பினராயி விஜயன் கேரளாவில் வென்றதற்கான 4 காரணங்கள்

பினராயி விஜயன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ராகவேந்திர ராவ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த 40 ஆண்டுகளாக, கேரளாவில் ஒரு பாரம்பரியம் நிலவி வருகிறது. அதாவது ஆளும் அரசியல் கட்சி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை தக்கவைத்துக்கொண்டதே இல்லை.

அங்குள்ள மக்கள் எதிர்கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வருவார்கள். ஆனால் அடுத்த முறை அந்தக்கட்சியும் வெளியேறவேண்டிய நிலைமைக்குத்தள்ளபடும். இப்போது அந்த பாரம்பரியம் உடைந்துவிட்டது. கேரளாவில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியை (எல்.டி.எஃப்), தொடர்ந்து இரண்டாவது முறையாக அரசு அமைக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 140 உறுப்பினர் சட்டப்பேரவையில் 91 இடங்களை வென்று எல்.டி.எஃப் , அரசு அமைத்தது. இந்த முறை அக்கட்சி 93 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியில் அமரப்போகிறது.

கேரளாவின் தேர்தல் கணிதத்தில் ஏற்பட்ட இந்தமாற்றத்திற்கு என்ன காரணம்? கேரளாவின் சில அரசியல் வல்லுனர்களுடன் பேசுவதன் மூலம் பிபிசி இதைக் கண்டறிய முயன்றது.

1. பினராயி விஜயனின் பிம்பம்

ஜெ. பிரபாஷ் ஒரு அரசியல் வல்லுனர் மற்றும் கேரள பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலின் (political science) முன்னாள் பேராசிரியர் ஆவார்.

"இது பினராயி விஜயனுக்கு கிடைத்த வெற்றி. அவர் தன்னை பேரிடர் காலங்களின் சிறந்த நிர்வாகியாகவும், வலிமையான தலைவராகவும் நிலைநிறுத்திக் கொண்டார். மாநிலத்தில் நெருக்கடி ஏற்பட்டால் வழிநடத்தக்கூடிய திறமையுள்ள ஒரு தலைவராக விஜயனை மக்கள் பார்த்தார்கள்."என்று அவர் கூறுகிறார்.

பிரபாஷின் கூற்றுப்படி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அல்லது பாரதிய ஜனதா கட்சிக்கு பினராயி போன்ற வலுவான தலைவர்கள் இல்லை.

தேர்தல் பிரச்சாரத்தை விஜயன் ஒற்றைக் ஆளாகக்கையாண்டார் என்றும் கட்சியின் மத்திய தலைமையிலிருந்து வேறு எந்தத் தலைவரையும் நம்மால் காணமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

"யுடிஎஃப் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறது என்று அதற்கே தெரியவில்லை. கூடவே தெரிவிக்கவும் ஆள் இல்லை. எல்.டி.எஃப் பற்றி பொதுமக்களிடம் சொல்லும் வேலையை ஒரு நபர் மட்டுமே செய்து கொண்டிருந்தார், அவர்தான் விஜயன்,"என்று பிரபாஷ் கூறுகிறார்,

மற்ற அனைத்து தலைவர்களுடன் ஒப்பிடும்போது கேரளாவின் மிகப்பெரிய தலைவர் விஜயன் என்று அரசியல் வர்ணனையாளரும் கட்டுரையாளருமான ஜி. பிரமோத் குமார் கூறுகிறார்.

"அவரை சிபிஎம் கட்சியின் ஒற்றைக் குரலாகக் காட்ட ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்தான் கட்சியின் முகமும் குரலும். இந்த வெற்றி விஜயனின் வெற்றியாக கருதப்படும். ஏனென்றால் அவர்தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினார்,"என்று அவர் குறிப்பிட்டார்.

விஜயன் அரசின் நிர்வாக ரீதியான செயல்பாடுகள் நல்லதா கெட்டதா என்பது ஒரு தனிப்பட்ட கேள்வி என்று குமார் கூறுகிறார். ஆனால் அவர் கேரளாவை வழிநடத்தும் திறன் கொண்டவர் என்ற கருத்து மக்களிடையே வலுவாக இருந்தது.

பினராயி விஜயனின் செயல்பாடு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, அவர் நிச்சயமாக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று குமார் சுட்டிக்காட்டுகிறார்.

"முக்கியமாக அவரது தலைமையின் கீழ் நடந்த தேர்தல் இது. எல்லா வேட்பாளர்களையும் அவரே தேர்வு செய்தார். தொடர்ச்சியாக இரண்டு முறை வென்றவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. இது விஜயனின் அரசியல் சாணக்கியம்," என்று அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் எந்த ஊழல் நடந்தாலும், விஜயன் மீது ஒருபோதும் குற்றம் சாட்டப்படவில்லை. அவரது பிம்பம் சுத்தமாக இருந்தது. விஜயன் அரசின் சிறப்பான செயல்பாடு மற்றும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது அவருக்கு துணை நின்றதாக, தென்னிந்தியாவின் அரசியலை உன்னிப்பாக கண்காணிக்கும் மூத்த பத்திரிகையாளர் இம்ரான் குரேஷி தெரிவிக்கிறார்.

2. பேரிடர் நிர்வாகத்தில் மேம்பட்ட செயல்திறன்

கேரள வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

விஜயன் அரசு தனது மக்கள் நலக் கொள்கைகள் மற்றும் பேரிடர் மேலாண்மை திறன்களால் மக்களின் இதயத்தை வென்றது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

"கோவிட் காலத்தில் அவரது அரசு, சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை அதிகரித்துள்ளது. அவர் மக்களுக்கு ஒரு புதிய வழியில் ரேஷன் பொருட்களை வழங்கியுள்ளார். இந்த கொள்கைகளின் விளைவாக தொற்றுநோய் காலகட்டத்திலும்கூட, ஏழைகளிடம் சிறிதளவு பணமும் உணவும் இருந்தது. இதன்காரணமாக இந்தக்கடினமான நேரத்தில் அவர்கள் அதிகம் போராட வேண்டியிருக்கவில்லை,"என்று பிரமோத் குமார் கூறுகிறார்.

பொதுவான ஒரு பார்வையில், விஜயன் அரசு, சிறப்பாக செயல்பட்ட ஒரு அரசாக தோன்றியது என்று குமார் தெரிவிக்கிறார்.

இது சிறப்பாக செயல்படும் அரசாக இருந்ததால், மக்கள் மத்தியில், ஆட்சிக்கு எதிரான போக்கு இருக்கவில்லை அவர் மேலும் கூறினார்.

பினராயி விஜயன்

பட மூலாதாரம், TWITTER @ VIJAYANPINARAYI

"ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் இது மிகவும் விரிவான மற்றும் மாபெரும் வெற்றியாகும். காங்கிரஸால் எதுவும் செய்ய முடியவில்லை,"என்று குமார் சுட்டிக்காட்டுகிறார்.

"அரசின் நலக்கொள்கைகள் அதாவது ஓய்வூதியம் மற்றும் ரேஷன் கிட்கள் போன்றவை , அரசு மீது ஒரு நேர்மறையான பிம்பத்தை உருவாக்கியது. ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து மக்கள் கவலைப்படவில்லை."என்று பிரபாஷ் குறிப்பிட்டார்.

பேரிடர் மேலாண்மையில் விஜயன் அரசின் செயல்திறன் பாராட்டப்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் இம்ரான் குரேஷி கூறுகிறார்.

"கேரளாவில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம், ஒரு வலுவான நபர் மாநிலத்தில் தலைமை வகிக்கிறார் என்ற மிகவும் உறுதியான செய்தி மக்களுக்கு அளிக்கப்பட்டது. இரண்டு முறை ஏற்பட்ட வெள்ளப்பேரழிவு , நீப்பா வைரஸ் நெருக்கடி அல்லது கோவிட் தொற்றுநோய் என்று பேரிடர்கள் எதுவாக இருந்தாலும் , விஜயன் அரசு சிறப்பாக செயல்பட்டது. கோவிட் தொற்று தொடங்கியதிலிருந்து, பினராயி விஜயன் ஒவ்வொரு சேனலிலும் மக்களுடன் பேசுவதைக் காண முடிந்தது. அவர் நிலைமையைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு நம்பிக்கை அளித்து வந்தார், "என்று அவர் தெரிவித்தார்.

3. சிறுபான்மையினரின் ஒருமுனைப்படுத்தல்

கேரளா

பட மூலாதாரம், Getty Images

முஸ்லிம் வாக்குகள் எல்.டி.எஃப்-க்கு கிடைத்திருக்கும், ஏனெனில் பாஜகவின் எழுச்சியே, அந்த சமூகத்தின் முக்கிய பாதுகாப்பின்மை என்று என்று பிரமோத் குமார் நம்புகிறார்.

"யுடிஎஃப் மற்றும் எல்.டி.எஃப் ஆகிய இரண்டையும் பார்க்கும்போது, பாஜகவுடன் போட்டியிடவும், தங்கள் நலன்களைப் பாதுகாக்கவும் எல்.டி.எஃப் தான் சிறந்தது என்று முஸ்லிம்கள் நினைத்திருக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

மாநிலத்தில் கிறிஸ்தவ வாக்குகளும் ஒருமுனைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் குமார் தெரிவிக்கிறார். மத்திய திருவிதாங்கூர் பிராந்தியத்தில், பல ஆண்டுகளாக காங்கிரஸின் வலுவான கூட்டாளியாக கேரள காங்கிரஸ் இருந்தது. அந்த பிராந்தியத்தில் தொகுதிகளை வெல்ல யுடிஎஃப் மற்றும் காங்கிரஸுக்கு அது உதவியது. ஆனால் அந்தக்கட்சி இப்போது எல்.டி.எஃப் உடன் சென்ற காரணத்தால் , நிறைய கிறிஸ்தவ வாக்குகள் எல்.டி.எஃப் க்கு கிடைத்தன.

" இங்கு நடந்தது என்னவென்றால், சிறுபான்மையினரிடையே காங்கிரஸ் மற்றும் யுடிஎஃப் ஆகியவற்றின் பாரம்பரிய வாக்குகள், இப்போது பெரும் எண்ணிக்கையில் எல்.டி.எஃப்-க்கு கிடைத்துள்ளன. மொத்த மக்கள்தொகையில் 17 சதவிகிதம் கிறிஸ்தவர்கள் , 27 சதவிகிதம் முஸ்லிம்கள். இந்த 44 சதவிகித சிறுபான்மையினர் மக்கள்தொகை, எல்.டி.எஃப் க்கு ஆதரவு அளித்துள்ளதுபோலத்தெரிகிறது. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும், யு.டி.எஃப் இன் பாரம்பரிய தேர்தல் முதுகெலும்பாக இருந்தனர். அவர்களின் ஆதரவு இல்லாமல் யு.டி.எஃப் தேர்தலில் வெற்றி பெற முடியாது," என்று குமார் கூறுகிறார்.

சிபிஎம் கட்சி, பாரம்பரியமாக கேரளாவில் ஒரு இந்து கட்சியாக இருந்து வருவதாகவும், அதன் வாக்காளர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் என்றும் குமார் கூறுகிறார்.

"யுடிஎஃப்-ல் இருந்து ஏராளமான உயர் சாதியினர் பாஜகவிற்கும், சிறுபான்மையினர் எல்.டி.எஃப்-க்கும் மாறிவிட்டனர். எனவே யு.டி.எஃப் க்கு எதுவும் மிஞ்சவில்லை,"என்று அவர் குறிப்பிட்டார்.

4. காங்கிரஸின் உட்பூசல்

கேரளா காங்கிரஸ்

பட மூலாதாரம், RAMESH CHENNITHALA @FACEBOOK

கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக கிராமங்களில், காங்கிரஸின் நிறுவன அமைப்பு இல்லை. கட்சி அதன் விளைவை சந்திக்கவேண்டியதாயிற்று என்று பிரபாஷ் தெரிவிக்கிறார்.

"வளங்களைப் பொருத்தவரையில் கூட, காங்கிரஸ் நல்ல நிலையில் இல்லை. கேரளாவில் ஐந்து ஆண்டுகள் மற்றும் மத்தியில் ஏழு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையில், தேர்தலில் போட்டியிடத் தேவையான வளங்களைத் திரட்ட காங்கிரஸ் கட்சியால் முடியவில்லை," என்று அவர் குறிப்பிடுகிறார்.

அதன் இரண்டு நட்புக்கட்சிகளான எல்.ஜே.டி மற்றும் கேரள காங்கிரஸ் (எம்) ஆகியவை எல்.டி.எஃப் உடன் இணைந்ததும் யு.டி.எஃப்-மீது தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிரபாஷ் கூறுகிறார்.

"காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளே இப்போது அடிப்படையில் யுடிஎப்பில் உள்ளன. மீதமுள்ளவை அனைத்தும் அவற்றிலிருந்து பிரிந்த குழுக்கள். மறுபுறம், எல்.டி.எஃப் என்பது பதினொரு கட்சிகளின் கூட்டணியாகும். இதில் மூன்று முதல் ஐந்து கட்சிகள் பெரியவை. ஆகவே ஆரம்பத்தில் இருந்தே இந்தப்போட்டி ஒருதரப்பாக காணப்பட்டது, "என்று அவர் தெரிவிக்கிறார்.

காங்கிரஸின் உட்பூசலால் எல்.டி.எஃப் பயனடைந்தது என்று இம்ரான் குரேஷி கூறுகிறார். "காங்கிரஸுக்குள் இருந்த பரஸ்பர கருத்து வேறுபாடு காரணமாக அது பஞ்சாயத்து தேர்தலில் தோல்வியடைந்தது. உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் உட்பிரிவு மோதல் காரணமாக கட்சி பஞ்சாயத்து தேர்தலில் தோல்வியைத் தழுவியது. சட்டப்பேரவை தேர்தலின்போது, ஒருங்கிணைந்து செயல்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் வெற்றி எட்டாக்கனியாகிவிட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.

காணொளிக் குறிப்பு, பினராயி விஜயன் - கைத்தறி நெசவாளர் முதல் கேரளத்தின் முதல்வர் வரை

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :