டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எப்போதுதான் முடிவுக்கு வரும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விகாஸ் பாண்டே
- பதவி, பிபிசி செய்தியாளர்
டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசர ஆக்சிஜன் தேவைகள் குறித்த செய்திகள் இரவு முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. அவற்றில், நோயாளிகள் உயிருக்குப் போராடி வருகிறார்கள் என்ற எச்சரிக்கையும் இருந்தது.
இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற நெருக்கடி இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இப்போது வரை அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. சனிக்கிழமை, டெல்லியில் ஒரு பெரிய மருத்துவமனையில் திடீரென ஆக்சிஜன் தீர்ந்து போனதால், குறைந்தது 12 நோயாளிகள் உயிரிழந்தனர்.
படுக்கைகள் கிடைக்காத நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனைகளுக்கு வெளியே, சிலிண்டர்களுக்காகக் காத்திருந்தனர். தொடர்ந்து 12 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் பல இடங்களில் இருந்தது.டெல்லியில் உள்ள பல பெரிய மருத்துவமனைகள் அன்றாடம் கிடைக்கும் ஆக்சிஜன் விநியோகத்தையே நம்பியுள்ளன. ஆனால் அவசரகால ஒதுக்கீட்டுக் கூட போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை.ஒரு மருத்துவர், நிலைமை மிகவும் அச்சுறுத்தும் விதமாக இருப்பதாகக் கூறுகிறார். "ஒரு முறை மெயின் டாங் உபயோகப்படுத்தப்பட்டுவிட்டால், பிறகு அவசரத்துக்கு எதுவும் மிஞ்சாது. " என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
சிறிய மருத்துவமனைகளின் நிலை இன்னும் மோசமாக உள்ளது, ஏனெனில் அவர்களுக்கு ஆக்சிஜனை சேமிக்க டாங்குகள் இல்லை, அதற்குப் பதிலாக அவர்கள் பெரிய சிலிண்டர்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் சுனாமி போல அதிகரித்து வரும் நேரத்தில் இந்த ஆக்சிஜன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, 407 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தத் தொற்று தொடங்கியதிலிருந்து, இந்த வார இறுதியில், நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இறந்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல், ஒரே நாளில் நான்கு லட்சம் புதிய தொற்றுகளைப் பதிவு செய்த உலகின் முதல் நாடாக இந்தியா இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் புதிய சவால்
டாக்டர் கௌதம் சிங், ஸ்ரீ ராம் சிங் மருத்துவமனையின் இயக்குநராக உள்ளார்.அவரது மருத்துவமனையில் கோவிட் நோயாளிகளுக்கு 50 படுக்கைகள் உள்ளன, மேலும் ஐ.சி.யுவில் 16 நோயாளிகளுக்கு இடமுண்டு.ஆனால் ஆக்சிஜன் விநியோகத்திற்கான உறுதியான உத்தரவாதம் இல்லாததால் அவர்கள் நோயாளிகளுக்கு அனுமதி மறுக்க வேண்டியுள்ளது.கடந்த சில நாட்களில், வரும் முன் காக்கும் விதமாக, அவர் ஆக்சிஜனுக்காக பலரையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
டாக்டர் கௌதம் சிங், "நாங்கள் ஒவ்வொரு நாளும் போராடுகிறோம். எனது மருத்துவமனையின் பெரும்பான்மையான ஊழியர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் தெருக்களில் அலைந்து வருகின்றனர். இந்த சிலிண்டர்களை நிரப்ப அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்." என்று கூறுகிறார். டாக்டர் கௌதம் சமீபத்தில் வைத்த ஒரு கோரிக்கையை நான் ட்வீட் செய்துள்ளேன்.டாக்டர் கௌதம் தனது மருத்துவமனையில் ஒரு நோயாளியின் மரணம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படக்கூடும் என்ற நினைப்பே அவருக்குத் தூக்கத்தை தரவில்லை என்று கூறுகிறார். "நோயாளிகளின் சிகிச்சையில் நான் கவனம் செலுத்த வேண்டும். ஆக்சிஜனுக்காக சுற்றித் திரிவதில் இல்லை." என்கிறார் அவர்.வேறு பல மருத்துவமனைகளிலும் இதே நிலைதான்.
டெல்லியில் ஓர் மருத்துவமனையை நடத்தி வரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண், நெருக்கடி தொடங்கியபோது, அரசுத் துறைகளுக்கு இடையே எந்த ஒருங்கிணைப்பும் இல்லை என்று கூறினார்."சில நாட்கள் வரை, நாங்கள் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாது, இந்தப் பிரச்னையைத் தீர்க்க யாருக்கு அதிகாரம் இருக்கும் என்று தெரியாது. ஆனால் முன்பை விட இப்போது நிலைமை சீரடைந்துள்ளது." என்று அவர் கூறுகிறார்.
ஆனால் ஆக்சிஜன் விநியோகம் குறித்து இன்னும் நிச்சயமற்ற சூழ்நிலையே நிலவுவதால், அதிக நோயாளிகளை அனுமதிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்."யாராவது எங்களிடம் வந்து ஆக்சிஜன் படுக்கையைப் பற்றி கேட்கும்போதெல்லாம், இல்லை என்று கூற மிகவும் கஷ்டமாக உள்ளது." என்று அவர் வருந்துகிறார்.

பட மூலாதாரம், Getty Images
சேமிப்பு டாங்குகள் இல்லாததால், பெரிய சிலிண்டர்களைச் சார்ந்துள்ள மருத்துவமனைகள், ஒவ்வொரு நாளும் உதவி கோரிச் செய்தி அனுப்புவதாகவும் அவர் கூறுகிறார். டெல்லி நகரத்திற்கு மத்திய அரசிடமிருந்து போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிவிட்டார். மத்திய அரசு தான் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டைச் செய்கிறது. ஆக்சிஜனுக்குப் பற்றாக்குறை இல்லை என்றும் அதன் போக்குவரத்தில்தான் சவால் அடங்கியுள்ளது என்றும் மத்திய அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
டெல்லி உயர் நீதிமன்றம் சனிக்கிழமை "நிலைமை கை மீறிப் போய் விட்டது. அரசு தான் அனைத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒதுக்கீடு செய்த நீங்கள் தான் அதை முடித்து வைக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
மக்களின் தோள்களில்தான் பாரம்
கள நிலவரம் இன்னும் மோசமாகவே உள்ளது. "மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் நடந்து வரும் அரசியல் மோதலுக்கான விலையை மக்கள்தான் ஏற்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் அவர்களின் உயிரே விலையாகிவிடுகிறது." என்று ஒரு விமரிசகர் கூறுகிறார்.
மருத்துவமனையில் படுக்கைகள் கிடைத்த குடும்பங்களும் சிக்கலில் உள்ளனர். ஏனென்றால், ஆக்சிஜன் வழங்கல் எவ்வளவு காலம் தொடரும் அல்லது எப்போது நிறுத்தப்படும் என்பது அவர்களுக்குத் தெரியாது.கடந்த 48 மணிநேரம் அல்தாஃப் ஷம்ஸிக்கு மிகவும் வேதனையாக இருந்தது. கடந்த வாரம், அவரது குடும்பத்தில் அனைவரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர்.அவரது கர்ப்பிணி மனைவி தீவிரமான நோய்த் தாக்கத்துக்கு உள்ளானார். அவர் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் ஒரு மகளை ஈன்றெடுத்தார். சில மணிநேர சுவாசப் போராட்டத்துக்குப் பிறகு, அவருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது. அங்கும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதற்கிடையில், அல்தாஃப்-ன் தந்தை மற்றொரு மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.


அல்தாஃபின் மனைவியும் மகளும் ஐ.சி.யுவில் இருந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் விநியோகம் போதுமான கையிருப்பில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் சப்ளை நிறுத்தப்படலாம் என்ற நிலை தான். "நாளை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?" என்கிறார் அவர்.ஆக்சிஜன் விநியோகப் பிரச்னைக்கு மத்தியில், மருத்துவமனையில் ஊழியர்கள் குறைவாக இருப்பதால் மனைவியை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
அதாவது, மனைவியின் காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு குறித்த பொறுப்பு இனி அல்தாஃப் தலையில் தான். "நான் அனுபவித்த துன்பம் என்ன என்று உங்களால் கற்பனை கூட செய்ய முடியாது என்கிறார் அல்தாஃப்.
'என் தந்தையின் ஆக்சிஜன் தீர்ந்துகொண்டிருந்தது'
மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததால் வீட்டில் சிகிச்சை பெறும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு, சிறிய சிலிண்டர்கள் மட்டுமே சுவாசிப்பதற்கான ஒரே வழியாக உள்ளது. தில்லியில் இது ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. அபிஷேக் ஷர்மாவின் தந்தையின் ஆக்சிஜன் அளவு திடீரென சனிக்கிழமை குறையத் தொடங்கியது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
சிலிண்டர் வாங்கக் கடைக்குச் சென்றவர், பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு அலைந்த பிறகு, ஒரு சிறிய சிலிண்டர் கிடைத்தது. அதிலும் ஆறு மணி நேரத்துக்குத் தேவையான அளவே ஆக்சிஜன் இருந்தது. அதன் பிறகு அவர் மீண்டும் வெளியே சென்று சுமார் 70 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பெரிய சிலிண்டரை வாங்கினார். ஆனால் அது காலியாக இருந்தது கண்டு அதிர்ந்தே போனார்.இந்த காலி சிலிண்டரை நிரப்ப, அவர் பல இடங்களுக்கும் அலைந்தார். ஆனால் அவருக்கு ஒரே இடத்தில் உதவி கிடைக்க வாய்ப்பிருந்தது. ஆனால் அங்கும் ஒரு நீண்ட வரிசை இருந்தது."வரிசையில் நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் என் தந்தையின் ஆக்சிஜன் குறைந்து கொண்டிருந்தது. எனக்கு முன்னுரிமை கொடுக்கும் படி நான் யாரிடமும் கேட்கவும் முடியாது. காரணம், அனைவரும் இதே நிலையில் தான் இருக்கிறார்கள். ஆறு மணி நேரம் வரிசையில் நின்றபின் சிலிண்டரை நிரப்பிக்கொண்டேன். ஆனால் நாளையும் நான் மீண்டும் இதே போல வரிசையில் நிற்க வேண்டும்." என்று வேதனைப்படுகிறார். "இந்த சிலிண்டரை நிரப்ப முடிந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே நடுங்குகிறது" என்று அவர் கூறுகிறார். இந்த நெருக்கடிக்கான சாத்தியக்கூறு குறித்து அரசாங்கம் எச்சரித்திருந்தது, ஆனால் அதைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொது சுகாதார நிபுணர் மருத்துவர் சந்திரகாந்த் லஹாரியா கூறுகிறார்.அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் போதுமான அளவில் இல்லை என்று நாடாளுமன்றக் குழு நவம்பரில் எச்சரித்திருந்தது. மருத்துவ ஆக்சிஜனின் நெருக்கடி அதன் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இல்லாததால்தான் எழுந்தது என்று டாக்டர் லஹாரியா கூறுகிறார்.ஆனால் இரண்டு வாரங்கள் கடந்த பின்னரும், தலைநகர் தில்லியின் மருத்துவமனைகளில் நோயாளிகள் இன்னும் சுவாசிக்கவே தடுமாறிக் கொண்டிருக்கும் நிலை குறித்தும் தீர்வு காணப்படாதது குறித்தும் பலரும் வியப்படைகின்றனர்.
'நாங்கள் வார் ரூம் உருவாக்கியுள்ளோம்'
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
நெருக்கடியான இந்த நேரத்தில், விழிப்புணர்வு கொண்ட மக்கள், துன்பப்படுவோருக்கு உதவ முன்வந்துள்ளனர். அவர்களில், தெஹ்ஸின் பூனாவாலா, திலீப் பாண்டே, சீனிவாஸ் பிவி சோனு சூத் போன்ற ஆர்வலர்கள், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளனர். ஆக்சிஜன் குறைவாக இருக்கும் சிறிய மருத்துவமனைகளுக்கு தெஹ்ஸீன் பூனாவாலா உதவுகிறார். உதவி செய்யக்கூடியவர்களையும் உதவி தேவைப்படுவோரையும் இணைக்கும் பணியை தான் செய்து வருவதாக என்று அவர் கூறுகிறார். "நாங்கள் ஒரு வார் ரூம் உருவாக்கியுள்ளோம், ஒரு சிறிய குழு எங்களுடன் இணைந்து செயல்படுகிறது. எனக்குத் தெரிந்தவர்களை நான் அழைக்கிறேன். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உதவ விரும்புகிறார்கள்." என்று நம்பிக்கை அளிக்கிறார் பூனாவாலா. எனினும் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் அவர் கூறுகிறார். "அரசாங்கம் முன் வந்து பொறுப்பேற்க வேண்டும், ஏனென்றால் என்னைப் போன்றவர்களுக்கு அனைத்து மக்களுக்கும் உதவப் போதுமான ஆதாரங்கள் இல்லை." என்றும் இவர் கூறுகிறார்.
டெல்லியில் மருத்துவமனையை நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணியும் இதே விஷயத்தைக் கூறுகிறார். "ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களைப் பற்றி நினைத்தால் எனக்கு இரவில் தூக்கம் வருவதில்லை. அவர்களில் பலருக்குக் குடும்பங்கள் இருக்கும். சிலருக்கு சிறு குழந்தைகள் இருக்கும். அவர்கள் வளர்ந்து நாளை கேள்வி கேட்கும்போது, அவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்? என்று அவர் வருந்துகிறார்.
பிற செய்திகள் :
- திமுக சட்டமன்ற குழு தலைவரானார் மு.க. ஸ்டாலின் - அடுத்தது என்ன?
- காலமானார் டிராஃபிக் ராமசாமி: துயர் நிறைந்த இறுதி நிமிடங்கள்
- திருமாவளவனின் 4 வியூகங்கள் - பொதுத்தொகுதிகளில் விசிக வென்றது எப்படி?
- கொரோனா அலை: மிக மோசமான நிலையில் டெல்லி, ராணுவ உதவியை கோரும் அரசு
- மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












