தமிழ்நாடு தேர்தல் 2021: அதிமுக தோல்வியடைய பாஜக கூட்டணிதான் காரணமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 75 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்திருக்கும் நிலையில், பா.ஜ.கவுடனான கூட்டணி அக்கட்சிக்கு பாதகமாக அமைந்ததா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த சட்டப்பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவுடன் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை பிரதானமான கூட்டணிக் கட்சிகளாக இடம்பெற்றன. இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 இடங்களும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்களும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆறு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த 20 இடங்களில் எல். முருகன், எச். ராஜா, வானதி ஸ்ரீநிவாஸன், அண்ணாமலை, குஷ்பு, வினோஜ் பி செல்வம், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் களமிறக்கப்பட்டனர். இதில் நாகர்கோவிலில் காந்தி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், கோவை தெற்குத் தொகுதியில் வானதி ஸ்ரீநிவாஸன், மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதி ஆகிய நான்கு பேர் மட்டுமே வெற்றிபெற்றனர்.
அ.தி.மு.கவைப் பொறுத்தவரை இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் உட்பட மொத்தமாக 66 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்றது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றபோது 40.88 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. அதே தேர்தலில் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட பா.ஜ.கவும் பாட்டாளி மக்கள் கட்சியும் முறையே 2.86, 5.36 சதவீத வாக்குகளைப் பெற்றன. இந்த மூன்று கட்சிகளும் மொத்தமாகப் பெற்ற வாக்கு சதவீதம் 49.1 சதவீதமாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்த முறை அ.தி.மு.க. தனித்து 33.29 சதவீத வாக்குகளையும் பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 39.71 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட 9.5 சதவீத வாக்குகளை அந்தக் கூட்டணி மொத்தமாக இழந்துள்ளது.
பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டபோது 2.86 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், இப்போது 20 இடங்களில் போட்டியிட்டு 2.62 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆகவே, வாக்கு இழப்பு என்பது அ.தி.மு.க., பா.ம.கவிடமே நடந்திருக்கிறது.
இந்தக் கூட்டணியைப் பொறுத்தவரை, தெளிவான ஆதாயம் என்பது பாரதிய ஜனதா கட்சிக்குத்தான். 2001ஆம் ஆண்டில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்து நான்கு இடங்களைப் பிடித்த பா.ஜ.கவால் அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடிந்ததில்லை. இப்போது இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அ.தி.மு.கவுடனான கூட்டணியால் மீண்டும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டப்பேரவைக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது அந்தக் கட்சி.
அ.தி.மு.கவுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்தது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக, 1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. 18 இடங்களிலும் பா.ஜ.க. மூன்று இடங்களிலும் வெற்றிபெற்றன. இதற்குப் பிறகு, 2004ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மீண்டும் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
ஆனால், அந்தக் கூட்டணி தோல்விகரமான கூட்டணியாக முடிவடைந்தது. அ.தி.மு.க. 33 இடங்களிலும் பா.ஜ.க. 6 இடங்களிலும் போட்டியிட்ட நிலையில், எல்லா இடங்களிலுமே அக்கட்சி தோல்வியடைந்தது.
இதற்குப் பிறகு, ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்ததில்லை. தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியோடு ஜெயலலிதா நட்பாக இருந்தபோதிலும்கூட, அரசியல் கூட்டணி என்று வரும்போது பா.ஜ.கவிடமிருந்து விலகியே இருந்தார் ஜெயலலிதா. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின்போது மோதி தன்னுடைய பிம்பத்தை முன்னிறுத்தி பிரச்சாரங்களை மேற்கொண்ட நிலையில், அதனை எதிர்கொள்ள, "மோடியா.. இந்த லேடியா" என்ற பிரச்சார வாசகத்தை முன்வைத்து அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றார் ஜெயலலிதா.
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க., அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க விரும்பிய நிலையிலும் அதில் ஜெயலலிதா ஆர்வம் காட்டவில்லை. பா.ஜ.க. தனித்தே போட்டியிட வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், 2016ல் ஜெயலலிதா உயிரிழந்துவிட எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சரானார். பல்வேறு காரணங்களுக்காக அவர் மத்திய அரசைச் சார்ந்திருந்த நிலையில், 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைந்தது. ஆனால், அந்தக் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது. அந்தக் கூட்டணியின் தோல்விக்கு, பா.ஜ.க. மீது தமிழ்நாட்டில் நிலவிய கடுமையான எதிர்ப்பு மனநிலை ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
2019க்கும் 2021க்கும் இடையில் வேல் யாத்திரை உட்பட மதத்தை மையமாக வைத்து தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியது பா.ஜ.க. அந்த யாத்திரை போதுமான வரவேற்பைப் பெறாத நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது.
இருந்தபோதும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவானது. இத்தனைக்கும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகளின் துவக்ககட்டத்தில் பா.ஜ.க. தலைவர்கள், எடப்பாடி கே. பழனிச்சாமிதான் தங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவே மறுத்தனர். தங்கள் கட்சிதான் அதை முடிவுசெய்யும் என்றெல்லாம் கூறினர். முடிவில், கே. பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. ஏற்றுக்கொண்டது.
தேர்தல் பிரசாரத்தின்போது பல அ.தி.மு.க. வேட்பாளர்கள் பா.ஜ.க. கொடிகளையும் பிரதமர் மோதியின் படத்தையும் தவிர்த்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில்தான், தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு பாதகமாக வெளிவந்துள்ளன.
பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்ட எதிர்ப்பு வாக்குகள் ஒருபுறம் இருக்குமென்றாலும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தது அ.தி.மு.கவுக்கு பாதகமாக அமைந்தது என்ற கருத்துகளும் இருக்கின்றன.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியால் அ.தி.மு.கவுக்கு இழப்புதான் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். "இந்தத் தேர்தலில் தி.மு.கவுக்கு விழுந்த வாக்குகள், பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள். அவை தி.மு.க. ஆதரவு வாக்குகள் என்றால் தி.மு.க. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றிருக்கும்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

பட மூலாதாரம், Getty Images
பா.ஜ.கவைப் பொறுத்தவரை கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் இருக்கிறார்கள். ஆனால், மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க. அதிக அளவில் வெற்றிபெற்றதற்குக் காரணம், கவுண்டர் - அருந்ததியர் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.கவுக்கு வாக்களித்ததுதான்.
கன்னியாகுமரியில் அவர்களுக்கு செல்வாக்கு உண்டு. அவர்கள் கட்சி வேட்பாளர் போட்டியிட்டால் அவர்கள் வெல்கிறார்கள். அ.தி.மு.கவுக்கு அதே அளவுக்கு வாக்குகள் இடம்மாறுவதில்லை. சென்னையிலும் அப்படித்தான். அதிக அளவில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் உள்ள மயிலாப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளரான நட்ராஜ் தோற்றார் என்கிறார் ராதாகிருஷ்ணன்.
அ.தி.மு.க. கூட்டணியால் பா.ஜ.கவுக்கு லாபம், அ.தி.மு.கவுக்கு நஷ்டம் என்ற வாதத்தை புறம்தள்ளுகிறார் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான நாராயணன். "அப்படியானால், இடதுசாரிக் கட்சிகள் தலா இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றதற்கு தி.மு.க. கூட்டணிதான் காரணம் என்று சொல்வீர்களா?" என்று கேள்வியெழுப்புகிறார் அவர்.
"இந்த மாதிரியான வாதங்கள் எல்லாம் வேண்டுமென்றே பா.ஜ.கவை குறிவைத்து சொல்லக்கூடிய வார்த்தைகள். கூட்டணி என்றால் சில கட்சிகள் வரும், சில கட்சிகள் போகும். ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க. குறித்து இம்மாதிரி கருத்துகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் பொய். தமிழ்நாட்டில் பா.ஜ.க. கால் ஊன்ற முடியாது என்றார்கள். இப்போது நான்கு இடங்களில் அக்கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் தாமரை வெல்லுமா என்றவர்கள் இனி வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்" என்கிறார் நாராயணன் திருப்பதி.

தேர்தல் பிரசாரத்தின்போது பல இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பா.ஜ.கவின் பெயரையும் மோதியின் படத்தையும் தவிர்த்தார்களா என்ற கேள்விகளையும் புறம்தள்ளுகிறார் நாராயணன்.
"ஊடகங்களுக்கும் எதிர்கட்சிகளுக்கும் வேறு வேலையே இல்லை. தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளைப் பரப்பிவருகிறார்கள்" என்கிறார் நாராயணன்.
ஆனால், அ.தி.மு.கவின் வாக்குகள் பா.ஜ.கவுக்கு சென்ற அளவுக்கு பா.ஜ.கவின் வாக்குகள் அ.தி.மு.கவிற்கு வரவில்லை என்கிறார் ராதாகிருஷ்ணன். தவிர, தேர்தல் பிரசாரத்தில் மத சாயம் பூசியதையும் தமிழக மக்கள் ரசிக்கவில்லை; ஆகவே இரண்டு விதங்களில் பாதிப்பு என்கிறார் அவர்.
"தேர்தல் பிரசாரம் நெடுக மதம் குறித்தே பேசினார்கள். பிரதமரே வந்து வெற்றி வேல், வீர வேல் என்று முழக்கமிட்டார். இந்துக்களையும் முஸ்லிம்களையும் தனித்தனி வாக்கு வங்கிகளாக மாற்ற முயன்றார்கள். ஸ்டாலின் இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக பொய் பிரசாரம் செய்தார்கள். இதெல்லாம் அந்தக் கூட்டணிக்கு எதிராகத்தான் முடிந்தது" என்கிறார் அவர்.
இது குறித்து பிபிசியின் இந்தி சேவையிடம் பேசிய பா.ஜ.கவின் மாநிலப் பொறுப்பாளர் சி.டி. ரவி, "எங்களால் அ.தி.மு.கவும் பலனடைந்திருக்கிறது. நாங்கள் அ.தி.மு.கவுக்கு சேதத்தை ஏற்படுத்தினோம் என்றால், பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்றது எப்படி?" என கேள்வியெழுப்புகிறார் ரவி.
இது குறித்து அ.தி.மு.கவின் கருத்தைப் பெறச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
பிற செய்திகள் :
- கொரோனா அலை: மிக மோசமான நிலையில் டெல்லி, ராணுவ உதவியை கோரும் அரசு
- மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?
- தேர்தலில் நூலிழையில் தப்பியவர்கள், தவறவிட்டவர்கள் யார் யார்? சுவாரசிய தகவல்கள்
- புதுச்சேரியில் பாஜக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி?
- மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர் இந்தியாவுக்கு எப்படி உதவும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












