அதிமுகவை தேர்தலில் காப்பாற்றிய கொங்கு மண்டலத்தின் 44 தொகுதிகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ள 75 தொகுதிகளில், 44 தொகுதிகள் கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்தவை. ஆக, இத்தேர்தலில் அதிமுகவை பெரிதும் காப்பாற்றியது தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் தான்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மேற்கு மாவட்டங்கள், 'கொங்கு மண்டலம்' என அழைக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் மொத்தமாக 68 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இந்த 68 தொகுதிகளில் 44 தொகுதிகளை அதிமுக கூட்டணியும், 24 தொகுதிகளை திமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளன.
குறிப்பாக, கோவை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள், அதிமுகவின் பலமான வாக்கு வங்கிகளை கொண்ட மாவட்டங்கள் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், 2016 தேர்தலில் 9 தொகுதிகளை அதிமுகவும் , சிங்காநல்லூர் தொகுதியை திமுகவும் கைப்பற்றின. இம்முறை 10 தொகுதிகளும் அதிமுக கூட்டணி வசம் வந்துள்ளன.
கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற அனைத்து அதிமுக வேட்பாளர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளனர். குறிப்பாக, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து மூன்றாவது முறையாக அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இம்முறை 41,630 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்ததற்கு, இப்பகுதியில் உள்ள அதிமுக வாக்கு வங்கி முக்கிய காரணம் என கருதப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில், கடந்த முறை 3 தொகுதிகள் அதிமுகவிற்கும், 2 தொகுதிகள் திமுகவிற்கும் கிடைத்திருந்தன. இம்முறை 5 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன், பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட பாமக மாநில தலைவர், ஜி.கே.மணி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தை பொருத்தவரை, இங்குள்ள 11 தொகுதிகளில், 2016 தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் சேலம் வடக்கு தொகுதியை மட்டுமே திமுகவால் கைப்பற்ற முடிந்தது. மற்ற 10 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி கே.பழனிசாமி 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கரூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், கடந்த முறையைவிட இந்த தேர்தலில் திமுக அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் இம்முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 12,448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இளங்கோ, 24,816 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பாஜக வேட்பாளர் அண்ணாமலையை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், 2016 தேர்தலில், இங்கு 5 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை 4 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி 31,646 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளும் கடந்த முறை அதிமுக வசம் இருந்தன. இம்முறை 3 தொகுதிகளில் திமுக கூட்டணியும், 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது. கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 28,563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பவானி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வெற்றி பெற்றுள்ளார். மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சரஸ்வதி, 281 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசனை தோற்கடித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை, இங்குள்ள 8 தொகுதிகளில் 5 தொகுதியை அதிமுகவும், 3 தொகுதியை திமுகவும் கைப்பற்றியுள்ளது.
அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் சபாநாயகர் தனபால் வெற்றிபெற்றுள்ளார். உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன், 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜிடம் தோல்வியடைந்துள்ளார்.
கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட மற்ற மாவட்டங்களான நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் தொகுதிகளை கைப்பற்றியுள்ளன.
மொத்தமாக கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் உள்ள 68 தொகுதிகளில், 44 தொகுதிகளை அதிமுகவும், 24 தொகுதிகளில் திமுக கூட்டணியும் வெற்றி அடைந்துள்ளது. எனவே, கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வாக்கு வங்கி வலுவாக இருப்பதாகவும், வடக்கு மாவட்டங்களில் ஒப்பிடுகையில் இப்பகுதிகளில் திமுக பலவீனமாக இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய மூத்த அரசியல் பார்வையாளரும், இதழியல் பேராசிரியருமான சி.பிச்சாண்டி, "கொங்கு பகுதியில் உள்ள மாவட்டங்களில் துடிப்பான தலைவர்கள் இல்லாததே திமுகவின் பலவீனம்" என கூறுகிறார்.
"எம்ஜிஆர் காலம் முதலே கொங்குமண்டலம் அதிமுகவின் பலமான வாக்கு வங்கியைக் கொண்ட பகுதியாக உள்ளது. ஜெயலலிதா இருந்தபோது இப்பகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கி எப்படி தக்க வைக்கப்பட்டதோ, அதேபோல் இந்த முறையும் கொங்கு மக்களின் வாக்குகள் அதிமுகவிற்கு ஆதரவாக பதிவாகியுள்ளது. இதற்கு முழு காரணம், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் துணைத் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் முன்னெடுப்புகள் தான் என நான் கருதுகிறேன். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சிக்காகவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் கடந்த முறை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது. அதுவே இந்த தேர்தலில் அவர்களை காப்பாற்றியுள்ளது. இதேபோலான கவனத்தை வட மாவட்டங்களில் செலுத்த தவறியதே அங்கு அதிமுகவிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது' என்கிறார் பிச்சாண்டி.
மேலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் திமுகவின் அடையாளமாக திகழும் தலைவர்கள் யாரும் இல்லாததே, கொங்கு மண்டலத்தில் திமுகவின் பலவீனம் என்ற பார்வையையும் இவர் முன்வைக்கிறார்.
பிற செய்திகள் :
- சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை - புதிய நெருக்கடி
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
- தமிழக அளுநருடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு - ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
- டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எப்போதுதான் முடிவுக்கு வரும்?
- மு.க.ஸ்டாலின்: அவதூறுகளைக் கடந்து அரியணை
- போதுமான தடுப்பூசிகளை இந்தியாவால் தயாரிக்க முடியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












