நிலோபர் கஃபீல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட திமுகவில் இணைய முயன்றது காரணமா? கட்சி நடவடிக்கைக்கு அவரது பதிலென்ன? - தமிழ்நாடு அரசியல்

நிலோபர் கஃபீல்
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டது திருப்பத்தூர் மாவட்டத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. உள்கட்சி மோதல், மோசடிப் புகார், தி.மு.க மீதான பாசம் என பல்வேறு விவகாரங்கள் பின்னணியில் பேசப்படுகிறது. தன் மீதான சர்சைகளுக்கு முன்னாள் அமைச்சர் நிலோபர் சொல்வது என்ன?

திருப்பத்தூர் மாவட்ட கழக துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நிலோபர் கஃபீல், அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் கடந்த ஆட்சியில் அரசியல் உதவியாளராக இருந்த பிரகாசம் என்பவர் கொடுத்த 6 கோடி ரூபாய் பணமோசடிப் புகாரின் காரணமாகவே, நிலோபர் நீக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதன் காரணமாக, தி.மு.கவில் இணைவதற்கு நிலோபர் கஃபீல் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

``கட்சியில் இருந்து உங்களை நீக்கியதற்கான காரணம் என்ன?'' என பிபிசி தமிழுக்காக நிலோபர் கஃபீலிடம் பேசினோம்.

`` கட்சியில் இருந்து என்னை நீக்கியதற்கு மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணிதான் காரணம். அரசியலில் இருந்து என்னை ஒழிக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம். தேர்தலில் எனக்கு சீட் தரப்படவில்லை. அது தலைமையின் முடிவு. இதையடுத்து, `வாணியம்பாடியில் வேட்பாளர் செந்தில்குமாரை வெற்றி பெற வைப்பேன்' என்று கூறினேன். அதற்கேற்ப, வாணியம்பாடியில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக வேலை பார்த்து வந்தேன். எனக்குக் கட்சியில் எந்த வேலைகளையும் வீரமணி தருவதில்லை. கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பு இல்லை. இதைப் பற்றி முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் துணை முதல்வரிடம் புகார் தெரிவித்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதன்பிறகு, `என்னுடைய சமுதாயம் ஓட்டுப் போடவில்லை, இஸ்லாமியர்கள் ஓட்டுப் போட்டுத்தான் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்' என ஊடகங்களிடம் வீரமணி பேட்டியும் கொடுத்தார். இதற்கு நான் கொடுத்த பதிலில், `நான் எந்தக் காலத்திலும் தி.மு.கவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதில்லை. எப்போதும் அ.தி.மு.கதான்' என்றேன். இதையெல்லாம் மனதில் வைத்து என்னுடைய உதவியாளரை வைத்து தற்போது இந்தப் பிரச்னையை எழுப்பியிருக்கிறார்."

நிலோபர் கஃபீல்

அப்படியானால், உங்களுக்கு உதவியாளராக இருந்தவர் சொல்வது தவறு என்கிறீர்களா?

``உதவியாளர் பணம் வாங்கியிருக்கலாம். அதை இல்லையென்று நான் சொல்லவில்லை. ஆனால், அதற்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அதை நான் முழுமையாக மறுக்கிறேன். எதுவாக இருந்தாலும் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். என்னுடைய மகன், சம்பந்தி பெயர் போட்டு தகவல்கள் வருகின்றன. அவர்களுக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. 105 பேர் பணம் தந்ததாக பிரகாசம் சொல்கிறார். அவர்கள் யாரும் என்னிடம் வந்து பணம் கேட்கவில்லை. அவர் பணம் வாங்கியதால் அவரிடம் கேட்கிறார்கள்.

இப்போது அவரால் பணம் தர முடியவில்லை என்பதால் என் மீது புகார் தந்துள்ளார். இடையில் நிறைய முறை என்னிடம் வந்து, `எனக்குப் பணம் வேண்டும்' என்று கேட்டார். `என்னிடம் பணம் இருந்தால்தானே தர முடியும். என்னிடம் பணம் இல்லை' என்று கூறிவிட்டேன். நான் வகித்த துறையில் சம்பாதிக்க எதுவுமே இல்லை. இவர் சொல்லும் டேட்டா ஆபரேட்டர் வேலைகள் எல்லாம் வேண்டாம் என்று நான்தான் பரிந்துரை செய்தேன். ரத்து செய்யப்பட்ட வேலைகளுக்கு நானே எப்படி பணம் வாங்க முடியும்? எனக்கு இவர் மட்டும் பி.ஏ கிடையாது. நான்கைந்து பி.ஏக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சரியாக இருக்கிறார்கள். இவர் அரசியல் உதவியாளர் மட்டுமே.

இவர் பணம் வாங்கியதெல்லாம் எனக்குத் தெரியாது. கடந்த மாதம் ஜெயசுதா என்பவர் போலீஸில் புகார் கொடுக்கச் செல்லும் தகவல் தெரிந்ததும், உதவியாளர் பணியில் இருந்து அவரை விடுவித்துவிட்டேன். அதன்பிறகு, என்னை மிரட்ட ஆரம்பித்தார். `பணம் தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்' என்றார். அதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. பணத்தை மற்றவர்களிடம் வாங்கி சுழற்சி முறையில் வெளியில் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவருக்கு சிக்கல் வந்துள்ளது. அதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை."

உங்கள் உறவினர்களுக்கு அவரது கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்ததாகச் சொல்கிறாரே?

`` என்னுடைய உறவினர்களின் கணக்குகளை யார் வேண்டுமானாலும் சரிபார்க்கலாம். அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை நானே தருகிறேன். அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். ஒரு நயா பைசாவைக் கூட அவர் எனக்கும் தரவில்லை. என் உறவினர்களுக்கும் தரவில்லை."

``மே 3 ஆம் தேதி டி.ஜி.பியிடம் உங்கள் உதவியாளர் புகார் அளித்துள்ளார். இவ்வளவு நாள்கள் கழித்து உங்களைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் ஏன்?"

`` என்னைக் கட்சியில் இருந்து நீக்கியதற்கு இது காரணம் அல்ல. நான் வேறு கட்சிக்கு மாற உள்ளதாக தலைமைக்கு சந்தேகம் வந்திருக்கலாம் .என்னை நீக்குவதாக இருந்தால் ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்து என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அப்படி எதையும் அவர்கள் கேட்கவில்லை. கே.சி.வீரமணி கூறினார் என்பதற்காக என்னை நீக்கிவிட்டார்கள். அப்படியானால், இந்தக் கட்சி என்ன ஒன் மேன் ஆர்மியா? கோடிக்கணக்கான தொண்டர்களின் கட்சி இது."

``நீங்கள் தி.மு.க பக்கம் செல்ல முயற்சிப்பதாக வெளிவரும் தகவல் உண்மையா?"

``அது உறுதியான தகவல் இல்லை. அதற்கான முயற்சிகளை நான் இன்னும் எடுக்கவில்லை."

இதையடுத்து, நிலோபர் கஃபீல் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியிடம் பிபிசி தமிழுக்காக விளக்கம் கேட்டோம். ``அவர் நன்றாகத்தான் இருந்தார். சீட் கொடுக்கவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் பேசுகிறார். சீட்டை இவருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. ஒரே நபருக்கு கொடுக்க வேண்டாம் என்பதற்காகத்தான் மாற்றிக் கொடுத்தோம். அதைப் புரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாக அவர் பேசி வருகிறார்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``இந்தக் கட்சி ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. இது ஒரு மிகப் பெரிய இயக்கம். என்னைக்கூட முதலில் ஒரு பதவியில் நியமித்தனர். பின்னர் மாற்றிக் கொண்டே இருந்தார்கள். அதேபோல்தான், வாய்ப்பு என்பது மாறி மாறித்தான் வரும். அதற்காக நாங்கள் கட்சிக்கு எதிராகவா செயல்பட்டோம்? கட்சியைப் பற்றிய அடிப்படையே தெரியாமல் இவ்வளவு நாள் அவர் இருந்துள்ளார். அவர் இஸ்லாமியர் என்பதால் அவருக்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தோம். அதை அவரால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்குக் காரணம், தலைமையை விமர்சித்துப் பேட்டி கொடுத்ததுதான். `மாவட்ட செயலாளர், துரைமுருகனோடு தொடர்பில் இருக்கிறார்', `பணம் வாங்கிக் கொண்டு சீட் கொடுத்துவிட்டார்' எனத் தலைமையை தாண்டி பேசினார். சீட்டை ஒதுக்கியது தலைமைதான். நான் ஒரு மாவட்டச் செயலாளராக இருக்கிறேன். இப்படியொரு தவறான பிரசாரத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :