ஜம்மு - காஷ்மீர்: சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரி பண்டிட்களின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோஹித் கந்தாரி
- பதவி, ஜம்முவிலிருந்து
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை மத்திய அரசு 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்து மாநிலத்தை மறுசீரமைத்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
ஜன்னல் வழியான கனவு
அந்த நாளிலிருந்து, இங்கு வசித்து வந்த, இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் மீண்டும் தங்கள் மண்ணுக்குத் திரும்பும் கனவைக் காணத் தொடங்கினர். அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் வாசல் வரை வந்து, ஜன்னல் வழியாகத் தங்கள் கனவின் மூலம் காஷ்மீரைப் பார்ப்பதாகவும் எண்ணத் தொடங்கினர்.
ஆனால் இப்போது ஒரு வருட காலத்திற்குப் பிறகு, தாங்கள் ஏமாந்துவிட்டதாகவே உணர்கிறார்கள். அவர்கள் இப்போது ஒரே ஜன்னலுக்கு அருகில் நின்று கனவு மட்டுமே காண்பதாக உணரத் தொடங்கியுள்ளனர், தங்களின் நீண்ட நாள் கனவு நனவாவது நடவாத காரியம் என்று நம்பிக்கை இழக்கத் தொடங்கியுள்ளனர்.
எந்த முயற்சியும் எடுக்கவில்லை
காஷ்மீர் பண்டிட் சமூகத்தை வழிநடத்தும் ஒரு பிரதான அமைப்பான பனுன் காஷ்மீரின் மூத்த தலைவர் டாக்டர் அக்னிஷேகர், "மத்திய அரசு இதுபோன்ற ஒரு வரலாற்று முடிவை 2019 ஆகஸ்ட் 5 அன்று எடுத்தது. ஆனால், கடந்த ஒரு வருடமாக காஷ்மீர் பண்டிட்களின் மறுவாழ்வுக்காக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை, " என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
டாக்டர் அக்னிஷேகர் களத்தில் எதுவும் மாறவில்லை என்கிறார்.
ஒரு வருடத்திற்கு முன்பு எங்களுக்காகத் திறக்கப்பட்ட ஜன்னல் அருகே இன்னும் நாங்கள் அசையாமல் நின்று அதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஒரு நாள் என்றால், அது எங்களுக்கு கவலையும் அளிக்கும் நாள் என்றும், நம்பிக்கையளிக்கும் ஒரு நாளென்றால், நிச்சயமற்ற தன்மையைக் குறிக்கும் நாளுமாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
டாக்டர் அக்னிஷேகர் கூறுகையில், "கடந்த ஒரு வருடத்தில் நிகழ்ந்த அனைத்து மாற்றங்களும் மேலோட்டமாக மட்டுமே நிகழ்ந்தன, ஆனால் இன்னும் உள்ளார்ந்த மனநிலை மாறவில்லை. முந்தைய அரசாங்கங்கள் செய்ததைப் போலவே இந்த அரசாங்கமும் செய்கிறது." என்று கூறுகிறார்.
டாக்டர் அக்னிஷேகர், "நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக பனுன் காஷ்மீரின் கொடியின் கீழ் போராடி வருகிறோம், ஆனால் அரசாங்கம் எங்களை ஒருபோதும் பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை அல்லது எங்கள் திட்டம் பற்றியும் எங்களிடம் கேட்கவில்லை," என்றார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

"இது குறித்துக் கவலை கொள்ள வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு உள்ளது. பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டதாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள எங்கள் சொந்த நிலத்துக்குச் செல்லும் பாதையை எளிதாக்க முடியும்" என்று அவர் கூறினார்.

சொந்த மண்ணுக்கு திரும்புதல்
"எங்களுக்காக இரண்டு அறைகள் கொண்ட நாலாயிரம் குடியிருப்புகளை அரசு கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் ஒரு போதும் நம்பிக்க கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் சொந்த மண்ணிற்குத் திரும்ப விரும்புகிறோம், மீண்டும் எங்கள் நிலத்தில் குடியேற விரும்புகிறோம். எங்கள் அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்திற்காக நாங்கள் வீடு திரும்ப விரும்புகிறோம், ஆனால் இவை அனைத்தையும் எங்கள் நிபந்தனைகளுடன் தான் பெற விரும்புகிறோம். " என்கிறார்.
370 வது பிரிவை மத்திய அரசு நீக்கியதலிருந்து , காஷ்மீர் பண்டிட் சமூகத்தை ஒரே இடத்தில் மீண்டும் குடியமர்த்துவதற்கான கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று தாம் நம்புவதாக டாக்டர் அக்னிஷேகர் நம்புகிறார்.
மறுபுறம், மற்றொரு அமைப்பைச் சேர்ந்த மருத்துவரும் எழுத்தாளருமான டாக்டர் ரமேஷ் தாமிரி பிபிசியிடம், "காஷ்மீர் இந்து குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் பிற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மத்திய அரசு எந்தவிதமான உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை" என்று கூறினார்.
மத்திய அரசு, இடம்பெயர்ந்த காஷ்மீர் குடும்பங்களுக்கு விரோதமாக இல்லை, ஆனால் ஒரு வருடம் கழித்தும் கூட எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
வெற்றி கிடைக்காது
டாக்டர் தாமிரி கூறுகையில், "காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டதன் உண்மையை வெளிக்கொணரவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் அரசாங்கம் ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். காஷ்மீர் பண்டிட்களின் இடப்பெயர்வு, ஓர் இனப்படுகொலை என்று அங்கீகரிக்கப்படும் வரை, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்காது, " என்கிறார்.
"இடம் பெயர்ந்த காஷ்மீரிகளின் முகாம்களில் வாழும் குடும்பங்களின் மறுவாழ்வுக்காக இது வரை எந்த ஒரு முடிவையும் பாஜக அரசு எடுக்கவில்லை. இடம்பெயர்ந்த காஷ்மீரி குடும்பங்கள் 60 ஆண்டுகளாக அனுபவித்து வரும் அதே துன்பங்களுடனும் பிரச்சனைகளுடனும் தான் இன்னும் வாழ்ந்து வருகின்றன." என்றும் தாமிரி குறை கூறுகிறார்.

டாக்டர் தாமிரி, "காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் வீடுகள், வயல்கள் மற்றும் பழத்தோட்டங்களைக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவை இன்று வரை ரத்து செய்யப்படவில்லை, அவர்களின் பொருட்களுக்குச் சரியான விலையும் கிடைக்கவில்லை," என்கிறார்.
"காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலையில்லாத காஷ்மீர் பண்டிட் இளைஞர்கள் பணியாற்ற இருந்த நிபந்தனைகள் திரும்பப் பெறப்படவில்லை. அகதி முகாமில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்களுக்குத் தற்சார்பளிக்கும் வகையில், சிறந்த மருத்துவ வசதி, சுகாதார வசதி, வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை," என்று தெரிவிக்கிறார்.
2018 ஆம் ஆண்டில், காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த பிராஹ் பஞ்சாயத்தின் சர்பஞ்ச் பதவியை வென்றதன் மூலம் ராகேஷ் கவுல் தனது பகுதியில் பணியாற்றத் தொடங்கினார், ஆனால் ஜூன் மாதத்தில் ஒரு சர்பஞ்ச் கொல்லப்பட்ட பின்னர் அங்கு சூழ்நிலை மாறியது.
ராகேஷ் கவுல், "நவம்பர் 2018 இல், நாங்கள் பணிகளை மேற்கொண்டோம், அதன் பின்னர் இன்று வரை அரசாங்கத்திடம் வீட்டுவசதி மற்றும் பிற பாதுகாப்பைக் கோரியுள்ளோம். இன்று வரை இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை." என்று பிபிசி-யிடம் தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடத்தில் தங்களுக்குச் சாதகமாக இங்கு எதுவும் மாறவில்லை என்று ராகேஷ் கவுல் கூறுகிறார்.
"எங்கள் அடையாளத்தைப் பற்றி இன்று வரை கேள்விகள் எழுப்பப்படுகின்றன. எங்களை ஜம்முவாசிகளாகவும் ஒப்புக் கொள்வதில்லை காஷ்மீர்வாசிகளாகவும் ஒப்புக் கொள்வதில்லை. எங்கள் அரசாங்க ஆவணங்கள் அனைத்தும் முதலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் சரிபார்க்கப்பட்டன. பின்னர் ஜம்முவில் சரிபார்க்கப்படுகின்றன. 370 இருந்த போதும் இது தான் நடந்தது. அது நீக்கப்பட்ட பிறகும் அதே நிலை தான் தொடர்கிறது," என்று ராகேஷ் கவுல் கூறுகிறார்.
குடியிருப்பு சான்றிதழ்
குடியுரிமை சான்றிதழ் பிரச்சினையை எழுப்பிய ராகேஷ் கவுல், "நாங்கள் பல நூற்றாண்டுகளாகக் காஷ்மீரில் வசிப்பவர்கள். எங்கள் மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளாகக் காஷ்மீரில் வசித்து வந்தனர், இன்று நாங்கள் குடியிருப்பு சான்றிதழைப் பெறுவதற்குப் போராட வேண்டியுள்ளது." என்று கூறுகிறார்
"நான் இன்னும் உயிரை பணையம் வைத்துத்தான் காஷ்மீர் பள்ளத்தாக்குக்குச் செல்கிறேன், ஏனென்றால் எங்கள் நல்வாழ்வுக்கோ பாதுகாப்பிற்கோ அரசாங்கம் ஏற்பாடு செய்யவில்லை."
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காஷ்மீர் பண்டிட்களைச் சேர்க்க வேண்டும், இதனால் குடும்பத்தின் நோய்வாய்ப்பட்ட உறுப்பினர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க முடியும் என்று அவர் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் நிதித் துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ராஜு மோஜா 370 வாபஸ் பெற்ற பிறகும் அவர் வீடு திரும்புவது சாத்தியமில்லை என்கிறார்.
மேலும் அவர், ஒரு காஷ்மீரி என்ற அடையாளமும் தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதாக கூறுகிறார்.
அவர், "என்னிடம் மாநிலக் குடியுரிமை சான்றிதழ் இருந்தது. இதன் காரணமாக எனக்கு ஜம்மு-காஷ்மீருடன் உறவு இருந்தது, ஆனால் இப்போது அது இல்லை," என்கிறார்.
இப்போது டொமைசில் சான்றிதழ் பெற, அவர் மீண்டும் தன் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டு அரசாங்க அலுவலகங்களுக்குப் படை எடுத்துச் செல்ல வேண்டும்.

பட மூலாதாரம், EPA
"370 ஐ ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவை நாங்கள் வரவேற்றோம்," என்று இடம்பெயர்ந்த ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ரவீந்தர் குமார் ரெய்னா பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால் குடியிருப்புச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் முடிவை ரெய்னா எதிர்க்கிறார்.
"ஏன் காஷ்மீரி என்பதால் நாங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் அடையாளத்தை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுகிறோம். காஷ்மீர் பண்டிட்கள் அங்கு இருந்தால் தான் அது காஷ்மீர்," என்று அவர் கூறுகிறார்.
அடையாளத்தை இழத்தல்
ரவீந்தர் ரெய்னா, "காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஏராளமான பண்டிட்கள் இடம்பெயர்வதற்கு முன்பே பல காஷ்மீரிகள் அங்கிருந்து பல மாநிலங்களுக்கு வேலை நிமித்தமாகக் குடிபெயர்ந்தனர். ஆனால் இன்று அவர்களும் தங்கள் அடையாளத்தை இழக்க நேரிடும் என்று கவலைப்படுகிறார்கள்." என்கிறார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியாற்றி வரும் ரூபன் ஜி சப்ரூ, பிபிசியிடம், "கடந்த ஒரு வருடத்தில் அரசாங்கம் எடுத்த முடிவுகள் சரியாகவே உள்ளன, ஆனால் இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் இளைஞர்கள் இன்றும் கூட, பள்ளத்தாக்கில் பணிபுரிகிறார்கள். அவர்களின் பிரச்சனைகளை கேட்க வேண்டும்." என்கிறார்.
"இந்த காஷ்மீர் பண்டிட்கள் இவ்வளவு காலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசித்து வருகிறார்கள், ஆனால் இன்னும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்குள்ள உள்ளூர்வாசிகளுடன் நெருங்கிய உறவு இல்லை. அவர்கள் இவ்வளவு காலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசித்து வருகின்றனர். இருந்தும், அவர்கள், கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் அரசாங்கத்தால் நடத்தப்படும் போக்குவரத்து முகாமில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர்." என்று சப்ரூ கூறுகிறார்.
தற்போது, இடம்பெயர்ந்த சுமார் நான்காயிரம் காஷ்மீரிகள், காஷ்மீர் முழுவதிலும் வெவ்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர், மேலும் ஜம்முவில் 'வீடு திரும்ப வேண்டும்' என்ற கோரிக்கையை அரசாங்கத்தின் முன் தொடர்ந்து வைத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில், பல காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் ஜம்மு அல்லது ஜம்முவுக்கு வெளியே உள்ள பிற மாநிலங்களில், சிறுகச் சிறுகச் சேமித்துத் தங்களுக்கென்று வீடுகள் அமைத்துக் கொண்டுள்ளதாகவும் இனி அவர்கள் அதை விட்டு வெளியேறி காஷ்மீருக்குத் திரும்புவது சாத்தியமில்லை என்றும் சப்ரு கூறுகிறார்.
1990 ல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து இடம்பெயர்ந்த பின்னர், 2010 ல், அவர் தனது குடும்பத்தை மீண்டும் விட்டுவிட்டு, அரசாங்கம் வழங்கிய வேலைக்காக காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு செல்ல வேண்டியிருந்தது என்று அவர் கூறுகிறார்.
2010 ஆம் ஆண்டில், 3,000 காஷ்மீர் பண்டிட்களுக்குப் பள்ளத்தாக்கில் பிரதமரின் நிவாரணத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட்டது. இருப்பினும், அரசாங்கத்தின் வேலைத் தொகுப்பை 'மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்புவதோடு' தொடர்புபடுத்தப்படக்கூடாது என்று அவர் கூறுகிறார்.
அகதி முகாமில் நீண்ட காலமாக வசித்து வந்த லோலாபைச் சேர்ந்த பியரே லால் பண்டிதா, "அகதி முகாமில் 40,000 காஷ்மீர் பண்டிட்கள் வசித்து வருகிறார்கள், அனைவரும் தற்போது டொமிசில் சான்றிதழ் குறித்துக் கவலைப்படுகிறார்கள்." என்கிறார்.
இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை அரசாங்கம் அகற்ற வேண்டுமேயன்றி, அவற்றை அதிகரிக்கக்கூடாது என்று பண்டிதா கூறுகிறார்.
கடந்த ஒரு வருடத்தில் தனது வாழ்க்கையில் ஒரு மாற்றம் இருக்கும் என்று தான் நம்பியதாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
"மாநிலக் குடியுரிமைச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு டொமிசில் சான்றிதழ் அவசியம், பல நூற்றாண்டுகளாக காஷ்மீரில் வசித்து வந்தவர்களுக்கு அல்ல." என்று அவர் கூறுகிறார்.
370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், இப்போது காஷ்மீர் பண்டிட்களின் வீடு திரும்பும் பிரச்சினை மட்டுமே காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளது என்று பண்டிதா கூறினார்.
இருப்பினும், கடந்த 60 ஆண்டுகளில் காஷ்மீரில் இருந்து விலகி தங்கள் வாழ்க்கையை வாழ கற்றுக்கொண்டவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வீடு திரும்புவது மிகவும் கடினம் என்றும் அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும்: முதலமைச்சர் கே. பழனிசாமி
- சீனா - அமெரிக்கா மோதல்: வரும் நாட்களில் சீன மென்பொருட்கள் மீது நடவடிக்கை - அமெரிக்கா அறிவிப்பு
- அயோத்தி கோயில் அடிக்கல் நாட்ட குறிக்கப்பட்டுள்ள நேரம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள்
- பங்குச்சந்தையில் களமிறங்க இதுதான் சரியான நேரமா? பணம் ஈட்டுவது சாத்தியமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












