"பப்ஜி" மதன் கைது: தனிப்படை போலீஸ் தர்மபுரியில் பிடித்தது

மதன்

பட மூலாதாரம், Twitter

தடைசெய்யப்பட்ட விளையாட்டை ஆபாச வர்ணனையுடன் யு டியூபில் நேரலை செய்த "பப்ஜி" மதன் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்படை போலீசார் அவரை தருமபுரியில் பிடித்து கைது செய்தனர். அவரது மனைவி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட "பிளேயர்ஸ் அன்நோன் பேட்டில்கிரவுண்ட்" என்ற விளையாட்டை மிகுந்த ஆபாசமான வர்ணனையுடன் யு டியூபில் நேரலை செய்துவந்த புகாரில் பப்ஜி மதன் என்ற நபர் போலீசால் தேடப்பட்டுவந்தார். அவருடைய மனைவி கிருத்திகா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

மதன் மீது 159 புகார்கள் பதிவாகியுள்ளன. அதில் ஒரு புகாரின் பேரில் பெண்களை அபாசமாகப் பேசுதல், ஆபாசமாகத் திட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடைசெய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இதுதவிர, தன்னுடைய விளையாட்டை நேரலையாகப் பார்ப்பவர்களிடம் இருந்து பெரும் அளவில் பணம் வாங்கிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளன.

மதன் எப்படிக் கைதுசெய்யப்பட்டார் என்ற விவரத்தை காவல்துறை இதுவரை வெளியிடவில்லை. அவர் விரைவில் சென்னை கொண்டுவரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

Player Unknown Battleground எனப்படும் பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இருந்தபோதும் சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த விளையாட்டை பலர் விளையாடிவருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விளையாட்டை சிலருடன் இணைந்து விளையாடுவதோடு, அதனை யூடியூபில் நேரலையாக குரல் வர்ணனையுடன் மதன் என்ற இளைஞர் ஒளிபரப்பிவந்தார்.

இதற்காக "மதன்" என்ற யூடியூப் சேனலை அவர் நடத்திவந்தார். ஆனால், அவரது குரல் வர்ணனையில் ஆபாசமான வசைகள் சகட்டு மேனிக்கு இடம் பெற்றன. குறிப்பாக பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவது, உடன் விளையாடுவோரை ஆபாசமாகப் பேசுவது ஆகியவை இதில் அடக்கம்.

பப்ஜி

பட மூலாதாரம், Getty Images

இவரது சேனலுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து வயதுவந்தோருக்கான பப்ஜி சேனல் ஒன்றை "டாக்சிக் மதன் 18 பிளஸ்" என்ற பெயரில் இவர் தொடங்கினார். இந்த சேனலிலும் பப்ஜி விளையாடுவது ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது. இதிலும் ஆபாசமான சொற்கள் சகட்டு மேனிக்கு இடம்பெற்றன.

இந்த இரண்டு யூடியூப் சேனல்களையும் லட்சக் கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இவருடைய யூடியூப் சேனலைப் பின்தொடர்வோரில் பதின் பருவத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகம். குறிப்பாக 13 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களே இவரைப் பெரிதும் பின்தொடர்ந்தனர்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மிகத் தீவிரமாக செயல்பட்டு பதிவுகளை வெளியிட்டுவந்தார். இந்த நிலையில், இவருடைய விளையாட்டு வீடியோ ஒன்றில் பெண்களை மிக ஆபாசமாகப் பேசும் காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாயின. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, வேறு சில யூடியூப் பதிவர்கள் இவர் 18 வயதுக்குக் கீழே உள்ள பெண் குழந்தைகளுடனும் வயதுக்குத் தகாத சொற்களுடன் உரையாடிய திரைப் பதிவுகளை வெளியிட்டனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் சென்னை போலீசின் சைபர் குற்றப் பிரிவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து, மதன் போலீஸ் விசாரணைக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :