நிலவில் இருந்து சீன விண்கலன் சாங்'இ எடுத்துவந்த சமீப கால எரிமலைப் பாறை - புதிய கேள்விகள்

பட மூலாதாரம், CNSA
- எழுதியவர், ஜோனாதன் அமோஸ்
- பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்
சீனாவின் சாங்'இ - 5 விண்வெளித் திட்டம் நிலவிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் கொண்டுவந்த பாறை மாதிரிகள், நிலவில் இதுவரை கிடைத்துள்ள எரிமலைப் பாறைகளிலேயே மிகவும் சமீப காலத்தை சேர்ந்தவையாக உள்ளன.
இந்த காலகட்டம், நிலவின் வரலாற்றில் எரிமலை நிகழ்வுகள் முடிந்துபோன காலகட்டமாக இதுவரை கருதப்பட்டது. எனவே, சீன விண்கலன் கொண்டுவந்த பாறை மாதிரிகள் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
சாங்'இ -5 நிலவில் இருந்து கொண்டுவந்த எரிமலைப் பாறைகளை பகுப்பாய்வு செய்ததில், அவை வெறும் 200 கோடி ஆண்டுகளுக்கு முந்தையவை என்று தெரியவந்துள்ளது.
ஆறி இறுகிவிட்ட எரிமலைக் குழம்பு எரிமலை பாறை என அழைக்கப்படுகிறது.
இந்த பகுப்பாய்வின் முடிவுகள் சயின்ஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன
அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் நிலவில் இருந்து கொண்டுவந்த மாதிரிகள் அனைத்தும் 300 கோடி ஆண்டுகளுக்கும் முந்தையவை.
பூமியை நோக்கி உள்ள நிலவின் பகுதியில் அமைந்திருக்கும் ஓசியனஸ் ப்ரோசெல்லரம் (Oceanus Procellarum) எனும் பகுதிக்கு சீனாவின் ரோபோட்டிக் விண்வெளித் திட்ட விண்கலம் அனுப்பப்பட்டது.
இதற்கு முன்பு நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மாதிரிகளின் மூலம் அறியப்பட்ட தகவல்கள் தவிர, கூடுதல் தகவல்களைத்த தெரிந்துகொள்வதற்கு ஏற்ற மாதிரிகளைச் சேகரிப்பதற்கு என்று இந்த இடம் கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டது.
முன்பு கடைசியாக சோவியத் ஒன்றியத்தின் விண்வெளித் திட்டம் மூலம் 1976 ஆம் ஆண்டு நிலவில் இருந்து மாதிரிகள் எடுத்துவரப்பட்டன.

பட மூலாதாரம், Beijing SHRIMP Center
பெய்ஜிங்கில் உள்ள சென்சிடிவ் ஹை ரெசொல்யூஷன் அயான் மைக்ரோப்ரோப் சென்டர் எனும் ஆய்வகத்தைச் சேர்ந்த ஷியாசாவோ சே மற்றும் அவரது சகாக்கள் சாங்'இ கொண்டுவந்த மாதிரிகளின் காலத்தை அறிவதற்கான பகுப்பாய்வை முன்னின்று நடத்தினர். அவர்களுடன், பன்னாட்டு அறிவியலாளர் குழுவும் இந்தப் பகுப்பாய்வில் ஈடுபட்டது.
நிலவு குளுமை அடைந்து அதில், எரிமலை சீற்றங்கள் நின்று போயிருக்கும் என்று கருதப்பட்ட காலத்திற்கு மிகவும் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவையாக இந்த மாதிரிகள் உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு, பிந்தைய காலகட்டத்தில் எரிமலை நடவடிக்கைகள் நிலவில் நிகழ்கிற அளவுக்கு வெப்பம் தரும் ஆதாரமாக எது இருந்தது என்பதை கண்டறிய அறிவியல் கோட்பாட்டாளர்கள் இனி சிந்திக்க வேண்டியிருக்கும்.
எரிமலை சீற்றத்துடன் தொடர்புடைய பல வேதியியல் மூலக்கூறுகளை சாங்'இ சேகரித்துள்ள மாதிரிகள் கொண்டிருக்கவில்லை என்பதால் செறிந்த கதிரியக்கச் சிதைவு காரணமாக நிலவுக்கு வெப்பம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.
"பூமியின் சுழற்சி பாதையுடன் நிலவின் சுழற்சிப் பாதையை இடையீடு செய்ததன் காரணமாக நிலவு நீண்ட காலம் ஆற்றலோடு இயங்கி இருந்திருக்கலாம் என்று இந்த ஆய்வில் நாங்கள் கணித்து இருக்கிறோம்," என்று இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்களில் ஒருவரான பிரிட்டன் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கேத்தரின் ஜாய் கூறுகிறார்.

"ஒருவேளை நிலவு தனது சுற்று வட்டப்பாதையில் இருந்து முன்னும் பின்னும் அசைந்தாடி இருக்கலாம். அதன் காரணமாக அலை வெப்பம் உண்டாகி இருக்கக்கூடும். நிலவு பூமியில் கடல் ஓதங்களை உண்டாக்குவது போல பூமியின் ஈர்ப்பு விசையின் விளைவு நிலவை நீட்சி அடையவும் நெகிழவும் வைத்திருக்கலாம்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
கோள்கள் மற்றும் துணைக் கோள்களின் மேற்பரப்பின் வயதை கண்டறியும் க்ரேட்ட்டர்-கௌண்டிங் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அளவையை சரி செய்ய இந்த ஆய்வின் முடிவுகள் உதவுகின்றன.
ஒரு கோள் அல்லது துணைக்கோளின் பரப்பில் எந்த அளவுக்கு எரிமலை வாய்கள் அதிகமாக உள்ளதோ அந்தளவுக்கு அந்த பரப்பு மிகவும் பழமையானதாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். அதைப்போல குறைவான எரிமலை வாய்கள் உள்ள பரப்பு மிகவும் இளையது அல்லது சமீபத்தில் மாற்றத்திற்கு உள்ளானது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மாதிரிகளின் குறிப்பான காலத்தை அறிய வேண்டிய அவசியம் உள்ளது.
நிலவின் கால வரிசையைப் பொறுத்தமட்டில் 300 கோடி ஆண்டுகளில் இருந்து 100 கோடி ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்த தெளிவான வரையறை இல்லை.
இந்த இடைப்பட்ட காலத்தின் ஒரு துல்லியமான புள்ளியில் நிகழ்ந்தது என்ன என்பதை அறிய சாங்'இ- 5 விண்கலம் கொண்டு வந்துள்ள மாதிரிகள் உதவியாக இருக்கும்.
பிற செய்திகள்:
- ஏர் இந்தியா பதவி பறிக்கப்பட்ட ஜே.ஆர்.டி டாடாவுக்கு இந்திரா காந்தி எழுதிய கடிதம்
- காஷ்மீர் இந்துக்கள், சீக்கியர்களுக்கு அச்சமூட்டும் தொடர் கொலைகள் - வரலாறு திரும்புகிறதா?
- செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்
- ஐபிஎல் 2021: கோலி அணியின் பரத் நிகழ்த்திய கடைசிப் பந்து மாயாஜாலம்
- மனநல சிகிச்சை: ஒரு நபருக்கு ஏழை நாடுகளைவிட 650 மடங்கு செலவிடும் பணக்கார நாடுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












