கொரோனா காலத்தில் நீரிழிவு, இருதய நோய் பாதிப்புள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கொரோனா இரண்டாம் அலை காலத்தில் நீரிழிவு நோய் மற்றும் இருதய கோளாறு உள்ள குழந்தைகளை அதிக கவனத்துடன் பார்த்துக்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை குழந்தைகள் மத்தியில் பாதிப்பு மிகவும் குறைவாக காணப்பட்டாலும், நீரிழிவு நோய் மற்றும் இருதய கோளாறு உள்ள குழந்தைகள் பாதிப்புக்கு ஆளானால், அவர்கள் மீண்டுவர அதிக சிரமப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் வீடுகளுக்குள் இருப்பதால், மனசோர்வு அதிகமாக இருக்கும் என கூறும் மருத்துவர்கள், பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திலும் கவனத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என்கிறார்கள்.
பிபிசி தமிழிடம் பேசிய சிறப்பு மருத்துவர்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இருதயநோய் மருத்துவராக பணியாற்றுபவர் ராஜேஷ்.
''இருதய நோய்கோளாறுகள் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் மிகவும் குறைந்து வருகிறது. பிறப்பில் இருதயத்தில் ஓட்டை உள்ள குழந்தைகள் மற்றும் இருதயத்தில் உள்ள தமனிகள்/அறைகள் மாறியுள்ள குழந்தைகள் என இரண்டு வகையில் இருப்பார்கள். இரண்டாவது வகையைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பு தேவை. இரண்டு வகையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக கொரோனா காலத்தில் அவர்களுக்கு சளி, இருமல் போன்றவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும்,'' என்றார் மருத்துவர் ராஜேஷ்.
''குழந்தைகளுக்கு பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே கொடுக்கவேண்டும். ஐஸ்கிரீம், மிட்டாய்கள் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். மூச்சு பயிற்சி, கடுமையான உடற்பயிற்சிகளில் அவர்களை ஈடுபடுத்த கூடாது. மூச்சு திணறல் மற்றும் பேதி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்,''என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அளவில் மஹாராஷ்டிராவில்தான் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் மத்தியில் கொரோனா தாக்கம் இருப்பது பதிவாகியுள்ளது என்று கூறிய மருத்துவர் ராஜேஷ், ''தமிழகத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில்தான் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இருந்தபோதும், பெற்றோர்கள் கவனத்துடன் இருக்கவேண்டும். ஏற்கனவே குழந்தைகளுக்கு தரப்பட்ட மருந்துகளை முறையாக பின்பற்றவேண்டும்,''என்றார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவைப்படும் பராமரிப்பு பற்றி மருத்துவர் பாலமுருகனிடம் பேசினோம். தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நல பிரிவில் இணை ஆசிரியராக அவர் பணியாற்றுகிறார்.
''நீரிழிவு நோயை பொறுத்தவரை, உணவுகளில் சர்க்கரை அளவு உயர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். பழங்களில் துவர்ப்பு சுவை உள்ள பழங்கள்-கொய்யா, நெல்லி, பேரிக்காய் ஆகியவற்றை தரலாம். இனிப்பு உணவுகளை அடிக்கடி தரக்கூடாது. எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலக்காமல் கொடுக்கலாம். ப்ரோடீன் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் தரவேண்டும்,''என்றார்.
''குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிக்கவேண்டும். யூடியுபில் வீட்டில் இருந்தபடி செய்வதற்கான எளிய பயிற்சிகள் காணக்கிடைக்கின்றன. ஸ்கிப்பிங் செய்யலாம். பெற்றோரும், குழந்தைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்தால் குழந்தைகள் ஆர்வத்துடன் செய்வார்கள். குழந்தைகளை உற்சாகமான மனநிலையில் வைத்திருக்கவேண்டும். அவர்களுக்கு மனசோர்வு இருந்தால், அதனை விலக்கவேண்டும். அவ்வப்போது, குழந்தையின் சர்க்கரை அளவை சரிபார்த்துக்கொள்வது அவசியம்,''என்றார்.
பெற்றோர்கள் அதிகம் வெளியிடங்களில் செல்பவர்களாக இருந்தால், குழந்தைகளை கவனமாக கையாளவேண்டும் என்கிறார் பாலமுருகன். ''கொரோனா தடுப்புக்காக பின்பற்றவேண்டிய கைகழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை பின்பற்றி பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளை தவிர்ப்பது நல்லது. நீரிழிவு நோய் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், முன்னெச்சரிக்கை அவசியம்,''என்கிறார்.
பிற செய்திகள்:
- சசிகலாவை சந்திக்காத தினகரன்; திடீர் ஆடியோ ஏன்?- அ.தி.மு.கவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
- ஒன்பது உயிர் கொண்ட ஒரு கண் தலைவன் – யார் இந்த 'ஹமாஸ்' டெய்ஃப்?
- மோதி Vs மமதா: மேற்கு வங்க தலைமைச் செயலரை பதவி விலகச் செய்து தலைமை ஆலோசகராக்கிய முதல்வர்
- 3 குழந்தைகள் வரை பெற்றெடுக்க சீன அரசு அனுமதி - கோபத்தில் மக்கள்
- இஸ்ரேலில் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வருகிறதா? புதிய கூட்டணிக்கு எச்சரிக்கை
- கொரோனா வைரஸால் பாதித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வருமா?
- நடிகை மீனா பேட்டி: ''ரஜினியுடன் அந்த விஷயத்தில் பயங்கர போட்டி உண்டு"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












