ஐபிஎல் கிரிக்கெட் - RCB vs DC, MI vs SRH : கோலி அணியின் பரத் நிகழ்த்திய கடைசிப் பந்து மாயாஜாலம்

பட மூலாதாரம், IPL/BCCI
ஏற்கெனவே மூன்று அணிகள் பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்ற கருதப்பட்ட ஒரு ஆட்டம் கடைசிப் பந்து வரை பரபரப்பாக முடிந்திருக்கிறது. மற்றொரு போட்டி முழுக்க வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெல்லி அணியும் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியும் கடைசி லீக் போட்டியில் மோதின.
வெற்றிபெற 6 பந்துகளில் 15 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், ஃபீல்டிங்கில் செய்த ஒரு சிறு அலட்சியத்தால், டெல்லி அணியின் வெற்றி கைநழுவி, பெங்களூரு அணிக்குச் சென்றது.
போட்டியின் இறுதியில் பேசிய டெல்லி அணியின் கேப்டன் தங்களது பீல்டிங் குறித்து கவலை தெரிவித்தார். கடைசி ஓவரில் டெல்லி வீரர் அக்சர் படேலின் அலட்சியமான பீல்டிங் குறித்து சமூக வலைத் தளப் பக்கங்களிலும் அந்த அணியின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 164 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பிரித்வி ஷா 48 ரனகளையும், ஷிகர் தவான் 43 ரன்களையும் எடுத்தனர்.
பரத் - மேக்ஸ்வெல் அதிரடி
பெங்களூரு அணியின் தொடக்க வீரரான படிக்கல் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்துவிட, கேப்டன் விராட் கோலியும் மூன்றாவது ஓவரில் 4 ரன்களுடன் வெளியேறினார். அணியின் எண்ணிக்கை 55 என்று இருந்தபோது, முக்கிய வீரரான டி வில்லியர்ஸும் வெளியேறினார். அத்துடன் ஆட்டம் முழுமையாக டெல்லி அணியின் கைக்குச் சென்றிருக்க வேண்டும்.
ஆனால் மூன்றாவது வீரராகக் களமிறங்கியிருந்த விக்கெட் கீப்பர் பரத்தும், அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லும் சேர்ந்து வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் சென்றனர்.
முந்தைய போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க முடியாமல் பெங்களூரு அணி தோல்வியடைந்திருந்தது. அதனால் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் வரும் வாய்ப்பும் பறிபோயிருந்தது. இந்தப் போட்டியிலும் கிட்டத்தட்ட அதே நிலைதான்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
12 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது, டெல்லி அணியின் நோர்கியோ தான் வீசிய 19ஆவது ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். அவரது விதவிதமான பந்துகளால் மேக்ஸ்வெலும் பரத்தும் தடுமாறினார். அந்த அளவுக்கு எதிர்பாராத வேகத்திலும், உயரத்திலும் நோர்கியாவின் பந்துகள் இருந்தன.
அக்சர் படேலின் அலட்சியம்
கடைசி ஓவரில் 15 ரன்களை எடுக்க வேண்டும். அவேஷ் கான் பந்துவீசினார். முதல் பந்தில் மேக்ஸ்வெல் 4 ரன்களை எடுத்தாலும் அடுத்தடுத்த பந்துகளில் பவுண்டரிகள் கிடைக்கவில்லை. கடைசிக்கு முந்தைய பந்தை பரத் அடித்தபோது ஒரு கையால் அக்ஸர் படேல் பீல்டிங் செய்ய முயன்றார். பந்து அவரது கையில் பிடிபடாததால், கூடுதலாக ஒரு ரன் பரத்துக்கு கிடைத்தது. அது போட்டியின் முடிவை மாற்றுவதாக அமைந்துபோனது.
ஏனெனில் கடைசி பந்தை அவேஷ் கான் வீச லெக் பக்கத்தில் வைடாக கடந்து சென்றது. அதனால் கூடுதலாக வீசப்படும் ஒரு பந்தில் 5 ரன்களை எடுக்க வேண்டும் என்றபோது, மிக உயரமாக சிக்சர் அடித்து பெங்களூரு அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார்.
52 பந்துகளில் 4 சிக்ஸர்கள் உள்பட 78 ரன்களை அவர் குவித்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
வாணவேடிக்கை நடத்திய இஷான்
பெங்களூரு - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்த அதே நேரத்தில் நடத்தப்பட்ட மும்பை இந்தியன்ஸ் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லாத போட்டியாகவே கவனிக்கப்பட்டது. ஆனால் அங்கும் இருபது ஓவர் கிரிக்கெட்டின் மாயஜாலங்களைக் காண முடிந்தது.
171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலையில், அசாத்தியமான இந்த இலக்கை பாதி அளவுக்குக் கடந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

பட மூலாதாரம், IPL/BCCI
அந்த அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் தான் சந்தித்த பந்துகளையெல்லாம் எல்லையை நோக்கி விரட்டிக் கொண்டிருந்தார். முதல் 5 ஓவர்கள் முடிந்திருந்த போது மும்பை இந்தியன்ஸ் அணி 78 ரன்களைக் குவித்திருந்தது.
இஷான் கிஷன் பதினாறே பந்துகளில் அரைச் சதம் அடித்தார். ஐபிஎல் போட்டிகளில் மிக வேகமான அரைச் சதம் இது.
10 ஓவர்களில் 131 ரன்களை எடுத்த மும்பை அணியை இரண்டாவது பாதியில் சூர்ய குமார் யாதவ் முன்னோக்கிக் கொண்டு சென்றார். அந்த அணி இருபது ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். சூர்ய குமார் யாதவ் 40 பந்துகளில் 82 ரன்களை எடுத்தார்.
ஹைதராபாத் அணியை 65 ரன்களுக்குள் சுருட்டினால், பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறலாம் என்ற இலக்குடன் பந்து வீசிய மும்பை அணியின் கனவை, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் கலைத்துவிட்டனர். அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களைக் குவித்தது. இரு அணிகளும் இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறிவிட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












