கக்கன் : தமிழக அரசியல் களத்தில் அவரின் பங்களிப்பு என்ன?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய அரசியல் அமைப்பு அவையின் உறுப்பினர், கோயில் நுழைவுப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியின் தலைவர், முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என சேவையாற்றியவர் பூ.கக்கன். தமிழக அரசியல் களத்தில் அவரது பங்களிப்பு என்ன?
அரசியலில் பல பதவிகளை வகித்தாலும், எளிமையாகவே வாழ்ந்து மறைந்த தலைவர்களில் கக்கனும் ஒருவர்.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தும்பைப் பட்டி கிராமத்தில் பூசாரிக் கக்கன் - குப்பி தம்பதிக்கு 1909ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி முதலாவது மகனாகப் பிறந்தார் கக்கன். இவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர்.
பள்ளிக் கல்வியை மேலூர் தொடக்கப்பள்ளி, திருமங்கலம் பி.கே.என். நாடார் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் படித்த அவர், எஸ்.எஸ்.எல்.சிக்குப் பிறகு படிப்பைத் தொடரவில்லை. இதற்குப் பிறகு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும் சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் தலைவருமான அ. வைத்தியநாதரின் அறிமுகம் கக்கனுக்குக் கிடைத்தது.

கக்கனை வழிநடத்திய வைத்தியநாதர்
மதுரையில் உருவாக்கப்பட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் பணிகளில் கக்கனை ஈடுபடுத்தினார் வைத்தியநாதர். கிராமங்களில் இரவுப் பள்ளிகளைத் துவங்குவது, அவற்றுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவது, மேற்பார்வை பார்ப்பது ஆகியவையே இவரது ஆரம்ப காலப் பணிகளாக இருந்தன. மேலூரில் துவங்கி, சிவகங்கை வரை அனைத்து ஒடுக்கப்பட்டோர் கிராமங்களிலும் இரவுப் பள்ளிகளைத் துவங்க உதவினார் கக்கன்.
1932ல் சிறாவயலில் பொதுவுடமைச் சிந்தனையாளர் பா. ஜீவானந்தம் தலைமையில் மதுரையில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த சொர்ணம் பாரதியை சீர்திருத்த முறையில் திருமணம் செய்துகொண்டார் கக்கன்.
1934ல் மதுரைக்கு வந்த மகாத்மா காந்தியைச் சந்தித்த கக்கன், சேவாசங்கப் பணிகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார். 1939ல் காங்கிரசில் இணைந்த கக்கன், அ. வைத்தியநாதரின் கோவில் நுழைவுப் போராட்டத்தில் துணை நின்றார். 1938ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத் தலைவர் அ. வைத்தியநாதர், அந்தச் சங்கத்தின் செயலர் கோபலஸ்வாமி ஆகியோருடன் ஆலம்பட்டி ஸ்வாமி முருகானந்தம், கக்கன், சேவாலய ஊழியர் முத்து, மதிச்சயம் சின்னய்யா, விராட்டிபத்து பூவலிங்கம் ஆகிய ஐந்து பட்டியலினத்தவரும் விருதுநகர் கவுன்சிலர் சண்முகானந்த நாடாரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்து, வரலாற்றில் இடம் பிடித்தனர்.
அ. வைத்தியநாதரை கிட்டத்தட்ட தனது வளர்ப்புத் தந்தையைப் போலவே கருதினார் கக்கன். 1955ல் அவர் உயிரிழந்தபோது, அவரது மகன்களைப் போல தானும் தலையை மழித்துக்கொண்டார்.
1941-42ல் பட்டியலின மாணவர்களுக்காக மேலூரில் கக்கன் துவங்கிய தங்கும் விடுதி, அவர் மறைவுக்குப் பிறகும் பல ஆண்டுகள் இயங்கிவந்தது.

மதுரை மண்ணில் வெற்றிப் பெற்ற கக்கன்
இதற்குப் பிறகு தொடர்ச்சியாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கக்கன், சிறைக்குச் செல்ல நேரிட்டது. அலிப்பூர் சிறையில் 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார் கக்கன். கட்சியிலும் அவருக்குப் பொறுப்புகள் தேடிவந்தன. இந்தியாவின் விடுதலை நெருங்கியபோது, 1946 ஜனவரியில் அமைக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டசபையின் உறுப்பினராகப் பதவியேற்றார் கக்கன்.
இந்தியா குடியரசு ஆன பிறகு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் கக்கன். 1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கக்கன், வெற்றிபெற்று பொதுப் பணித்துறை அமைச்சரானார். அதற்குப் பிறகு 1962ல் சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கக்கன், வேளாண்மைத் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவிவகித்தார்.
கக்கன் உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதும் அதில் பலர் இறந்ததும் கக்கனின் பொது வாழ்வில் மிகப் பெரிய விமர்சனத்திற்குரிய நிகழ்வாக அமைந்ததது.
இந்த நிகழ்வு குறித்து குடும்பத்தினரிடம் ஏதாவது கக்கன் பகிர்ந்துகொண்டிருக்கிறாரா? "நான் அப்போது பதின்ம வயதுச் சிறுவன். என்னிடம் ஏதும் அவர் சொன்னதில்லை. ஆனால், ஒரு சம்பவம் நினைவிருக்கிறது. அப்போது நடந்துகொண்டிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எனக்குப் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. பதினான்கு வயதுச் சிறுவனான நானும் சில இடங்களில் போராட்டத்தில் போய் நின்றேன். இது ஏதோ ஒரு பத்திரிகையில் சிறிய செய்தியாக வந்துவிட்டது. இதைப் பார்த்த அப்பா, வீட்டிற்கு வந்தவுடன் அவர் உதை, உதையென உதைத்துவிட்டார். இப்போதும் அதை மறக்க முடியாது" என்கிறார் சத்யநாதன்.
இதற்குப் பிறகு 1967ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டாலும் தி.மு.க. வேட்பாளர் ஓ.பி. ராமனிடம் தோல்வியடைந்தார் கக்கன்.
அ. வைத்தியநாதருக்குப் பிறகு, காமராஜரையே தலைவராக ஏற்றுக்கொண்ட கக்கன், கடைசிவரை அவரது தலைமையின் கீழேயே செயல்பட்டார். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஸ்தாபன காங்கிரசாகவும் இந்திரா காங்கிரசாகவும் பிரிந்தபோது, கக்கன் ஸ்தாபன காங்கிரசிலேயே இருந்தார்.

இவர் யார் தெரியுமா? - கக்கனுக்காக கோபித்து கொண்ட எம்.ஜி.ஆர்
கக்கனின் வாழ்வில் மிகவும் குறிப்பிடப்படும் ஒரு சம்பவம், அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, மதுரை அரசு மருத்துவமனையில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டு, முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் தலையீட்டால், நல்ல வார்டிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்.
இது குறித்து அவரது மகன் சத்யநாதனிடம் கேட்டபோது, "அப்பாவுக்கு நீண்டகாலமாகவே பார்க்கின்சன் நோய் இருந்துவந்தது. அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று வருவார். அவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால், அரசு மருத்துவமனையில் சி வார்டில் இடம் கிடைக்கும். அதாவது ஒரு அறையில் எட்டு கட்டில்கள் இருக்கும். அதுதான் சி - வார்ட். அப்படித்தான் ஒரு முறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரைச் சந்திப்பதற்காக அங்கே வந்தார். உடன் காளிமுத்துவும் வந்தார். அவர் முதல்வரிடம், கக்கனும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதைப் பற்றிச் சொன்னார். அதைக் கேட்ட முதல்வர் அவரையும் சந்தித்துவிட்டுப் போகலாம் என்றார். அப்படிச் சந்திக்கச் சென்றபோது அவர் சி வார்டில் ஒரு கட்டிலில் இருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோனார். உடனடியாக டீனை அழைத்த முதல்வர், இவர் யார் தெரியுமா, இந்திய அரசியல் சாஸன அவையில் இடம்பெற்றிருந்தவர். இப்படி செய்கிறீர்களே என்று கோபித்துக்கொண்டார். உடனடியாக ஏ வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார்" என நினைவுகூர்கிறார் கக்கனின் மகன் டாக்டர் பி.கே. சத்யநாதன்.
கக்கன் - சொர்ணம் பாரதி தம்பதிக்கு பத்மநாதன், பாக்கியநாதன், கஸ்தூரி பாய், காசி விஸ்வநாதன், சத்தியநாதன், நடராஜ மூர்த்தி என 6 குழந்தைகள். மூத்தவர் பத்மநாதன் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக இருந்தார். காசி விஸ்வநாதன் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றினார். பாக்கியநாதன் சென்னை சிம்சனில் பணியாற்றினார். டாக்டர் சத்யநாதன் ஆலந்தூரில் மருத்துவ அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றுள்ளார். கக்கன் போராட்டம், சிறை என்று இருந்த காலத்தில் சொர்ணம் பாரதியின் வருவாயிலேயே குடும்பம் நகர்ந்தது.

"பரிசுப் பொருட்களைக்கூட வாங்க மறுத்தவர் கக்கன்"
"மிகவும் நேர்மையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய அடிப்படையான குணங்கள். அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், எங்கே சாப்பிடுவது என்பதில்கூட மிகக் கவனமாக இருந்தார். யாராவது பரிசுப் பொருட்களைக் கொடுத்தால், அவற்றை ஏற்க மாட்டார். ஒருவரிடம் ஏதாவது பரிசுப் பொருட்களை வாங்கிவிட்டால், பிறகு அவருக்குப் பதிலுக்கு ஏதாவது செய்தாக வேண்டியிருக்கும். அமைச்சராக அப்படிச் செய்வது சரியாக இருக்காது என்று சொல்வார்" என நினைவுகூர்கிறார் சத்யநாதன்.
பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு நீர்த்தேக்கங்களைக் கட்டியதன் பின்னணியில் கக்கனின் பங்களிப்பு இருந்தது. மதுரை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதிலும் பெரும் பங்குவகித்தார் கக்கன்.
1971ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார் கக்கன். அதற்குப் பிறகு மெல்ல மெல்ல பொது வாழ்க்கையிலிருந்து விலகினார். 1981ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












