கொரோனா வைரஸ் தடுப்பூசி: இந்த வேகத்தில் போனால் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட எவ்வளவு காலம் பிடிக்கும்?

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், ஷ்ருதி மேனன்
- பதவி, பிபிசி ரியாலிட்டி செக்
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தித் திறன், இந்திய அரசு அளித்துள்ள வாக்குறுதி, அதன் எதிர்பார்ப்பு, புதிய தடுப்பூசிகள் வருவதற்கான சாத்தியம் ஆகியவை குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதி வெளியிடப்பட்ட கட்டுரை இது.
இதனிடையே வரும் டிசம்பருக்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் வந்து சேரும் என்றும் இதன் உதவியோடு 108 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெள்ளிக்கிழமை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இது நடைமுறை சாத்தியமில்லாத வாக்குறுதி என்று பலரும் பிரகாஷ் ஜவடேகர் பதிவிலேயே விமர்சித்து வரும் நிலையில், உண்மை நிலைமையை ஆராயும் இந்த கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம். ---
இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசித் தேவையை சமாளிக்கப் போராடி வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிவரை தம்மால் ஏற்றுமதி செய்ய முடியாது என்றும் நாட்டின் மிகப்பெரிய தடுப்பூசி மருந்து உற்பத்தியாளரான சீரம் நிறுவனம் கூறியுள்ளது.
கொரோனா உலகத் தொற்றை சமாளிக்க தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறது இந்திய அரசு. இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 200 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யவிருப்பதாக இந்திய அரசு உறுதி கூறியுள்ளது.
இந்தியாவில் என்னென்ன கொரோனா தடுப்பூசிகள் உள்ளன?
இந்தியாவில் தற்போது மூன்று வகை கொரோனா தடுப்பூசிகளை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் கோவிஷீல்டு (ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராசெனீகா நிறுவனமும் சேர்ந்து உருவாக்கியது), கோவேக்சின் (இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது) ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
மூன்றாவது தடுப்பூசி ரஷ்யாவின் ஸ்புட்னிக் V.
அஸ்ட்ராசெனீகாவிடம் உரிமம் பெற்று கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா. இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது.
இந்த இரண்டு தடுப்பூசியையும் சேர்த்து இதுவரை 35.6 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக கடந்த வாரம் இந்திய அரசாங்கம் கூறியது. ஆனால், இவ்வளவு டோஸ்களும் இன்னும் வழங்கப்படவில்லை.
மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் 11.6 கோடி டோசுக்கு ஆர்டர் தந்துள்ளன. ஆனால், இவற்றில் எவ்வளவு டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியை இந்தியாவில் செலுத்த ஏப்ரல் மாதம் அனுமதி வழங்கப்பட்டது. இம்மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு 2.1 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்து வந்து சேர்ந்தது. விரைவில் இது தடுப்பூசி மையங்களில் கிடைக்கும்.
இந்தியாவால் எவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி உற்பத்தி செய்ய முடியும்?
இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் 200 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யவேண்டும் என்ற இந்தியாவின் கனவுத் திட்டம் நிறைவேறினால், இந்தியாவின் 130 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் அது பெருமளவில் உதவி செய்யும். ஆனால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 8 தடுப்பூசிகளில் இரண்டு தடுப்பூசிகள் பண்டுவ (கிளினிக்கல்) பரிசோதனையின் தொடக்க நிலையில் உள்ளன. மூன்று தடுப்பூசிகள் பண்டுவப் பரிசோதனையின் கடைசி கட்டத்தில் உள்ளன.
கிளினிகல் ட்ரையல் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் பண்டுவப் பரிசோதனை என்பது, ஆய்வகப் பரிசோதனை முடிந்து மனிதர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனை ஆகும். இப்படி மனிதர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனை மூன்று கட்டங்களாக நடக்கும்.

"இன்னும் ஒப்புதல் கிடைக்காத தடுப்பூசிகளை நாம் கணக்கில் கொள்ளமுடியாது," என்கிறார் உறுபிணியியல் வல்லுநரும், பொது நல வல்லுநருமான டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா.
"அனுமதி பெற்ற தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும்," என்கிறார் அவர்.
75 கோடி டோஸ் கோவிஷீல்டு, 20 கோடி டோஸ் கோவோவேக்ஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்யவேண்டும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் கோவோவேக்ஸ் என்பது நோவாவேக்ஸ் என்ற தடுப்பூசியின் உள்நாட்டு வடிவம். இதற்கு இன்னும் இந்தியாவில் அனுமதி கிடைக்கவில்லை.
பாரத் பயோடெக் நிறுவனம் இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்கிறது. 55 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும், 10 கோடி டோஸ் மூக்கில் செலுத்தும் சொட்டு மருந்து வடிவிலான தடுப்பு மருந்தும் உற்பத்தி செய்யவேண்டும் என்பது அந்த நிறுவனத்தின் இலக்கு. இந்த சொட்டு மருந்து பரிசோதனையின் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது.
தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக, சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துக்கு சுமார் 2,900 கோடி ரூபாயும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு சுமார் 1,500 கோடி ரூபாயும் வழங்குவதாக இந்திய அரசு ஏப்ரல் மாதம் வாக்குறுதி வழங்கியது.
ஆகஸ்ட் மாதம் முதல் தங்களுடைய உற்பத்தித் திறன், மாதத்துக்கு முறையே 10 கோடி டோஸ், 8 கோடி டோஸ் என்ற அளவில் அதிகரிக்கும் என்று இரண்டு நிறுவனங்களும் கடந்த வாரம் தெரிவித்துள்ளன.
திறன் அதிகரித்த பிறகு, இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் தோராயமாக 90 கோடி டோஸ் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், இது அவர்களது இலக்கைவிட 36 சதவீதம் குறைவு ஆகும்.
இந்தியாவில் கூடுதல் சப்ளையை வழங்குவதற்காக உலக அளவிலான தடுப்பூசி உற்பத்தியாளர்களான ஃபைசர், மாடெர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகியவர்களுடன் பேசி வருவதாகவும் இந்திய அரசு கூறியுள்ளது. ஆனால், தங்களிடம் எவ்வளவு தடுப்பூசி கிடைக்கும் என்பது குறித்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் விவாதிக்க முடியும் என்று இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

பட மூலாதாரம், Reuters
கச்சா பொருள் பற்றாக்குறை
இந்தியா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இன்னொரு சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அது தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான கச்சா பொருள் பற்றாக்குறை.
அமெரிக்காவில் இந்த கச்சாப்பொருள்களை பெறுவதற்கு அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் யு.எஸ். டிஃபன்ஸ் புரொடக்ஷன் ஆக்ட் என்ற சட்டத்தை அமல்படுத்தியுள்ளார் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன். இதையடுத்து, இந்தக் கச்சாப் பொருள்களை வாங்குவதில் இந்திய உற்பத்தியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான குறிப்பான கச்சாப்பொருள்களை வழங்குவதாக கடந்த மாதம் அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது. எனினும், அமெரிக்காவில் இருந்து வர வேண்டிய கச்சா பொருள்களுக்கு இன்னும் பற்றாக்குறை உள்ளதாக கூறுகிறது சீரம் நிறுவனம்.
மருந்து பொருள்களுக்கான சப்ளை சங்கிலி சிக்கலானதும், தனிச்சிறப்பான தன்மை உடையது என்றும் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சப்ளை சங்கிலித் தொடர் வல்லுநர் டாக்டர் சாரா ஷிஃப்லிங் கூறியுள்ளார்.
"உலக அளவில் தேவை மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், பிற தொழில்களில் நடப்பதைப் போல தேவை அதிகரிக்கும்போது திடீரென்று புதிய சப்ளையர்கள் தோன்றி அளிப்பை விரைவாக அதிகரிக்க இயலாது. இல்லாவிட்டால், அத்தகைய புதிய சப்ளையர்களை நம்ப மாட்டார்கள்," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், AFP
எவ்வளவு விரைவாக தடுப்பூசி போடப்படுகிறது?
கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கியது. இந்த கட்டுரை எழுதப்படும்போது, 18.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 36 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு இது ஒரு நாளைக்கு 16 லட்சம் டோஸ் என்பதாக குறைந்துவிட்டது.

"சப்ளை என்பது தடுப்பூசி திட்டத்தின் ஒரு பக்கம் மட்டும்தான். கிடைக்கிற தடுப்பூசி உரிய காலத்தில் மக்களின் கைகளில் போடப்படவேண்டும் என்பதும் முக்கியம்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் டாக்டர் லஹாரியா.
கிடைக்கிற டோஸ்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து அரசாங்கம் திட்டமிடவேண்டும் என்பது அவரது கருத்து. தற்போது செல்லும் வேகத்தில் சென்றால் இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த 4 ஆண்டுகள் ஆகலாம்.
டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, 18-44 வயதினருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை
தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய தேவை காரணமாக, தடுப்பூசி ஏற்றுமதிக்கு மார்ச் மாதம் தடை விதித்தது இந்தியா.
சிறு அளவிலான தடுப்பூசிக் கொடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. உலக அளவிலான தடுப்பூசி பகிர்வுத் திட்டமான கோவேக்ஸ் திட்டத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்த இரண்டையும் தவிர்த்துப் பார்த்தால், பெரிய அளவில் தடுப்பூசி ஏற்றுமதி விரைவில் தொடங்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதி வரையில் தங்களால் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய இயலாது என்று சீரம் நிறுவனம் கூறிவிட்டது.

பிற செய்திகள்:
- இந்தியாவை அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கு தட்டுப்பாடு
- தந்தையின் உயிர் காக்க போராடிய ஒரு குடும்பத்தின் உருக்கமான கதை
- செவ்வாயில் இருந்து சீனாவின் சுரொங் ரோவர் அனுப்பிய முதல் படங்கள்
- கொரோனா சடலங்களுக்கு மத்தியில் சிகிச்சை: புதுச்சேரியில் என்ன நடக்கிறது?
- தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் அதிகாரம் இனி ஆணையரிடம் - அரசு முடிவுக்கு என்ன காரணம்?
- The Family Man - Season 2 தமிழர்களுக்கு எதிரான வெப் சீரீஸ் தொடரா?
- சீமான்: "2024, 2026 தேர்தல்களிலும் தனித்தே போட்டி - எந்த சமரசமும் கிடையாது"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












