காஷ்மீர் இந்துக்கள், சீக்கியர்களுக்கு அச்சமூட்டும் தொடர் கொலைகள் - வரலாறு திரும்புகிறதா?

பட மூலாதாரம், Ani
- எழுதியவர், ரியாஸ் மஸ்ரூர்
- பதவி, பிபிசி, ஸ்ரீநகரில் இருந்து
காஷ்மீரில் வசிக்கும் சிறுபான்மை சமூகமான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திற்கு பிறகு கடுமையான பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர்.
2000மாவது ஆண்டுகளில் நடந்த இருவேறு தாக்குதல்களில் இந்த இரு சிறுபான்மையினர் சமூகங்களையும் சேர்ந்த குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
சமீபத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் உள்பட ஏழு பேர் காஷ்மீரில் கொல்லப்பட்ட நிகழ்வுகள் 1990கள் காலகட்டம் போன்ற ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் காஷ்மீரி பேசும் இந்துக்களான காஷ்மீரி பண்டிட்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறி அண்டை மாநிலங்களில் குடியேறத் தொடங்கினர்.
1990ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் தொடங்கிய பின்பு பல காஷ்மீர் பண்டிட்கள் மாநிலத்தை விட்டு வெளியேறினாலும் 800க்கும் அதிகமான குடும்பங்கள் அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தன.
53 வயதாகும் சஞ்சய் டிக்கூ காஷ்மீரை விட்டு வெளியேறாத பண்டிட்களின் பிரதிநிதியாக உள்ளார்.
"ஸ்ரீநகரில் உள்ள எனது வீட்டில் இருந்து என்னை வெளியேற்றி விடுதி ஒன்றில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர். இப்படி அச்சமூட்டக் கூடிய சூழ்நிலையில் எங்களால் எப்படி வாழ முடியும் என்று சஞ்சய் டிக்கூ," பிபிசியிடம் கூறுகிறார்.

பட மூலாதாரம், UBAID MUKHTAR/BBC
2003ஆம் ஆண்டு புல்வாமா மாவட்டத்தில் உள்ள நாடிமார்க் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் சஞ்சய் அரசு மீது குற்றம் சாட்டுகிறார்.
"நான் பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எம்.எல். பிந்த்ரூ கொல்லப்படும் வரை அரசு கண் விழிக்கவே இல்லை," என்று அவர் கூறுகிறார்.
ஒரே நாளில் மூன்று கொலைகள்
ஸ்ரீநகரில் உள்ள பிரபல மருந்து கடை உரிமையாளரான மக்கான் லால் பிந்த்ரூ கடந்த செவ்வாய் அன்று அடையாளம் அறியப்படாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நாளில் பிகாரில் இருந்து வந்த இந்து ஒருவரும், காஷ்மீரி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுனர் ஒருவரும் வெவ்வேறு நிகழ்வுகளில் கொல்லப்பட்டனர்.
அதற்கு முன்பாக ஸ்ரீநகரில் இரண்டு காஷ்மீரி முஸ்லிம்களும் கொல்லப்பட்டிருந்தனர். எம்.எல். பிந்த்ரூ கொல்லப்பட்டது நாடிமார்க் படுகொலைகளை நினைவூட்டுவதாக இருக்கிறது என்று இந்துக்கள் கூறுகின்றனர். மார்ச் 2001இல் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சித்திசிங் போரா கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட சீக்கிய கிராமவாசிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு தற்போது நினைவுக்கு வருகிறது.

சீக்கிய மதத்தைச் சேர்ந்த 46 வயதாகும் தலைமை ஆசிரியை சுபீந்தர் கௌர் மற்றும் காஷ்மீர் பண்டிட் இனத்தைச் சேர்ந்த அவரது சக ஆசிரியர் தீபக் ஆகியோர் வியாழனன்று ஸ்ரீநகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் அரசின் தலைமைச் செயலகம் முன்பு அவரது உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"எங்களது மகள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டார். எங்களுக்கு யார் நீதி கொடுப்பார்கள்? ஏதும் அறியாத மக்களை கொலை செய்பவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்," என்று அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறினார்.
சிறுபான்மையினருக்கு அரசு பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் வரையில் பணியை சீக்கிய ஊழியர்கள் பணியை புறக்கணிக்க வேண்டும் என்று காஷ்மீரில் உள்ள சீக்கிய மத தலைவர் ஜக்மோகன் சிங் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ், பாரதிய ஜனதா தலைமையிலான அரசுகளின் முயற்சிகள்
காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும் போதும் காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீரில் திரும்பவும் குடியேற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
காஷ்மீர் பள்ளத்தாக்கு திரும்பும் பண்டிட்களுக்கு பாதுகாப்பான குடியிருப்புகள் மற்றும் வேலை வழங்கப்படும் என்று 2009ஆம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது. அதன்பின்பு சுமார் ஐந்தாயிரம் காஷ்மீர் பண்டிட்கள் தங்களது தாய் நிலத்துக்கு திரும்பினார்.
அவர்கள் பெரும்பாலானவர்கள் அரசு வேலை குறிப்பாக கல்வித் துறையில் பணியில் சேர்ந்தனர்.
இங்கு மீண்டும் குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் சென்று விட்டார்கள் என்று நினைக்கிறேன். இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு சென்று விட்டதாக கேள்விப்பட்டேன் என்று சஞ்சய் டிக்கூ தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், UBAID MUKHTAR/BBC
காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் பண்டிட்கள் குடியிருக்கும் 300 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
"பள்ளி ஆசிரியர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு வீட்டிலிருந்து அச்சத்தை பணியிடத்துக்கு மாற்றியுள்ளது. அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை அவர்கள் பாதுகாக்க முடியுமா," என்று அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கேள்வி எழுப்பினார். பிபிசியிடம் பேசிய அவர் தமது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீரில் நடந்த தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையே உறவுகள் மிகவும் மோசமாக உள்ளது.
அதற்கு ஒரு வார காலத்திற்குள்ளாகவே பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது அப்போது இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் பிடிக்கப்பட்டு மீண்டும் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2003ஆம் ஆண்டு ஒப்புக்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள இருதரப்பு ராணுவங்களும் ஒப்புக்கொண்ட பின்னரும் சுமார் 700 கிலோ மீட்டர் நீளமுள்ள கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் மோதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பிப்ரவரி மாதம் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னர் எல்லைப்பகுதியில் அமைதி நிலவுவதாக இந்திய ராணுவம் மற்றும் காஷ்மீர் காவல்துறையின் உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆனால் சமீபத்தில் நடந்த கொலைகள் காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் சீக்கியர்கள் இடையே அச்ச உணர்வைத்தான் உண்டாக்கியுள்ளது.
370வது அரசியல் சட்டப் பிரிவு நீக்கப்பட்டது வன்முறைக்கு காரணமா?
காஷ்மீர் பண்டிட்கள் சிலர் இந்திய அரசின் கொள்கை முடிவுகள் தற்போதைய பாதுகாப்பு சூழல் மோசமடைந்ததற்கு காரணமாக உள்ளது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
பண்டிட்களின் மதநல்லிணக்கம், திரும்புதல் மற்றும் மறுவாழ்வுக்கான அமைப்பின் தலைவர் சதீஷ் மகல்தார், பிரிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சுயாட்சி உரிமை நீக்கப்பட்டதை கொண்டாடியவர்கள் தற்போது ஏன் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
தங்கள் சொத்துக்கள் குறித்த புகார்களை பண்டிட்கள் பதிவு செய்வதற்காக அரசு இணைய தளம் உருவாக்கப்பட்டது பண்டிட்கள் மற்றும் இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தினர் இடையே உள்ள நல்லிணக்கத்தை குறைத்துவிட்டது என்று அவர் கூறுகிறார்.
"ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டாயமாக சொத்துகளை வாங்குதல் உள்ளிட்டவை சில இடங்களில் நிகழ்ந்தன. அந்த இணையதளம் அந்த பிரச்னைகளை தீர்க்க உதவலாம். ஆனால் பெரும்பாலான பண்டிட்கள் தங்களது சொத்துகளை சட்டப்பூர்வமாகத்தான் விற்றுள்ளனர். அவற்றை அதிகாரிகள் முறையாக சரி பார்த்துள்ளனர். டெல்லியில் உள்ள யாரோ ஒருவர் இந்த இணையதளத்தில் புகார் அளித்து விட்டார் என்பதற்காக சட்டப்பூர்வமாக சொத்துகளை வாங்கிய ஒருவரின் வீட்டு வாசலில் காவல்துறை வந்து நிற்கிறது, அல்லது அவர் அந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று அரசு நோட்டீஸ் வழங்குகிறது. எங்களுக்கு படையினரின் பாதுகாப்பை விட சமூக பாதுகாப்புதான் தேவை," என்று சதீஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.அவர் புது டெல்லியில் வசிக்கிறார்.
பிரிவினைவாதத் தலைவர் மிர்வய்ஸ் உமர் பரூக் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளது பிரச்னைக்கு ஒரு காரணம் என்று சதீஷ் கூறுகிறார்.
குடிமக்கள் இவ்வாறு கொல்லப்படுவதற்கு எதிராக அவர் குறைந்தபட்சம் மக்களை திரட்டி போராடி இருப்பார் என்று சதீஷ் நம்புறார்.
ஆகஸ்ட் 5, 2019 அன்று காஷ்மீருக்கான சிறப்புரிமை நீக்கப்பட்ட பின்பு சமூகங்களிடையே பிரிவினை உணர்வு உண்டாகி உள்ளது என்று சீக்கிய தலைவர்கள் பலரும் கூறுகிறார்கள்.
ஜம்மு - காஷ்மீர் காவல்துறை என்ன சொல்கிறது?
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்துள்ள குடிமக்களின் கொலைகள் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் சதி என்று ஜம்மு-காஷ்மீர் காவல் துறை இயக்குநர் தில்பாக் சிங் கூறுகிறார்.
ஜம்மு - காஷ்மீர் துணை நிலை விஜயகுமார் இந்த நிகழ்வுகளுக்கு மதச் சாயம் பூச படுவதையும் மறுக்கிறார். 2021ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 28 குடிமக்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Ani
கொல்லப்பட்ட 28 பேரில் ஐந்து பேர் இந்து மற்றும் சீக்கிய சமூகங்களை சேர்ந்தவர்கள். இரண்டு பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் என்று அவர் வியாழன் இரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இரண்டு பெரிய தோல்விகள்
தற்போதைய தாக்குதல்களுக்கு அமைப்பு மற்றும் சமூகத்தின் இரண்டு பெரிய தோல்விகளை காரணமாக இருப்பதாக காஷ்மீர் பண்டிட் தலைவர்கள் கருதுகிறார்கள்.
காஷ்மீரில் மறு குடியேற்றம் செய்யப்பட்ட பண்டிட்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு 2016ஆவது ஆண்டு வரை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. தீவிரவாதிகள் துப்பாக்கிகளைப் பிடுங்கிச் செல்லும் பல சம்பவங்களுக்குப் பிறகு அந்த பாதுகாப்பும் நிறுத்தப்பட்டது என்று சதீஷ் கூறுகிறார்.
"காஷ்மீரில் உள்ள பெரும்பான்மையினர் சமூகம் குடிமக்களின் கொலைகளுக்கு பிறகு ஏதாவது ஒரு வகையில் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை குறைப்பதுதான் இத்தகைய தாக்குதல்களை நோக்கம் என்றால் பெரும்பான்மையினர் சமூகத்தினரின் அமைதி மிகவும் ஆபத்தானது," என்று அவர் கூறுகிறார். காஷ்மீரில் பெரும்பான்மை சமூகமாக இஸ்லாமியர்கள் உள்ளனர்.
மிர்வய்ஸ் உமர் பரூக் தலைமையிலான ஹூரியத் மாநாடு அமைப்பும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், UBAID MUKHTAR/BBC
பாதிக்கப்பட்ட யாரையும் மத கண்ணாடி கொண்டு பார்த்ததில்லை. இந்த சமூகத்தில் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் சம முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று ஹூரியத் மாநாடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவமயமாக்கலை இந்திய அரசு ஒரு கொள்கையாகவே பின்பற்றி வருகிறது என்றும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியது.
தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?
சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிட்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த இந்துக்களுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினர்.
முன்னாள் தீவிரவாதிகள் மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தக் கொலைகளுக்கு காரணமானவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்கிறது காஷ்மீர் நிர்வாகம்.
பிற செய்திகள்:
- செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்
- ஐபிஎல் 2021: கோலி அணியின் பரத் நிகழ்த்திய கடைசிப் பந்து மாயாஜாலம்
- மனநல சிகிச்சை: ஒரு நபருக்கு ஏழை நாடுகளைவிட 650 மடங்கு செலவிடும் பணக்கார நாடுகள்
- ஆப்கானிஸ்தான் மசூதி மீது தற்கொலை குண்டு தாக்குதல்: 50 பேர் பலி
- ஆன்லைனில் போலி காதல், நட்பால் ஏமாறும் இந்தியர்கள் - பண மோசடியை தவிர்ப்பது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








