ராம் மனோகர் லோஹியாவுக்கு காந்தி பிறப்பித்த கட்டளை - எதிர்வினை எப்படி இருந்தது?

பட மூலாதாரம், Lohia Trust
- எழுதியவர், பிரதீப் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர செயல்பாட்டாளராக உருப்பெற்று ஆங்கிலேயர் ஆட்சியின் கடைசி காலத்தில் இந்திய ஜனநாயக அரசியல் உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருந்தவர் ராம் மனோகர் லோஹியா. அவரது 54ஆம் இறந்த தினம் இன்று.
ராம் மனோகர் லோஹியா உத்தர பிரதேசத்தின் அம்பேத்கர் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூரில், 1910, மார்ச், 23இல் மார்வாரிக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஹீராலால் காங்கிரஸ் தலைவர். தாய்சாந்தா ஓர் ஆசிரியர். சிறுவயதிலேயே தாயை இழந்த ராம், தந்தையால் வளர்க்கப்பட்டார். தந்தையின் தேசியப் பணிகளை இளம் வயது முதலே கண்ணுற்ற ராம், இயல்பாகவே தேசியவாதியாக வளர்ந்தார்.
காந்தியின் தீவிர விசுவாசியாக இருந்த ஹீராலால், அவரை அடிக்கடி சந்திக்கச் சென்ற போதெல்லாம், தனது மகன் ராமுடன் செல்வார். அப்போதே காந்தியடிகள் மீது ராமுக்கு பிடிப்பு ஏற்பட்டது. காந்தியின் சுய கட்டுப்பாடு, ஆன்மிக வலிமை, தேசிய சிந்தனை ஆகியவை ராமுக்கு வழிகாட்டின. தனது பத்தாவது வயதிலேயே தந்தையுடன் சேர்ந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார் ராம்மனோகர் லோஹியா.
இவருக்கு 10 வயதாய் இருந்த போது 1920-ல் பால கங்காதர திலகர் மறைவை அடுத்து சிறு கடையடைப்பு நடத்தினார். இதுவே ராமின் முதல் விடுதலைப் போராட்டம் ஆகும். காந்தியை சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருந்த ராம், 1921 ல் ஜவஹர்லால் நேருவைச் சந்தித்தார். அவரது முற்போக்கு சிந்தனைகள் ராமை வசீகரித்தாலும், சில கருத்துக்களில் முரண்பட்டார். நேருவுடனான கொள்கை மாறுபாடுகளை வாழ்வின் இறுதிவரை ராம் மனோகர் லோஹியா வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் இருவரும் ஒத்த சிந்தனைகளுடன் இயங்கினர்.
இந்தியாவுக்கு 'டொமினியன் அந்தஸ்து வழங்க அதாவது இங்கிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு சுயாட்சியுடன் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த 1928இல் சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது அதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மாணவராக இருந்த ராம், 'சைமனே திரும்பிப் போ' போராட்டத்தைத் தனது பகுதியில் நடத்தினார்.
1929-ல் காசி இந்து பல்கலைக்கழகத்தில் இடைநிலைப் படிப்பை முடித்த ராம், தனது பி.ஏ. (ஹானர்ஸ்) படிப்பை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் (வித்யாசாகர் கல்லூரி) முடித்தார். பிறகு, ஜெர்மனியில் உள்ள பெர்லின் பலகலைக்கழகத்தில் படிக்க விரும்பி, ஜெர்மன் மொழியைக் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கியதால், தனது மேற்படிப்புக்காகக் கல்வி உதவித்தொகையும் பெற்றார். 'உப்புச் சத்யாகிரகம்' என்ற தலைப்பில் காந்தியின் சமூக- பொருளாதாரக் கோட்பாடுகளை ஆய்வு செய்தார். அதற்காக முனைவர் பட்டம் பெற்றார். 1932-ல் இந்தியா திரும்பினார் ராம். பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ராம், அந்த கட்சிக்குள்ளேயே சோஷலிச கட்சியை நிறுவினார்.
1939-ல் இரண்டாம் உலகப் போர் துவங்கியபோது இந்தியா பிரிட்டிஷ் ஆளுகைக்கு ஆதரவு அளிப்பதில் காங்கிரசில் இருந்தவர்களுக்கு மாறுபட்ட கருத்துகள் நிலவின. அதில், ஆதரவு அளிக்கக்கூடாது என்ற அணியில் ராம் இருந்தார். போரைப் பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் நிர்வாகத்திற்குச் சிக்கல் ஏற்படுத்தி அவர்களை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்பது ராமின் கருத்தாக இருந்தது.
அரசு நிறுவனங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்த காரணத்தால் 1939 -ல் கைது செய்யப்பட ராம், மாணவர்களின் எதிர்ப்பால் மறுநாளே விடுவிக்கப்பட்டார்.
போராட்டமும் தலைமறைவு வாழ்க்கையும்

1941-ல் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நாடு முழுவதும் துவங்கியது. காந்தி, நேரு, படேல், ஆசாத் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சிறையில் தள்ளப்பட்டனர். ராம் மனோகர் லோஹியா கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றார்.
வெளிப்படையாக இயங்க முடியாத நிலையில் தலைமறைவுப் போராட்டத்தில் ராம் ஈடுபட்டார். ரகசிய இடங்களிலிருந்து பிரசாரத் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு நாடு முழுவதும் விநியோகித்த குழுவில் ராமும் இருந்தார்.
உஷா மேத்தாவுடன் இணைந்து மும்பையில் ராம் நடத்திய ரகசிய வானொலியான 'காங்கிரஸ் ரேடியோ' மூன்று மாதங்கள் வெற்றிகரமாக இயங்கியது. சுதந்திரப் போரில் ரகசிய வானொலி பயன்படுத்திய நிகழ்வு ஆங்கிலேய அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. முன்னணித் தலைவர்கள் இல்லாதபோதும் காங்கிரசின் மாதாந்திரப் பத்திரிகையான 'இன்குலாப்' இதழை அருணா ஆசப் அலியுடன் இணைந்து தயாரித்து வெளியிட்டார்.
அரசு ராமின் நடவடிக்கைகளை அறிந்தது. போலீசார் சுற்றி வளைத்த நிலையில், கொல்கத்தாவுக்கு தப்பிய ராம், அங்கு வெவ்வேறு பெயரில் மாறுவேடத்தில் வாழ்ந்தார். அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பினார். நேபாள புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அங்கு கொய்ராலா சகோதரர்களுடன் ராமுக்கு ஏற்பட்ட நட்பு, அவரது வாழ்வின் இறுதிவரை நீடித்தது.
அங்கிருந்து நாடு திரும்பி மீண்டும் தலைமறைவு இயக்கத்தில் ஈடுபட்ட போது 1944-ல் மும்பையில் கைதானார். லாகூர் சிறைக்கு அனுப்பப்பட ராம், அங்கு கடுமையான சித்ரவதைக்கு ஆளானார். அதனால் ராமின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. காந்தியின் தலையீட்டால் ராம் மனோகர் லோஹியாவும் அவரது சீடர் ஜெயபிரகாஷ் நாராயணனும் விடுதலை ஆயினர்.
நாடு விடுதலை பெற்ற பிறகு, உள்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டிய தேவையை உணர்ந்தார் ராம் மனோகர் லோஹியா. நாட்டின் முன்னேற்றத்தில் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்று பிரசாரம் செய்தார். தானே அதற்கு முன்மாதிரியாக விளங்கினார்.
சுதந்திர இந்தியாவில் 1963 வரை மூன்று பொது தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான ஒருகட்சி ஆட்சியே நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதனை ராம் எதிர்த்தார்.
1962-ல் சீனா, இந்தியா மீது போர் தொடுத்தபோது, இந்தியா, பிற நாடுகளின் ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டுமானால், தோல்வியைத் தவிர்க்க வேண்டுமானால், அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்று கூறி நாட்டில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கினார்.
அரசின் அதிகாரங்களைக் குறைத்து மக்களிடம் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்ற ராம், 'ஹிந்த் கிசான் பஞ்சாயத்' அமைப்பை நிறுவி, விவசாயிகளின் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள உதவினார். உலக அளவில் உள்ள அனைத்து பொதுவுடைமை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, ஓர் அமைப்பாக்க வேண்டும் என்று லோகியா கருதினார். 'பிரஜா சோஷலிஸ்ட்' கட்சியின் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய லோஹியா, உலக அரசுகுறித்த சிந்தனைகளையும் வெளிப்படுத்தி வந்தார்.
நேருவுடன் விவாதம்
ஏழ்மையை ஒழிக்க திட்டக் குழு செயல்படுகிறது என்றார் நேரு. புள்ளிவிவரப்படி, நாட்டின் சாமானியக் குடிமகனின் சராசரி நாள் வருமானம் 15 அணா ஆகும் என்றார் (அந்நாளில் இதன் மதிப்பு ஒரு ரூபாயை (16 அணா) விடச் சற்றே குறைவு).
இந்தப் புள்ளிவிவரத்தைச் சாடிய லோஹியா, சிறப்பு விவாதம் நடத்த அழைப்பு விடுத்தார். விவாதத்தில் பேசிய லோஹியா, தனது புகழ்பெற்ற நாடாளுமன்றப் பேச்சான 'தீன் (3) அணா - பந்த்ரா (15) அணா' என்ற விவாதத்தில் நாட்டின் திட்டக்குழு நடத்தும் நாடகங்களை விளக்கி அதன் முகத்திரையைக் கிழித்தார். அதன்மூலமாக, திட்டக் குழு முன்வைக்கும் புள்ளிவிவரங்கள் மாயை என்று நிரூபித்தார். இறுதியில் ராம் மனோகர் லோஹியா கூறுவதே உண்மை என்பதை நாடு உணர்ந்தது. இந்த விவாதம் திட்டக்குழுவின் பணிகளைச் செம்மைப்படுத்த உதவியது.
இந்திய நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த நான்கு ஆண்டுகளில் தமது அசல் அரசியல் யோசனைகளால் ஒட்டுமொத்த அவையின் கவனத்தையும் ஈர்த்தவர் ராம் மனோகர் லோஹியா.
ஜவாஹர்லால் நேரு அன்றாடம் ரூ. 25 ஆயிரம் செலவழிப்பதைப் பற்றியதாக இருந்தாலும் சரி அல்லது இந்திரா காந்தியை ஊமை பொம்மை என்று அழைக்கும் துணிச்சலாக இருந்தாலும் சரி அல்லது பெண்கள் சதி காலத்து சீதை ஆக இல்லாமல் திரெளபதி ஆக வேண்டும் என்று உரக்க சொல்வதாக இருந்தாலும் சரி, ராம் மனோகர் லோஹியால் மட்டுமே அது அந்தக் காலத்தில் சாத்தியமானது.
காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று குரல் எழுப்பிய முதல் அரசியல்வாதி மற்றும் வாழும் சமூகங்களால் அந்த ஆட்சி முடிவடைய ஐந்து வருடங்கள் வரை காத்திருக்க முடியாது என்றும் முழங்கியவர் அவர்.
இன்றும் வட இந்தியாவில் அரசியல் விருப்பம் உள்ள இளைஞர்கள் இடையே பேசினால் அவர்கள் நிச்சயமாக ராம் மனோகரின் இந்த முழக்கத்தை குறிப்பிடக்கூடும். 'ஜப் ஜப் லோஹியா போல்தா ஹை, டெல்லி கா தக்தா தொல்தா ஹை' (லோஹியா எப்போதெல்லாம் பேசுகிறாரோ டில்லியின் ஆட்சியாளர்கள் ஆட்டம் காணுவார்கள்).
நேருவின் எதிர்ப்பு
ஜவாஹர்லால் நேருவை மிகப்பெரிய தலைவராக நாடு கருதும் போது, அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தவர் ராம் மனோகர் லோஹியா மட்டுமே. நேருவுடனான அவரது மோதல், "நோய்வாய்ப்பட்ட பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்," என்று முழங்கியதில் இருந்து அளவிடப்படுகிறது.
1962இல், ஜவாஹர்லால் நேருவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட லோஹியா ஃபூல்பூருக்கு சென்றார். அந்த தேர்தலில் லோஹியாவின் தேர்தல் பிரசாரக் குழுவில் ஒருவராக இருந்த சதீஷ் அகர்வால் அந்த நிகழ்வை நினைவு கூர்ந்தார்,
"நான் ஒரு மலையை தாக்க வந்தேன் என்று லோஹியா சொல்வார். என்னால் அந்த மலையை கடக்க முடியாது என்று எனக்கு தெரியும், ஆனால் அதில் ஒரு விரிசலை ஏற்படுத்தினால் கூட தேர்தலில் போட்டியிடுவது வெற்றிகரமாகி விடும் என்றார்."

பட மூலாதாரம், Getty Images
பிகாரில் சோசலிச அரசியலின் முக்கியமான முகமாக கருதப்படும் சிவானந்த் திவாரிக்கு ராம் மனோகர் லோஹியாவை நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
1967ஆம் ஆண்டில், சிவானந்த் திவாரியின் தந்தை ராமானந்த் திவாரி, போஜ்பூரின் ஷாபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார், அவர் தனது தேர்தல் பிரசாரத்தின் அங்கமாக லோஹியாவுடன் சென்றார்.
அந்த நிகழ்வை நினைவுகூர்ந்த சிவானந்த் திவாரி. "நான் அவருடன் நான்கு கூட்டங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு தீர்க்கதரிசியைப் போல பேசினார். நீங்கள் தேர்ந்தெடுப்பவர் அமைச்சராகப் போகிறாரா இல்லை அமைச்சராக்கப் போகிறீர்களா என்பதை சிந்தித்து வாக்களிக்குமாறு அவர் கூறினார்.
லோஹியாவின் அரசியல் மரபு
சிவானந்த் திவாரியின் கூற்றுப்படி, 1967இல் காங்கிரஸ் எல்லா இடங்களிலும் கிளைகளைக் கொண்டிருந்தபோது, காங்கிரஸின் நாட்கள் காலாவதியாகப்போகிறது. புதிய தலைமுறை சகாப்தம் வருகிறது என்று கூறிய ஒரே நபராக திகழ்ந்தார் ராம் மனோகர் லோஹியா. அவர் கணித்தது போலவே, ஒன்பது மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றது.

பட மூலாதாரம், www.iaaw.hu-berlin.de
லோஹியாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது மரபு மற்றும் அவரது பெயரை பயன்படுத்தி பலர் அரசியல் களம் கண்டனர். குறைந்தபட்சம் உத்தரபிரதேசம் மற்றும் பிகாரில். முலாயம் சிங் யாதவ் தனது கட்சியை லோஹியாவின் பாரம்பரியத்தை நம்பும் கட்சியாக நடத்தினார்.
சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் இது குறித்து பேசுகையில், "லோஹியா தான் எங்கள் கட்சியின் மிகப்பெரிய லட்சியம் ஆக உள்ளார். 1967இல் முதல் முறையாக அவர் தான் நேதாஜிக்கு (முலாயம் சிங்) தேர்லில் போட்டியிட டிக்கெட் கொடுத்தார். ஜஸ்வந்த் நகர் சட்டமன்ற தொகுதியில் இருந்து. லோஹியா ஏழை மக்களின் குரலை உயர்த்தி எழுப்ப விரும்பினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்க அவர் விரும்பினார். அவரது கனவு நூறில் அறுபதில் வெல்வதாக இருந்தது.
முலாயமின் அரசியல் திறனை முதலில் உணர்ந்தவர் லோஹியா
முலாயம் சிங் யாதவ், சுயசரிதையான தி சோஷலிஸ்ட்-ஐ எழுதிய பிராங்க் ஹுசூர் இந்த நிகழ்வை நினைவு கூர்ந்தார்,
"நான் 1963 இல் ஃபாருகாபாத் தொகுதியில் இருந்து என் சகாக்களுடன் சேர்ந்து மக்களவை தேர்தலுக்காக பிரசாரம் செய்தேன். விதுனா தொகுதியில் அவர் என்னிடம், "பிரசாரத்தின் போது நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான், "மக்கள் லோஹியாவுடன் உள்ளனர். அவர்கள் உணவளிக்கிறார்கள். அவர் இருக்கும் இடத்திலேயே மக்கள் உறங்குகிறார்கள் என்றேன். உடனே லோஹியா என் குர்தா பாக்கெட்டில் நூறு ரூபாய் நோட்டை வைத்தார்கள்," என்றார்.

பட மூலாதாரம், Lohia Trust
முலாயமுக்கு ராம் மனோகர் லோஹியாவைச் சந்திக்கும் மேலதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், லோஹியாவின் அரசியல் மரபுக்கு தாமே உரியவர் என்ற கோரலை முலாயம் தொடர்ந்து செய்து வந்தார்.
சிவானந்த் திவாரி நீண்ட காலமாக சோஷலிச அரசியலை பார்த்து வருபவர்.
லோஹியாவின் உண்மையான அரசியல் வாரிசு யார் என கேட்டால், கிஷன் பட்நாயக் என்று கூறுவேன் என்கிறார்.
ஆனால், அவருக்கு அந்த காலத்தில் உரிய மரியாதை கிடைக்கவில்லை. லோஹியா பாணி அரசியலை தமது வாழ்க்கையில் ஒரு பெரிய அளவில் கடைப்பிடித்தவர் லாலு.
லோஹியா இந்தி ஆதரவாளர்
1990 முதல் 1995வரையிலான லாலுவின் அரசியல் பேச்சுகளைப் பார்த்தால், அவருக்குள் இருந்த லோஹியா பார்வையை உணர முடியும் என்கிறார் சிவானந்த் திவாரி.
ஆனால், பின்னர் வந்த நாட்களில் லாலு பிரசாதின் அரசியல் பாணி மாறி விட்டது. லோஹியா அரசியலை லாலுவால் முன்னெடுக்க முடியவில்லை. லோஹியாவின் தாக்கம் எல்லோரிடத்திலும் இருந்தது. அது முலாயமாக இருந்தாலும் சரி, லாலு ஆக இருந்தாலும் சரி, ராம் விலாஸ் பாஸ்வானாக இருந்தாலும் சரி... ஆனால், லோஹியாவின் பாரம்பரியத்தை அவர்களால் கடைசிவரை கடைப்பிடிக்க முடியவில்லை.
சிவானந்த் திவாரியின் கூற்றுப்படி, லோஹியாவுக்கு இந்திய பாரம்பரியங்கள் மற்றும் இந்திய சமுதாயத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருந்தது. லோஹியா கொள்கையை ஏற்று வாழ்வது எளிதல்ல, ஏனெனில் அவர் நாட்டின் அரசியல் மற்றும் உலக அரசியல் பற்றிய புரிதலைக் கொண்டிருந்தார், எப்போதும் தன்னை சுற்றிய நிகழ்வுகளை படித்துக் கொண்டிருந்தார், கடைசிவரை எழுதிக் கொண்டே இருந்தார்.

பட மூலாதாரம், Lohia Trust
லோஹியா ஜெர்மனியில் முனைவர் பட்டம் பெற்றார். ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளை சரளமாக பேச அவரால் முடியும் என்பதை இந்த சிலர் அறிந்திருப்பார்கள்,
ஆனால் அவர் எப்போதும் இந்தியில்தான் பேசுவார், அதனால் அவருடைய வார்த்தைகள் முடிந்தவரை சாதாரண மக்களை சென்றடையும்.லோஹியா, பொது மக்களின் நலன்களைப் பற்றி பேசினாலும் சரி அல்லது சமுதாயத்தில் பெண்களுக்கு சமத்துவத்தை வழங்குவது பற்றி பேசினாலும் சரி, இந்திய அரசியலின் மிக தொலைநோக்கு தலைவர்களில் ஒருவராக அவர் தோன்றினார், அவருக்குள் எப்போதும் நெருப்பு கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது என்கிறார் சிவானந்த் திவாரி.
லோஹியாவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் இந்து கேல்கர், ராம்தாரி சிங் தினகருடனான லோஹியாவின் சந்திப்பை பதிவு செய்திருந்தார்.
அதில், "லோஹியா இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரை ராம்தாரி சிங் சந்தித்து, உங்களுடைய கோபத்தைக் குறையுங்கள் என்று சொன்னார், நாடு உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சுமை உங்கள் தோள்களில் விழும்போது கடந்த காலம் உங்கள் பாதையில் ஒரு முள்ளாக மாறும் என்று அவர் கூறினார்," என்று குறிப்பிட்டிருந்தார். லோஹியாவின் தனிப்பட்ட வாழ்க்கை சுவாரஸ்யமானது அல்ல.
காந்தியின் அன்புக்கட்டளை
லோஹியா தனது வாழ்க்கையில் யாருடைய தலையீடுகளையும் பொறுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், மகாத்மா காந்தி, அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிட்டு, சிகரெட் புகைப்பதை விட்டுவிடுமாறு கேட்டார்.
அதற்கு காந்தியிடம் "யோசித்த பிறகு சொல்கிறேன்," என்று லோஹியா கூறியிருந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் சிகரெட்டை கைவிட்டு விட்டேன் என்று காந்தியிடம் சொன்னேன் என்கிறார் லோஹியா.
லோஹியாவின் தனி வாழ்க்கை
லோஹியா தனது வாழ்நாள் முழுவதும் ரமா மித்ராவுடன் நேரடி உறவில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்.
ரமா மித்ரா டெல்லியின் மிராண்டா ஹவுஸில் பேராசிரியராக இருந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் எழுதிய கடிதப் புத்தகமும் வெளியிடப்பட்டது.
சிவானந்த் திவாரி, "லோஹியா தனது உறவை ரகசியமாக வைக்கவில்லை. மக்களுக்கு தெரியும், ஆனால் அந்த காலகட்டத்தில் தனியுரிமை மதிக்கப்பட்டது. லோஹியா தனது வாழ்நாள் முழுவதும் தனது உறவை பராமரித்தார், ரமா அதை முன்னோக்கி கொண்டு சென்றார்."

பட மூலாதாரம், Lohia Trust
50-60 களில், இந்தியாவில் சாதாரண மக்களுக்காக அரசியல் பயணத்தை மேற்கொண்ட ஒரு தலைவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் துணிச்சலாக இருப்பது கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு கடினமாக இருந்தது.
லோஹியா, பெண்களுக்கு சம உரிமைக்காக வாதிடுகையில், நாட்டுக்கு சதி-சீதை தேவையில்லை போராடக்கூடிய, கேள்விகளைக் கேட்கக் கூடிய துரெளபதி வேண்டும் என்றார். 1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பூல்பூரில் லோஹியாவின் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற சதீஷ் அகர்வால் ஒரு நிகழ்வை பகிர்ந்தார்.
"ஒரு முறை தாரகேஸ்வரி சின்ஹா லோஹியாவிடம், நீங்கள் பெண்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் ஆதரவாளர் ஆக இருக்கிறீர்கள்ஆனால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லையே என கேட்டபோது, சற்றும் தாமதிக்காத லோஹியா, நீங்கள் அதற்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லையே என்றார்."

பட மூலாதாரம், MF Hussian
ராம் மனோகர் லோஹியா ஒரு அரசியல்வாதி, விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் சோஷலிசம் பற்றி அவரால் அமெரிக்கா சென்று விவாதிக்க முடியும், மேலும் மக்பூல் ஃபிடா ஹுசைன் போன்ற கலைஞரின் கலைக்கான வழியையும் காட்ட முடியும். டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில், லோகியா, மக்பூல் ஃபிடா ஹுசைனிடம், "பிர்லா மற்றும் டாடாவின் டிராயிங் அறையில் தொங்கிக்கொண்டிருக்கும் படத்திலிருந்து அகற்றி விட்டு ராமாயண கதை காட்சிகளை வரையவும்" என்று கூறினார்.
மருத்துவமனையின் அலட்சியத்தால் மரணம்
லோஹியாவின் மரணம் சர்ச்சைக்குரியக்குரியதாக இருந்தது. அவரது புரோஸ்டேட் சுரப்பிகள் பெரிதாகி, டெல்லியில் உள்ள அரசு வில்லிங்டன் மருத்துவமனையில் (தற்போதைய ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நாயர் தனது சுயசரிதையான பியாண்ட் தி லைன்ஸ் புத்தகத்தில், "நான் ராம் மனோகர் லோஹியாவை மருத்துவமனையில் சந்திக்கச் சென்றேன். அவர் என்னிடம் இந்த மருத்துவர்களால் நான் இறந்து கொண்டிருக்கிறேன் என அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்" என்றார்.
குல்தீப் தமது புத்தகத்தில், லோஹியா சொன்னது போலவே அவரது மரணத்துக்கு காரணம், மருத்துவர்கள் மேற்கொண்ட தவறான சிகிச்சையே என பேசப்பட்டது என்று குறிப்பிட்டார்.
லோஹியா 1967ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி இறந்த பிறகு, அதற்கான காரணத்தை அறிய ஒரு குழுவை அரசு நியமித்தது. அந்த மருத்துவமனை தான் தற்போது ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அந்த கமிட்டியின் அறிக்கையின் ஒரு பகுதி 1968ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்பட்டது, அதில் "மருத்துவமனை அதிகாரிகள் தேவையான மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், லோஹியா சோகமாக இறந்திருக்க மாட்டார்," என்று கூறப்பட்டிருந்தது.அந்த காலத்தில் பூதாகரமாக அந்த பிரச்னை வெடித்தாலும் பிறகு அது அடங்கிப்போனது.
1977ஆம் ஆண்டில், மத்திய அரசில் ராஜ்நாராயண் சுகாதார அமைச்சராக இருந்தபோது, லோஹியாவின் மரணத்திற்கான காரணத்தை விசாரிக்க நிபுணர் குழுவை நியமித்தார், ஆனால் லோஹியாவின் மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் மாயமாகியிருந்தன.

பட மூலாதாரம், Nitesh Jain
லோஹியா ஜன சங்கத்தை ஊக்குவிப்பதாக சில அரசியல் ஆய்வாளர்கள் குற்றம்சாட்டினாலும், காங்கிரஸை எதிர்ப்பதற்காக வேறு பலரை ஒன்றிணைக்க வேண்டியிருந்தது என்பதை புரிந்து கொள்வது கடினம் அல்ல.
அகிலேஷ் யாதவ் இது பற்றி கூறுகையில், "லோஹியாவின் காலத்தில் காங்கிரஸின் நிலைமை இப்போது பாரதிய ஜனதாவை போலவே உள்ளது. நாங்கள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இப்போது காங்கிரஸை சேர்த்துள்ளோம்," என்றார்.
ஆனால் லோஹியா என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள, பிரபல கார்ட்டூனிஸ்ட் சங்கர் ஒரு சித்திரத்தை உருவாக்கியிருந்தார். அதில் அவர் இன்று காலை லோஹியா ஒரு அமைச்சராக பதவியேற்று தனது பதவியை ராஜிநாமா செய்தார் என்று எழுதினார். இந்த கார்ட்டூனை விட லோஹியாவின் நிர்வாகம் குறித்த கவலையை வேறு எதுவும் சிறப்பாக சித்திரிக்க முடியாது.
பிற செய்திகள்:
- எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்க இந்திய ரயில்வே செய்யும் செலவு எத்தனை கோடி?
- சசிகலாவை தூண்டிவிடுகிறதா தி.மு.க - பொன்விழா நேரத்தில் அ.தி.மு.க குற்றச்சாட்டு ஏன்?
- கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது லாபகரமானதா? - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் விளக்கம்
- 'பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை' அப்துல் கதீர் கான் மரணம் - யார் இவர்?
- ஜெனோபியா: ரோமாபுரி பேரரசுக்கே சவால் விட்ட பால்மைரா சிற்றரசியின் வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












