கொரோனா நிதிக்காக தங்கச் சங்கிலி கொடுத்த சௌமியாவுக்கு இரண்டே நாளில் வேலை

சௌமியா
    • எழுதியவர், ஞா.சக்திவேல் முருகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தன் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் இருந்தாலும், தனது தங்கச் சங்கிலியை கொரோனா நிதிக்காக கழற்றிக் கொடுத்த பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு இரண்டே நாட்களில் வேலை வழங்கியுள்ளது.

யார் அந்தப் பெண்? அவர் ஏன் தன் சங்கிலியை கழுற்றிக் கொடுத்தார்?

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றிருந்தார். சேலத்திலிருந்து மேட்டூருக்கு காரில் பயணம் செய்தபோது, வழியில் நின்றிருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கோரிக்கை மனுவோடு தனது கழுத்திலிருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை கொரோனா நிதிக்கு என்று குறிப்பிட்டு வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்த்தவர்தான் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பொட்டனேரி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் சௌமியா.

ஜூன் 13ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் 'மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளதோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்து செளமியாவின் கடிதத்தையும் இணைத்திருந்தார்.

சௌமியா

முன்னதாக செளமியா தனது கோரிக்கை மனுவில், "நான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. எனது தந்தை ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனக்கு இரண்டு அக்கா.

அவர்களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த ஆண்டு எனது அம்மா நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். அம்மாவின் மருத்துவச் செலவுகளால் எனது அப்பாவின் சேமிப்பு பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. தற்போது அப்பாவுக்கு ஓய்வூதியமாகக் கிடைக்கும் 7000 ரூபாயில் மூவாயிரம் ரூபாய் வாடகையாகச் செலவாகிறது. மீதமுள்ள நாலாயிரம் ரூபாயில்தான் குடும்பம் இயங்கி வருகிறது. நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம். நான் அரசு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால்கூட உதவியாக இருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

செளமியா கோரிக்கை மனுகொடுத்த இரண்டே நாள்களில்,(15.06.2021) அமைச்சர் செந்தில் பாலாஜியும், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகமும் செளமியாவின் வீட்டிற்கே சென்று வேலை வாய்ப்புக்கான கடிதத்தை வழங்கியுள்ளனர். செளமியா வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள JSW Steel நிறுவனத்தில் செளமியாவுக்கு அலுவலக பணிக்கான வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. மாத சம்பளமாக 17,000 ரூபாய் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தொலைபேசி வாயிலாக செளமியாவிடம் பேசி வாழ்த்தும் தெரிவித்தார்.

பிபிசி தமிழுக்காக நம்மிடம் பேசிய செளமியா, "கடந்த ஆண்டு என்னுடைய அம்மா நுரையீரல் பிரச்னையால் இறந்து விட்டார். என் அம்மா மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. எங்களைப்போல் கொரோனா காலத்தில் ஏராளமானவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் சிறு அளவிலாவது உதவ வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், குடும்பப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. அப்பாவின் ஓய்வுப்பணமான 7000 ரூபாய் கொண்டுதான் குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

சௌமியா

மேட்டூர் அணை திறப்புக்காக முதலமைச்சர் வருகை தருகிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளோம். வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொடுங்கள் என்று கோரிக்கை மனுவைத் தயாரித்தேன். முதல்வர் வரும்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டிருந்தேன். நாமே மிகவும் சிரமத்தில் இருக்கிறோம் என்று சொன்னார். நான் போட்டிருக்கும் சங்கிலியைக் கொடுத்து விடலாமா என்று கேட்டேன். அவரும் சரி என்று சம்மதித்தார். முதல்வர் வரும் நாளில் காலையில் தோன்றிய யோசனைதான். கோரிக்கை மனுவோடு என்னுடைய தங்கச் சங்கிலியையும் இணைத்து கொரோனா நிதிக்காக வழங்கினேன்.

முதல்வர் அடுத்த நாளே என்னுடைய கடிதத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு, எனக்கு விரைவில் என்னுடைய படிப்புக்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இரண்டே நாளில் என்னுடைய வீட்டுக்கே அமைச்சரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் நேரில் வந்து வேலை வாய்ப்புக்கான கடிதத்தை வழங்கினார்கள். முதலமைச்சர் நேரில் தொடர்புகொண்டு எனக்கு வாழ்த்துகளைத் தெரித்தார். உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறேன். நீங்கள் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு என்னுடைய பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

ஜூலை 1ம் தேதி வேலையில் சேர உள்ளேன். தற்போது எனக்கு அரசின் உதவி கிடைத்திருக்கிறது. இது ஒரு அடிப்படையான விஷயம்தான். எங்களுக்குச் சொந்தமாக வீடு, நிலம் இல்லை. சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பதுதான் எனது அடுத்த கனவு. ஆனால், அதற்கு முன்பு இதுநாள் வரை சந்தித்த பொருளாதார இழப்புகளைச் சரி செய்ய வேண்டும். அதன் பின்புதான் வீடு. அரசுப்பணியில் சேர போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகி வருகிறேன். எனக்குக் கிடைத்த உதவி மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :