கருப்பு பூஞ்சை தொற்றால் தூத்துக்குடி மருத்துவமனையில் ஒருவர் பலி? மருத்துவர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்றால் கோவில்பட்டியை சேர்ந்த ஒருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இவர், கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர ராஜன் (60). இவர் வெல்டிங் பட்டறை தொழில் செய்துவந்தார். சவுந்தரராஜன் மற்றும் அவரது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் சவுந்தரராஜன் தனது 2 கண்களையும் திறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. இதில், அவரது கண்ணில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனை மருத்துவர், அவரை மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி சவுந்தர ராஜன் உயிரிழந்தார்.
இது குறித்து சவுந்தர ராஜன் மகன் விஜய் ராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கடந்த 8ஆம் தேதி என் அப்பாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் மருந்து எடுத்துக் கொண்டதால் காய்ச்சலில் இருந்து அப்பா குணமடைந்தார். மீண்டும் மறுநாள் கொரோனா அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை 8 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். 17ஆம் தேதி காலை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் வீடு திரும்பிய பின்னரும் அவருடைய இரு கண்களும் திறக்க முடியாமல் கண் வலி ஏற்பட்டது.
இதனால் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த அதே தனியார் மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டார். மருத்துவரின் ஆலோசனைப்படி அப்பாவுக்கு தலையில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஆரம்ப நிலையில் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதனால்தான் அவரால் கண்களைத் திறக்க முடியவில்லை என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இந்த நோய்க்கு அங்கே சிகிச்சை அளிக்க மருந்து இல்லை என்று கூறி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
17ம் தேதி இரவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தோம்.
கருப்பு பூஞ்சை நோய் தாக்கியிருப்பதாக தனியார் மருத்துவர் கூறியுள்ளதால் அவருக்கு ஆக்சிஜன் வசதியுள்ள தனி அறை வழங்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டேன். ஆனால் பொது பிரிவில் படுக்கை வழங்கப்பட்டது" என்றார் அவர்.
மேலும் பேசிய விஜய் ராஜ், "17ஆம் தேதி இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 18ம் தேதி மதியம் வரை மருத்துவர்கள் யாரும் சிகிச்சை அளிக்கவில்லை. பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனை முடிவு வராததால் அதுவரை அவருக்கு எந்த சிகிச்சையும் வழங்கப்படவில்லை.
அப்பாவின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. பின்னர் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் கொடுத்த மருத்துவ அறிக்கையை பார்த்த அரசு மருத்துவர் இது ஒரு புதிய நோயாக உள்ளது இதற்கு சிகிச்சை அளிக்கவோ, மருந்துகள் வழங்கவோ வாய்ப்புகள் இல்லை என்றார்.
ஆன்டிபயாடிக் மருந்துகள், கண் வலி மருந்து உள்ளிட்டவைகளை எழுதி கொடுத்து இந்த மருந்துகள் அரசு மருத்துவமனையில் இல்லை தனியார் மருந்தகத்தில் வாங்கி வருமாறு கூறினார். மருத்துவர் எழுதி கொடுத்த மருந்துகளை வாங்கி கொடுத்தேன்.
மீண்டும் அவருக்கு கண்ணில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும்படி மருத்துவர்கள் கூறினர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் இருந்து குணமடைந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆனதால் அவர் உடல்நிலை மிகவும் பலவீனமாக இருந்தது.
கண்ணில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் போது 20 முதல் 25 நிமிடங்கள் அசையாமல் கண்ணை மூடாமல் இருக்க வேண்டும். கண்ணை மூடினாலோ அல்லது உடலை அசைத்தாலோ பரிசோதனை செய்ய முடியாது. ஆனால் என் அப்பாவுக்கு உடல் பலவீனமாக இருந்ததால் தொடர்ச்சியாக கண்களை திறந்து வைத்திருக்க முடியவில்லை பலமுறை முயற்சி செய்தும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க முடியவில்லை.
இந்நிலையில் 19-ஆம் தேதி இரவு கண்களில் அதிகமாக வலி ஏற்பட்டுள்ளதாக என்னிடம் கூறினார். கண் வீக்கம் ஏற்பட்டு கண்ணை திறக்க முடியாமல் இருந்தது அதாவது அவரால் தானாக கண் திறக்க முடியாமல் கைகளை கொண்டு மட்டுமே கண்ணை திறக்க முடிந்தது.
வியாழக்கிழமை அதிகாலை அப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனை தரப்பில் என் அப்பா கருப்பு பூஞ்சை நோயினால் உயிர் இழக்கவில்லை, கொரோனா தொற்று காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் கருத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் அப்பாவுக்கு கொரோனா நெகடிவ் என தனியார் மருத்துவமனை சான்று அளித்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் எடுத்த பரிசோதனையில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் ஆரம்பகட்டத்தில் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதில் எதை நம்புவது?" என்றார் அவர்.

என் அப்பா கரும்பு பூஞ்சை நோய் தொற்றால் உயிரிழக்காவிட்டாலும் வரும் நாட்களில் இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். மருந்துகளைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் விஜய் ராஜ்.
சவுந்தர ராஜன் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி உயிரிழந்தாரா அல்லது கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து அதிகாரபூர்வ தகவலை தெரிந்து கொள்ள பிபிசி தமிழ் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலனிடம் தொடர்பு கொண்டு கேட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சவுந்தர ராஜன் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். ஆனால் கருப்பு பூஞ்சை நோய் அதற்குக் காரணமில்லை. கொரோனாவால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு மூச்சுத்திணறல் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.
சவுந்தர ராஜனுக்கு அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த 10 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அங்கிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரது மகன் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை காரணமாக சவுந்தர ராஜனுக்கு தொற்று இல்லை என கூறினாலும் நாங்கள் எடுத்த சிடி ஸ்கேனில் அவருடைய நுரையீரலில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களால் 100 சதவீதம் சொல்ல முடியும் சவுந்தர ராஜன் கொரோனா தொற்று காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றார் ரேவதி பாலன்.
மேலும் பேசிய அவர், சவுந்தர ராஜன் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி உயிரிழந்ததாக வதந்தி பரவி வருகிறது. பாக்டீரியாக்களின் தாக்குதலால் ஏற்படும் சாதாரண கண் வலி மட்டுமே அவருக்கு இருந்தது. மருத்துவத்துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் மிக்க அரசு மருத்துவர் குமாரசாமி எடுத்த சிடி ஸ்கேனில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் பணியாற்றிய செவிலியர் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்தக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் குறித்த ஆய்வு முடிவுகள், அறிகுறிகள் நன்றாகவே தெரியும் என்றார் ரேவதி பாலன்.
பிற செய்திகள்:
- மோதி Vs மமதா: முதல்வர்கள் என்ன கைப்பாவைகளா? கொதித்தெழுந்த மேற்கு வங்க முதல்வர்
- ராஜீவ் வழக்கு: 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட குடியரசு தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
- இந்திய கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உள்நாட்டு தேவைக்கு முன்னுரிமை தருவது ஏன்?
- கொரோனா சுய பரிசோதனை கிட்டுகளுக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் - எப்படி பரிசோதனை செய்வது?
- ராமநாதபுரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை: உண்மை நிலவரம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












