இந்தியாவில் வெள்ளைப் பூஞ்சை: கொரோனா நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாகும் புதிய கிருமி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கடந்த மாதத்தில் ஒரு நடுத்தர வயதுடைய ஆண் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையின் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
நிலைமை மோசமடையவே, அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். உயிரைக் காப்பதற்காக அவருக்கு அபாய கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்டீராய்டுகள் கொடுக்கப்பட்டன.
இப்படிப்பட்ட மருந்துகள் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் பல நாள்கள் இருந்த பிறகு அந்த நோயாளி கொரோனாவில் இருந்து மீண்டார். வீட்டுக்குத் திரும்பத் தயாரானார். அப்போதுதான் மருந்துகளுக்குக் கட்டுப்படாத உயிரைப் பறிக்கும் பூஞ்சையின் தாக்குதலுக்கு அவர் ஆளாகியிருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
கேண்டிடா ஆவ்ரிஸ் (C. auris) என்பது அதன் பெயர். மருத்துவமனைகளில் இருக்கும் உலகின் மிக மோசமான கிருமி இது. பத்தாண்டுகளுக்கு முன்பு அதைக் கண்டுபிடித்தார்கள்.
உலகமெங்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போரிடம் இது அதிகமாகக் காணப்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் இறந்து போவதற்கான வாய்ப்பு 70 சதவிகிதம்.

பட மூலாதாரம், Getty Images
"கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கும் காலகட்டத்தில் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக வேகமாகத அதிகரித்திருக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏராளமான நோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஸ்டீராய்டுகள் கொடுக்கப்படுகின்றன. அதுதான் காரணமாக இருக்கலாம்," என்கிறார் மும்பையைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணரான ஓம் ஸ்ரீவஸ்தவா.
எந்தெந்த பூஞ்சை தொற்றுகள் அதிகரித்து வருகின்றன?
கொரோனா இரண்டாம் அலை ஏராளமான மக்களை அடித்துக் கொண்டுபோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் போட்டிருக்கிறது. அது பூஞ்சைகளை வரவழைக்கும் இடமாகப் பார்க்கிறார்கள்.
முதலில் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டது. இது மிகவும் அரிதானது. அதே நேரத்தில் ஆபத்தானது. மூக்கு, கண், சில நேரங்களில் மூளை ஆகியவற்றை இது பாதிக்கும். இதுவரை 12,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 200 பேர் இறந்துவிட்டதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இப்போது ஆளைக் கொல்லும் மற்றொரு பூஞ்சை கொரோனா நோயாளிகளைத் தாக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்பிடித்துக் கூறுகிறார்கள். குறிப்பாக ஒரு வாரம் அல்லது 10 நாள்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்களிடம் இது தொற்றியிருக்கிறது.
கேன்டிடா ஃபங்கி எனப்படும் இந்தப் பூஞ்சையில் இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று ஆவ்ரிஸ் மற்றொன்று அல்பிகன்ஸ். இரண்டும் மனிதர்களைக் கொல்லக்கூடியவை.
நுரையீரலைப் பாதிக்கும் ஆஸ்பர்கிலஸ் எனப்படும் பூஞ்சைக் குழுவும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை.
பூஞ்சைகளில் 50 லட்சத்துக்கு வகையான வகைகள் இருக்கின்றன. அவற்றில் கேன்டிடா மற்றும் ஆஸ்பெர்கிலஸ் ஆகிய இரு குழுக்களும்தான் அதிக மனித இறப்புகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.
இவற்றில் கேன்டிடா என்ற பூஞ்சை பல இடங்களிலும் பொருள்களிலும் இருக்கும். குளியலறைத் திரைகள், கணினித் திரைகள், மருத்துவரின் ஸ்டெத்தோஸ்கோப், ரயில் தண்டவாளங்கள் என எங்கும் இது இருக்கக்கூடும்.
சி. ஆவ்ரிஸ் பூஞ்சை பெரும்பாலும் ரத்த ஓட்டத்தில் தொற்றக்கூடியது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சுவாச உறுப்புகளையும், நரம்பு மண்டலத்தையும், உள்ளுறுப்புகளையும், தோலையும்கூட இவை பாதிக்கின்றன.
ஆஸ்பெர்கிலஸ் எப்போதும் சுற்றுச்சூழலில் இருக்கிறது. சில நேரங்களில் ஏ.சி. அல்லது வெப்பமூட்டும் சாதனங்களில் காணப்படுகிறது. பொதுவாக பூஞ்சைகள் சுவாசக் குழாய் வழியாக உடலுக்குள் புகுவதை நமது எதிர்ப்பு சக்தி தடுத்து விடுகிறது.
ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தோல், ரத்த நாளங்கள் போன்றவற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருப்பதால், பூஞ்சைகள் சுவாசக் குழாய்கள் வழியாக உடலுக்குள் புகுந்துவிட முடிகிறது.
மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட, வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட கொரோனோ நோயாளிகளில் 20 முதல் 30 சதவிகிதம் பேரை இந்தப் பூஞ்சைகள் தாக்குவதாக மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் உள்ள கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் எஸ்.பி.காலந்திரி கூறுகிறார்.
பூஞ்சை தாக்கியதன் அறிகுறிகள் என்னென்ன?
கொரோனா தொற்று ஏற்பட்டால் உருவாகும் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்றவைதான் பூஞ்சை நோய்களுக்கும் அறிகுறிகள்.
கேண்டிடா பூஞ்சைத் தொற்றின் தீவிரம் அதிகமானால் மூக்கு, வாய், நுரையீரல், வயிறு, நகக்கண் போன்றவற்றில் வெள்ளை நிறத்தில் புண் தோன்றும். இதை "வெள்ளைப் பூஞ்சை" என்கிறார்கள்.
ரத்த ஓட்டத்தில் கலந்து இந்தக் கிருமி உடலின் பல்வேறு பாகங்களுக்குச் செல்லும்போது, ரத்த அழுத்தம் குறையும். காய்ச்சல், வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதைத் தொற்று போன்றவை ஏற்படும்.
இந்தத் தொற்றுகள் ஏன் ஏற்படுகின்றன?
குறைந்தபட்சம் 5 சதவிகித கொரோனா நோயாளிகள் தீவிரப்பாதிப்புக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு தீவிரச் சிகிச்சைப் பிரிவு தேவைப்படுகிறது. பலருக்கு நீண்டகாலம் அங்கேயே தங்கியிருக்க வேண்டியிருக்கிறது.
வென்டிலேட்டர் உதவியுடன் யாருக்கெல்லாம் சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அவர்களுக்கெல்லாம் பேக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நோய்த்தொற்று பரவல் தடுப்பு குறைந்திருப்பதும், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழிவதும்தான் முக்கிய காரணம் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தரமற்ற பாதுகாப்பு கவசங்களுடன் நீண்ட நேரம் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், கைகழுவும் எண்ணங்கள் குறைந்திருப்பது, சுத்தப்படுத்திலும் கிருமி நீக்கும் முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பது போன்றவை தொற்று பரவல் கட்டுப்பாடு குறைந்திருப்பதற்குக் காரணங்களாகும்.

பட மூலாதாரம், Reuters
"பெருந்தொற்றுக் காலம் நீடித்திருப்பதால் சுகாதாரப் பணியாளர்கள் சோர்வடைந்துவிட்டார்கள். நோய்த்தொற்றைத்தடுக்கும் நடைமுறைகள் குறைந்துவிட்டன. அதுதான் முக்கியக் காரணம்" என்கிறார் அருணாலோக் சக்ரபர்த்தி என்ற மருத்துவத்துறை நிபுணர்.
வேறு காரணங்கள் என்ன?
ஸ்டீராய்டுகளையும் மற்ற மருந்துகளையும் அதிக அளவில் பயன்படுத்துவதால் உடலின் எதிர்ப்புத்திறன் பலவீனமாகி விடுகிறது. ஏற்கெனவே இருக்கும் உடல் பாதிப்புகளும் சேர்த்து கொரோனா நோயாளிகளை பூஞ்சைத் தொற்றுக்கு ஏதுவாக்குகின்றன.
"உடலின் எதிர்ப்புத்திறன் கணிசமாகக் குறைந்த பிறகுதான் இதுபோன்ற பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படுகின்றன. இதைச் சந்தர்ப்பவாதத் தொற்றுக்கள் என்றும் கூறலாம்" என்கிறார் மருத்துவத்துறை நிபுணர் ஷக்காரி ரூபின்.
எச்ஐவி/எய்ட்ஸ் நோயாளிகள் இதுபோன்ற பூஞ்சைத் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறார் ரூபின். "கொரோனாவுடன் பூஞ்சைத் தொற்றுக்கான தொடர்பு மிகவும் குறைவுதான். ஆனால் இப்போது இந்தியாவில் இந்தத் தொடர்பு மிகவும் சாதாரணமாகி வருகிறது" என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.
"பூஞ்சைத் தொற்றைத் கண்டறியும் முறைகள் எளிதானவை அல்ல. நுரையீரலில் இருந்து மாதிரிகளை எடுக்க வேண்டும். மருந்துகளின் விலையும் அதிகம். இதுபோன்ற தொற்றுகளுக்குச் சிகிச்சையளிப்பது மருத்துவர்களுக்கு கவலையளிக்கக்கூடியது. மூன்று புறம் இருந்தும் தாக்கப்படும் நிலை. நோயாளியின் நுரையீரல் ஏற்கெனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு பேக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கும். இப்போது பூஞ்சையும் சேர்ந்திருக்கிறது," என்கிறார் மருத்துவ நிபுணர் காளந்திரி.
"இது கிட்டத்தட்ட தோற்றுப்போகும் சண்டையில் போராடுவதைப் போன்றது," என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- சசிகலாவை சந்திக்காத தினகரன்; திடீர் ஆடியோ ஏன்?- அ.தி.மு.கவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
- ஒன்பது உயிர் கொண்ட ஒரு கண் தலைவன் – யார் இந்த 'ஹமாஸ்' டெய்ஃப்?
- மோதி Vs மமதா: மேற்கு வங்க தலைமைச் செயலரை பதவி விலகச் செய்து தலைமை ஆலோசகராக்கிய முதல்வர்
- 3 குழந்தைகள் வரை பெற்றெடுக்க சீன அரசு அனுமதி - கோபத்தில் மக்கள்
- இஸ்ரேலில் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வருகிறதா? புதிய கூட்டணிக்கு எச்சரிக்கை
- கொரோனா வைரஸால் பாதித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வருமா?
- நடிகை மீனா பேட்டி: ''ரஜினியுடன் அந்த விஷயத்தில் பயங்கர போட்டி உண்டு"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












