கொரோனா இரண்டாம் அலையில் தமிழக கிராமங்கள் அதிக பாதிப்பை சந்திப்பது ஏன்?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா முதல் அலையின் தாக்கத்தைவிட இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் கடுமையாக இருக்கிறது. முதல் அலையை வெற்றிகரமாக எதிர்கொண்ட கிராமங்கள் பலவும், இரண்டாம் அலையில் தீவிர தாக்குதலையும், இறப்புகளையும் சந்தித்து வருகின்றன.

இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பலரும் நகரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்தனர். கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு வந்தவர்கள் பலரும் தங்களது கிராமங்களில் உள்ள சுகாதார நிலையங்களில் போதுமான படுக்கை மற்றும் ஆக்சிஜன் படுக்கை இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் காத்திருந்த காட்சிகளை தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன. கொரோனாவின் வீரியத்தை குறைக்கும் என நம்பப்பட்ட ரெம்டெசிவர் மருந்தை வாங்க பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வரிசையில் காத்துகிடந்தனர்.

தமிழகத்தின் கிராமங்களில் இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தை தமிழக அரசின் மருத்துவ அறிக்கையின் புள்ளிவிவரங்களே நமக்கு விளக்குகின்றன.

கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்கள், அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, ஈரோடு மாவட்டத்தில், கடந்த 2020 மே 31ஆம் தேதி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் ஒட்டுமொத்த மே மாதத்தில் கணக்கு எடுத்தால் கூட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 72 பேர் தான்.

கொரோனா நோயாளிகள் மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் இரண்டாம் அலையின்போது, 2021 மே மாதம் 31ஆம் தேதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,742 என பதிவாகியுள்ளது.

மதுரையில் 2020 மே மாதம் 31ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 97. அந்த எண்ணிக்கை, இரண்டாம் அலையில், 2021 மே மாதம் 31ம் தேதி, 695 என பதிவாகியுள்ளது.

''கொரோனாவுக்கு நகரம் - கிராமம் என்ற எல்லை தெரியாது''

கிராம பகுதிகளில் பாதிப்பும், இறப்புகளும் பெருமளவு உயர்ந்துள்ளது என்பதைதான் இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு பிரத்தியேக காரணங்கள் இல்லை என்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம்.

''இந்தியா முழுவதும் இந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று கிராமங்களில் அதிகமாக பதிவாகியுள்ளன. ஆனால் இதற்கு பிரத்யேக காரணங்கள் என எதுவும் இல்லை. கொரோனா வைரஸுக்கு கிராமம், நகரம் என்கிற எல்லைகள் எல்லாம் தெரியாது. கொரோனா பரவியுள்ளது என்று தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு, நகரங்களை விட கிராமங்களில் அதிக தாக்கம் ஏற்பட்டுள்ளது என ஒப்பிடுவது சரியானது அல்ல,'' என்கிறார்.

தமிழக அரசின் புள்ளிவிவரங்கள் கிராமங்களில் தொற்று அதிகரித்துள்ளதை காட்டுகிறது என்பதை நாம் குறிப்பிட்டபோதும், ''உலகளவில் இதுதான் நிலை. கிராமங்களில் தொற்று ஏற்பட்டதற்கு எந்த காரணமும் சொல்லமுடியாது,'' என்கிறார் செல்வவிநாயகம்.

சீல் வைக்கப்பட்ட கிராமங்கள்

கொரோனா பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

ஆனால் கிராமங்களில் கொரோனா தொற்று அதிகரித்ததால் தான் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பல கிராம பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது என சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர். இரண்டாம் அலையை கையாளுவதற்கு இந்தியா முழுவதும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் விமர்சிக்கிறார்கள். ஒருபுறம் தயார் நிலையில் மருத்துவமனைகள் இல்லை, மற்றொன்று இரண்டாம் அலையின் வீரியத்தை நாம் புரிந்துகொள்வதற்கு எடுத்துக்கொண்ட காலம் அதிகம் என்கிறார் சமூக ஆர்வலர் ஆனந்தன்.

''பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் இடம் இல்லை என நகரங்களுக்கு மக்கள் வந்ததை நாம் பார்த்தோம். ஈரோடு மாவட்டத்தில் கோட்டமல்லம் என்ற கிராமத்தில் 300 குடும்பங்கள், அதில் சுமார் 120க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த கிரமத்திற்குள் யாரும் வரக்கூடாது என தடை விதித்து, நோய் பரவலை கட்டுப்படுத்தினார்கள். இதுபோல தமிழகத்தில் பல கிராமங்களில் இந்த நிலை இரண்டாம் அலையில் ஏற்பட்டது,'' என்கிறார் ஆனந்தன்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மதுரை திருமங்கலம் பகுதியில் பொன்னமங்களம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் கிராம மக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 50க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அந்த கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

பொன்னமங்களம் கிராமத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டு செல்ல அரசு ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதாக கூறி, அந்த கிராம மக்கள் இரண்டு தனியார் ஆம்புலன்ஸ்களை வரவழைத்து கூட்டமாக சிகிச்சை மையத்திற்கு சென்றனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.

கிராமங்களில் கிளஸ்ட்டர் பரவல் அதிகம்

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறுகிறார் தமிழக பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி.

''கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையின் போது, கிராமங்களில் கிளஸ்டர் பரவல்கள் அதிகரித்தன. திருமணம், இறப்பு, வளைகாப்பு போன்ற குடும்ப நிகழ்வுகளில் பலரும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. பல கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கு இந்த விழாக்களில் தடுப்பு நடவடிக்கை பின்பற்றவில்லை என்பதுதான் காரணம். முதல் அலையைவிட,இரண்டாம் அலையின் தொடக்கத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஆலைகள், தொழிற்சாலைகள் பலவற்றுக்கும் கிராமங்களில் இருந்து ஊழியர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர். பணியாளர்கள் தொடர்ந்து பயணம் செய்தது, ஆரம்பகட்டத்தில் கொரோனா சோதனைகள் செய்துகொள்ளாமல் இருந்தது ஆகியவற்றால் தொற்று அதிகரித்தது,'' என்கிறார் குழந்தைசாமி.

மேலும், "கிராமங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் சென்று பார்த்தது, கடைகள், பால் சொசைட்டி, உள்ளூர் சந்தை என பல இடங்களில் முக கவசம் அணியாமல் இருந்தது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தது, வெளியிடங்களுக்கு சென்று வருபவர்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தனித்து இல்லாமல் இருந்தது போன்ற பல காரணங்களால் தொற்று ஏற்படும் வாய்ப்பை அதிகரித்தது" என்கிறார் குழந்தைசாமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :