ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்: கவனிக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஜ்தன் மொஹம்மத் கெளசா
- பதவி, டேட்டா செய்தியாளர்
நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் கடந்த மே 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில் இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மூன்று முக்கிய விஷயங்கள் இருக்கின்றன.
இந்த தேர்தல் மூன்று மாநில கட்சிகளின் பலத்தைக் காட்டுவதாக இருந்தது. பல ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய பிரதேசங்களில் தங்களை விரிவுபடுத்திக் கொள்ளும் விதத்தில் கொஞ்சம் வெற்றிகரமானதாகவும் இருக்கிறது.
பலம் வாய்ந்த பிராந்திய கட்சிகள்
தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில், மூன்றில் பிராந்திய கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தங்கள் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றன.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என பிராந்திய கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.
இக்கட்சிகள் வெறுமனே வெற்றி பெறவில்லை, முந்தைய தேர்தலை விட தங்கள் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் மேம்பட்டு இருக்கின்றன. மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்றிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
கடந்த இரு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு திமுக தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. கேரளத்தில் கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத வரலாற்று நிகழ்வாக, மீண்டும் தங்கள் ஆட்சியை தக்க வைத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
இந்த 3 மாநிலங்களில் ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் 16% பேர் இருக்கிறார்கள். இந்த 3 மாநிலங்கள் நாடாளுமன்ற மக்களவையின் மொத்த இடங்களில் 19 சதவீத இடங்களைக் கொண்டிருக்கின்றன. மாநிலங்களவையில் இந்த 3 மாநிலங்களுக்கு 18 சதவீத இடங்கள் இருக்கின்றன.
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கான உறுப்பினர்களை, மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களே தேர்வு செய்கிறார்கள். எனவே வருங்காலத்தில் மாநிலங்களவையில் தங்களை பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ள அந்த கட்சிகளுக்கு இந்த வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கும் போது, அசாம் மற்றும் புதுச்சேரியில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி என இரு தேசிய கட்சிகள் தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையில் போட்டி கடுமையாக இருந்தன. இந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தில் பிராந்திய கட்சிகள் சிறப்பாக செயல்பட்டாலும், அவை தேசிய கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தன.
காங்கிரஸுக்கு பின்னடைவு

பட மூலாதாரம், Getty Images
சுமார் 50 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, இந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்தலில் மீண்டும் ஒரு பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது. ஏற்கனவே 2019 மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலின் போது இந்த ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் 114 இடங்களைப் பிடித்திருந்தது. ஆனால் தற்போது வெறும் 70 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸின் இந்த சரிவு மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்டிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் கடந்த தேர்தலில் 44 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ், இந்த தேர்தலில் ஓரிடத்தைக் கூடப் பிடிக்கவில்லை. புதுச்சேரியில் கடந்த தேர்தலின் போது 14 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் இந்த தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் வென்ற இடங்களைத் தான் இந்த முறையும் வென்றிருக்கிறது காங்கிரஸ்.
தமிழகத்தில் மட்டும் கடந்த தேர்தலில் வென்ற 8 இடங்களை விட 10 இடங்கள் கூடுதலாக வென்று இருக்கிறது.
ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் கடந்த 1991-ம் ஆண்டு ஒட்டுமொத்த 822 தொகுதிகளில் 29 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருந்தது இந்திய தேசிய காங்கிரஸ். ஆனால் இந்த ஆண்டு அதே ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருக்கும் மொத்த தொகுதியில் 8.5 சதவீத இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது காங்கிரஸ்.
ஆனால் இதே ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் தான் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
காங்கிரஸ் இந்தியா முழுக்க மொத்தம் 421 இடங்களில் போட்டியிட்டது. அதில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும் 65 சதவீத தொகுதி வெற்றிகள், இந்த ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு நேர்மாறாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதனுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு, இந்த பிராந்தியத்தில் இருந்து 8 சதவீத இடங்களை மட்டுமே வென்றது.
தற்போது இந்த ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாமல் தடுமாறியது, வரும் மக்களவைத் தேர்தலிலும் இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் கூடுதலாக இடங்களைப் பெறுவது சிரமம் என்பதைக் காண்பிப்பதாகத் தெரிகிறது.
பாஜகவுக்கு கொஞ்சம் வெற்றி

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு வரும் பாரதிய ஜனதா கட்சி, அசாமில் அதிகாரத்தைக் கைப்பாற்றி இருக்கிறது. புதுச்சேரியிலும் தன் அதிகாரத்தை நிறுவி இருக்கிறது. பாஜகவின் வாக்கு விகிதம் அசாமில் 3.7 சதவீதமும், புதுச்சேரியில் 11.2 சதவீதமும் அதிகரித்திருக்கிறது.
மேற்கு வங்கத்தில் கணிசமான ஏற்றத்தைக் கண்டிருக்கிறது. அம்மாநிலத்தைக் கைப்பற்ற விரும்பிய பாஜக, இந்த முறை பிரதான எதிர்கட்சியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. பாஜக மேற்கு வங்கத்தில் 77 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அது மேற்கு வங்கத்தின் மொத்த இடங்களில் சுமாராக நான்கில் ஒரு பங்கு. ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையில் 38% என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் இதற்கு முந்தைய தேர்தலில் பாஜக வென்ற 3 தொகுதிகள் மற்றும் 10 சதவீத வாக்கு எண்ணிக்கையை விட மிக அதிகம்.
கேரளத்தில் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை எனினும், கடந்த தேர்தலில் வாக்கு விகிதத்தை விட 1 சதவீதம் கூடுதலாக பெற்று, இந்த தேர்தலில் 11.3 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
பாஜக, அசாம் மாநிலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதோடு மட்டுமின்றி மேற்கு வங்கத்தில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. இது 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பிற செய்திகள் :
- ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம் - பிசிசிஐ திடீர் அறிவிப்பு
- பில்கேட்ஸ் - மெலிண்டா: காதலாகி கசிந்த 27 வருட மண வாழ்க்கை
- கொரோனா அலை: மிக மோசமான நிலையில் டெல்லி, ராணுவ உதவியை கோரும் அரசு
- மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?
- தேர்தலில் நூலிழையில் தப்பியவர்கள், தவறவிட்டவர்கள் யார் யார்? சுவாரசிய தகவல்கள்
- புதுச்சேரியில் பாஜக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி?
- மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர் இந்தியாவுக்கு எப்படி உதவும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












