toxic madan 18+ யூடியூபர் 'பப்ஜி' மதனின் மனைவி கைது - ஆபாசமாகப் பேசிய பெண்ணின் குரல்

டாக்சிக் மதன் 18 பிளஸ்

பட மூலாதாரம், Twitter

யூடியூபில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை நேரலை செய்த விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மதன் என்ற நபரின் மனைவியை காவல்துறை கைதுசெய்துள்ளது.

பப்ஜி மதனை சென்னை நகரக் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்தபோதும் அவர் வராத நிலையில், சேலத்திலிருந்த அவரது வீட்டிலிருந்து அவரது தந்தை, மனைவி ஆகியோர் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்களிடம் மதனின் யூடியூப் சேனல் இயங்கும் விதம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின்போது, ஆபாச வார்த்தைகளுடன் மதன் பேசிவந்த 'டாக்சிக் மதன் 18+' என்ற யூடியூப் சேனலின் நிர்வாகியாக அவரது மனைவியே இருந்துவந்ததை காவல்துறையினர் அறிந்தனர்.

மேலும் இந்த வீடியோக்களில் ஆபாசமாகப் பேசிய பெண்ணின் குரலும் மதனின் மனைவியுடையதுதான் என்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவிருக்கிறார்.

Player Unknown Battleground எனப்படும் பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இருந்தபோதும் VPN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த விளையாட்டை பலர் விளையாடிவருகின்றனர். இந்த நிலையில், இந்த விளையாட்டை சிலருடன் இணைந்து விளையாடுவதோடு, அதனை யூடியூபில் குரல் வர்ணனையுடன் நேரலையாக சேலத்தைச் சேர்ந்த மதன் என்ற இளைஞர் ஒளிபரப்பிவந்தார்.

இதற்காக "மதன் ஓபி" என்ற யூடியூப் சேனலை அவர் நடத்திவந்தார். ஆனால், அவரது குரல் வர்ணனையில் ஆபாசமான வார்த்தைகள் தாராளமாக இடம்பெற்றுவந்தன. குறிப்பாக பெண்களைத் தரக்குறைவாகப் பேசும் வார்த்தைகள், உடன் விளையாடுபவர்களை ஆபாசமாக பேசும் வார்த்தைகள் இடம்பெற்றுவந்தன.

YouTube

பட மூலாதாரம், Getty Images

இவரது சேனலுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து வயதுவந்தோருக்கான பப்ஜி சேனல் ஒன்றை "டாக்சிக் மதன் 18 பிளஸ்" என்ற பெயரில் இவர் துவங்கினார். இந்த சேனலிலும் பப்ஜி விளையாடுவது ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது. இதிலும் ஆபாசமான வார்த்தைகள் சாதாரணமாக இடம்பெற்றன.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மிக தீவிரமாக செயல்பட்டு பதிவுகளை வெளியிட்டுவந்தார். இந்த நிலையில், இவருடைய விளையாட்டு வீடியோ ஒன்றில் பெண்களை மிக ஆபாசமாகப் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, வேறு சில யூடியூப் பதிவர்கள் இந்த இளைஞர் 18 வயதுக்குக் கீழே உள்ள பெண் குழந்தைகளுடனும் வயதுக்குத் தகாத வார்த்தைகளுடன் உரையாடிய ஸ்க்ரீன் ஷாட்களை வெளியிட்டனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை நகரக் காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, அந்த இளைஞரை காவல்துறையின் விசாரணைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் வரவில்லை.

பிற செய்திகள்: