கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது லாபகரமானதா? - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் விளக்கம்

ஆனந்த் ஸ்ரீநிவாஸன்
படக்குறிப்பு, ஆனந்த் ஸ்ரீநிவாஸன்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

Bond என்பவை கடன் பத்திரங்கள். Share என்பது பங்கு. Bondகளை நீங்கள் வாங்கியிருந்தீர்கள் என்றால் அந்த நிறுவனத்திற்கு கடன் கொடுத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். பங்குகளை நீங்கள் வாங்கியிருந்தால், லாபத்தில் பங்கு கொடுப்பார்கள். ஆனால், கடன் பத்திரங்களைப் பொறுத்தவரை, வட்டி மட்டுமே கிடைக்கும்.

அரசாங்கமும் பெரிய அளவில் கடன் பத்திரங்களை வெளியிடுகிறது. மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி தொடர்ந்து கடன் பத்திரங்களை வெளியிடுவார்கள். இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு காலகட்ட வரையறையில் பாண்டுகளை வெளியிடுகிறது. ரிசர்வ் வங்கி என்ன வட்டி விகிதத்தை இந்த பாண்ட்களுக்கு கொடுக்கிறதோ, அதை வைத்துத்தான் மற்றவர்கள் வட்டி விகிதத்தை நிர்ணயிப்பார்கள்.

பொதுவாக ஒருவர் வங்கிகளைத் துவங்க விண்ணப்பித்தால், அரசின் கடன் பத்திரங்களைக் குறிப்பிட்ட அளவுக்கு வாங்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான நிபந்தனையாக இருக்கும். ஓய்வூதிய நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் போன்றவைதான் இந்த கடன் பத்திரங்களை வாங்குவார்கள்.

பொதுமக்களுக்கும் இந்த கடன் பத்திரங்களை வாங்க முடியும். ஆனால், புத்தியிருப்பவர்கள் யாரும் அதை வாங்க மாட்டார்கள். ஏனென்றால் அதில் வட்டி மிகவும் குறைவு. பணவீக்கம் 7-8 சதவீதம் இருக்கும்போது அதைவிட குறைவான வட்டிதான் இதில் கிடைக்கும்.

பொதுவாக இம்மாதிரி கடன் பத்திரங்களை வாங்குபவர்கள் விற்க மாட்டார்கள். 3 வருடம், ஐந்து வருடம், 7 வருடம், 10 வருடம் காலக்கெடுவுடைய கடன் பத்திரங்களை நாம் வாங்கலாம். ஆனால், வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்தால் கிடைக்கக்கூடிய வட்டியைவிட அதிக வட்டி கிடைக்குமா என்று பார்த்துவிட்டு வாங்கலாம்.

கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது லாபகரமானதா?

பட மூலாதாரம், Getty Images

அதாவது வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் 5 சதவீத வட்டி கிடைக்கும். அதில் வரி பிடித்தம் போக, 4.5 சதவீதம் கைக்கு வரும். ஆனால், 3 வருட கடன் பத்திரங்களில் ஆறே முக்கால் சதவீதம் அளவுக்கு வட்டி கிடைக்கும். கடன் பத்திரங்களின் மூலம் கிடைக்கும் வட்டிக்கும் வருமான வரி உண்டு. ஆனால், சில கடன் பத்திரங்களில் கிடைக்கும் வட்டிக்கான வரியை பிடித்த் செய்துகொண்டு தருவார்கள். சில கடன் பத்திரங்களில் முழுமையாகத் தருவார்கள்.

நிறுவனங்கள் வெளியிடுகிற கடன்பத்திரங்களைப் பொறுத்தவரை, அந்த நிறுவனம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பது முக்கியம். அந்த நிறுவனத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். தவிர, நிறுவனங்களின் பாண்டுகள் ஐந்து லட்சம், பத்து லட்சம் இருக்கும். ஆகவே அவ்வளவு பெரிய பணத்தை முதலீடு செய்யும் முன்பு நிறுவனத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

கடன் பத்திரச் சந்தை என்பது பங்குச் சந்தையைவிட மிகப் பெரியது. மத்திய அரசு கடந்த ஆண்டு 12 லட்சம் கோடி கடனைத் திரட்டியது. இந்த ஆண்டு எட்டு லட்சம் கோடி கடன் வாங்க போகிறார்கள். ஆகவே இந்தச் சந்தை மிகப் பெரியது.

Dept Market Fund என்ற நிதி இருக்கிறது. இதில், பொதுமக்களிடம் பணம் திரட்டப்பட்டு கடன் சந்தையில் முதலீடு செய்யப்படும். ஆனால், சில ரிஸ்க்கள் இருக்கின்றன.

இது குறித்த ஆனந்த் ஸ்ரீநிவாஸனின் முழுமையான பேட்டிக்கு:

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :