உம்ரான் மாலிக்: ஐபிஎல் போட்டிகளில் அசுர வேகத்துடன் மிரட்டும் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் வீரர்

மல்லிக்

பட மூலாதாரம், Twitter

    • எழுதியவர், மோஹித் கந்தாரி
    • பதவி, ஜம்முவிலிருந்து பிபிசி இந்திக்காக

ஜம்மு நகரில் வசிப்பவரும் பழங்கள் மற்றும் காய்கறி விற்பனையாளருமான அப்துல் ரஷீத்தின் இளைய மகன் உம்ரான் மாலிக் இந்திய கிரிக்கெட்டில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில், உம்ரான் மாலிக் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீசினார். உம்ரான் தனது வேகமான மற்றும் சிறந்த பந்துவீச்சு மூலம் அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், வரும் நாட்களில் இந்திய அணியில் இடத்தை பிடிப்பதற்கான வலுவான நியாயத்தையும் முன்வைத்துள்ளார்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் கவனத்தை ஈர்த்தார். 4 ஓவர்கள் வீசிய அவர் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

தனது முதல் ஓவரிலேயே ஒரேயொரு ரன் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி பெங்களூரு அணியை நிலைகுலையச் செய்தார். ஐபிஎல் போட்டிகளில் அவர் எடுத்திருக்கும் முதலாவது விக்கெட் இது. அவரது பெரும்பாலான பந்துகள் 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சீறிப் பாய்ந்தன.

9ஆவது ஓவரில் படிக்கலுக்கு வீசிய பந்து 153 கிலோ மீட்டர் வேகத்தில் சீறியது. இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளிலே அதிக வேகத்தில் பந்து வீசியவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. போட்டியின் இறுதியில் பேசிய பெங்களூரு கேப்டன் விராட் கோலி, உம்ரன் மாலிக்கின் பந்துவீச்சின் வேகத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். மூத்த கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்கள் என்று அனைவருமே அவரைப் பாராட்டுகிறார்கள்.

ஜம்மு நகரில் நீண்ட காலமாக கிளப் கிரிக்கெட் விளையாடி வரும் உம்ரான், இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் அணியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். ஹைதராபாத்துக்கு விளையாடுவதற்கு முன்பு அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இவை இரண்டுமே வெவ்வேறு வடிவங்களில் இவரது அறிமுக போட்டிகளாகும்.

முதலில் இந்த ஆண்டு ஜனவரியில், சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் தனது மாநிலத்திற்காக விளையாடிய அவர் தனது முதல் டி 20 போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் உம்ரான், நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் பிப்ரவரியில் விஜய் ஹசாரே டிஃராபியில், பர்ஸ்ட் க்ளாஸ் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், உம்ரான் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்தார். இந்த போட்டியில் அவரால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை என்றாலும்கூட அவர் தனது வேகத்தால் அனைவரது மனதையும் கவர்ந்தார்.

உம்ரான் மாலிக் வென்றுள்ள பல கோப்பைகள்

பட மூலாதாரம், Mohit Kandhari

படக்குறிப்பு, உம்ரான் மாலிக் வென்றுள்ள பல கோப்பைகள்

உம்ரான் எப்படி அணியில் சேர்ந்தார்?

ஹைதராபாத் அணி நிர்வாகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடராஜனுக்கு மாற்றாக மற்றொருவரை தேடும் போது உம்ரானின் அதிர்ஷ்டம் கைக்கொடுததாக, ஜம்முவில் உள்ள உம்ரான் மாலிக்கின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிபிசி இந்தியிடம், தெரிவித்தார்.

அந்த நேரத்தில் உம்ரான், டேவிட் வார்னருக்கு பேட்டிங் பயிற்சிக்காக வலையில் பந்து வீசிக்கொண்டிருந்தார். உம்ரானின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் வேகம் காரணமாக வார்னர் பந்தை எதிர்கொண்டு விளையாடுவதில் சிரமப்பட்டார். நெட் பயிற்சியை கவனித்துக்கொண்டிருந்த அணியின் நிர்வாக உறுப்பினர் ஒருவர் உம்ரானுக்கு ஒரு வாய்ப்பை வழங்கலாம் என்று யோசனை தெரிவித்தார்.

அதன் பின்னர் நடராஜனுக்கு பதிலாக உம்ரான் மாலிக்கை அணியில் சேர்க்க ஹைதராபாத் அணி நிர்வாகம் முடிவு செய்தது. உம்ரான் மாலிக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பந்துவீச்சாளராக இணைந்திருந்தார்.

பதான்

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, ஜம்மு -காஷ்மீர் அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான், உம்ரானை மெருகேற்றுவதில் முக்கிய பங்காற்றினார்.

உம்ரானை மெருகேற்றிய இர்ஃபான் பதான்

முன்னாள் கிரிக்கெட் வீரரான ரஞ்சித் கால்ரா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 88-89 வது ஏஜிஎம்மில், ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றுள்ளார். ஜம்மு -காஷ்மீர் அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் உம்ரானை மெருகேற்றுவதில் முக்கிய பங்காற்றினார் என்று பிபிசி இந்தியிடம் அவர் தெரிவித்தார்.

இர்ஃபான் பதான், பர்வேஸ் ரசூலுடன் சேர்ந்து உம்ரானின் பந்துவீச்சு முறையில் இருந்து அவரது மனப்போக்கை மேம்படுத்துவது வரை எல்லாவற்றிலுமே பயிற்சி அளித்து, அவரை ஒரு நல்ல வீரராக மாற்றியுள்ளார் என்று கால்ரா கூறுகிறார்.

பட்டானுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பு, உம்ரானின் பயிற்சியாளர் ரந்தீர் சிங் மன்ஹாஸ் அவருக்காக கடுமையாக உழைத்துள்ளார். உம்ரான் தனது 15 வது வயதில் கிரிக்கெட் பயிற்சிக்காக ஜம்மு ஸ்டேடியத்தை அடைந்தபோது, அங்கிருந்த கிரிக்கெட் பயிற்சியாளர் ரந்தீர் சிங் மன்ஹாஸ் அவரது திறனை உணர்ந்து அவருக்கு சிறந்த பயிற்சி வழங்கினார்.

பிசிசிஐயின் தொழில்நுட்ப குழுவும், அணியின் தேர்வாளர்களும், வரும் காலங்களில் இந்திய அணியில் இடம்பெற உம்ரானுக்கு குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பையாவது அளிப்பார்கள் என்று ரஞ்சித் கால்ரா கருதுகிறார். நாட்டிற்காக சிறப்பாக விளையாட அவரது பயிற்சியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உம்ரானின் விளையாட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்

பட மூலாதாரம், Mohit Kandhari

படக்குறிப்பு, உம்ரானின் விளையாட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்

உம்ரான் மாலிக் வீட்டில் மகிழ்ச்சியான சூழல்

ஜம்முவில் மாலிக் மார்க்கெட் அருகே உள்ள ஒரு பகுதியில் வசிக்கும் அப்துல் ரஷீத் மாலிக்கின் வீட்டில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

உம்ரான் பந்துவீசுவதைப் பார்த்து அவரது உறவினர்களும் அண்டை அயலாரும் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். வரும் நாட்களில் உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவர் நாட்டின் பெயரை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்றும் அனைவரும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

தந்தை

பட மூலாதாரம், Mohit Kandhari

படக்குறிப்பு, உம்ரான் மாலிக்கின் தந்தை அப்துல் ரஷீத் மாலிக், தனது மகன் நாட்டுக்காக விளையாடி இந்தியாவுக்கு பெருமைசேர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்

"உம்ரான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடுவார். அந்த நேரத்தில் அவருக்கு பசி தாகம் எடுக்காது. அவர் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன், தனது பேட்-பந்துடன் விளையாட வெளியே செல்வது வழக்கம். நாங்கள் அவரை தடுக்க முயற்சிக்கும்போது, ' நான் எந்த தவறும் செய்யவில்லை, கிரிக்கெட் தானே விளையாடுகிறேன் ' என்று அவர் சொல்வார்," என்று பிபிசியிடம் பேசிய அவரது தந்தை அப்துல் ரஷித் மாலிக் குறிப்பிட்டார்.

காலப்போக்கில் உம்ரானின் கிரிக்கெட் மீதான காதல் வளர்ந்ததாகவும், அவர் இரவும் பகலும் கிரிக்கெட்டில் மட்டுமே மூழ்கியிருந்ததாகவும் அவரது தந்தை கூறுகிறார்.

எதிர்வரும் நாட்களிலும் உம்ரான் கடுமையாக உழைத்து , இந்திய அணியில் இடம்பிடிக்க நன்றாக பந்து வீசுவார் என்று நம்புகிறார் அப்துல் ரஷீத். தனது மகன் நாட்டுக்காக விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

மாலிக்

பட மூலாதாரம், IPL/BCCI

படக்குறிப்பு, ஐபிஎல் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்திய உம்ரன் மாலிக்

எல்லோருக்கும் இருக்கும் ஒரு ஆசை- விரைவில் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் உம்ரான்.

உம்ரானின் தாயார் சீமா மாலிக் தனது மகிழ்ச்சியை உறவினர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

"போட்டிக்கு முன் நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். ஆனால் வர்ணனையாளர்கள் உம்ரானின் பந்துவீச்சை பாராட்டத் தொடங்கியபோது, அதைக்கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என் மகன் சிறப்பாக பந்து வீசுவதன் மூலம் தனக்கும் தனது நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,"என்று பிபிசி இந்தியுடனான உரையாடலில் அவர் கூறினார்.

உம்ரானின் குழந்தைப் பருவத்தை நினைவுகூர்ந்த அவரது தாயார், "குழந்தையாக, உம்ரான் நாள் முழுவதும் மட்டையை எடுத்து யாராவது பந்துவீசுங்கள் என்பார். சில சமயங்களில் அவர் சாப்பிடக்கூட மாட்டார். பள்ளியிலிருந்து வந்தவுடன் விளையாட ஓடிவிடுவார். மாலை தாமதமாக வீட்டிற்கு வருவார்,"என்று குறிப்பிட்டார்.

தனது மகனுக்கு உணவில் இறைச்சியும், கோழியும் மிகவும் பிடிக்கும் என்றும் அவர் அரிதாகவே காய்கறிகளை சாப்பிடுவார் என்றும் சீமா மாலிக் கூறினார்.

உறவினர்

பட மூலாதாரம், Mohit Kandhari

படக்குறிப்பு, உம்ரானின் தந்தையுடன் பழம் மற்றும் காய்கறி கடை நடத்திவரும் உம்ரானின் சித்தப்பா நசீர் மாலிக்.

ஷாஹீதி சவுக் அருகே உம்ரானின் தந்தையுடன் பழம் மற்றும் காய்கறி கடை நடத்தி வரும் அவரது சித்தப்பா நசீர் மாலிக், "உம்ரான் குழந்தை பருவத்திலிருந்தே கடினமாக உழைத்தார். அது இப்போது வெற்றியை தந்துள்ளது,"என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

உம்ரானை உற்சாகமாக வரவேற்று அவரது வெற்றியை கொண்டாடுவதற்காக அவர் ஜம்மு திரும்புவதை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக நசீர் மாலிக் கூறினார்.

ஜம்மு -காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடுகளை கவனிப்பதற்காக பிசிசிஐ அதாவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

"ஜம்மு -காஷ்மீர் இளைஞர்களிடையே கிரிக்கெட் மீதான ஆர்வத்தை கருத்தில் கொண்டு அவ்வப்போது அங்கு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் அங்குள்ள திறமையானவர்களை தேர்வுசெய்து அவர்கள் பிரகாசிக்க சிறந்த வசதிகளை வழங்க முடியும்," என்று அந்த குழுவின் உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான மிதுன் மன்ஹாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :