்களை அடையாளம் கண்டு வளர்ப்பது மிக முக்கியம். எட்டுவழிச்சாலை, தொழில்கள் நசிவு ஆகியவை தாண்டியும் அ.தி.மு.கவை அம்மக்கள் தேர்வு செய்யத் தூண்டிய காரணிகளை ஆய்வு செய்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க உள்ளது" என்கிறார்.
பிற செய்திகள் :
- மு.க.ஸ்டாலின் பிறப்பித்த முதல் 5 உத்தரவுகள்: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம், பால் விலை குறைப்பு
- `மக்கள் நம்பிக்கையை ம.நீ.ம இழந்தது ஏன்?’ காரணங்களை பட்டியலிடும் டாக்டர் மகேந்திரன்
- தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம்
- `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












