தமிழ்நாடு தேர்தல் 2021: சென்னை நகரை மீண்டும் திமுக தன்வசமாக்கியது எப்படி?

ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், சென்னை நகரில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் உள்பட பல வேட்பாளர்களும் திமுக வேட்பாளர்களுக்கு சவாலாகவே இல்லை என கருதும் அளவுக்கு தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலத்தில் இருந்த அரசியல் ஆதரவு அலை போல, தற்போது சென்னை நகரில் திமுகவுக்கு சாதகமான அலைக்கு சாட்சியாக இந்த தேர்தல் முடிவுகள் உள்ளன.

பல தேர்தல்களில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புகளை வழங்கிய சென்னை வாக்காளர்கள், 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் அக்கட்சிக்கு பாதகமான முடிவை கொடுத்தனர். மைலாப்பூர், ராயபுரம் உள்ளிட்ட தொகுதிகளை அதிமுக எளிதாக வென்றதோடு தொடர்ந்து தனது இருப்பை நிலைநாட்டியது. ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் நடந்த முதலாவது தேர்தலில் சென்னையின் எல்லா தொகுதிகளிலும் திமுக வென்றிருக்கிறது.

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் மூன்றாவது முறையாக வென்றுள்ளார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருநெல்வேலி தொகுதியில் முதல் முறையாக களம் கண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

சென்னையில் ராயபுரம் தொகுதி அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக கடந்த 20 ஆண்டுகளாக இருக்க முக்கிய காரணமாக இருந்தவராக கருதப்பட்டு வந்தவர் ஜெயக்குமார். அவரும் நடந்த முடிந்த தேர்தலில் தோல்வியை தழுவியிருக்கிறார். இங்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக வென்றிருக்கிறது.

அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா, ஏற்கெனவே அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த மோகனிடம் தோற்றார்.

2011ல் கோகுல இந்திரா அண்ணா நகரில் வெற்றி பெற்ற அவர், 2016 தேர்தலில் வெற்றியை தக்கவைக்கவில்லை இம்முறை நடந்த தேர்தலில் அதே தொகுதியில் களமிறங்கிய கோகுல இந்திரா தீவிரமாக பரப்புரை செய்தார். ஆனாலும், அந்த தொகுதியில் திமுகவுக்கே வாக்காளர்கள் வாய்ப்பளித்துள்ளனர்.

எழும்பூர் தொகுதியில் அதிமுகவின் ஜான் பாண்டியனை 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் பரந்தாமன் வீழ்த்தியுள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதியில் 2016 தேர்தலிலும் இம்முறை நடந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. இங்கு கடந்த முறை திமுக எம்எல்ஏ ஆக இருந்தவர், சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ஆனால், அவருக்கு அங்கு பாஜக போட்டியிட வாய்ப்பு தரும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கடந்த ஆண்டு பாஜகவில் சேர்ந்த குஷ்புக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. இங்கு திமுக வேட்பாளராக களமிறங்கிய டாக்டர் எழிலன் 71,867 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளராக களமிறங்கிய குஷ்பு, 39,237 வாக்குகளைப் பெற்றார்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி 2011 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்றார். ஆனால் அந்த வெற்றி 2016ல் நீடிக்கவில்லை. 2021 தேர்தலில் பாஜகவுக்கு அந்த தொகுதியை ஒதுக்கிய அதிமுகவுக்கு அங்கு வெற்றி கிடைக்கவில்லை.

துறைமுகம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத்தில் பாஜகவின் வினோஜ் பி செல்வம் முன்னிலை வகித்தார். இறுதியில் திமுகவின் சேகர் பாபு வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 59,073.

சென்னை

பட மூலாதாரம், Getty Images

திமுகவுக்கு சென்னை வாக்காளர்கள் வெற்றியை வழங்கியதற்கு பல காரணிகள் உள்ளன. அமைப்பு சாரா தொழிலாளர்கள், நடுத்தர குடும்பங்கள், அரசாங்க வேளைகளில் இருப்பவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் என சென்னை நகரம் உழைப்பாளிகளின் நகரமாக உள்ளது.

மாநிலத்தின் பிற மாவட்டங்களை விட சென்னை நகரத்தின் கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார பிரச்னைகள் வித்தியாசமானது. இங்குள்ள வளர்ச்சிப் பணிகளில் அதிமுக போதிய கவனம் காட்டவில்லை என்ற கருத்து நிலவுகிறது.

"குறிப்பாக சென்னை வெள்ளம், கொரோனா பெருந்தொற்று காலத்தில் சென்னைவாசிகள் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதிமுக மீதான அதிதிருப்தி பன்மடங்கு அதிகரிப்பதற்கு அது முக்கிய காரணமாகியது," என்கிறார் பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.

''பிற மாவட்டங்களை விட, கொரோனா பரவல் தீவிரமானபோது, சென்னை நகரில் ஊரடங்கு காரணமாக நடுத்தர குடும்பங்கள், ஏழை எளிய மக்கள் மிகவும் அவதிப்பட்டார்கள். நகரை அழகுபடுத்துவதில் அதிக கவனம் எடுத்த அரசு நிர்வாகம், கடுமையான நெருக்கடி தந்த ஊரடங்கு மற்றும் வெள்ள பாதிப்பு காலங்களில் போதிய அளவு மக்களுக்கு உதவவில்லை. இது சென்னை மக்கள் மனதில் வடுவாக நிலைத்து விட்டது. சென்னை நகரத்தின் செயல்பாட்டுக்கு அவசியமான மாநகராட்சி நிர்வாகம் சீராக செயல்படவில்லை என்ற எண்ணம் பல வார்டுகளில் தென்பட்டது. நகரத்தின் கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை. மீண்டும் குப்பை பிரச்னை, மோசமான சாலைகள் என பழைய சிரமங்கள் தொடர்ந்தன. இவை எல்லாம் சென்னைவாசிகளை திமுகவுக்கு வாக்களிக்க தூண்டியிருக்கக்கூடும்,''என்கிறார் இளங்கோவன் ராஜசேகரன்.

திமுக ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் திமுகவுக்கு பெரும்பான்மையாக வெற்றி பெற வைத்ததற்கான பல காரணங்கள் இருந்தாலும், சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவிருந்த இறுதி நேரத்தில், வன்னியர்களுக்கு அதிமுக அரசு உள்ஒதுக்கீட்டை அறிவித்தது முக்கிய காரணி என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான லட்சுமணன்.

''சென்னை நகரத்தை பொறுத்தவரை, பலவிதமான சமூகங்களை சேர்ந்த மக்கள் இங்கு வசிக்கின்றனர். இருந்தபோதும், தலித் மற்றும் வன்னியர் இன மக்கள், வன்னியர் அல்லாத மிகவும் பிற்படுத்தப்பட்ட இன மக்கள் இங்குள்ளனர். ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீட்டை விட மேலும் ஒரு தனி ஒதுக்கீடு ஒரு சமூகத்திற்கு வழங்கப்படுவதை யாரும் ஏற்கவில்லை. இதனால், சென்னை, சென்னை நகரை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது,'' என்கிறார் லட்சுமணன்.

மேலும், ''சமூக பொருளாதார பிரச்னைகளை அரசாங்கம் சரியாக கையாளாதது, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், மத்திய அரசுக்கு எப்போதும் தலையாட்டும் அரசாக அதிமுக அரசு இருந்தது என்பதும் ஒரு காரணம். இத்துடன் 10 ஆண்டு காலம் ஆட்சி செய்து விட்ட அதிமுக மீதான அதிருப்தியும் சேர்ந்து விட்டது. இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட திமுக தனது பழைய பலமான சென்னை நகரை மீண்டும் கைப்பற்றி, இழந்த கோட்டையை இந்த தேர்தலில் மீட்டு விட்டது. திமுகவுக்கு அதிகம் உதவியது அதிமுகவின் நடவடிக்கைதான்,'' என்கிறார் லட்சுமணன்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :