'ஜகமே தந்திரம்' கார்த்திக் சுப்பராஜ் பேட்டி: ரஜினி, தனுஷ் சம்மதித்தால் இருவரையும் இணைத்துப் படம் இயக்குவேன்

பட மூலாதாரம், karthik subbaraj, Facebook
- எழுதியவர், ச.ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
'பேட்ட' படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்துடன் கைக்கோர்த்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
பரோட்டா மாஸ்டர்- லண்டன் தாதா என கதைக்கரு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப இருக்கும் நிலையில், பிபிசி தமிழுக்காக அவரிடம் பேசினோம்.
நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பிறகு 'ஜகமே தந்திரம்' பல மொழிகளில் வெளியாகிறது. பட அனுபவம் பற்றி சொல்லுங்கள்.
படத்தின் கதையை நாங்கள் தொடங்கியது 2015ல். நிறைய மாற்றங்கள், அனுபவங்கள் என இந்த பயணம் பெரியதுதான். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இதை ரசிகர்களிடம் இதை கொண்டு போய் சேர்ப்பதில் மகிழ்ச்சி".
கதைக்குள் தனுஷ் வந்தது எப்படி?
"மதுரை ரெளடி ஒருவர் 'காட்ஃபாதர்' மாதிரியான படங்களில் வரும் ரெளடியுடன் சேரும்போது நடக்கும் விஷயங்கள்தான் கதை. தனுஷிடம் இந்த கதையை 2015-ல் சொல்லியிருந்தேன். அப்போதே அவருக்கு இந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. நான் முன்பே சொன்னது போல, இத்தனை ஆண்டுகளில் இந்தப் படத்தில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. எது நடந்தாலும் இந்த படம் நடந்தே தீர வேண்டும் என்பதில் என்னை போலவே, அவரும் உறுதியாக இருந்தார். அதுவும் இந்த படம் இப்போது வெளியாக முக்கியமான காரணம்".
தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் இருவரும் தீவிர ரஜினி ரசிகர்கள். படப்பிடிப்பில் ரஜினி குறித்து என்ன பேசுவீர்கள்?

பட மூலாதாரம், @StudiosYNot, Twitter
"தனுஷ், ரஜினி குடும்பம் என்பதால் நிறைய விஷயங்கள் அவரைப் பற்றி கேட்பேன். எப்படி இருப்பார், குடும்ப விழாக்கள் போனால் என்னவெல்லாம் பேசுவார் என்றெல்லாம் பேசுவோம். குடும்பம் என்பதை தாண்டி அதற்கு முன்பிருந்தே தனுஷ் மிகப்பெரிய ரஜினி ரசிகர். படத்தில் சில காட்சிகளை ரஜினி நடித்திருந்தால் எப்படி செய்திருப்பார் என்பதை தனுஷ் நடித்து காட்டுவார். இதுபோல ரஜினி ரசிகர்களாக எங்களுக்குள் நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டோம்".
'ஜகமே தந்திரம்2' கதைக்காக ஆர்வமாக காத்திருப்பதாக தனுஷ் சொல்லியிருந்தாரே?
"கதை பண்ணும் போது இந்த படத்தின் அடுத்த பாகம் எடுக்கும் ஐடியாவில் நான் இல்லை. ஆனால், படப்பிடிப்பின் போது தனுஷ் இது குறித்து நிறைய பேசியிருக்கிறார். இந்த கதையில் சொல்லிய விஷயங்கள், கதாபாத்திரம் அடுத்த பாகம் எடுத்து செல்வதற்கான வெளியைத் தருவதாக இருவரும் பேசினோம். ஆனால், இப்போதைக்கு அது குறித்தான எண்ணம் இல்லை. எதிர்காலத்தில் பார்க்கலாம்".
நீங்கள் இயக்கிய படங்களில் அடுத்த பாகம் இயக்க வேண்டும் என்றால் எந்த படத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
"நான் இயக்கிய எல்லா படங்களுக்குமே அடுத்த பாகம் இயக்க முடியும். 'ஜிகர்தண்டா' அசால்ட் சேது பாத்திரம், 'பேட்ட' படத்தில் தலைவர் பாத்திரம், 'ஜகமே தந்திரம்' சுருளி கதாபாத்திரம் என அனைத்துமே அடுத்து கதை செய்யலாம் என்பதற்கான இடம் இருக்கக்கூடிய கதாபாத்திரங்கள்தான்.
ரசிகர்களுக்கு பிடித்த பாத்திரம், அடுத்த பாகமாக எடுத்தாலும் பார்ப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் எனும் போது அதை செய்வதில் தவறில்லை. ஆனால், அதற்கான தேவையோ எண்ணமோ எனக்கு இன்னும் வரவில்லை".
'ஜகமே தந்திரம்' படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி?

பட மூலாதாரம், @joju_george, Instagram
"நிறைய காட்சிகள் அதுபோல உண்டு. அவை எப்படி திரையில் வரும் என்ற ஆர்வமும் ரசிகர்கள் போலவே எங்களுக்கும் இருந்தது. அவை எல்லாம் நாங்கள் எதிர்பார்த்ததை விட, தொழில்நுட்ப ரீதியாகவும் நடிப்பாகவும் ஒரு படி மேலே வந்துள்ளது. அதில் சந்தோஷம்".
'பேட்ட' தவிர்த்து நீங்கள் இயக்கிய எல்லா படங்களிலுமே சந்தோஷ் நாராயணன் இசைதான். உங்கள் நட்பு குறித்து சொல்லுங்கள்?
"இந்த படத்தை 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கும் போதே சந்தோஷிடம் சொல்லியிருந்தேன். கதை கேட்டு அவருமே இசையமைக்க ஆர்வமாக இருந்தார். ஏனெனில், மதுரை லண்டன் என இரு வெவ்வேறு நிலப்பரப்புகள் சந்திக்கும் போது இசைக்கு புதிதாக பரிசோதிக்க நிறைய இடம் இருந்தது. அதனால் அதில் சந்தோஷ் மிகவும் மெனக்கெட்டார். அதை சிறப்பாகவும் கொண்டு வந்திருக்கிறார். லண்டன் நிலப்பரப்புக்கு ஏற்ற இசை எனும் போது அங்குள்ள இசைக்கலைஞர்கள், இங்கு மதுரைக்கான இசை எனும் போது இங்குள்ள இசைக்கலைஞர்கள் என இரண்டும் இணைந்து அழகாக வந்திருக்கிறது".

பட மூலாதாரம், @Music_Santhosh, Twitter
அனிருத், சந்தோஷ் தவிர வேறு எந்த இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற விருப்பம்?
"நான் மிகப்பெரிய இளையராஜா ரசிகன். நேரில் பார்த்து பத்து நிமிடங்களாவது அவரிடம் பேச வேண்டும் என்ற விருப்பம் உண்டு. அதேபோல, ரஹ்மான் சார் இசையும் பிடிக்கும். அவரை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவருடன் இணைந்து பணியாற்றவும் விருப்பம் உள்ளது".
நடிகர் சுஷாந்த் சிங் இறப்பின்போது பாலிவுட்டில் நெப்போட்டிசம் காரணமாகப் பேசப்பட்டது. அதுபோல, இங்கு தமிழ் சினிமாவில் குழுவாதம் பேசப்பட்டதே?
"எனக்கு தெரிந்து குழுவாதமோ, நெப்போட்டிசமோ தமிழ் சினிமாவில் இருப்பதாக தெரியவில்லை. என் குடும்பத்தில் யாருமே சினிமா தொடர்பான பின்னணி இல்லாதவர்கள். இந்த பின்னணியில் இருந்து வந்து நான் படங்கள் செய்கிறேன். ரசிகர்களும், தமிழ் சினிமாவும் பின்புலம் உட்பட மற்ற விஷயங்கள் எது பற்றியும் கவலைப்படமால் புது திறமையாளர்களுக்கு கதவை திறந்தே வைத்திருக்கும் நிலை உள்ளது.
ராமச்சந்திரன் என்ற ஒரு நடிகர் இருக்கிறார். அவர் 'ஜிகர்தண்டா'வில் இருப்பார். 'இறைவி', 'பேட்ட', அடுத்து விக்ரம் படத்திலும் இருப்பார். இதுபோன்று நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அடுத்தடுத்து வருவது குழுவாதம் கிடையாது. நடிகரா அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். கதை எழுதும்போது கதைக்குள் இவர் பொருந்துவார் என்பது தெரியும். அந்த இணக்கமான சூழலில் மீண்டும் இணைந்து பணியாற்றுவதை நிச்சயமாக குழுவாதம் என சொல்ல முடியாது. இது எல்லா மொழி சினிமாவிலும் உள்ளது.
ஆனால், நிச்சயமாக புது திறமையாளர்களுக்கான வாய்ப்பும் கொடுக்கப்பட வேண்டும். அதில் நானும் தெளிவாகவே உள்ளேன். இந்த படத்தில் கூட ஷரத் ரவி என்பவர் முக்கியமான ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு நிச்சயம் அவரது பாத்திரம் பெரிய அளவில் பேசப்படும்."

பட மூலாதாரம், @karthiksubbaraj, Twitter
குறும்படம், சினிமா, ஓடிடி என எல்லா தளங்களிலும் இயக்கும் நபர் நீங்கள். இதில் உள்ள ஒற்றுமை - வேற்றுமை?
"சினிமாவுக்கான கதையை சில கட்டுப்பாடுகளோடு செய்தாக வேண்டும். ஓடிடியில் அதுபோல் இல்லை. ஆனால், இப்போது அதிலுமே கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன. எனக்கு தெரிந்து வித்தியாசமாக கதை எழுதுவது என்பது எல்லா தளங்களுக்குமே ஒன்றுதான்"
இலங்கை தமிழர்கள், புலம் பெயர்தல் போன்ற விஷயங்கள் படத்தில் உள்ளது தெரிகிறது. இந்தப் பொருளில் வெளியான 'தி ஃபேமிலிமேன்' தொடர் பல விமர்சனங்களை சந்திக்கிறதே?
"சீசன்1, சீசன்2 என இரண்டுமே நான் பார்க்கவில்லை. அதில் சில விஷயங்கள் தப்பாக காட்டப்பட்டுள்ளதாக பலர் சொல்லி கேள்விப்பட்டேன். என்னை பொருத்தவரை கதை தப்பாக சொல்லியிருக்கிறார்கள் என்றால் அதை சுட்டிக் காட்டலாம். தடை வேண்டாம். தப்பாக காட்டியிருக்கிறார்கள் என்றால் சரியான தகவலைக் கொண்ட படம்தான் அதற்கான பதிலாக இருக்க வேண்டும். ஏனெனில், ஒரு விஷயத்தை தவறாக காட்டுவதற்கான படம் வருகிறது என்றால் அதை சரியாக காட்டும் படம் வர வேண்டும். மக்கள் அதை ஆதரிக்க வேண்டும்".
தயாரிப்பாளராக எது போன்ற படங்கள் கொண்டு வர எண்ணம் உள்ளது?
"திறமையான புது இயக்குநர்கள், நடிகர்கள், கதை இவை எல்லாம் எடுத்து வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. குறிப்பிட்ட கதை மட்டுமே எடுக்க வேண்டும் என்றில்லை. கமர்ஷியல், த்ரில்லர் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கதை படிக்கும் போது மக்களுக்கு பிடித்த வகையில் இருக்க வேண்டும்".
புத்தகங்களை திரைப்படங்களாக்கும் முயற்சி இப்போது அதிகம் பார்க்க முடிகிறது. இது போல உங்களிடமும் எதிர்பார்க்கலாமா?
"நிச்சயமாக அதை செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய 'கடவுள் தொடங்கிய இடம்' புத்தகத்தின் உரிமையை வாங்கியுள்ளேன். அதை தொடராக எடுக்கும் எண்ணம் உண்டு. சீக்கிரமே அதற்கான முயற்சியில் இறங்குவேன். நாவலை எடுத்து படமாக்குவது ஆரோக்கியமான ஒன்றுதான். எனக்கு அது புதிது. இதற்கு முன் வெற்றிமாறன் நாவலை வைத்து படங்கள் கொடுத்துள்ளார். அது எனக்கு பெரிய உந்துதல்".
'அண்ணாத்த' படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்துக்கான இயக்குநர்கள் பெயர்களில் உங்கள் பெயரும் அடிபடுகிறதே?

பட மூலாதாரம், @rajinikanth, Twitter
"தலைவருக்காக எப்போதும் நான் படம் இயக்கத் தயாராகவே இருக்கிறேன். அந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் மகிழ்ச்சி. தனுஷ், ரஜினி இருவரையும் இணைத்து படம் இயக்க இரண்டு பேரும் சம்மதித்தால் நிச்சயம் செய்யலாம்".
'சியான் 60' & நவரசா குறித்து?
'நவரசா' ஒன்பது இயக்குநர்கள் சேர்ந்து இயக்கிய தொகுப்பு. மணிரத்னம் தயாரித்திருக்கிறார். ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என நினைக்கிறேன். அதேபோல், 'சியான்60' படத்திற்கான படப்பிடிப்பு மும்முரமாக போய் கொண்டிருந்தது. ஆனால், இந்த கொரோனா பொது முடக்கத்தால் அனைவரது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளோம். தளர்வுகள் வந்து படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்ததும் மீண்டும் தொடங்குவோம். விக்ரம் நடிப்புக்கு நான் பெரிய ரசிகன். படமும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்".
பிற செய்திகள்:
- கொரோனா நிதிக்காக தங்கச் சங்கிலி கொடுத்த சௌமியாவுக்கு இரண்டே நாளில் வேலை
- தனக்கென ஒரு தனி விண்வெளி நிலையம்: அதற்கென மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பிய சீனா
- ரோனால்டோவால் கோகோ கோலா சந்தை மதிப்பு சரிவு: நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துமா?
- அதிருப்தியாளர்களை அணிதிரட்டும் சசிகலா: எடப்பாடியை வீழ்த்துமா புதிய வியூகம்?
- அதானி குழுமத்தின் பங்குதாரர்களுக்கு ஒரே நாளில் பெரும் இழப்பு - ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












