தமிழக ஆளுநருடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு - ஆட்சியமைக்க உரிமை கோரினார்

ஸ்டாலின்

பட மூலாதாரம், DMK

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைய பெரும்பான்மை பலம் பெற்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதற்குரிய கடிதத்தை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்திடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை 10.30 மணியளவில் வந்த மு.க. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார்.

இந்த சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், வரும் 7ஆம் தேதி புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவைக்கான நிகழ்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என். நேரு, பொருளாளர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி உறுதியானவுடன் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், கொரோனா பெருந்தொற்று தீவிரத்தை கருதி தமது பதவியேற்பு விழாவை மிகவும் எளிமையாக நடத்த தீர்மானித்துள்ளதாக கூறினார். ஆளுநர் மாளிகைக்கு உள்ளே அல்லாமல் திறந்தவெளி பகுதியில் பதவியேற்பு விழாவை நடத்தும் வாய்ப்பு குறித்தும் அரசு உயரதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இது குறித்தும் ஆளுநரிடம் அவர் பேசியிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

"திமுக சட்டமன்ற குழுவின் தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியதும், இன்று மாலைக்குள் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதத்தை அளிப்பதாக தங்களிடம் ஆளுநரிடம் தெரிவித்தார்," என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

வழக்கமான நடைமுறையின்படி, பெரும்பான்மை பலம் பெற்றுள்ளதற்கான கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டதும், ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை ஆளுநர் முறைப்படி விடுப்பார். அதைத்தொடர்ந்து பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சட்டப்பேரவை செயலாளர், ஆளுநரின் செயலாளர் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து செயல்படுத்துவர்.

அந்த வகையில், ஆளுநரின் கடிதம் கிடைத்தவுடனேயே தமது பதவியேற்பு விழா திட்டம் மற்றும் ஸ்டாலினுடன் சேர்ந்து அவரது அமைச்சரவையில் இடம்பெறுவோர் பற்றிய பட்டியலும் ஆளுநர் மாளிகை செயலகத்தில் வழங்கப்படும். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இருந்து அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பதவியேற்பு நிகழ்வுக்கான நடைமுறைகள் விவரிக்கப்படும்.

சட்டமன்ற குழு தலைவராக தேர்வு

முன்னதாக, தமிழக சட்டமன்ற தேர்தலில் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தகுதி பெற்றுள்ள திமுக, அதன் சட்டமன்ற குழு தலைவராக மு.க. ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை தேர்வு செய்தது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு வென்றுள்ளவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, இதற்கான முன்மொழிவை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தார்.

இதைத்தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்துடன் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை புதன்கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க ஸ்டாலின் உரிமை கோரியிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அரசு உயரதிகாரிகளுடன் சந்திப்பு

திமுக

பட மூலாதாரம், DMK

முன்னதாக, திமுக அரசின் பதவியேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக மு.க. ஸ்டாலினை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் அடுல்ய மிஸ்ரா, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, ஐஏஎஸ் அதிகாரிகள் முருகானந்தம், உதயசந்திரன், சென்னை நகர காவல்துறை ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட உயரதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்கள்.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமல்படுத்தப்படும் கூடுதல் கட்டுப்பாடுகள், பதவியேற்பு நிகழ்வை எளிமையாக நடத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியை அனுப்ப அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

கமல்ஹாசன் நேரில் வாழ்த்து

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து தமிழக தேர்தலில் வெற்றி பெற்றதற்காகவும், புதிய முதல்வராக பதவி ஏற்கவிருப்பதற்காகவும் வாழ்த்து தெரிவித்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :